Apr 19, 2017

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை! ஆனால் இருக்கிறது! - நிலை தடுமாறிய ஜமாலி

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை! ஆனால் இருக்கிறது! - நிலை தடுமாறிய ஜமாலி

இலங்கை ரஸ்மின்

உண்மை வந்தது. பொய் அழிந்தது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)

17, 18.07.2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்  சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் விவாதம் ஆரம்பமாகியது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை. இறைவன் உருவமற்றவன் என்ற தலைப்பில் சு.ஜமாத் தரப்பில் அப்துல்லாஹ் ஜமாலியும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, அதை மறுமையில் தான் காண முடியும் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சகோதரர் பி.ஜெ. அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

விவாதத்தின் நிபந்தனைகளில் முக்கியமானது விவாதிக்கும் இருவரும் தங்கள் கருத்தை நிரூபிப்பதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் வசனங்களையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மட்டுமே எடுத்து வைத்து விவாதிக்க வேண்டும் என்பதாகும்.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த பி.ஜெ., அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு ஆதாரமாக புகாரியின் 7440ம் ஹதீஸைக் காட்டி தனது வாதத்தை முன்வைத்தார்.

அடுத்ததாக வாதிக்க ஆரம்பித்த அப்துல்லாஹ் ஜமாலி தனது கருத்தை உறுதிப்படுத்த எந்த ஒரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெறும் வியாக்கியானத்தை மட்டும் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

உளறிக் கொட்டிய ஜமாலி

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று வாதிக்க வந்த ஜமாலி தனது வாதத்திற்குச் சரியான ஆதாரம் வைக்கவும் இல்லை. பி.ஜெ. வைத்த வாதத்தை ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்கவுமில்லை.

ஆனால் தாராளமாக உளறிக் கொட்டிக் கொண்டேயிருந்தார். அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்த ஜமாலி, அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று பி.ஜெ. ஆதாரமாகக் காட்டிய புகாரியில் இடம் பெறும் ஹதீஸிற்குப் பொருள் சொன்னார்.

மீண்டும் பி.ஜெ. அவர்கள், "உங்கள் கருத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது. அப்படியெனில் ஏன் இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் உருவம் என்று பொருள் சொன்னீர்கள்?' எனக் கேட்டார்.

மீண்டும் உடனே, அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று தான் நான் கூறுகிறேன் என்று தனது தலைப்பிற்குத் தாவினார்.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை; ஆனால் இருக்கிறது என்ற பாணியில் கூறிக் கொண்டேயிருந்தார்.

குர்ஆனையே மறுத்த ஜமாலி

பி.ஜெ அவர்கள் ஆரம்பத்தில் வைத்த ஹதீஸிற்கு மறுப்பாக ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாத ஜமாலி ஸாஹிப் திருமறைக் குர்ஆன் வசனமொன்றை மட்டும் திரும்பத் திரும்பக் கூற ஆரம்பித்தார்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

மேற்கண்ட வசனத்தைக் கூறிய ஜமாலி, "அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை என்று திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் இவரோ அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிடுகிறார் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருக்கிறதே; நாமும் அல்லாஹ்வும் ஒன்று போல் ஆகிவிடுமே' என்று கூறி முடித்தார்.

இதற்குப் பதில் வாதம் வைத்த பி.ஜெ அவர்கள், "நமக்கு உருவம் இருக்கிறது; அல்லாஹ்வுக்கும் உருவம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அல்லாஹ் நம்மைப் போல் ஆகி விடுவான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும் இதே கேள்வி வருமே அதற்கு உங்கள் பதில் என்ன?' என்று கேட்டார்.

"அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை; காற்றுக்கும் உருவம் இல்லை. இறைவனுக்கு உருவம் இல்லையென்பது தான் சரி என்று எடுத்துக் கொண்டால் காற்றுக்கும் உருவம் இல்லையே! இப்போது என்ன செய்வது? மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு இது மாற்றமாக அமையாதா?' என்று கேள்வி எழுப்பினார்.

பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டிய புகாரியின் 7440 வது ஹதீஸிற்கு ஒரு உருப்படியான பதிலைக் கூட தர முடியாமல் தடுமாறினார் ஜமாலி.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட பி.ஜெ அதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் பல ஆதாரங்களை அடுக்கினார்.

அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை, கால், முகம், கண், செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று தனது வாதத்தை ஊன்றி நிறுத்தி விட்டார்.

அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அல்லாஹ்வின் திருமறையையும் நபியவர்களின் வார்த்தைகளையும் தாறுமாறாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தார்.

இறைவனை இழிவாக்க முயன்ற ஜமாலி

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக பி.ஜெ. ஆதாரத்தை வைத்துப் பேச ஆரம்பித்த மறுகணத்திலிருந்து அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய வார்த்தைகளைக் கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ்வின் எதிரி ஜமாலி.

அல்லாஹ்வுடைய உருவம் தொடர்பாக இறைவனின் கை, கால், முகம் என்று வரும் இடங்களில் எல்லாம் இறைவனின் ஆற்றல், சக்தி என்று தன் மனோ இச்சையின் படி  விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

ஜமாலி மனோ இச்சையின் படி விளக்கம் அளித்து அல்லாஹ்வைக் கிண்டலடித்துப் பேசி, கேட்ட கேள்விகள். (நவூது பில்லாஹ்)

1. அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோம்.

2. புகாரியின் 7440வது ஹதீஸில் மறுமை நாளில் இறைவன் தனது அடியார்களுக்குக் காலைக் காட்டுவான் என்று வருகிறது. அதனால் இறைவனுக்குக் கால்கள் உண்டு என்பதை நாம் நம்ப வேண்டும் என பி.ஜெ. அவர்கள் வாதம் வைத்தார்கள். அதற்கு எதிர்க் கேள்வி கேட்ட ஜமாலி, "அல்லாஹ் மறுமையில் தனது அடியார்களுக்குக் கலைக் காட்டுவான் என ஹதீஸைக் காட்டுகிறீர்கள். அதில் கால் என்று ஒருமையாக வருகிறது. அப்படியானால் அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?' என அல்லாஹ்வின் காலைக் கிண்டலடித்தார்.

3. ஹதீஸில் வருவதைப் போல் அல்லாஹ்வுக்குக் கால் இருக்கிறது என்றால் அல்லாஹ்வின் மற்ற கால் எங்கே? என பி.ஜெ.யிடம் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் விஷயத்தில் விளையாடினார்.

4. அதே போல் மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ் திரையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்று இடம் பெற்றுள்ளது. திரையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் ஆடை அணிந்திருக்கிறான் என்ற அர்த்தம் வந்து விடுகிறது. அப்படியானால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?

5. அப்படி அல்லாஹ் ஆடை உடுத்திருக்கவில்லை என்று வைத்துக் கொண்டால் அல்லாஹ் நிர்வாணமானவனா?

6. சகோதரர் பி.ஜெ. அவர்கள் இறைவனுக்குக் கையிருப்பதாகக் கூறி இறைவனின் கை தொடர்பான வசனங்களையும் ஹதீஸ்களையும் எடுத்து வைத்தார். அதற்கு கேள்வி வைத்த ஜமாலி, "நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸில் இறைவனின் கை இரண்டும் வலது தான் என இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்றால் இடது கை எங்கே?' என அடுத்த கேள்வியை வைத்தார்.

விவாதம் செய்வதற்காக வந்த ஜமாலி தனது தரப்பு வாதத்திற்கு ஒரு ஆதாரத்தைக் கூட வைக்காமல் பி.ஜெ.யின் வாதத்திற்கு வியாக்கியானம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

7. அல்லாஹ்வின் கைகள் இரண்டும் வலது என்றால் அதில் ஒன்று வலது கையைக் குறிக்கிறது; மற்றது பரக்கத் என்ற அர்த்தத்தைத் தருகிறது என்று நபியவர்கள் கூறியிருப்பதாக பி.ஜெ. குறிப்பிட்டார். அதனை ஏற்றுக் கொள்ள மனமில்லாத ஜமாலி ஒரே பக்கத்தில் இரண்டு கைகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமா? என இறைவனையும் தன்னைப் போல் மனிதராகக் கற்பனை செய்து கொண்டு பேசினார்.

