Apr 27, 2017

ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேசம்

ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேசம்

காயத்ரி மந்திரத்துடன் கட்சி துவக்கம்

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை.

எனவே நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.  ஆனால் ஜமாஅத் இஸ்லாமி என்ற இயக்கம் ஜனநாயகம் என்பது நவீன இணை வைத்தல் என்று பிரச்சாரம் செய்து வந்தது.

நாடு பிரிவினைக்கு முன் 1941ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி லாகூரில் மவ்லானா அபுல் அலா மவ்தூதி தலைமையில் துவக்கப்பட்ட இயக்கம் தான் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த்! நாடு பிரிவினை அடைந்ததும் இந்த இயக்கம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இரு தனி அமைப்புகளாகச் செயல்பட்டன.

மவ்தூதியின் தலைமையில் பாகிஸ்தான் ஜமாஅத் இஸ்லாமி இயங்கியது. மவ்லான அபுல் லைஸ் நத்வி தலைமையில் இந்தியாவில் இயங்கியது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

ஜமாஅத் இஸ்லாமியின் கொள்கையே உலகெங்கிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது தான். இதற்கு இவர்கள் ஆதாரமாகக் கொள்வது திருக்குர்ஆனின் 6:57, 12:40, 12:67 போன்ற வசனங்களைத் தான். அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை. அல்குர்ஆன் 6:57, 12:40, 12:67

நாடாளுமன்றம், சட்டமன்றம் இயற்றுகின்ற சட்டங்கள் அனைத்தும் வழிகேடு! இந்தச் சட்டங்களைப் பின்பற்றுவோர் இறை மறுப்பாளர்கள் ஆவர். இதையும் ஜமாஅத் இஸ்லாமி 5:44-46 வசனங்களின் அடிப்படையில் நிறுவுகின்றது.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள். அல்குர்ஆன் 5:44

இன்றைய உலகில் நடைபெறும் ஆட்சி அதிகாரங்கள் எல்லாம் மனிதச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை பெரும்பான்மை என்ற ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்பது ஜமாஅத் இஸ்லாமியின் நிலைப்பாடாகும்.

"அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை'' என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை. எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது. மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர். எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர். இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:42

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒருபோதும் முரண் கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.

அல்குர்ஆன் 5:95

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்!' நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 38:21, 22

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

அல்குர்ஆன் 21:78

தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது. இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.

ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுத்தனர். பாகிஸ்தானில் இயங்கும் ஜமாஅத் இஸ்லாமி, மவ்தூதியின் மறைவுக்குப் பின் அரசியலில் குதித்தது. அதன் பின்னரும் இந்திய ஜமாஅத் இஸ்லாமி அரசியலில் குதிக்காமல் இருந்தது.

ஆனால் அது இப்போது, ரங்ப்ச்ஹழ்ங் டஹழ்ற்ஹ் ர்ச் ஒய்க்ண்ஹ என்ற பெயரில் அரசியலில் களமிறங்கியிருக்கின்றது; கட்சி துவங்கியிருக்கின்றது.

கொள்கையில் சமரசம்

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அதைப் பற்றி யாரும் விமர்சிக்கலாம்; விமர்சிக்காமலும் விட்டு விடலாம். ஆனால் இஸ்லாத்தின் பெயரால் ஒரு நிலைப்பாட்டைக் கூறி, அரசியலில் குதிக்காமல் இருந்த ஒரு அமைப்பு இப்போது அரசியலில் குதிக்கும் போது அது விமர்சனத்திற்குள்ளாகி விடுகின்றது.

அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்ற நிலைப்பாடு என்ன ஆனது?

அதிகாரம் அல்லாஹ்வுக்கு இல்லை, மக்களுக்குத் தான் என்று ஏதேனும் இறை அறிவிப்பு வந்ததா? அல்லாஹ் அதிகாரம் மக்களுக்கு என்ற நிலைப்பாடு தவறானதா? என்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.

ஜனநாயகம் என்பது இணை வைப்பு இல்லை, அது தூய ஏகத்துவம் தான் என்று ஏதேனும் இறை அறிவிப்பு வந்ததா? அல்லது ஜனநாயகம் இணை வைப்பு என்ற இவர்களின் நிலைப்பாடு தவறானதா? என்ற கேள்வி மக்களுக்கு எழுகின்றது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான், ஜனநாயகம் இணை வைத்தல் என்ற இவர்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை இவர்களின் இயக்க நூல்களிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலைபாட்டின் படி இவர்கள் ஒருபோதும் அரசியலில் குதிக்கக் கூடாது. ஆனால் அரசியலில், அதுவும் இந்திய அரசியலில் குதிக்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு எந்தக் கொள்கைப் பிடிமானமும் இல்லை என்பதைத் தான் இது பறைசாற்றுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி என்று இவர்கள் சொல்லி வந்தது வெறும் பிதற்றலும் வெற்றுக் கோஷமும் தான் என்று ஆகியுள்ளது. இவர்கள் எந்தக் கொள்கையை இதுவரை பின்பற்றினார்களோ, பிரச்சாரம் செய்தார்களோ அந்தக் கொள்கைக்கே இன்று நேர் எதிராக முரண்பட்டு நிற்கின்றார்கள். இது தூய இஸ்லாத்திற்கு மாற்றமான நடவடிக்கையாகும்.

