கஅபா வரலாறும் சிறப்புகளும்
எம். அப்துந்நாஸர் எம்.ஐ.எஸ்.சி.
அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ்
மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க
ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.
உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும்
இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.
"கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.
"கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள்
அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின்
ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும்
அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம்
திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே
திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு
எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது
அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள்
நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 2:150)
மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட
பள்ளிவாசல் மக்காவிலுள்ள "கஅபா' ஆலயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல்
ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன் 3:96)
"கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள்
நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம்
(அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள "மஸ்ஜிதுல்
அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.
அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "பூமியில் முதலில் அமைக்கப்பட்ட
பள்ளி எது?''
எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று
கூறினார்கள். பிறகு எது? என்றேன். "அல் மஸ்ஜிதுல்
அக்ஸா' என்று கூறினார்கள். "இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை
(வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். "நாற்பது
வருடங்கள்''
என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3366
ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட "கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள்
சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான்
அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.
எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன்.
(அல்குர்ஆன் 14:37)
என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.
ஹாஜரா அம்மையாரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில்
விட்டு வரும் போது நபி இபுறாஹீம் (அலை) மேற்கண்ட "துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.
எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
"தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப்
இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும்
உறுதி மொழி வாங்கினோம்.
(அல்குர்ஆன் 2:125)
அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து
(இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)
(அல்குர்ஆன் 2:127)
மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:
1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),
நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள்.
அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.
"நபி (ஸல்) அவர்கள் "ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, "நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய
பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்)
என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அதீ (ரலி)
நூல்: திர்மிதீ 3860
மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.
மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:
அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம்
ஆக்க வில்லையா?
ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு
வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 28:57)
அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.
(அல்குர்ஆன் 3:97)
இபுறாஹீம் (அலை) அவர்களின் "துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.
நபி (ஸல்) கூறினார்கள்:
"இபுறாஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை
செய்தார். இபுறாஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன்.
நபி இபுறாஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற
அளவையிலும்) அபிவிருத்தி செய்யுமாறு பிரார்த்தனை செய்துள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி)
நூல்: புகாரி
இபுறாஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ்
சொல்லிக் காட்டுகிறான்.
"இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில்
அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!''
(அல்குர்ஆன் 2:126)
அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக
ஆக்கினான்.
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே
உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு
மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு
இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில்
தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின்
வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
"கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய
நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து
விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.
அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக
வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை.
என்றாலும்,
அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.
இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
"(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை
நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில்
முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை
வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
(அல்குர்ஆன் 105:1-5)
மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை "கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும்
அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.
"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான
ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன்
பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு
போவார்கள்?
அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள்.
எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2118
இறைவன் "கஅபா' ஆலயத்திற்கு
தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.
நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில்
சில:
அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ
கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே)
எழுந்து நின்று,
"அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும்.
எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட
சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை
விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது.
இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர்
தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ்
பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! "இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து
விட்டு பிறகு "இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 4313, 1834
புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக்
கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
(ஏக இறைவனை) மறுத்தோ ருக்கும், அல்லாஹ்வின்
பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும்
துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
(அல்குர்ஆன் 22:25)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்
கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6882
இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை
இஸ்லாம் தடுக்கவில்லை.
ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல்
ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது
என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே
அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர்
(ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், "எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும்
ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1622
பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு
எதிரானது என்று கருதக் கூடாது.
ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே
பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக்
கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.
இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க
இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால்
தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.
இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை
நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.
புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது
இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.
அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:
"(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும்
பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல்
அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1189)
மேலும் செல்வமும், உடல் வலிமையும்
உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது "கஃபா'' ஆலயம் சென்று "ஹஜ்'' செய்வது கட்டாயக்
கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.
(அல்குர்ஆன் 3:97)
"கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை
மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில்
தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர!
(ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1190
"மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம்
தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்)
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: இப்னுமாஜா 1396, அஹ்மத்
14167
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை
விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும்
போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத்
துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.
ஆனால் இந்தத் தடை "கஅபா''விற்கு
மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர்
தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை
வலம் வருபவரையோ,
தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)
நூல்: திர்மிதீ 795
இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன்
உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.
"மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத்
தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூற்கள்: புகாரி 1881, முஸ்லிம்
5236
கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும்.
கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும்
இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். "கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1593
கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப்
பாழ்படுத்துவார்கள்.
இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில்
இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை
இடித்துப் பாழ்படுத்துவார்கள்.
நூல்: புகாரி 1591, 1896
"வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப்
பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1595
கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும்
போது "கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு
எதிரானது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது "இது எந்த நாள்
என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும், அவன் தூதருமே
நன்கறிவர்!''
என்றனர். உடனே அவர்கள், "இது
புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் "அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) "புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், "அல்லாஹ்வும்
அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
"இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, "உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள்
உயிர்களையும்,
உடைமைகளையும், உங்கள் மானம்
மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1742
இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று
வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!
EGATHUVAM DEC 2006