8. அதே போன்று இறைவன் தனது ஒரு விரலில் பூமியையும் மற்ற விரலில் வானத்தையும் அடுத்த விரலில் மரங்களையும் வைத்துக் கொண்டிருப்பான் என்ற செய்தியை பி.ஜெ ஆதாரமாகக் காட்டினார். அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்றால் விரல்கள் ஏன் என்று பி.ஜெ கேள்வி வைத்தார். அதற்கு வியாக்கியானம் சொன்ன ஜமாலி, "அல்லாஹ்வின் விரல்கள் என்றால் அவற்றை இறைவனின் ஆற்றல் என்று தான் நாம் விளங்க வேண்டும்' என்று சொல்லி விட்டு, அல்லாஹ்வுக்கு விரல்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவை எத்தனை?

அல்லாஹ் ஒரு விரலில் வானத்தை வைத்திருக்கிறான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

இன்னொரு விரலில் மரங்களை வைத்திருக்கிறான் என்றால் பூமிக்குள் தானே மரங்கள் இருக்கின்றன ஏன் மற்ற விரலில் வைத்திருக்கிறான்? போன்ற கேள்விகளை ஏளனமாக முன்வைத்தார் ஜமாலி.

அதற்குப் பதில் கூறிய பி.ஜெ. அவர்கள், "இந்தக் கேள்வியை அல்லாஹ்விடமும் நபியிடமும் தான் கேட்க வேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அல்லாஹ்வைப் பற்றி எப்படிக் கூறியுள்ளார்களோ அப்படி நம்புவது தான் நமது வேலையே தவிர அது எப்படியிருக்கும்? எங்கு இருக்கும்? என்றெல்லாம் அல்லாஹ்வின் விஷயத்தில் கேள்வி கேட்பது நமக்கு உகந்ததல்ல. அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது; ஆனால் எப்படி என்று நமக்குத் தெரியாது. கை இருக்கிறது என்று வந்தால் கை இருக்கிறது என்று நம்புவோம்' என அழகான முறையில் தனது வாதத்தை சிறு குழந்தைக்கும் விளங்கும் விதத்தில் எடுத்து வைத்தார் பி.ஜெ.

9. இறைவன் மறுமை நாளில் இந்த உலகத்தைச் சுருட்டுவான் என அல்லாஹ் குறிப்பிடுகிறானே அப்போது  இறைவனும் சேர்ந்தே சுருட்டப் பட்டுவிடுவானே என கேள்வியெழுப்பினார் ஜமாலி.

இந்த உலகத்தைப் படைத்த இறைவனுக்கு இதைச் சுருக்குவதொன்றும் பெரிய விஷயமல்ல. இறைவன் ஆகு என்றால் அது ஆகிவிடும். அந்த அடிப்படையில் படைத்தவன் தாராளமாகச் சுருக்குவதற்கும் சக்தி பெற்றவன் தான் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் பி.ஜெ

10. இறைவனுக்குக் கண்கள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக தஜ்ஜாலின் வருகை தொடர்பாகப் புகாரியின் 4403வது இலக்க ஹதீஸை பி.ஜெ. ஆதாரமாக முன் வைத்து தஜ்ஜால் இந்த உலகுக்கு வந்து, தன்னைக் கடவுள் என்று வாதிடுவான். அந்நேரத்தில் அவன் சில அற்புதங்களையும் காட்டுவான். இவன் கடவுளாக இருப்பானோ என்று உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் அவன் கண்ணை வைத்து அவன் கடவுள் இல்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் தஜ்ஜாலின் ஒற்றைக் கண் ஊனமானதாக இருக்கும். உங்கள் இறைவன் ஒற்றைக் கண் ஊனமானவன் அல்ல என்று நபியவர்கள் கூறிய செய்தியைக் குறிப்பிட்டு இறைவன் உருவமற்றவன் என்றால் இறைவனின் கண்கள் ஊனமில்லை என்ற நபியவர்கள் ஏன் குறிப்பிட வேண்டும்? இறைவனுக்குக் கண்கள் இருப்பதால் தானே அப்படிக் கூறினார்கள். இறைவன் உருவம் அற்றவன் என்பது தான் உண்மை என்றால் நபியவர்கள் கண்களை வைத்து தஜ்ஜாலை அடையாளம் காணும்படி சொல்லத் தேவையில்லை. உங்கள் இறைவன் உருவமற்றவன்; தஜ்ஜாலுக்கு உருவம் இருக்கிறது அதனால் அவன் கடவுள் இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள் என சொல்ல வேண்டியது தானே!

