ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும்
நோன்பு மற்றும் பெருநாட்கள் உலகெங்கிலும் ஒரே நாளில் அமைவதில்லை.
ஒரு நாள் அல்லது இருநாட்கள் வித்தியாசத்தில் தான் அமைகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம்
இந்த நாட்கள் பிறையை மையமாக வைத்துத் தீர்மானிக்கப் படுவதால் தான்.
உலகத்தில் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற சமுதாய மக்களின் பண்டிகைகள்
மற்றும் திருவிழாக்கள் சூரியக் கணக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அதனால்
வருட ஆரம்பத்திலேயே, நாட்காட்டி வெளியாகும் போதே
இந்தப் பண்டிகை இந்த நாள் தான் என்று குறித்து அந்த நாள் விடுமுறை நாள் என்று முன்
கூட்டியே அறிவித்து விடுகின்றனர்.
ஆனால் முஸ்லிம்களின் நோன்பு மற்றும் பெருநாள் எவராலும் முன்கூட்டியே
தீர்மானிக்கப்படுவது கிடையாது. நாட்காட்டியில் இன்ன நாள் தான் என்று குறிக்கப்பட்டிருந்தாலும்
பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் அந்நாள் மாற்றப்பட்டு விடுகின்றது. அதாவது இதை
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்
இந்த நாட்களை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான்.
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை
விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளைப் படி தான்
நம்முடைய நோன்பு மற்றும் பெருநாள் அமைகின்றது. இவ்வாறு பிறை பார்த்து நோன்பு வைப்பது, நோன்பை விடுவது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளுக்கு இடையூறாக
இருந்தாலும் உண்மையில் இது தான் சுவாரஸ்யமாக உள்ளது.
நாளை நோன்பா? இல்லையா? பெருநாளா? இல்லையா? என்று முடிவு தெரியாமல் அதில் உள்ள சஸ்பென்ஸ் தொடர்வதும் அதனால்
ஏற்படும் த்ரில்லிங்கும் முஸ்லிம்களுக்கு ஒரு சுமையான சுகம். சுமையான இந்த இன்ப சுகத்திற்கு
காலம் காலமாக முஸ்லிம்கள் பழக்கப்பட்டு விட்டனர்.
இன்னபிற மதங்களில் திருநாட்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்படுவது
போன்று அல்லாமல், இஸ்லாம் அவற்றைக் கடைசிக் கட்டத்தில்
தீர்மானிக்கின்றது.
இதன் மூலம் மற்ற எல்லா வணக்க வழிபாடுகளிலும் ஒரு தனித்துவத்தைக்
காட்டுவது போல் இதிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை, தனித்துவத்தை
இஸ்லாம் நிலைநாட்டுகின்றது.
இன்று ஒரு சில இயக்கங்கள், நோன்பையும்
பெருநாளையும் பிற மதங்களில் உள்ளது போல் முன்கூட்டியே கணித்துத் தீர்மானித்தால் என்ன? மேற்கத்தியக் கலாச்சாரப்படி இந்த நாட்களை முதலிலேயே முடிவு செய்தால்
என்ன? ஏன் பெருநாட்கள் ஊருக்கு ஊர், நாட்டுக்கு
நாடு மாறுபட வேண்டும்?
உலகெங்கிலும் ஒரே கிறிஸ்துமஸ் போன்று உலகெங்கிலும் ஒரே பெருநாள்
ஏன் கொண்டாடக் கூடாது? என்ற வாதத்தை முன்வைத்து இஸ்லாத்தின்
தனித்துவத்தைத் தகர்க்க முயற்சி செய்கின்றனர்.
பிறைத் தோற்றம் என்பது சூரியத் தோற்றத்தைப் போன்றதல்ல; பிறைத் தோற்றத்தின் அடிப்படையில் நாள் வித்தியாசம் ஏற்படும்
என்பது தெரிந்திருந்தும் ஒரே உலகம், ஒரே பிறை என்ற
கருத்தை முன் வைக்கின்றார்கள்.
திட்டமிட்டு யூத, கிறித்தவர்களின்
கலாச்சாரத்தை இஸ்லாத்திற்குள் திணிக்கின்றார்கள்.
