இஸ்லாத்தின் பார்வையில் மத குருமார்கள்
மனிதன், மனிதனை
அடிமைப்படுத்தும் அநியாயத்திற்கு எதிராகப் பூத்த மார்க்கம் தான் இஸ்லாம். மனிதன், தன்னைப் போன்ற இன்னொரு மனிதனைக் கடவுளாக நினைக்கும்
அறியாமையை ஒழிக்கப் புறப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி தான் இஸ்லாம்.
உலகில் ஒரு மனிதன், சக மனிதனை அடிமைப்படுத்துவதற்கான பல்வேறு காரணங்களை நாம்
காணலாம்.
1. ஆட்சி அதிகாரம்
தலைமுறை தலைமுறையாகவோ அல்லது தேர்தல் முறை மூலமாகவோ
ஒருவனுக்கு ஆட்சியதிகாரம் கிடைக்கின்றது. அவ்வாறு அவன் ஆளத் துவங்குகின்ற போது
மக்கள் போற்றவும் புகழவும் ஆரம்பிக்கின்றனர். அவனுடைய தயவை நாடுபவர்கள் அவனுடைய
காலில் விழுந்து வணங்குகின்றனர். மக்களின் இந்த அறியாமை அல்லது நயவஞ்சகப் போக்கு, அதுவரையில் சாதாரணப் பிறவியாக, சாமானிய மனிதனாக இருந்த அவனை, "தான் ஒரு சக்தி' என்று எண்ண வைக்கின்றது. இதன் காரணமாகத் தன்னை ஒரு கடவுள்
என்று எண்ணத் தலைப்படுகின்றான்.
2. அபார ஆற்றல்
பிற மனிதர்களை விட ஏதாவது ஒரு வகையில் ஒரு திறமை அல்லது ஓர்
ஆற்றலை உண்மையிலேயே ஒருவன் பெற்றிருப்பான். அல்லது அத்தகைய ஆற்றல் இருப்பதாக
நடிப்பான். அவ்வளவு தான். அவன் கடவுளாக்கப்பட்டு விடுவான். உதாரணத்திற்குச்
சொல்வதென்றால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஆந்திரத்தில் என்.டி.ஆர். போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
3. அற்புதங்கள்
உலகத்தில் ஓரிறைக் கொள்கையை நிலை நாட்டுவதற்காக இறைத்
தூதர்கள் அனுப்பப்பட்டனர். தாங்கள் உண்மையான இறைத் தூதர்கள் என்று
நிரூபிப்பதற்காகவும், நிறுவுவதற்காகவும்
அல்லாஹ் அவர்களுக்குச் சில அற்புதங்களை வழங்குகின்றான். அவ்வாறு அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டிய அந்தத் தூதர்களை மக்கள் கடவுளாக்கி விடுவர். இதற்கு உதாரணமாக
ஈஸா (அலை) அவர்களைக் குறிப்பிடலாம்.
4. குலம்
மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக் கொண்ட குல உயர்ச்சி
ஒரு குறிப்பிட்ட சாராரைக் கடவுளாகவும் மற்றவர்களை அடிமையாகவும் ஆக்கி விடுகின்றது.
இதற்கு இந்தியாவில் பிராமணர் குலத்தை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
5. மதப் பிரச்சாரம்
இறைத் தூதர்கள் இறந்த பிறகு வேதத்தை விளக்குகின்ற பொறுப்பை
வகிப்பவர்கள் வேதத்தை விளங்கிய ஆலிம்கள் ஆவர். அவர்கள் மத போதகர்கள், மத குருமார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இரு
வகையினர்.
ஒரு வகையினர் வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்களிடம் விளக்கி
அவர்களை நேரிய, சீரிய பாதையில்
அழைத்துச் செல்பவர்கள். மற்றவர்கள் வேதத்தில் உள்ளதை மறைத்து இல்லாதது பொல்லாததைச்
சேர்த்து தங்கள் மனோ இச்சைக்குத் தக்க மக்களை அழைத்துச் செல்வார்கள். இவர்களுடைய
வார்த்தைகளை மக்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். இறைக் கட்டளைக்கு மாற்றமாக
அவர்கள் கூறினாலும் மக்கள் அதை ஏற்று அவர்களை அப்படியே கடவுளாக்கினர். மக்கள்
அவர்களுக்கு அடிமையாயினர். அவர்களும் மக்களை அடிமையாக்கினர்.
மனிதனை மனிதன் கடவுளாக்குகின்ற இந்த ஐந்து வகைகளானாலும் சரி, இதல்லாத வேறு வகையானாலும் சரி. மேலே நாம் எடுத்துக்
காட்டியுள்ள ஐந்தாவது வகை தான் மிக அபாயமானதும் ஆபத்தானதுமாகும்.
ஏனையவற்றை விட்டும் மக்களை மீட்பதை விட மத
குருமார்களிடமிருந்து மக்களை மீட்பது தான் மிகக் கடுமையானதாகும். அதாவது, மத குருமார்கள் என்ற போலிக் கடவுளர்களிடமிருந்து மக்களைக்
காப்பாற்றுவது மிகவும் சிரமமான ஒன்று. காரணம், இவர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும்
ஆன்மீகம் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கின்றனர். இதில் மக்கள் ஏமாந்து
போகின்றனர்.
