ஆலிம்கள் பற்றாக்குறை: தேவை பந்தல் கால் அல்ல!
சொந்தக் கால்!
எங்கள் இறைவா! அவர்களில் இருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக!
அவர்,
உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத் தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் படுத்துவார்.
நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 2:129)
இது ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த கனிவான பிரார்த்தனை.
ஏகத்துவத்திற்காக நெருப்புக் கடலில் நீந்தியவர், மாபெரும் தியாகங்களைச் சந்தித்தவர் என்ற பெயர் பெற்ற இப்ராஹீம்
(அலை) அவர்களின் இந்தத் தூய பிரார்த்தனையில் தனக்குப் பின் இந்த ஏகத்துவத்தை நிலைநாட்ட
ஒரு சந்ததி வேண்டும் என்ற கவலை தெரிகின்றது. கரிசனம் நிறைந்து நிற்கின்றது.
தனக்குப் பின்னால் உள்ள சொத்தைப் பாதுகாக்க, தன் பெயரை நிலைநாட்ட ஒரு சந்ததி என்ற பாரம்பரியப் பார்வையைத்
தாண்டி,
தனக்குப் பின்னால் தவ்ஹீதை நிலைநாட்ட ஒரு சந்ததி வேண்டும் என்று
இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திக்கின்றார்கள்.
ஒரு சந்ததி வேண்டுமானால் அது தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காகத் தான்
என்ற இந்தப் பார்வையிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக, இமாமாக நிற்கின்றார்கள்.
இது போன்ற சிந்தனை தவ்ஹீதுவாதிகளாகிய நம்மிடம் வேண்டும். 1980க்குப் பின்னால் ஏற்றி வைக்கப்பட்ட ஏகத்துவப் பிரச்சார தீபம்
இன்று தமிழகமெங்கும் பட்டணம் முதல் பட்டி தொட்டி வரை பற்றி பிரகாசித்து எரிகின்றது.
அதன் தாக்கமாக மார்க்க அறிவுப் பசி ஏற்பட்டு, "அழைப்பாளர்களை அனுப்பி வையுங்கள்'' என்ற கோரிக்கைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவர்களது
பசியைப் போக்க முடியாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவித்துக் கொண்டிருக்கிறது. காரணம், ஆள் பற்றாக்குறை! ஆலிம்கள் போதாக்குறை!
பெருக்கல் விகிதத்தில் பெரிய வளர்ச்சி
இந்தப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகத் தான் கடையநல்லூரில்
ஓர் இஸ்லாமியக் கல்லூரியைத் துவக்கினோம். அப்படித் துவக்கியும் பற்றாக்குறை தீரவில்லை.
அதாவது நமது கல்லூரியில் படித்து வெளிவரும் ஆலிம்களின் எண்ணிக்கை
கூட்டல் விகிதத்தில் என்றால் தவ்ஹீதில் இணைந்து வரும் ஊர்களின் வளர்ச்சி பெருக்கல்
விகிதத்தில் அமைந்து இருக்கின்றது. இதனால் ஆலிம்கள் பற்றாக்குறையை நம்மால் தவிர்க்க
முடியாமல் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
உள்நாட்டிலேயே தவ்ஹீதைச் சொல்வதற்கு ஆலிம்கள் பற்றாக்குறை இருக்கும்
பட்சத்தில் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்களின் தவ்ஹீது வேட்கையைத் தணிக்கும் விதத்தில்
அவர்களுக்கும் அழைப்பாளர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.
இதற்கு அடிப்படைக் காரணங்கள்,
1. வெளிநாட்டில் பணி புரியும் மக்களிடம் இங்குள்ள மக்களை விட மார்க்கத்தில், தூய்மையான தவ்ஹீதில் அதிக நாட்டம்.
2. நமக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் இங்கே நஞ்சைக் கக்கும்
போது அதை உரிய முறையில் உடனுக்குடன் எதிர் கொண்டு விடுகின்றோம். இது போல் வெளிநாட்டில்
முடிவதில்லை.
அதிலும் குறிப்பாக நமக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் அங்குள்ள
அழைப்பு மையங்களில் ஊதியம் பெற்றுக் கொண்டு, அங்கேயே குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் விஷமப்
பிரச்சாரத்தையும் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த இரண்டு அடிப்படைக்
காரணங்களால் வெளிநாடுகளுக்கு தாயீக்கள் அனுப்புவதை தவிர்க்க முடியவில்லை.
இப்படிப்பட்ட இக்கட்டில் தாயீக்களின் பற்றாக்குறையைத் தவிர்ப்பது
எப்படி?
தட்டுப்பாட்டைத் தவிர்க்க இரு வழிமுறைகள்
ஏகத்துவம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அந்த
ஏகத்துவத்தை நம்முடைய காலத்தில் மட்டுமல்லாது நம்முடைய சந்ததிகள் காலத்திலும் தொட்டுத்
தொடரச் செய்ய இரண்டு வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
ஏகத்துவக் கொள்கைகளை இதயத்தில் கொண்ட நாம் "இந்தக் கொள்கை
வாழ வேண்டும்; மக்களை ஆள வேண்டும்'' என்று நினைத்தால் அந்தக் கொள்கையை நம்முடைய உயிரினும் மேலான
ஒன்று என நினைத்தால், நம்முடைய சந்ததியை
இப்ராஹீம் (அலை) அவர்களைப் போல் கவலை கொண்டு உருவாக்க முன்வர வேண்டும்.
அதிலும் குறிப்பாக செல்வந்தர்கள் குடும்பத்திலுள்ள சந்ததிகளை
கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். மார்க்கக் கல்வி பயில்பவர்களிடம் சுயமரியாதை இருக்காது, அடுத்தவர்களிடம் யாசகம் கேட்கும் தன்மை வந்து விடும் என்ற காரணங்களால்
செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை ஆலிமாக்குவதற்கு முன்வராமல் இருந்தனர். ஆனால் இன்று
அந்த நிலை மாறி விட்டது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் வீட்டுக்கு ஒரு
தவ்ஹீது ஆலிமை உருவாக்குவோம் என்று சொந்தக் காலில் நின்றால் தான் இந்தப் பிரச்சனை தீரும்.
பந்தல் காலில் நின்றால் ஒவ்வொரு ஜும்ஆவுக்கும், ரமளானுக்கும் ஆலிம்களைத் தேடிக் கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படும்.
அடுத்து, அசத்தியக்
கொள்கை கொண்ட ஆலிம்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் வெளி வருகின்றார்கள். அதற்குத்தக்க
அரபி மதரஸாக்கள் நல்ல பொருளாதார வசதியுடன் உள்ளன.
அது போன்று நம்மிடம் இல்லை. இருக்கின்ற ஒரேயொரு இஸ்லாமியக் கல்லூரியும்
பொருளாதாரப் பிராண வாயுக்காகத் தவித்துக் கொண்டு இருக்கின்றது.
ஏகத்துவத்தின் ஜீவநாடியான இந்தக் கல்லூரியின் செலவைத் தங்கள்
குடும்பச் செலவு என்று கருதி அதற்கான பொருளாதாரத்தை வாரி வழங்க முன்வர வேண்டும். இந்தக்
காரியங்களைச் செய்தால் நாம் இறந்த பிறகும் ஏகத்துவத்தை வாழச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ்.
EGATHUVAM OCT 2006