ஹதீஸுக்கும் அறிவியலுக்கும் ஒத்த நடைமுறை
இவர்களின் அகில உலகப் பிறை என்ற பிரச்சாரத்தையெல்லாம் தாண்டி, சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ரமளான் தலைப்பிறை விஷயத்தில்
தமிழக முஸ்லிம்கள் நிதானத்தைக் கடைப்பிடித்தனர். அவர்கள் கடைப்பிடித்த இந்த அணுகுமுறை, ஹதீஸுக்கும் அறிவியலுக்கும் மிக இணக்கமாக அமைந்திருந்தது.
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை
விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
என்ற ஹதீஸின் அடிப்படையில் பிறை பார்த்தனர். பிறை கிடைக்கவில்லை.
அதனால் ஷஃபான் மாதத்தை முப்பதாக முழுமையாக்கினர். மக்களின் இந்த அணுகுமுறை மேற்கண்ட
ஹதீஸின் கட்டளைக்கு இணக்கமாக அமைந்தது.
அறிவியல் அடிப்படைக்கும் இந்த நடைமுறை ஒத்திருந்தது.
பிறையும் அமாவாசையும்
அமாவாசை அன்று அறவே பிறை தெரியாது என்ற விபரம் அறிவியல் வளர்ச்சிக்கு
முன்னரே சாதாரண மக்களுக்குத் தெரிந்த ஒன்றாகும். 22.09.06 அன்று அமாவாசையாகும். அன்று
மாலை 5.15 மணிக்கு அமாவாசை தொடங்குகின்றது. இதன் பிறகு பிறை 5.50 மணிக்குத் தோன்றி
6.11 மணிக்கு மறைந்து விடுகின்றது.
இவ்வாறு பிறை தோன்றுவதும் மறைவதும் சூரியன் மறைவதற்கு முன்னால்
முடிந்து விடுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் சூரியன் மறைவு 6.14 ஆகும். சூரியன் மறைவதற்கு
முன்னால் தலைப் பிறை தெரியாது. (இவை மதுரை நகரின் சூரிய, சந்திர நேரங்கள் குறித்து ஹிந்து நாளேடு தெரிவித்த விபரங்களாகும்)
23.09.06 சனிக்கிழமை அன்று பிறை பார்க்க முடியுமா? சனிக்கிழமை அன்று பிறை மாலை 6.33 மணிக்குத் தோன்றி 6.45க்கு
மறைகின்றது. அன்றைய தினம் சூரியன் மறையும் நேரம் 6.13 என்பதால், பிறையின் தோற்றமும் மறைவும் சூரியன் மறைந்த பிறகே நடைபெறுகின்றது.
என்றாலும் சூரியன் அஸ்தமித்த சில நிமிடங்களில் பிறை தோன்றி மறைவதால் சனிக்கிழமையன்றும்
கண்ணுக்குத் தெரிகின்ற அளவிற்குப் பிறை தோன்ற வாய்ப்பில்லை.
எனவே அறிவியல் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தான் பிறை
பார்க்கும் அளவுக்குத் தோன்றுகின்றது. (அன்றைய தினம் ஷஅபான் முப்பது பூர்த்தியானதால்
நாம் பார்க்கத் தேவையில்லை.) திங்கள்கிழமையன்று தான் முதல் நோன்பு நோற்பதற்குப் பொருத்தமான
நாளாகின்றது.
எனவே நாம் திங்கட்கிழமை நோற்ற நோன்பானது ஹதீஸ் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் மிகப் பொருத்தமானதாக அமைந்து போகின்றது.
இப்போது இந்த இயக்கங்கள் அறிவித்த நோன்பைப் பார்ப்போம்.
23.09.06 அன்று முதல் நோன்பு என்று ஒரு சாரார் அறிவித்து இருக்கின்றனர்.
இதன்படி வெள்ளி அன்று பிறை பார்க்கப்பட வேண்டும். 22ஆம் தேதி பிறை பார்க்க முடியுமா? என்றால் பார்க்க முடியாது என்பதை மேலே விளக்கியுள்ளோம்.
இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் தான் சனிக்கிழமை நோன்பு
கிடையாது என்று கேரள ஹிலால் கமிட்டி அறிவித்தது.