இந்த ஏமாற்று வேலையில் முதல் இடத்தை வகிப்பவர்கள் வேதம்
கொடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, அதாவது யூத, கிறித்தவ மத குருமார்கள் ஆவர். எனவே இவர்களைப் பற்றி
முதலில் பார்ப்போம்.
யூத, கிறித்தவ
மத குருமார்கள்
மந்திரவாதிகளை மிஞ்சிய இந்த மத குருமார்களின் மாய வலையில்
மக்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக இஸ்லாம் அவர்களைத் தெளிவாக அடையாளம்
காட்டுகின்றது.
இவர்கள் இறைவனுக்கு எப்படி மாறு செய்தார்கள்? இறைக் கட்டளையை எப்படி மீறி நடந்தார்கள்? என்பதைத் திருக்குர்ஆன் வரிசையாகப் பட்டியலிடுகின்றது.
அடுத்தவருக்கு அறிவுரை
இந்த மத குருமார்கள் பிறருக்கு நன்மையை ஏவி, அவர்களைத் தீமையை விட்டும் தடுப்பார்கள். ஆனால் அந்த
நன்மையைத் தாங்கள் செய்ய மாட்டார்கள். மக்களை விட்டும் தடுத்த தீமையை இந்த மத
குருமார்கள் செய்து கொண்டிருப்பார்கள். இதைத் தான் திருக்குர்ஆனின் இந்த வசனத்தின்
மூலம் இறைவன் கண்டிக்கிறான்.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அல்குர்ஆன் 2:44
தீமையைத் தடுக்காமலிருத்தல்
தீமை நடக்கும் போது, அந்தத் தீமையைக் கண்டு கொள்ளாமல், அதைத் தடுக்காமல் வாய் பொத்தி மவுனமாயிருந்தனர். இதைத்
திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
அவர்களின் பாவமான கூற்றை விட்டும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 5:63
இவ்வாறு தடுக்காததுடன் மட்டுமல்லாமல் அந்தத் தீமைகளை விட்டு
விலகியும் இருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் இறைத் தூதர்களுடைய சாபத்திற்கும்
உள்ளானார்கள்.
"வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக
(கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாங்களும் வழி கெட்டு, அதிகமானோரையும் வழி கெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோ
இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!'' என்று
கூறுவீராக!
தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக
இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், அவர்கள் வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.
அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர்
தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 5:77-79
சத்தியத்தை மறைத்தல்
இறைவன் இவர்களுக்கு வேதத்தில் அருளிய உண்மையை அப்படியே
மறைத்தனர். இதையும் நாம் திருக்குர்ஆனில் பார்க்கலாம்.
நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு
சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
(அல்குர்ஆன் 2:146)
இறைவனின் வேத வசனங்களை அற்ப விலைக்கு விற்றனர்.
அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப்
பகரமாக வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த
அற்பமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும்
கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும்
பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக் கூடாது
என்று அவர்களிடம் வேதத்தில் உறுதி மொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது.
(இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?
அல்குர்ஆன் 7:169
இப்படி விற்று அவர்கள் சாப்பிடுவது நரக நெருப்பைத் தான்
என்று இறைவன் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்)
சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத்
தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக்
கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!
அல்குர்ஆன் 2:174, 175
முக்கடவுள் கொள்கை
இறைவனால் அளிக்கப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரே ஒரு இறைவனை
மட்டுமே வணங்கச் சொல்கின்றன. ஆனால் இந்தப் பாதிரிமார்களோ அந்த ஏகத்துவக் கொள்கையை
மறைத்து,
மாற்றி முக்கடவுள் கொள்கையை தங்கள் கைகளால் எழுதித்
திணித்தனர். வேதத்தில் திருத்தங்களையும் செய்தனர். இதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.
தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அல்லாஹ்விடமிருந்து
வந்தது என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும்
அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு
உள்ளது.
அல்குர்ஆன் 2:79
இவர்கள் செய்த இந்தத் திருத்தங்கள், தில்லுமுல்லுகளால் ஏற்பட்ட விளைவு என்ன?
உலகெங்கும் வாழ்கின்ற 1000 மில்லியன் அதாவது நூறு கோடிக்கு மேற்பட்ட
கிறித்தவர்கள் தவறான கடவுள் கொள்கையில்
வீழ்ந்து தடம் புரண்டு விட்டனர். இது தற்போது உலகில் இருப்பவர்களின் எண்ணிக்கை
தான். ஈஸா நபி காலம் முதல் இன்று வரை வாழ்ந்த கிறித்தவர்கள் அனைவரையும் சேர்த்தால்
இது பல நூறு கோடிகளைத் தாண்டும். இப்படிப்பட்ட கடைந்தெடுத்த வழிகேட்டிற்கு யார்
காரணம்?
இந்த மத குருமார்கள் தான். இன்று உலகில் கடவுள் மறுப்புக்
கொள்கையான நாத்திகம் வளருவதற்கும், பொதுவுடைமைக் கொள்கை என்ற புதிய கொள்கை தோன்றுவதற்கும் இந்த
மத குருமார்கள் தான் காரணம்.