அப்படிச் சொல்லாததிலிருந்து அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்பதை அழகாகப் புரியலாம் என தனது வாதத்தைத் தெளிவாக எடுத்து வைத்தார் பி.ஜெ.

11. தஜ்ஜால் தொடர்பான ஹதீஸைத் திரிவுபடுத்த முயன்ற ஜமாலி அல்லாஹ் ஒற்றைக் கண் ஊனமானவன் அல்ல என்றால் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்களும் இல்லை என்று தான் புரிய வேண்டும். மாறாக கண்கள் இருப்பதாக புரியக் கூடாது என சம்பந்தம் இல்லாமல் உளறினார் ஜமாலி.

பி.ஜெ. அவர்கள் வைத்த எந்த வாதத்தையும் மறுக்க முடியாமல் உளறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜமாலியின் தரப்பினரே முதல் நாள் வந்தவர்கள் இரண்டாம் நாள் பாதிப்பேர் வரவில்லை.

12. அடுத்ததாக, அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதாக வரும் திருமறை வசனங்களையும் ஹதீஸ்களையும் பி.ஜெ. அள்ளிப் போட்டார்.

அல்லாஹ்வின் கை தொடர்பான வசனங்களைத் திரிக்க முற்பட்ட ஜமாலி, அல்லாஹ்வின் கை என்றால் அவை அல்லாஹ்வின் ஆற்றல் என்று தான் நாம் புரிய வேண்டும் என வியாக்கியானம் செய்தார்.

அத்துடன் அல்லாஹ்வைக் கிண்டலடித்து இறைவனுக்கு கை இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் கைகளில் இரத்தம் ஓடுகிறதா?

13. அல்லாஹ்வின் கைகளில் தசைகள் உண்டா?

14. இறைவனின் கைகளில் நரம்புகள் உண்டா?

போன்ற இறைவனைக் கேலி செய்யும் பல கேள்விகளைக் கேட்டார்.

15. இறைவனுக்கு முகம் இருப்பதாக பி.ஜெ. திருக்குர்ஆனின் (55:27வது) வசனத்தில் இடம் பெறும் மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும் என்ற வசனத்தை ஆதாரமாக முன்வைத்தார்.

அதற்கு விளக்கம் சொல்ல வந்த ஜமாலி, அல்லாஹ்வின் முகம் என்றால் உள்ளமை என்று விளங்குங்கள் என விளக்கம் சொல்லி விட்டு, இறைவனின் முகம் என்றே அதை நாம் எடுத்துக் கொண்டால் உலகம் அழிக்கப்படும் போது இறைவனின் முகத்தைத் தவிர கை கால்கள் எல்லாம் அழிக்கப்படுமா? எனக் கேள்வி வைத்தார்.

கேள்வி கேட்ட அவரே கேள்வியை வைத்து, ஒரு சில வினாடிகளில் அதற்கு விளக்கம் சொன்னார்.

அதாவது ஒருவரைப் பார்த்து உனது முகத்திற்காக இதைச் செய்கிறேன் என்று சொல்லுவோம். அவரின் முகத்திற்காகவா செய்தோம், அவருக்காக அவரின் முழு உடலுக்காகத் தானே என பி.ஜெ.யின் தரப்பு வாதத்திற்கே வலு சேர்த்து விட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய பி.ஜெ. அல்லாஹ்வின் முகம் மாத்திரம் மீதமாகும் மற்ற அனைத்தும் அழிக்கப்படும் என்ற வசனத்தை வைத்து அப்படியெனில் அல்லாஹ்வின் கை கால்களும் அழிக்கப்படுமா என்று கேள்வி கேட்ட ஜமாலி அவர்களே உண்மையில் அல்லாஹ்வின் முகம் என்றால் அவனின் முழு உடலும் தான் என்ற விளக்கத்தைச் சொல்லி விட்டார். அல்லாஹ் அசத்தியவாதிகளின் வாய்களினாலேயே சத்தியத்தைச் சொல்ல வைத்து விட்டான் என்று பதில் சொன்னார்.

