Apr 12, 2017

மக்களவைத் தேர்தலும் மறைவான ஞானமும்

மக்களவைத் தேர்தலும் மறைவான ஞானமும்

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பற்றியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவை பதவியேற்றதைப் பற்றியும் ஆயிரமாயிரம் பத்திரிகைகள் தங்கள் கருத்துக்களை எழுதித் தள்ளிவிட்டன. இந்த வரிசையில் ஏகத்துவம் தன் பங்குக்குக் கருத்து தெரிவிக்கின்றதே என்று யாரும் நினைக்க வேண்டாம்.

ஏகத்துவம் இந்தத் தேர்தலில் மார்க்க அடிப்படையிலான தனது பார்வையை மட்டுமே செலுத்துகின்றது. இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்த பாடங்கள் என்ன? என்பதை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இங்கு காண்பது தான் நமது நோக்கம். தேர்தல் முடிவுகள் இரண்டு விதமான பாடங்களை நமக்கு உணர்த்துகின்றன.

அதில் ஒன்று தான் மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கே என்ற இறை நம்பிக்கை.

சோதிடம் பார்ப்பது இஸ்லாத்தில் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களிடம் கூட தொற்றி நிற்கும் ஒரு தொற்று நோயாகும். இது அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும் அதிபயங்கர நோயாகும். சோதிடக்காரர்களுக்கும், கருத்துக் கணிப்பாளர்களுக்கும் இந்தத் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது.

சோதிடக்காரர்கள் தங்கள் சொற்கள் பலிப்பதற்கும், தங்கள் சோதிட இறையாண்மையை நிரூபிப்பதற்கும் இந்தத் தேர்தல் களத்தை ஒரு சோதனைத் தளமாக ஆக்கியிருக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. இவ்வளவு இடங்களைப் பிடிக்கும், காங்கிரஸ் இவ்வளவு இடங்களைப் பிடிக்கும், இன்னார் தான் இந்நாட்டுப் பிரதமர் என்று அடித்துச் சொல்லியிருக்க வேண்டும்.

கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகள் (எக்ஸிட் போல்) எல்லாம் பொய்யாகப் போகின்றன என்று வானத்தில் உள்ள கோள்களின் துணையுடன் அரசியல் ராசி பலனைப் பறை சாற்றியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தார்கள் என்றால் சோதிடர்கள் காட்டில் என்றும் மழை தான். சோதிட உலகில் சோபிக்கின்ற முடிசூடா மன்னர்களாக அவர்கள் உலா வருவார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் அவர்களின் கால்களில் வீழ்ந்து விடுவார்கள். அவர்களின் சோதிட சாம்ராஜ்யம் என்றும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும். சொன்னார்களா? இல்லை! அறவே இல்லை! இன்றும் கிடையாது! இனி எப்போதும் கிடையாது. சொல்லப் போனால் விஞ்ஞான ரீதியான கணிப்பு என்று சொல்லப்படும் கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகளின் முடிவுகள் எல்லாம் மண்ணைக் கவ்வின.

எப்படியாவது பிரதமராகி விடவேண்டும்; பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களத்தில் இறங்கிய பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்தது. 32 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைந்தன. அதிலும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட ஒவ்வொன்றையும் சோதிடக்காரர்களின் சொல்லைக் கேட்டுச் செயல்பட்ட ஜெயலலிதாவின் அணி பரிதாப தோல்வியைச் சந்தித்தது. பாதாளத்தில் கிடந்த காங்கிரஸ் பாராள வந்து விட்டது.

இதுவும் எந்த சோதிடக்காரனும் சொல்லாத ஒன்று! எந்த ஆரூடக்காரனும் அறவே கணிக்காத ஒன்று!

நாளை நடக்கவிருப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்பதைத் தான் இத்தகைய பலதரப்பட்ட கணிப்புகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதைத் தான் திருமறைக் குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

தான், நாளை சம்பாதிக்க உள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: இப்னு மாஜா 1887

சோதிடம் என்பது வெறும் ஏமாற்றுக் கலை தான் என்பதைப் பல விஷயங்களில் அறிந்த பிறகும் இன்று வரை மக்கள் அதில் ஏமாந்து விடுவதை நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு சில உதாரணங்களை நாம் தெளிவாகக் கூறலாம்.

ராஜீவ் காந்தி பத்தாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று மிகப் பிரபலமான ஜோதிட வித்வான் கணித்துக் கூறினார். ஆனால் அது பொய்யாகப் போனது.

கிரிக்கெட் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றும் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்து கூறியதும் பொய்யாகப் போனது.

சென்ற சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதா முதலமைச்சராவார் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துக் கூறியதும் பொய்யாகப் போனதை நாம் கண்டோம். இது எதைக் காட்டுகின்றது?