பணம் படைத்த பாதிரி உலகம்
அல்லாஹ் திருக்குர்ஆனில் இவர்களின் பொருளாதாரச் சுரண்டலைப்
பற்றிப் படம் பிடித்துக் காட்டுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான
முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர்.
"அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை
உண்டு''
என்று எச்சரிப்பீராக!
அல்குர்ஆன் 9:34
இது திருக்குர்ஆன் அருளப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மத
குருமார்களைக் குறிக்கின்றது. குர்ஆன் அருளப்பட்ட காலத்திற்குப் பின் போப்
எனப்படுபவர்கள் நடத்திய பொருளாதாரச் சுரண்டல் பல்வேறு புரட்சிகளை உருவாக்கியது.
தேவாலயம் தான் ஆட்சியாளர்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்ட
அதிகார மையமாகத் திகழ்ந்தது. திருச்சபை தான் ஆளும் வர்க்கத்தைத் தீர்மானிக்கின்ற
சர்வாதிகார சாம்ராஜ்யமாகச் செயல்பட்டது. கிறித்தவ உலகத்தின் மொத்தச் சொத்தில்
மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்கு போப்பாண்டவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தனர்.
முதலாளிகள், தொழிலாளிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்தனர். அவர்களை
மொட்டையடித்தனர்.
பணக்கார போப்புகளும் பணக்கார முதலாளிகளும் தொழிலாளி
வர்க்கத்தின் மீது அரங்கேற்றிய அரக்கத்தனமான சுரண்டலை எதிர்த்து நடந்த புரட்சியில்
தோன்றியது தான் பொதுவுடைமைக் கொள்கை.
எங்களை அடிமைப்படுத்திக் காசு பறிக்கும் மாசு நிறைந்த
கடவுள் எங்களுக்கு வேண்டாம் என்று மக்கள் நாத்திகம் என்ற நச்சுக் கருத்துக்குத்
தாவினர்.
மத உலகம், மடாலய
உலகம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்க ஆரம்பித்ததால் மக்கள், மதம் மற்றும் வேதத்தை விட்டு வெளியேறினர்; வெருண்டோடினர்.
ஆன்மீகமா? அரசியலா?
தேவாலயத்தின் அதிகார மையம் ஆட்சியாளர்களைத் தனக்கு முன்னால்
முழு அளவில் மண்டியிட்டு நிற்கச் செய்தது. சர்வாதிகாரம் படைத்த மத சாம்ராஜ்ய
மன்னர்களைத் தனக்கு முன்னால் சரணாகதியாக்கி, சக்தியற்ற கைதியாக்கி, சாஷ்டாங்கமாகக் கிடக்க வைத்தது. ஏன் என்று கேட்பவர்களை
எதிர்த்துப் பேசி, கிளர்ச்சி
செய்த ஆட்சியாளர்களை மத விலக்கு செய்தது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டை இங்கு
கூறலாம்.
பதினோறாம் நூற்றாண்டில் போப்பாகப் பதவி வகித்த
ஹெல்டிபிராண்ட், தேவாலயத்தின்
ஏகாதிபத்தியத்தைக் குறியாகக் கொண்டவர். போப் உலகில் ஈடு இணையற்றவர். "உலகில்
உள்ள மதத் தலைவர்களுக்கும், மன்னர்களுக்கும்
போப் தான் தலைவர்; மன்னர்களைப்
பதவியில் அமர்த்தவும், அகற்றவும்
செய்கின்ற அதிகாரம் படைத்தவர்'' என்ற
நம்பிக்கையில் உறுதியானவர்.
கி.பி. 1075ல்
அவருக்கும் இத்தாலியின் ஆட்சியாளர் நான்காம் ஹென்றிக்கும் மோதல் ஏற்பட்டது.
அவ்வளவு தான். அவரை போப்பாண்டவர் Ex-communication- மத விலக்கம் செய்கின்றார். இதன் மூலம் நான்காம் ஹென்றி, கிறித்தவர் என்ற தகுதியை இழந்து விடுகின்றார். நில மானிய
பிரபுக்கள், ராணுவ வீரர்கள் யாரும்
இனி மன்னருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்று அறிவித்து விடுகின்றார். மன்னர்
நான்காம் ஹென்றி, போப்பிடம்
மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு ஆளானார்.
கி.பி. 1077ல்
ஜனவரி மாதத்தில் கடுமையான குளிரில் ஆல்ப்ஸ் மலையைத் தாண்டி போப் தங்கியிருந்த
கனோஸா மாளிகைக்கு முன்பாக, கொட்டும்
பணியில் சொட்டும் கண்ணீருடன் காலில் காலணியின்றி கடுந்தவம் மேற்கொண்டார்; காத்திருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு தான் போப்
மனமிறங்கி, மண்டியிட்டிருந்த
நான்காம் ஹென்றியை மன்னித்தார். நான்காம் ஹென்றியின் இந்தத் தவம்,
"ஹென்றியின் கனோஸா கடுந்தவம்' என்று அழைக்கப்படுகின்றது.