16. அதே போல் ஆதம் நபியவர்களைத் தனது உருவத்தில் படைத்ததாக அல்லாஹ் கூறுவதாக நபியவர்கள் கூறிய புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை பி.ஜெ. கூறினார். அதற்கு ஆதாரப்பூர்வமாக பதில் சொல்வதை விட்டு விட்டு அல்லாஹ்வின் விஷயத்தில் மீண்டும்  தலையை நுழைத்து அப்படியானால் மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வா என்ற கேள்வி எழுப்பினார், ஜமாலி.

அதற்குப் பதில் கொடுத்த பி.ஜெ. ஆதம் (அலை) நபியின் முகத்தை மாத்திரம் தான் அல்லாஹ் தனது உருவத்தில் படைத்ததாகவும் அதனால் தான் முகத்தில் அடிக்க வேண்டாம் என தடை வந்ததாகவும் இடம் பெறும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி வாயடைக்க வைத்தார்.

17. அர்ஷைப் பற்றிய பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என ஆதாரத்துடன் பி.ஜெ. நிரூபிக்க, அதற்குப் பதில் கொடுக்கத் திராணியற்றுப் போன ஜமாலி உடனே, "அர்சின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா? அப்படியானால் எட்டு மலக்குகள் அல்லாஹ்வுடன் சேர்த்து அர்ஷைத் தூக்கி விடலாமா?' போன்ற மார்க்கத்தில் விளையாடும் விதமான கேள்விகளைக் கேட்டு அல்லாஹ்வையே கே-ப் பொருளாக மாற்றினார் அல்லாஹ்வின் எதிரி அப்துல்லாஹ் ஜமாலி.

இது போன்ற பல்வேறு கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் கேட்டு அல்லாஹ்வை கே-ப் பொருளாக மாற்றிட முயன்றார் ஜமாலி.

அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை பி.ஜெ. எடுத்துக் காட்டும் போதெல்லாம் அவைகளைக் கேலி கிண்டல் செய்த இவருடைய மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.

விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்

1. களியக்காவிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் செய்த விவாதத்தைப் பார்த்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது தான் உண்மை என்பதை அறிந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் கேள்வி கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்கும் போது,

நான் களியக்காவிளை விவாதத்தின் பின் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டேன். தற்போது உங்களிடம் விவாதம் செய்பவர், அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் மதரஸாவில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான். இங்கு விவாதத்தைப் பார்க்க வந்திருக்கும் ஜமாலி தரப்பினரில் பெரும்பாலான ஆலிம்கள் என்னிடம் படித்த மாணவர்கள் தான். நான் எப்படி களியக்காவிளை விவாதத்தின் பின்னர் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இவர்களின் மூட நம்பிக்கைக் கொள்கையை விட்டும் வெளியில் வந்தேனோ அது போல் இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரமாகவே இங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது தான் சரியானது என்பதைப் புரிந்து ஜமாலி போன்றவர்களின் கேடு கெட்ட கொள்கையை விட்டே வெளியில் வருவார்கள் என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்.

2. அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த ஜமாலி பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளறிக் கொட்டினார்.

3. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று சொல்ல வந்தவர், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

அரபியில் அல்லாஹ்வின் உருவம் என்று வரும் இடத்தில் எல்லாம் பண்பு என்று பொருள் வைத்துக் காட்டுங்கள் என்று பி.ஜெ சவால் விட்டார்.

பாவம்! அவரால் கடைசி வரை அந்த புகாரி ஹதீஸிற்குப் பண்பு என்று பொருள் வைக்கவே முடியவில்லை.


4. விவாதத்தின் முதல் நாள் ஜமாலியின் சுன்னத் ஜமாஅத் தரப்பில் வந்தவர்களின் பாதிப் பேரை அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக் கிழமை காணவில்லை.

EGATHUVAM AUG 2010