இறையச்சத்தைப் பாழாக்கும் பஸ் பயணங்கள்
நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவங்கும் போது இறையச்சத்தைக் கோரி
பிரார்த்தனை புரிவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி
அமர்ந்ததும் மூன்று தடவை, "அல்லாஹு அக்பர் - அல்லாஹு
அக்பர் - அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள். பின்னர் பின்வருமாறு
கூறுவார்கள்:
ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா
இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர
வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா
புஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி வல் கலீஃப(த்)து ஃபில்
அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸஃபரி வகாப தில் மன்ளரி வஸுயில்
முன்கலபி ஃபில் மாலி வல் அஹ்லி
(பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித்
தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள்
எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக்
கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு
எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக
இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய
விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
நூல்: முஸ்லிம் 2392
இன்றைய பஸ் பயணங்கள் உண்மையில் இறையச்சமுள்ள ஆணையும் பெண்ணையும்
நெளிய வைக்கின்றன. கொஞ்ச தூரப் பயணங்களின் போது விரச எண்ணத்தைத் தூண்டுகின்ற வீடியோ
படங்கள், காமத்தைத் தாங்கிய பாடல் வரிகள் என நம்மை அல்லாஹ்வுடைய பயத்தை
விட்டே விலகச் செய்து விடுகின்றன. இதில் நீண்ட தூரப் பயணத்தைக் குறிப்பிடவே தேவையில்லை.
டவுண் பஸ்கள் எப்போதுமே காலையில் பிதுங்கிப் பிதுங்கி நகரத்தில்
கொண்டு வந்து மக்களைக் கொட்டுகின்றன. மாலையில் பிதுங்கப் பிதுங்கச் சென்று கிராமத்தில்
வந்து மக்களைக் கொட்டுகின்றன. டவுன் பஸ்கள் என்றாலே சில சபலங்கள் உரசலுக்காகவே பயணம்
மேற்கொள்கின்றனர்.
நடத்துனர்களின் நடத்தையும் நாரசமாகவே அமைகின்றன. இந்த உரசலுக்காகவே
நடத்துனர் பணியில் சேர்ந்திருக்கலாமே என்று ஏக்கத்தில் மற்றவர்கள் பார்க்கின்றனர்.
எட்ட, கிட்ட பயணங்களில் நடத்துனரும், ஓட்டுனரும் அழகிய பெண்களை முன் இருக்கையில் வைத்துக் கொண்டு
அழகைப் பருகிக் கொண்டே ஆனந்தப் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆக மொத்தத்தில் ஒரு டவுண் பஸ் என்பது காம, காந்த அலைகளின் கந்தகப் பெட்டகமாகவே மிதந்து போகின்றது. இத்தகைய
பஸ்களில் பயணம் மேற்கொள்ள இறையச்சமுள்ள ஆண்களே அஞ்சுகின்ற போது, பெண்கள் (எல்லா பெண்களும் அல்ல) கூனல் குறுகல் இன்றி, கூச்ச நாச்சமின்றி ஒய்யாரமாக பயணம் மேற்கொள்கின்றனர். எழுதுவதற்கு
எழுதுகோல் கூசுகின்ற அளவுக்குத் தொடர்புகளின் பரிமாற்றத் தளங்களாகப் பேருந்துகள் அமைகின்றன.
இது போன்ற பஸ் பயணங்களை கண்ணியமிக்க பெண்கள் தவிர்த்துக் கொள்வது தான் இறையச்சத்திற்கு
உகந்ததாகும்.
இது போன்ற கட்டங்களில் கூட்ட நெரிசல் இல்லாத பேருந்தைத் தேர்வு
செய்ய வேண்டும். அதற்கு முடியவில்லையெனில் கொஞ்சம் காசு பணம் போனால் பரவாயில்லை என்று
ஆட்டோ அல்லது கார்களில் பயணம் செய்வது சிறந்ததாகும். அதே சமயம் ஆட்டோ அல்லது கார் ஓட்டுனரையும்
நல்ல பண்புள்ள,
ஒழுக்கமானவர்களாகத் தேர்வு செய்வது அவசியம்.
EGATHUVAM JUL 2010