போப்பின் அதிகாரக் குவிப்புக்கு இது ஒரு சிறிய
எடுத்துக்காட்டு!
ஆன்மீகத்தை அரசியலை விட்டும் பிரிப்பதற்காக நடைபெற்ற ஓர்
அடிக்கல் நாட்டு!
இதுவும், இது
போன்ற எண்ணற்ற நிகழ்வுகளும் ஆன்மீகத்தை விட்டு அரசியலை நிரந்தரமாகப் பிரிக்கக்
காரணமானது. இதன் பின்னர் தான் செக்யூலரிஸம் எனும் மதச் சார்பின்மை சிந்தனை
தோன்றியது. திருச்சபை என்பது தேவாலயத்துடன் நிற்க வேண்டும்; தெருச் சபைக்கு வரக் கூடாது என்று ஆன்மீகத்தின் கதவுக்குத்
தாழிட்டனர்; தடை போட்டனர்.
ஆய்வுக்குத் தடை! அறிஞருக்குத் தண்டனை!
மகுடம் பூண்ட மடாலய சன்னியாச சாம்ராஜ்யம் இத்துடன்
நிற்கவில்லை. அதன் ஆதிக்கம் அறிஞர்களின் ஆய்வுக்கும் தடை விதித்தது.
அறிஞர்களுக்குக் கொடும் தண்டனைகளை விதித்தது. அந்த விபரத்தைப் பார்ப்போம்.
14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
இக்கால கட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் கொடிகட்டிப் பறக்கத் துவங்கின.
கப்பலுக்குத் திசை காட்டும் கருவியைக் கண்டுபிடித்தனர். இது ஐரோப்பியர்களின்
தணியாத கடற்பயண தாகத்திற்குத் தண்ணீர் ஊட்டியது. அவர்களின் கடற்பயணம் புதுப் புது
தீவுகளை,
அமெரிக்கா போன்ற நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும்
உதவியது. அச்சடிக்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் தான்
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு சக்தியைக் கண்டு பிடித்தார். படுவா என்பவரின்
உதவியுடன் வில்லியம் ஹார்வி, உடலின்
இரத்த ஓட்டத்தைப் பற்றிய ஆய்வை வெளியிட்டார். கோபர் நிகஸ் விண்வெளியின் கோள்களை
ஆராய்ந்து பூமி உருண்டை வடிவம் என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.
இந்தக் கருவாக்கத்திற்கு கலீலியோ ஓர் உண்மை உருவாக்கத்தைக்
கொடுத்தார். அவ்வளவு தான்! பாதிரி உலகம் அவர் மீது படையெடுத்தது. காரணம் அது
பைபிளின் கூற்றுக்கு நேர் முரணானது.
உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது; இனி அது அசைக்கப்படுவதில்லை.
1 குறிப்பேடு 16:30
நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.
திருப்பாடல்கள் 104:5
சூரியன் தோன்றுகின்றது; சூரியன் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று
மீண்டும் தோன்றுகின்றது.
சபை உரையாளர் 1:5
Geo-Centric
- பூமியை சுற்றித் தான் சூரியன் வலம்
வருகின்றது என்ற சித்தாந்தத்தை கிறித்தவ உலகம் முழுமையாக நம்பியிருந்தது.
ஆனால் கலீலியோ Heleo-Centric சூரியனைச் சுற்றியே பூமி மற்றும் இதர கோள்கள் வலம்
வருகின்றன என்ற அறிவியல் உண்மையை வெளியிட்டார்.
பாதிரி உலகம் இதனைத் தனக்கு எதிரான புரட்சி என்றும், போப் உலகம் இதைத் தங்களுக்கு எதிரான போர்க் கொடி என்றும்
கருதியது.
போப் சூரியனைப் போன்றவர்; அரசர் சந்திரனைப் போன்றவர்; போப்பிடமிருந்து ஒளியைப் பெற்றுத் தான் அரசர் பிரகாசிக்க
முடியும் என்ற அதிகார போதையிலிருந்த போப் உலகம், கலீலியோவின் கண்டுபிடிப்பை தங்களின் சாம்ராஜ்யத்தைத்
தகர்ப்பதற்கு வைக்கப்பட்ட வேட்டாக, வெடிகுண்டாக நினைத்தது. அதனால் கலீலியோவை குற்றவாளிக்
கூண்டில் ஏற்றித் தண்டித்தது.
இதுபோன்று பல விஞ்ஞானிகளை Heresy (கிறித்தவத்திற்கு எதிரான சிந்தனை) என்ற குற்றச்சாட்டின்படி
மரண தண்டனை விதித்துக் கொன்றது.
தன்னிடத்தில் குவிந்து கிடந்த அதிகார மையத்தின் காரணமாக
அறிவுக்கும் ஆய்வுக்கும் அறிவியலுக்கும் திரையிட்டது. அரசியல்வாதிகளை வேதத்தை
விட்டு விரட்டியது போன்று அறிவு ஜீவிகளையும், அறிவியலாளர்களையும் விரட்டியது.
