Apr 12, 2017

பிறை ஒரு விளக்கம்

பிறை ஒரு விளக்கம்

(14.10.2008 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏகத்துவம் நவம்பர் 2008 இதழில் முன்னர் வெளியிட்டிருந்தோம். தற்போது ரமளான் நெருங்குவதால் ஜமாஅத் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதை மறு பிரசுரம் செய்கிறோம்.)

பிறை பார்ப்பதன் அடிப்படையில் தான் நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்ததன் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு கொண்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

தத்தமது பகுதி எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் இந்த எல்லையை வரையறுப்பதில் பவ்வேறு அளவுகோலை வைத்துள்ளனர்.

தத்தமது பகுதி என்பது தமது ஊர் அல்லது தாலுகா அல்லது மாவட்டம் என்ற அளவில் தான் இருக்க வேண்டுமா? தத்தமது பகுதி என்பது நமது மாநிலம் என்று முடிவு செய்தால் தவறாகுமா என்று பல சகோதரர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பின்வரும் காரணங்களையும் அவர்கள் முன் வைத்தனர்.

தமிழகம் ஒரு மாநிலமாக, தனி அதிகாரம் படைத்ததாகவுள்ளது. மாநிலம் முழுவதற்கும் ஒரே நாளில் தான் பெருநாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கிறது.

தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பிறை பார்த்ததை ஏற்று தலைமை காஜி அறிவிப்பதை தமிழக அரசு ஏற்று விடுமுறை அளிப்பதால் தமிழக முஸ்லிம்கள் அதை ஏற்று எல்லா ஊர்களிலும் பெருநாளை அறிவிக்கின்றனர்.

நமது ஊரில், நமது தாலுகாவில் பிறை பார்க்கவில்லை என்பதால் நாம் பெருநாள் என்று முடிவு செய்யாத நிலையில் நமது ஊர் மக்கள் பெருநாள் என்று முடிவு செய்கின்றனர். ஒரு வீட்டிலேயே தவ்ஹீத் கொள்கையை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் பல குடும்பங்களில் உள்ளனர். இதனால் பெருநாள் என்ற மகிழ்ச்சியை அனைவரும் சேர்ந்து அடைய முடியவில்லை.

ஒவ்வொரு தமிழக தவ்ஹீத்வாதியும் தனது ஊர் அல்லது தனது மாவட்டம் தான் தனது பகுதி என்று சொன்னாலும் அது பலருக்கும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. தனது ஊரில் பெருநாள் என மற்றவர்கள் அறிவிக்கும் போது அன்றே தனக்கும் பெருநாளாக இருக்க வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகின்றனர். அதாவது தமிழ்நாடு முழுதும் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் தான் பலரது ஆழ் மனதில் உள்ளது. நீங்கள் முடிவு செய்யும் நாள் என்பது சிலர் முடிவு செய்வது என்ற பொருளைத் தராது. ஒட்டு மொத்த அல்லது மிகப் பெரும்பான்மையானவர்களின் முடிவு என்பதே பொருளாக இருக்க முடியும். எனவே எந்த முடிவை அதிகமானோர் தம் மனதுக்குள் எடுத்து விட்டு சொல்லத் தயங்குகிறார்களோ அதையே தமது பகுதி என்று முடிவு செய்தால் அது தவறா?

இது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது பிறை காணப்பட்டால் அதை பிறை பார்க்காத மற்ற பகுதியினர் ஏற்றால் அது தவறாகுமா? என்ற அடிப்படையில் அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன.

இது பற்றி ஆலோசிப்பதற்காக 14.10.2008 அன்று உலமாக்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தமது மாவட்டம் தான் தமது பகுதி என்று ஒரு பகுதியினர் முடிவு செய்தால் அதற்கு எவ்வாறு அவர்களுக்கு உரிமை உள்ளதோ அது போல தமது மாநிலம் தான் தமது பகுதி என்று முடிவு செய்து தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது நோன்பையும், பெருநாளையும் ஒரு ஊரார் முடிவு செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

ஒட்டுமொத்த தமிழகம் சுமார் அரை மணி நேரம் வித்தியாசம் கொண்டதாக உள்ளதாலும், தமிழகத்தை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் மாநிலமாக அமைக்கப்பட்டு ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது என்பது போன்ற காரணங்களால் இப்படி முடிவு செய்பவர்களைத் தடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.