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக! அல்குர்ஆன் 27:65

என்ற அல்லாஹ்வின் வார்த்தைகள் என்றும் மாறாத உண்மை என்பதையே காட்டுகின்றது. நமது இறை நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகின்றது. சோதிடக்காரர்கள் எதிர்காலத்தில் நடப்பதைச் சொல்வார்கள் என்பது சூன்யம் என்பதை இந்தத் தேர்தல் சுத்தமாக தெரியப்படுத்துகின்றது.

இப்படிப்பட்ட விஷயங்களை நம்பி நாம் ஏமாந்து விடக் கூடாது என்பதால் தான் நபியவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரன், அல்லது வருங்காலத்தைக் கணித்துக் கூறுபவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகிறானோ அவன், இந்த முஹம்மதின் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 9171

மறைவான ஞானம் இறைவனுக்கே என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்து நிற்கின்றது. இந்த வகையில் இது நாம் காணும் முதல் பாடமாகும்.

ஆட்சியின் அதிபதி அல்லாஹ் ஒருவன் தான் என்பது இந்தத் தேர்தலில் நாம் கற்கும் இரண்டாவது பாடம்!

அத்வானி தான் ஆளப் பிறந்தவர் என்று வகை வகையான பிரச்சார யுக்திகள் எல்லாம் நொறுங்கிப் போய் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மன்மோகன் சிங் ஒரு பலவீனமான பிரதமர், சோனியாவின் கைப்பாவை என்ற வலுவான பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. அவையெல்லாம் தவிடுபொடியாகி மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கூட்டணி மற்றும் இதர கட்சிகளும் பிரதமராவதற்கு ஏகமனதாகத் தேர்வு செய்தன.

இந்த நிகழ்வு நமக்கு எதைக் காட்டுகின்றது?

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! அல்குர்ஆன் 3:26

இந்த வேத வரிகளை அல்லவா நமக்கு நினைவுபடுத்துகின்றது?

பாழுங்கிணற்றில் கிடந்த நபி யூசுப் (அலை) அவர்களை ஆளும் பொறுப்புக்குக் கொண்டு வந்தது யார்? அல்லாஹ் தான்.

நேற்று வரை தொலைக்காட்சியைத் திறந்தால் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும். அதிமுக போன்ற கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் என்று பல தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்றோ அத்வானியின் முகத்தைக் காட்டுவதற்குக் கூட தொலைக்காட்சிகள் யோசிக்கின்றன. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க மாட்டேன் என அத்வானியே வெருண்டோடுகின்றார். இந்த இழிவுக்குக் காரணம் யார்? அந்த அல்லாஹ் தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த தமுமுகவினர், திமுக வென்றதும் தமிழகமே தங்கள் கைவசம் வந்தது போல் குதித்தனர். வாரியப் பதவியை வாங்கிக் கொண்டு தங்களால் இயன்ற வரை அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். தவ்ஹீதுக்கு எதிராகவும் களமிறங்கினர். ஆனால் மூன்றே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி, அனைத்தையும் இழந்து இன்று இழிவுக்குள்ளாகி நிற்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் இவர்களை விரட்டியடித்து, தனியாகப் போட்டியிட்டு, 16 அமைப்புகளின் ஆதரவு இருப்பதாகக் கூறியவர்கள் இன்று 13,000 வாக்குகள் வாங்கி சந்தி சிரிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர்.

இந்த இழிவுக்குக் காரணம் யார்? அல்லாஹ் தான்.

அவன் நாடியவர்களைக் கண்ணியப்படுத்துகின்றான். அவன் நாடியவர்களை இழிவுபடுத்துகின்றான்.

அவன் தான் எல்லாம் வல்ல அல்லாஹ்! அவன் தான் ஆட்சியின் அதிபதி! உலக ஆட்சியாளர்களின் அத்தியாயங்களைப் புரட்டிப் பார்க்கும் போது அவன் எத்தகைய அதிபதி என்பது இன்னும் தெளிவாகும்.

இப்படிப்பட்ட ஆட்சியின் அதிபதியாக அவன் இருக்கும் போது, மோடி போன்ற ஆட்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சாகின்றார்களே! இதற்கு ஒரு விடிவும் முடிவும் கிடையாதா? என்று கேள்வி எழுகின்றது.

ஃபிர்அவ்னால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் முறையிட்ட வேளையில் அவர்கள் அம்மக்களுக்குச் சொன்ன பதிலையே நமக்கும் பதிலாகத் தருகின்றான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும் என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி, எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான் என்றும் கூறினார். அல்குர்ஆன் 7:128, 129

அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றியும் வைத்தான்.

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

அல்குர்ஆன் 7:137

நவீன ஃபிர்அவ்ன்களான மோடி வகையறாக்களிடம் மாட்டிக் கொண்ட நமக்கும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள். அல்குர்ஆன் 24:55

அந்த அதிபதி நாடினால் நம்மிடமும் ஆட்சியைத் தருவான். எப்போது? நாம் கொள்கையில் சமரசம் செய்யாத உண்மையான ஏகத்துவவாதிகளாக ஆகும் போது!