போப்புக்கு எதிரான புரட்சிப் போர்
பூனைக்கு மணி கட்டுவது யார்? போப்புலகத்திற்கு எதிராகப் புரட்சி செய்வது யார்? அராஜக வெறிக்கு எதிராக ஆர்த்தெழுபவர் யார்? வேதத்தை வைத்து வயிறு கழுவி மக்களின் அறியாமையை மூலதனமாகக்
கொண்ட மடாதிபதிகளை அடையாளம் காட்டுவது யார்?
இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்தவர் தான் மார்ட்டின்
லூதர்! ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர் பதினைந்தாம் நூற்றாண்டில் பைபிளை ஜெர்மானிய
மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார்.
அதுவரை பைபிள் மூல மொழியிலேயே முடங்கிக் கிடந்தது. மத
குருமார்கள் சொல்வது தான் வேத வரிகளாக, வேத வசனங்களாக இருந்தன.
அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத்
தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
அல்குர்ஆன் 2:78
அல்லாஹ் கூறுவது போன்று பைபிளின் உண்மையான வேத வடிவம்
இல்லாமல் கிறித்தவர்கள் வெறும் யூகங்களையே வேதமாக நம்பியிருந்தனர்.
இப்போது தான் மார்ட்டின் லூதர், போப்பாண்டவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் புனிதப் பணியை
மேற்கொண்டார். மதுவின் மயக்கத்திலும் மாதுவின் சுகத்திலும், சூதாட்டத்திலும் திளைத்து, சொர்க்கபுரிகளாக வாழ்ந்து கொண்டிருந்த போப்புகளின் அந்தரங்க
வாழக்கையை அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்.
கர்த்தரின் பாவ மன்னிப்புக்களை, பாவ மன்னிப்புச் சீட்டுகளை பாதிரிகள் விற்று வந்தனர்.
As
soon as the coin in the coffer rings, the soul from purgatory springs
"கல்லாப் பெட்டியில் வெள்ளிக் காசு தர்மமாகத் துள்ளி விழும்
போது பாவக் கிடங்கில் தண்டனை பெற்றுக் கொண்டிருக்கும் ஆத்மா சொர்க்கத்திற்குத்
துள்ளிக் குதித்துப் பறந்தோடி விடும்'' என்று பொய் சொல்லி பாதிரிகள் பாவ மன்னிப்புச் சீட்டுக்களை
விற்றுப் பணம் திரட்டினர்.
மார்ட்டின் லூதர் இதையும் தோலுரித்துக் காட்டி, ஜெர்மனி எதற்காக இத்தாலிய தேவாலயத்திற்குப் பணம் கட்ட
வேண்டும் என்ற தேசிய வாதத்தைக் கிளப்பினார். இதைத் தாங்க முடியாமல் ஆன, தூங்க முடியாமல் தவித்த போப் வர்க்கம் Ex-communication
- மத விலக்கு எனும் ஆயுதத்தைப்
பயன்படுத்தியது.
மத விலக்கு என்ற இரும்புச் சக்கரத்தையும் மார்ட்டின் லூதர்
தகர்த்தெறிந்தார். புராட்டஸ்டன்ட் பிரிவு தோன்ற இவர் காரணமானார். இவரைப் போன்று பல
எதிர்ப்பாளர்கள் படை படையாகக் கிளம்பினர். ஆதிகக்கப் பாதிரிகள், அதிகார வர்க்கங்கள் அவர்களைத் தண்டிப்பதற்காக சமய
நீதிமன்றங்களை (Inquisition) தனியாக நிறுவி தண்டனை வழங்கியது. கத்தோலிக்கத்திற்கு
எதிரானவற்றைப் பட்டியலிட்டுத் தடை செய்தார்கள். ஆனால் அத்தனையையும் தாண்டி மத
குருமார்கள் எதிர்ப்பு உச்சத்தை அடைந்தது. இறுதியில் போப்புலகம் தலைகீழாகப்
புரண்டது. அரசியல் உலகம் ஆட்சியைக் கையில் எடுத்தது. போப் தலைமை பொம்மைத்
தலைமையானது. தேவாலயத்திற்குள்ளும், தெய்வீகத்திற்குள்ளும் போப்புலகம் சிறை வைக்கப்பட்டது. மதச்
சார்புடைமை மண்ணைக் கவ்வியது. மதச் சார்பின்மை மகுடம் சூடியது.
மத குருமார்கள் தங்கள் கைகளால் வேதத்தில் விளையாடிய
விளையாட்டுக்களால், கைச்சரக்குகளால், கற்பனைக் கலவைகளால் மானுட சமுதாயம் அந்த வேதத்தை விட்டும்
விலகிச் சென்றது.
மத குருமார்கள் வேதத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லியிருந்தால்
உண்மையான வேதமான குர்ஆனின் பக்கம் மக்கள் வந்திருப்பார்கள். ஒரு பெரும் சமுதாயத்தை
ஓரிறைக் கொள்கையில் ஒண்ட விடாமல், அழகிய
கொள்கையில் மக்களை அண்ட விடாமல் கிறித்தவ மத குருமார்கள் தடுத்து நிறுத்தியதுடன்
மட்டுமல்லாமல், உலகில் நாத்திகம், மதச் சார்பின்மை, பொதுவுடைமை போன்ற தீய கொள்கைகள் தோன்றுவதற்கும்
காரணமாயினர்.