உலகில் எங்கே பிறை பார்த்தாலும் ஏற்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்பதை இக்கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.

மேலும் தமது பகுதி என்பது, தமது மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டம் தான் என்று யாராவது முடிவு செய்து அதனடிப்படையில் செயல்பட்டால் அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் முடிவு செய்யப்பட்டது.

பகுதி என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை மாநிலத் தலைமை நிர்ணயித்து திணிக்கக் கூடாது என்றும் இந்த முடிவை ஒவ்வொரு கிளையும் சுயமாக எடுக்கலாம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜாக்கின் இரட்டை வேடம்

ஜாக் என்ற அமைப்பு குர்ஆன், ஹதீஸ் என்ற தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டு விட்டது; குர்ஆன் ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளுடன் மூன்றாவதாக ஸஹாபாக்களைப் பின்பற்றுதல் என்ற அடிப்படையையும் சேர்த்துக் கொண்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்ற போது ஜாக் அதை ஆணித்தரமாக மறுக்கின்றது. அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜாக் சகோதரர்களுக்கு இடையில் கோவையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதிலும் ஜாக்கினர் இதை மறுத்தனர்.

ஆனால் பி.ஜே. இது தொடர்பாக அல்ஜன்னத்தில் வெளியான அவர்களது அறிவிப்பை மேற்கோள் காட்டி, கோவை ஜாக் சகோதரர்களின் வாதம் தவறு என்று தெளிவுபடுத்தினார். இது ஏகத்துவம் ஜூன் 2009 இதழிலும் விளக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரும் ஜாக் அமைப்பினர் அதே பாட்டைத் தான் பாடி வருகின்றனர்.

அல்ஜன்னத் ஜூலை 2009 இதழில், நபித்தோழர்கள் விஷயத்தில் ஜாக்கின் நிலைப்பாடு என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை, ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறதா? அல்லது வேண்டாம் என்று சொல்கிறதா? இந்த அறிக்கையில் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை அந்த அறிக்கையைப் படித்தவர்களுக்குப் புரிந்திருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த அறிக்கையின் கடைசிப் பாராவில் ஜாக் ஒரு மறுப்பைத் தெரிவிக்கின்றது.

குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமாக இருந்தாலும் ஸஹாபாக்களைப் பின்பற்றியாக வேண்டும் என்று நாம் கூறுவதாக ஒரு பச்சைப் பொய்யைத் திரும்பத் திரும்ப பத்திரிகைகளிலும், மேடைகளிலும் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அல்ஜன்னத்தில் 44ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஜாக் கூறுவதாக நாம் பிரச்சாரம் செய்வது பச்சைப் பொய் என்று கூறுகின்றனர். ஆனால் ஜாக்கின் கட்டுப்பாட்டிலுள்ள கோவை கோட்டைமேடு முஸ்லிமீன் பள்ளிவாசலில் ஒரு ஜும்ஆ உரையில் பேசும் போது, இக்பால் மதனி மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் ஒன்றைக் கூறியுள்ளார். அவர் கூறியது இது தான்:

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை இரண்டல்ல, மூன்று, மூன்று என்று மூன்று விரல்களை விரித்துக் காட்டி, திரும்பத் திரும்பக் கூறி ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். இது கோவை, கோட்டை கிளையின் ஜாக் சகோதரர்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்போது சொல்லுங்கள்! இவர்களது நிலைப்பாடு என்னவென்று! இது இரட்டை வேடமா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

குர்ஆனும், ஹதீசும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டே, மற்றொரு பக்கம் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் பின்பற்ற வேண்டும் என்று கூறி இரட்டை வேடம் போடாதீர்கள்.


ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையைப் பின்பற்ற வேண்டும் என்று பேசிய இக்பால் மதனியை வேண்டுமானால் பொய்யர் என்று சொல்லுங்கள். ஒரு முறையல்ல, ஆயிரம் முறை சொல்லுங்கள். உங்களது இரட்டை வேடத்தை, பொய் வேஷத்தைக் களைவோரைப் பார்த்துப் பொய்யர்கள் என்று கூறாதீர்கள்.

EGATHUVAM JUL 2009