தான் கொண்ட கொள்கையிலிருந்து என்றைக்கு ஒருவர் மாறுபடுகின்றாரோ அவர் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறும் அழகிய கருத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. (அல்குர்ஆன் 11:88)

ஜமாஅத் இஸ்லாமியைத் தாய் இயக்கமாகக் கொண்ட எஸ்.ஐ.எம். என்ற அமைப்பில் உருவான திருவாளர் ஜவாஹிருல்லாஹ் இந்தக் கொள்கைகளை ஊர் தோறும் பிரச்சாரம் செய்தவர். பின்னர் தமுமுகவிற்கு வந்த பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று மக்கள் மத்தியில் சத்தியம் செய்தவர். அப்படி மீறி வந்தால் செருப்பைக் கழற்றி அடியுங்கள் என்று மக்களிடம் வேண்டிக் கொண்டவர். இன்று ஆட்சி அதிகாரம் அம்மாவுக்கே என்று பிரச்சாரம் செய்கிறார். இணை வைப்பு ஜனநாயகத்தில் பண நாயகத்துடன் இணைந்து, வாக்குப் பொறுக்க வலம் வருகின்றார்.

வேருக்கு வந்த பழுது

இது ஜவாஹிருல்லாஹ் என்ற, வளர்ந்து விட்ட விழுதுக்கு வந்த பழுது என்று நினைத்தோம். ஆனால் அந்தப் பழுது இப்போது ஜமாஅத் இஸ்லாமி என்ற வேருக்கே வந்திருக்கின்றது.

இது கொடியில் படர்ந்த நோய் என்று நினைத்தோம். ஆனால் இது அடியிலும் தொடர்ந்த நோய் என்று இப்போது தான் புரிகின்றது.

விடியல் என்ற பெயரில் முளைத்த இயக்கமும் இந்தச் சிந்தனையில் பிறந்தது தான். இன்று அதுவும் அரசியல் இலையில் வாக்கு என்ற எச்சிலைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது.

விளையும் பயிர் முளையில் தெரியும்

இப்போது ஜமாஅத் இஸ்லாமி துவங்கியிருக்கும் இயக்கமும் இந்த ரகத்தைச் சேர்ந்தது தான் என்பதில் எந்தச் சந்கேமும் இல்லை.

ஏப்ரல் 18ஆம் தேதி திங்கள் அன்று துவங்கப்பட்ட வெல்பேர் பார்ட்டி ஆப் இன்டியா என்ற இந்தக் கட்சி, தன்னை முஸ்லிம் கட்சி அல்ல என்றும் ஜமாஅத் இஸ்லாமியின் அரசியல் பிரிவு அல்ல என்றும் அடையாளப்படுத்திக் கொள்கின்றது.

கட்சி இப்போது உதயமானாலும் அதைத் துவங்குவதற்கான திட்டம் இரண்டாண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்தும் இந்த இயக்கம், தான் ஒரு மதச் சார்பற்ற இயக்கம் என்று பிரகடனப்படுத்திக் கொள்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடும், நீதி, நியாயம், சமத்துவம், விடுதலைக்காகப் போராடும் என்று வழக்கமான வசனங்களையும் இந்தக் கட்சி பேசியிருக்கின்றது.

அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்று வசனம் பேசி அதற்கே மாற்றமாக நடந்த இவர்கள், தாங்கள் பேசும் இந்த வசனங்களின் படி எப்படி நடக்கப் போகின்றார்கள்? என்ற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகின்றது.

இதற்குப் பளிச்சென்று பதிலும் கிடைத்து விடுகின்றது.

ஒரு கிறித்தவப் பாதிரியார் காயத்ரி மந்திரத்தை ஓதிய பின் இந்தக் கட்சி துவங்கப்படுகின்றது. இந்த இயக்கத்தின் துவக்கம் விளையும் போதே தெரிந்து விட்டது. மதச் சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமிய அடையாளத்தைத் தொலைப்பதற்கும், தூக்கி எறிவதற்கும் எந்த அளவுக்குத் தயாராக உள்ளது; அதற்கு இப்போதே துணிந்து விட்டது என்பதை இந்த ஆரம்பம் நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றது.

ஏற்கனவே சாக்கடை சுத்தம் செய்யப் புறப்பட்ட இவர்களின் வாரிசுகளான மாமாக, புரட்சித் தலைவி (?) அம்மாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி பாதபூஜை செய்வது, மீலாது விழா, கந்தூரி வாழ்த்துக்கள் சொல்வது, மறைந்த அரசியல்வாதிகளுக்கும், பாபாக்களுக்கும் அஞ்சலி செலுத்துவது, விடியல் வெள்ளிகள் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வது, இஸ்லாமிய அடையாளம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு இறை நாமத்தைத் தவிர்ப்பது, கை தட்டுவது போன்ற காரியங்கள் மூலம் படிப்படியாக இஸ்லாத்தை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்நிலையில் தான் இவர்களின் தாய்ச் சபை காயத்ரி மந்திரத்துடன் கட்சி துவங்கியுள்ளது. எடுத்த எடுப்பிலேயே சமரசம் என்றால் இனி போகப் போக சங்கமம் தானே! எனவே இதனால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எந்தப் பயனும் இல்லை. பிற சமுதாயங்களுக்கும் எந்தப் பயனும் இல்லை.


ஆக மொத்தத்தில் தனக்கும் ஓர் அரசியல் அணி இருக்க வேண்டும் என்ற அதிகார ஆசையைத் தவிர்த்து, ஜமாஅத் இஸ்லாமியின் இந்த முயற்சியில் வேறெந்த விவேகமும் புத்திசாலித்தனமும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஜமாஅத் இஸ்லாமி தன் பாதையை விட்டும் தடம் புரண்டிருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

EGATHUVAM MAY 2011