துறவறம்
இந்த மத குருமார்கள் ஏற்படுத்திய மற்றொரு தீய விளைவு தான்
துறவு! இந்தத் துறவு நிலையை இறைவன் இவர்கள் மீது விதிக்கவே இல்லை.
தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண
வேண்டிய விதத்தில் பேணவில்லை.
(அல்குர்ஆன் 57:27)
துறவு என்பது மனிதனின் இயற்கை நிலைக்கு மாற்றமானதாகும். அதை
இந்தப் பாதிரிமார்கள் தாங்களாகத் தேர்வு செய்து விட்டு இன்று கன்னியாஸ்திரிகளிடம்
காம விளையாட்டுக்களில் திளைத்துக் கிடக்கின்றனர். கடுகளவு குற்ற உணர்வு கூட
இல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். தற்போதைய போப் இந்தப் பாலியல்
குற்றச்சாட்டுக்களைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிப்பதை நாம்
பார்த்து வருகிறோம்.
ஏனைய மத குருமார்கள்
இதுவரை கிறித்தவ மத குருமார்களைப் பற்றி மட்டும் நாம்
கூறியிருப்பதால் யூத மத குருமார்கள் யோக்கியர்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் இரு மதங்களின் குருமார்களையும்
சேர்த்துத் தான் குறிப்பிடுகின்றன. கிறித்தவ மதத்தினரின் ஆட்சிக் குடை
உலகெங்கிலும் விரிந்ததால் அவர்கள் செய்த அட்டூழியங்களின் பரிமாணம் நமக்கு
அதிகமாகக் கிடைக்கின்றது. யூதர்களுடைய ஆட்சி இவர்களுடைய ஆட்சியைப் போல்
விரியவில்லை. அவ்வாறு விரிந்திருந்தால் கிறித்தவப் பாதிரிகளின் அட்டூழியங்களை விட
யூதப் பாதிரிகளின் அட்டூழியம் மிகப் பயங்கர அளவில் தாண்டியிருக்கும். யூதப்
பாதிரிகளின் அக்கிரமங்கள் வெளியில் தெரியவில்லை. அவ்வளவு தான். மற்றபடி இவ்விரு மத
குருமார்களின் தன்மைகள் ஒன்றுக்கொன்று அப்படியே நூறு சதவிகிதம் ஒத்தவை தான்.
இவை தவிர இந்து மத குருமார்களைப் பற்றியும் நாம் பார்க்க
வேண்டும். யூத, கிறித்தவ மதங்கள்
மற்றும் அவற்றின் வேதங்கள் உண்மையான ஓர் இறைவனிடமிருந்து வந்தவை. ஆனால் பின்னால்
மத குருமார்களால் இம்மதங்கள் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இந்து மதத்தினர்
வைத்திருக்கும் வேதத்தை இறை வேதம் என்று சொல்வதற்கு எந்த ஓர் அடிப்படையோ
முகாந்திரமோ இல்லை.
யூத, கிறித்தவ மதத்தினர் தங்களுடைய வேதத்தை இறை வேதம் என்று
சொல்லும் அளவுக்கு ஒரு நூலிழை அளவுக்குத் தொடர்பு உள்ளது என்று கூறலாம். ஆனால்
இந்து மதத்தின் வேதத்திற்கு அந்தத் தொடர்பு கூடக் கிடையாது.
நூலிழை தொடர்புள்ள அந்த மத குருமார்களே இவ்வளவு ஆட்டம்
போட்டிருக்கும் போது அந்தத் தொடர்பு கூட இல்லாத இந்து மத குருமார்கள் போடும்
ஆட்டத்தைச் சொல்லவா வேண்டும்?
இந்து மத குருமார்கள் தான் இந்தியாவில் மனு தர்மத்தின்
மூலம் மனித சமுதாயத்தை, பிறப்பின்
அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப்
பிரித்து,
உட்பிரிவாக நான்காயிரம் ஜாதிகளைத் தோற்றுவித்தவர்கள்.
இவர்கள் தான் மதம், வேதம் என்ற பெயரில் நடத்திய காம லீலைகள் ஒளி அலைகளில்
வெள்ளமாய் வெளியானதை அண்மையில் நாம் பார்த்தோம். அனுராதா ரமணன் என்ற பெண்ணிடம்
காஞ்சி சங்கராச்சாரி நடத்திய காம, சரச
லீலைகள்,
நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா நடத்திய சல்லாபங்கள்
எல்லாம் நாம் நன்கறிந்தவை. புலன் விசாரணைக்கு வராமலேயே புதைக்கப்பட்ட புட்டபர்த்தி
சாய்பாபாவின் கொலை விவகாரங்கள் போன்றவை தொடர்வதற்குக் காரணம் மக்களுடைய அறியாமை
தான். இந்த மத குருமார்கள் மனித பலவீனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுவது
தான். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி தனக்கு இருப்பதாக யார் கூறினாலும் அவன்
அயோக்கியன், அகில உலகப் பொய்யன்.
ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்
மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் தனக்கு இருப்பதாகச்
சொல்பவன் பித்தலாட்டக்காரன் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மக்கள் இவர்களை நம்பி
ஏமாறுகின்றனர்.
ஏமாற்றுபவர்களைக் கண்டிப்பது போலவே ஏமாறுபவர்களையும்
திருக்குர்ஆன் கண்டிக்கின்றது.
அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத்
தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
அல்குர்ஆன் 2:78
மத குருமார்கள் தவறாகக் கூறினாலும் அவர்களைப் பின்பற்றுவோர்
ஆய்வு செய்தே பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வசனம் வலியுறுத்துகின்றது.
மனிதச் சட்டத்தில் கூட அறியாமைக்கு மன்னிப்பு இல்லை.
வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவன், போதைப்
பொருள் வைத்திருந்து சுங்கச் சோதûனையின்
போது மாட்டிக் கொண்டால், "அது
இருந்ததே எனக்குத் தெரியாது; யாரோ
என்னுடைய பையில் வைத்து விட்டார்கள்; நான் தெரியாமல் கொண்டு வந்து விட்டேன்' என்று வாதிப்பது எடுபடாது. உண்மையிலேயே தெரியாமல்
இருந்தாலும் கிடைக்கின்ற தண்டனையை விட்டு அவர் ஒரு போதும் தப்ப முடியாது.
உலகில் மக்களை வழி கெடுத்த இந்த மத குருமார்களும், வழிகெட்ட அந்த மக்களும் மறுமையில் நரகில் வீழ்வார்கள்.
அப்போது அவர்கள் பேசிக் கொள்ளும் உரையாடலை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதைப்
பாருங்கள்.
"உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும்
மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்
போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன்
"எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும்
வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!'' என்று
அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப்
பற்றிக் கூறுவார்கள். "ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள்
அறிய மாட்டீர்கள்'' என்று
(அவன்) கூறுவான்.
அல்குர்ஆன் 7:38
ஏமாறுபவர்களுக்கும் சேர்த்தே இரு மடங்கு தண்டனையை இறைவன்
அளிக்கின்றான்.
இஸ்லாமிய மத குருமார்கள்
இதுபோன்ற வசனங்களின் காரணமாக முஸ்லிம்களிடம் இஸ்லாமிய மத
குருமார்களின் வேலை பெரும்பாலும் செல்லுபடியாவதில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் மத
குருமார்களின் சேட்டை அறவே இல்லை என்று சொல்வதற்கில்லை. பிற மத குருமார்களைப்
போன்று இங்கும் அவர்களின் ஆதிக்கம் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால்
இம்மார்க்கத்தின் இறை வேதமான அல்குர்ஆன் கறை படாமல், இவர்களின் கை படாமல், கலப்படமில்லாமல் கடவுளின் காப்புறுதியைப் பெற்றுத்
திகழ்வதால் மத குருமார்கள் இங்கு எதையும் சட்டமாக்க முடியாது; சாசனமாக்க முடியாது.
இதற்கு உதாரணமாக தமிழக வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இஸ்லாத்தில் சமாதி வழிபாடு, கல்லறை வழிபாடு அல்லது தர்ஹா வழிபாடு கிடையாது. ஆனால் மத
குருமார்கள் தமிழகத்தில் அந்த வழிபாட்டை நடத்தி வந்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் 1980களிலிருந்து இதற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, படை வீரர்களாகச் செயல்பட்டு அக்னி ஆற்றைக் கடந்து அந்தத்
தீமையை ஒழித்துக் கொண்டிருக்கிறது.
வரதட்சணை என்பது இஸ்லாத்தில் இல்லை. அதற்கு எதிராக தவ்ஹீத்
ஜமாஅத்தினர் கிளம்பி ஒரு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றார்கள்.
பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கடலிலிருந்து காப்பாற்றப்பட்டு வாழ்க்கைப்
படகில் ஏற்றி கரை சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இது போல் ஒரே மூச்சில், ஒரே அமர்வில் முத்தலாக் என்ற பெயரில் பெண்களை விவாகரத்துச்
செய்து அவர்களின் வாழ்க்கையைப் பறிப்பது அல்குர்ஆனில் இல்லை. ஆனால் அதை இந்த மத
குருமார்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராகவும் தவ்ஹீத் ஜமாஅத்
ஆர்த்தெழுந்து அந்தத் தீமையைத் தடுத்து நிறுத்தி, குடும்பப் பெண்களை முத்தலாக் எனும் கோரத் தீமையிலிருந்து
காப்பாற்றியிருக்கின்றது.
ஆன்மீகம் என்ற பெயரில் அந்தரங்க வாழ்க்கை நடத்துவோரின், நயவஞ்சக வேடம் போடும் மத குருமார்களின் முகத் திரையைக்
கிழிக்க முஸ்லிம்கள் ஒருபோதும் தயங்கியது இல்லை.
ஏனைய மதங்களில் நிலை கிடையாது. சாமியார்கள் ஏதேனும் தவறு
செய்தால் அவர்களைக் காப்பாற்றவே பக்தர்கள் முயற்சிக்கின்றனர்.