22.09.06 வெள்ளி (அவர்களது கணக்குப்படி பிறை 29) அன்று சூரியன்
மறைவதற்கு முன் சந்திரன் மறைவதால் பிறை தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் 24ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ரமளான் 1 ஆகக் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள ஹிலால் கமிட்டி
தலைவர் ஏ.டி. அப்துல் காதர் மதனி அறிவித்தார்.
22ஆம் தேதி சூரியன் மறைவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பாகவே
சந்திரன் மறைந்து விடுவதால் கேரளத்தில் எங்கேயும் பிறை தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவே
ஷஃபான் முப்பதைப் பூர்த்தியாக்கி, 24ஆம் தேதி ரமளான் ஆரம்பமாகும்
என்று கேரள ஜம்யிய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அப்துல்ஹமீது மதனீ அறிவித்தார்.
இந்தச் செய்தியை கேரள மாத்யம் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவியல் கணக்கை நாம் பார்க்கத் தேவையில்லை. மார்க்க அடிப்படையில்
பிறை 29 அன்று மாலை பிறை பார்க்க வேண்டும். அன்று தெரியாத பட்சத்தில் அந்த மாதத்தை
30 ஆகப் பூர்த்தி செய்து அடுத்த நாள் நோன்பு நோற்க வேண்டும்.
எனினும் இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அறிவியல் அடிப்படையிலும் இவர்களது அணுகுமுறை ஒத்துப் போகவில்லை
என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான். இவர்களது நோக்கம் சர்வதேசப் பிறை என்ற பெயரில்
சவூதிப் பிறையைக் கொண்டு வர வேண்டும் என்பது தான். இதற்கு நாம் ஒரு போதும் வளைந்து
கொடுக்கக் கூடாது.
இரண்டும் கெட்ட இன்னொரு கூட்டம்
மேற்கண்ட இந்தக் கூட்டத்தின் நிலை சவூதிப் பிறை என்றால் மார்க்க
விஷயத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிக் கொள்ளும் ஓர் இயக்கம், சவூதிப் பிறையையும் எடுக்காமல், ஹதீஸ் அடிப்படையில் நாம் பிறை பார்த்த நாளையும் எடுக்காமல் இரண்டும்
கெட்டானாக திருவனந்தபுரம் பிறை என்ற பெயரில் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் இவர்களைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களது
வலையிலும் சமுதாய மக்கள் வீழ்ந்து விடாமல் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இவர்கள் என்ன தான் மைக் போட்டு அறிவித்தாலும் அதை மக்கள் கண்டு கொள்ளவேயில்லை.
ரமளான் தலைப்பிறை விஷயத்தில் கண்ட இதே நிதானத்தை ஈத் பெருநாள்
பிறை விஷயத்திலும் மேற்கொண்டால் இன்று மக்கள் அனுபவித்த இதே நிம்மதியை, அமைதியை அடையலாம். இல்லையேல் பெருத்த சிரமத்திற்கும், சிக்கல்களுக்கும் உள்ளாக நேரிடும்.
பொதுவாக நோன்பு வைக்கும் போது நிதானத்தைக் காட்டுவதும், பெருநாள் வரும் போது அவசரம் காட்டுவதும் ஆகிய இரட்டை நிலை நம்மிடம்
உள்ளது. நோன்பை மார்க்க அறிஞர்கள் முடிவு செய்வார்கள்; பெருநாளை கறிக்கடைக்காரர்கள் முடிவு செய்வார்கள் என்ற விமர்சனமும்
உள்ளது.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய முறைப்படி, பிறை பார்த்து நோன்பு நோற்றது போல், பிறை பார்த்து, பிறை தெரியாவிட்டால்
30 பூர்த்தி செய்து பெருநாளைத் தீர்மானிப்போம். மார்க்கத்திற்கும் முரணில்லாமல் மக்களுக்கும்
சிரமம் தராமல் ரமளான் பிறை விஷயத்தில் காட்டிய அதே நிதானத்தை ஷவ்வால் பிறை விஷயத்திலும்
அதாவது பெருநாள் அன்றும் கடைப்பிடிப்போம், இன்ஷா அல்லாஹ்!
EGATHUVAM OCT 2006