பித்அத்தை ஆதரிப்பவர்கள் சிந்திக்கட்டும்

இந்தத் தேர்தல் நமக்கு மற்றொரு படிப்பினையைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரச்சாரம் செய்தார்கள். அந்தப் பிரச்சாரம் தான் மக்களை மாற்றக் கூடியது என்றும், தாங்கள் யாரைத் தீய சக்திகளாக நினைக்கிறார்களோ அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடாமல் தடுக்கின்ற கேடயம் என்றும் கருதினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சாரம் செய்ததை நாம் காண முடிந்தது.

தேர்தல் பணிகளையெல்லாம் கண்காணிக்கின்ற, கட்டுப்படுத்துகின்ற தேர்தல் கமிஷன் ஒரு உத்தரவு பிறப்பிக்கின்றது. அதாவது 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. யாராவது 05:01 மணிக்குப் பிரச்சாரம் செய்தாலும் அவர் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான் அந்த உத்தரவு. இந்த உத்தரவிற்குக் கட்டுப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை 4:55 மணிக்கே முடித்துக் கொண்டதை நாம் கண்டோம்.

பிரச்சாரம் என்பது நல்ல விஷயம் தானே என்று கருதி யாரும் தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறிச் செயல்படவில்லை. என்ன காரணம்? நல்ல விஷயமாக இருந்தாலும் உத்தரவை மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டனை என்ற சட்டம் தான், அதன் மீது உள்ள பயம் தான் இதற்கான காரணமாகும்.

இவ்வுலகில் சாதாரண மனிதர்கள் பிறப்பிக்கக் கூடிய சட்டங்களுக்கே இவ்வளவு அச்சம் இருக்கிறதென்றால் அனைத்து உலகையும் கட்டியாளக் கூடிய இறைவனின் சட்ட திட்டங்களுக்கு நாம் எந்த அளவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று மார்க்கத்தின் பெயரால், நன்மை என்ற பெயரில் எவ்வளவு பித்அத்தான, இணை வைக்கக் கூடிய காரியங்கள் இஸ்லாமிய மக்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. மவ்லித்கள், தாயத்து, தர்ஹா வழிபாடுகள் என்று பல வகையான, நிரந்தர நரகத்திற்குரிய காரியங்களை நன்மை என்ற பெயரில் இன்றைக்குப் பலர் செய்து வருகின்றனர்.

அது மட்டுமல்ல! பராஅத் இரவு, முஹர்ரம் பண்டிகை, மீலாது விழா, பாங்கிற்கு முன் ஸலவாத்து கூறுவது, கூட்டுத் துஆ, 3ம், 7ம், 40ம் பாத்திஹாக்கள் மற்றும் வருடாந்திர கத்தம் ஃபாத்திஹாக்கள், சுன்னத்துக் கல்யாணம், பெண் வீட்டு விருந்து, சடங்கு விருந்து என எத்தனை வகையான பித்அத்துகள் மலிந்து காணப்படுகின்றன?

இவ்வுலக விஷயங்களில் நல்லதாக இருந்தாலுமே பொறுப்பிலுள்ள சாதாரண மனிதர்களின் கட்டளைகளுக்குப் பயந்து அதை விட்டு விடக் கூடிய நாம், மார்க்கத்தின் பெயரால் அல்லாஹ்வும், அவன் தூதரும் கட்டளையிடாத விஷயங்களையெல்லாம் பொறுப்பற்ற முறையில் நன்மை என்ற பெயரில் செய்து வருகிறோமே! நாம் இறைவனின் கட்டளைகளைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மார்க்கத்தின் பெயரால் நாம் செய்கின்ற பித்அத்தான காரியங்கள் எல்லாம் நம்மை நரகத்தில் தான் கொண்டு போய் சேர்க்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காரியங்களில் தீயது (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவையாகும். ஒவ்வொரு புதிய காரியங்களும் அனாச்சாரங்களாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: நஸயீ 1560

நல்லது என்று கருதப்பட்ட தேர்தல் பிரச்சாரமே இரண்டு வருட சிறைத் தண்டனைக்குப் பயந்து ஐந்து நிமிடத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளப்படுகிறதென்றால், நிரந்தர நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய, இணை வைத்தல் மற்றும் பித்அத்தான காரியங்கள் எந்த அளவிற்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் மூலம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்


இவ்வுலகிலாவது மனிதர்களை ஏமாற்றி, தண்டனையிலிருந்து தப்பித்து விட முடியும். ஆனால் இறைவனை ஒரு போதும் நாம் ஏமாற்றி விட முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

EGATHUVAM JUN 2009