சங்கராச்சாரியிலிருந்து சாய்பாபா வரை இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். காரணம்
அவர்களிடம் உண்மையான வேதம் இல்லை.
ஆனால் முஸ்லிம்கள் இவ்வாறு ஆகாமல் இருப்பதற்கு அடிப்படைக்
காரணம் அவர்களிடம் உள்ள இந்த உண்மையான அல்குர்ஆன் எனும் பாதுகாக்கப்பட்ட வேதம்
தான்.
இஸ்லாமும் புரோகிதமும்
இஸ்லாத்தில் புரோகிதம் என்பது இல்லை. இறைவனுக்கும்
மனிதனுக்கும் இடையில் இடைத் தரகர் அறவே தேவையில்லை என்று இஸ்லாம் அடித்துச்
சொல்கின்றது.
இதற்கு திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான தோற்றுவாய் என்ற
அத்தியாயமே அழகிய சான்றாகும். அல்குர்ஆன் என்ற இந்த வேதத்தின் தோரண வாயிலாக இந்த
அத்தியாயம் அமைந்துள்ளது. அதை இங்கே தருகிறோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப்
(படைத்துப்) பராமரிப்பவன்.
அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
தீர்ப்பு நாளின் அதிபதி.
(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!
அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள்
(உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும்
பாதை மாறிச் செல்லாதவர்கள்.
அல்குர்ஆன் 1:1-7
இந்த அத்தியாயத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து நேரத்
தொழுகைகளில் ஓதுகின்றனர். ஒவ்வொருவரும் அதைக் கண்டிப்பாக ஓதியே ஆக வேண்டும். இந்த
அத்தியாயத்தில் இடம் பெறும், "உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடத்திலேயே நாங்கள் உதவி தேடுகிறோம்'' என்ற வாக்குமூலத்தை இறைவனிடம் நேரடியாகத் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் இறைவனிடம் பேசும் போது அவருக்கும் இறைவனுக்கும் இடையில் இடைவெளி
எதுவுமில்லாமல் ஆகி விடுகின்றது. இந்த நேரடி இறை உறவுக்கு இடையே ஏதேனும் இடைத்
தரகு தேவையா? நிச்சயமாகத்
தேவையில்லை என்றாகி விடுகின்றது,
அண்மையைத் தரும் ஐவேளைத் தொழுகை
அதிலும் குறிப்பாக தொழுகை இறைவனிடம் மிக மிக அண்மையையும்
நெருக்கத்தையும் தருகின்றது. இந்தத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிடுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கüல்
ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர்
தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக
உரையாடிக்கொண்டிருக்கிறார். (அதேபோல்) அவர் தம் வலப் புறமாகவும் உமிழ வேண்டாம்.
ஏனெனில்,
அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ
வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ
உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 416
தொழுகையில் ஒரு முஸ்லிம் தூய இறைவனிடம் உரையாடுகின்றார்.
ஒருவருக்கு ஒரு முதலமைச்சரை அன்றாடம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்
போது அவர் அந்த முதலமைச்சரைக் காண்பதற்கு ஒரு பரிந்துரையாளரைத் தேடுவாரா? ஓர் இடைத் தரகரை நாடுவாரா? நிச்சயமாகத் தேட மாட்டார் என்று அடித்துச் சொல்வோம்.
அது போன்று தான் ஐவேளைத் தொழுகையின் மூலம் ஒரு முஸ்லிம்
இறைவனிடம் உரையாடுவதால் அவருக்கும் இறைவனுக்கும் இடையில் ஓர் இடைத் தரகர், மதகுரு தேவையில்லை என்றாகி விடுகின்றது.
இதன் அடிப்படையில் இஸ்லாத்தில் மதகுரு என்ற போஸ்ட் - பதவி இல்லை. வாடிகனில் போப்புக்கு ஒரு நாற்காலி
இருப்பது போல் இங்கு இல்லை. எல்லோரும் இறைவனின் அடிமைகளே! எல்லோருக்கும் இறைவனே
எஜமானன். அவன் ஒரே ஒரு ஏக எஜமானன். அதனால் பிற மதத்தில் உள்ள அளவுக்கு மத
குருமார்களின் பாதிப்பு இஸ்லாத்தில் இல்லை.
அப்படியே பாதிப்பு இருந்தாலும் அது ஒரு கட்டுக்குள் வந்து
விடுகின்றது. காரணம் மத குருமார்கள் வேதத்தை வைத்துத் தான் ஏமாற்ற வேண்டும்.
திருக்குர்ஆன் எனும் இந்த வேதம் பாதுகாக்கப்பட்ட வேதம். அது ஒரு திறந்த புத்தகம்
என்பதால் அதை வைத்து மத குருமார்கள் ஏமாற்ற முடியாது. யாரையும் ஏய்க்க முடியாது.
இப்படி ஒரு துய்மையான வழியை, உண்மையான ஆன்மீகப் பாதையை நோக்கி பகுத்தறிவுள்ள பக்தர்கள்
பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இறந்த பிறகு உள்ள இறுதியான
வாழ்க்கைக்காகத் தங்களை பக்குவப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
EGATHUVAM JAN 2011