அறியாமையின்
ஆட்டமும் அரஃபா நாள்
மாற்றமும்
அறிவியல் வளர்ந்து விட்டது; அன்றைய
காலத்தில் இது போன்ற வளர்ச்சி இல்லை; இன்று
மக்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரடி ஒளிபரப்பாக அப்படியே
தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்; ஹாஜிகள்
அரஃபாவில் என்றைக்கு ஒன்று கூடுகின்றார்களோ அன்றைய நாளில் தானே நாம் நோன்பு நோற்க
வேண்டும் என்று
ஜாக்கினரும், பிறை
விஷயத்தில் மட்டும் அவர்களுடன் ஒத்தக் கருத்தில் இருந்தவர்களும் வினாக்களைத்
தொடுத்தனர். இவ்வாறு அவர்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கக் காரணம், நாம் இங்கு
காணும் பிறையின் அடிப்படையில் துல்ஹஜ் 9ஆம் நாளில்
நோன்பு நோற்கிறோம் என்பதால் தான்.
அதாவது
நாம் நோன்பு நோற்கும் பிறை 9 ஆனது, அரஃபாவில்
ஹாஜிகள் ஒன்று கூடுகின்ற நாளல்ல! ஹாஜிகளுக்கு அன்று பத்தாம் நாள்! மக்காவில் அன்று
பெருநாள்! அந்த நாளில் நாம் இங்கு அரஃபா நோன்பு நோற்கிறோம்.
இவ்வாறு
நாம் செய்வதற்குக் காரணம் என்ன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு
(வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1900
நீங்கள்
நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள்
முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள்
முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
நபி (ஸல்) அவர்களின் கூற்றின் அடிப்படையில்
தான் நமக்குத் தென்படும் பிறை அடிப்படையில் நாம் நோன்பு நோற்கிறோம். (இது தொடர்பாக, பிறை ஓர்
ஆய்வு என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிக விளக்கம் தேடுவோர் அந்நூலைப்
பார்வையிடவும்.)
மார்க்க
அடிப்படையிலும், அறிவியல்
அடிப்படையிலும் ஒரு நாள் தள்ளி நாம் நோற்கின்ற இந்த அரஃபா நோன்பைக் கிண்டலும்
கேலியும் செய்தவர்கள், இன்று ஒரு
நாளைக்கு முன்பு அரஃபா நோன்பு நோற்கிறார்கள். மக்காவில் அரஃபாவில் கூடுகின்ற
நாளில் இவர்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள்.
அதாவது இவர்களின் கழிவுகெட்ட கணக்குப்படி
ஹாஜிகள் அரஃபாவில் கூடிய நாள் அரஃபா நாளல்ல! எனவே இந்த ஆண்டு ஹஜ் செய்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகளின் ஹஜ் பாழாகி
விட்டது. ஏனெனில் ஹஜ்ஜின் முக்கிய வணக்கமே அரஃபா தான். அந்த நாளை இந்த ஹாஜிகள்
அனைவரும் வீணாக்கி விட்டனர் என்ற கருத்து வருகின்றது. இந்த லட்சணத்தில், சவூதி கண்ட
அரஃபா நாள் தவறானது என்ற கருத்து கொண்ட சிந்தனைச் சிற்பி (?) ஒருவரும்
இந்த ஆண்டு ஹஜ் செய்யச் சென்றது தான் இதில் வேடிக்கை!
தலைக் கொழுப்பேறிய இந்தத் தற்குறிகளின் ஆட்டம்
நமக்கு நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸை நினைவுபடுத்துகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து
ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக்
கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும்
அல்லாஹ் விட்டுவைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் தலைவர்களாக்கிக் கொள்வார்கள்.
அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள்
எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப்
போவார்கள்; பிறரையும் வழி
கெடுப்பார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின்
அல்ஆஸ் (ரலி)
நூற்கள்: புகாரி 100, முஸ்லிம் 4828
இந்த அறிவிலிகளுக்குப் பின்னாலும் இன்று ஒரு
சிலர் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தங்கள் தலைவர்களாகவும் ஆக்கிக்
கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகத் தான் இந்தக் கூட்டம் ஜாக் தலைமையின்
உத்தரவையும் மீறி உலகிலேயே அதிசயமாக சவூதிக்கு முன்பே அரஃபா நாள் கொண்டாடியது.
ஜாக் தலைமை இப்போது தான் இவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கின்றது.
இந்த நாட்டுச் சூழலுக்கேற்ப, ஏகத்துவக்
கொள்கையை வளைக்காமல், இட
ஒதுக்கீடு போன்ற சில சமுதாய நலப் பணிகளில் இறங்கிய காரணத்துக்காக நியாயமின்றி
தவ்ஹீது ஜமாஅத்தின் தாயீக்களை ஜாக் பகைத்தது; பழித்தது; அரசியல்
என்று கூறிப் பழி வாங்கியது.
ஆனால் அதே சமயம் ஜாக்கிலிருந்த இந்தத் தீய
சக்திகள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியலில்
நேரடியாகக் குதித்த போது ஜாக் தலைமை பாராமுகமாக இருந்தது. அப்போதே தன்
நிலைபாட்டைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது
இந்தக் கட்டளை மீறலை ஜாக் சந்தித்திருக்காது.
இப்படி இணக்கத்தை உடைக்கின்ற ஓர் இறுக்கம் பிறை
விஷயத்தில் தேவை தானா? மார்க்கம்
தாராளப் போக்கைக் கொண்டுள்ள இந்த விஷயத்தில் இப்படியொரு தளராத போக்கு தேவை தானா? என்பதையும்
ஜாக்கின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இன்று ஜாக்கின் நிலை என்ன? ஷிர்க், பித்அத்
எல்லாவற்றையும் விட, பிறை ஒன்று
தான் அடிப்படைக் கொள்கை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. கந்தூரிகள், சமாதி
வழிபாடுகள், மீலாது
விழாக்கள் என்று குராபிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஜாக் சார்பில்
மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம் என்ற
தலைப்பில் கூட்டம் போட்டு, பிறையைப்
பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. அதாவது பிறை மட்டும் தான் ஜாக்கின் மாபெரும்
கொள்கை என்பது போல் ஆகி விட்டது.
இந்தப் பிறை விஷயத்திற்காக இன்னும் எவ்வளவு
சக்தியைத் தான் வீணாக்கப் போகிறார்கள்? எவ்வளவு
பொருளாதாரத்தைத் தான் செலவழிக்கப் போகிறார்கள்? எத்தனை
பேரைப் பலி கொடுக்கப் போகிறார்கள்? இத்தனைக்குப்
பிறகும் ஜாக் இதில் தான் கவனம் செலுத்துமா? அல்லது
தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுமா? என்று
ஏகத்துவம் எதிர்பார்க்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு கருத்தையும் இங்கே
பதிவு செய்ய விரும்புகிறோம்.
அல்லாஹ்வின் வேதம், அவனது
தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்
ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற
அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. இடையில்
ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அஸ்திவாரத்தையும் ஜாக் சேர்த்துக் கொண்டுள்ளது. ஆனால்
குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அஸ்திவாரத்தில் இன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி வேரூன்றி வளர்ந்து
கொண்டிருக்கின்றது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளுக்கும்
மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்படுமாயின் அதை நோக்கி முதன் முதலில் சமாதானக்
கையை நீட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பதை ஏகத்துவம் சார்பில் இங்கே
பதிவு செய்து கொள்கிறோம்.
EGATHUVAM JAN 2009