Apr 18, 2017

அருகி வரும் விருந்தோம்பல்

அருகி வரும் விருந்தோம்பல்

எம். ஷம்சுல்லுஹா

ஏகத்துவத்தின் இமாமாகத் திகழும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் விருந்தினர் வருகின்றனர். இந்தச் சம்பவத்தைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:69, 70

இந்தச் சம்பவம் இன்னும் சுவையாகப் பின்வரும் வசனங்களில் இடம்பெறுகின்றது.

இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா? அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா?'' என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். "பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

அல்குர்ஆன் 51:24-28

வந்தவர்கள் மனிதர்கள் அல்லர்; மலக்குகள் என்பது பின்னர் தான் தெரிய வருகின்றது. இப்ராஹீமின் விருந்தினர் என்று அடைமொழியிட்டு அல்லாஹ் குறிப்பிடுவது இந்தச் சம்பவத்தின் சுவையை மேலும் மெருகூட்டிக் காட்டுகின்றது. இப்ராஹீம் நபியின் விருந்தளிக்கின்ற பாங்கும், மாண்பும் இதிலேயே தெளிவாகத் தொனிக்கின்றது. ஸலாம் எனும் முகமனுக்குப் பிறகு அவர்கள் முறையாகப் பேணுவது விருந்து உபசரிப்பைத் தான். வந்தவர்கள் அறிமுகமற்றவர்களாக இருந்த போதும் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கின்றார்கள்.

ஏகத்துவ இமாம் என்று சொல்லும் போது அவர்களிடம் விருந்தோம்பல் என்ற இந்த உயர் பண்பு மின்னி மிளிர்வதைப் பார்க்கின்றோம்.

இதே போன்று இறைத் தூதுச் செய்தி வருவதற்கு முன்பும், வந்த பின்பும் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பண்பு மின்னியதை நாம் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் தூதுச் செய்தியைப் பற்றி ஒருவிதமான மன பாரத்துடன் திரும்புகின்ற போது அவர்களை நோக்கி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறுகின்றார்கள். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயர் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது விருந்தோம்பலையும் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து "எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களை விட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு "எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3

இதே பண்பை அபூபக்ர் (ரலி) அவர்களும் பெற்றிருந்ததை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கா காஃபிர்களால் சோதனைக்குள்ளான போது அபீசீனியாவை நோக்கி ஹிஜ்ரத் செய்து புறப்படுகின்றார்கள். அப்போது அவர்களை வழியில் சந்தித்த இப்னு தஃகினா என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முன்வருகின்றார். அப்போது அவர் கூறும் வார்த்தைகள் இங்கு கவனிக்கத்தக்கது.

முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் தாயகம் துறந்து அபிசீனியாவை நோக்கி சென்றார்கள். "பர்குல் ஃகிமாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், "எங்கே செல்கிறீர்?'' என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள் "என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றி விட்டனர்; எனவே, பூமியில் பயணம் (செய்து வேறு பகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தஃகினா, "உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர்! எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!'' எனக் கூறினார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2297

அபூபக்ர் (ரலி) அவர்களின் நற்பண்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு தஃகினா இந்த விருந்தோம்பலையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார். அதிலும் குறிப்பாக முஸ்லிமல்லாத ஒருவர் இவ்வாறு குறிப்பிடுவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விருந்தோம்பல் இறை நம்பிக்கையே!

விருந்தளிப்பதை இஸ்லாம் ஓர் இனிய பண்பாக மட்டும் பார்க்காமல் அதை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6018

விருந்தோம்பலை நபி (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையுடன் தொடர்புபடுத்துவதால் ஒரு முஸ்லிம் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

விருந்து ஓர் இனிய தர்மமே!

இன்று இந்த ஹதீஸ் அடிப்படையில் ஒரு நாள் விருந்து வழங்குவது இருக்கட்டும். ஒரு வேளை விருந்து வழங்குவது கூட அரிதாகி விட்டது. குறிப்பாக தவ்ஹீதுவாதிகளிடம் இந்தக் குறை பரவலாகக் காணப்படுகின்றது.

தவ்ஹீதுவாதி என்றால் அவர் ஒட்டுமொத்த நன்மைகளின் ஒரு தொகுப்பாக, நன்மைகளின் ஓர் ஆக்கமாகத் திகழ வேண்டும். ஆனால் நம்மிடம் இந்த விருந்தோம்பல் பண்பு அரிதாகி விட்டது என்று சொல்வதை விட அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏதோ வந்து விட்டாரே என்ன செய்வது? என்று ஏதாவது தரம் குறைந்த ஹோட்டல்களில் எதையேனும் வாங்கிக் கொடுத்து தனது மார்க்கக் கடமையை விட்டும் தப்பித்து விடுவது தவ்ஹீதுவாதிகளின் பண்பல்ல! அப்படியானால் ஹோட்டலில் வாங்கிக் கொடுப்பது தவறா என்று கேட்கலாம்.

பொதுவாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது இரண்டு விதங்களில் அமைகின்றது. தங்களுடைய வீட்டை விடச் சிறந்த உணவு ஹோட்டலில் கிடைக்கிறது என்று விருந்தினரை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது. மக்கள் பொழுதுபோக்குக்காகத் தங்கள் வீடுகளில் சமைக்காமல் இதுபோன்ற ஹோட்டல்களுக்குக் குடும்பம் குடும்பமாகச் சென்று சாப்பிடுவார்கள்.

இப்படிப்பட்ட ஹோட்டல்களுக்கு விருந்தினரை அழைத்துச் சென்று மரியாதை செய்தால் அது போற்றப்படக் கூடியதாகும். ஆனால் சில ஊர்களில் தண்ணியடிப்பவர்கள் சாப்பிடுவதற்கென்றே சில ஹோட்டல்கள் இருக்கும். இப்படிப்பட்ட அட்டுப்பிடித்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றோ அல்லது அங்கிருந்து வாங்கிக் கொண்டு வந்தோ கொடுத்தால் அது வரவேற்கத்தக்க பண்பல்ல! இதற்குத் தங்கள் வீடுகளில் உள்ள சாதாரண உணவு மேலாகும். பெரும் செலவில் உணவுகள் சமைத்துத் தான் விருந்தளிக்க வேண்டும் என்பதல்ல! தன்னிடம் இருப்பதைத் தான் மார்க்கம் வழங்கச் சொல்கின்றது. இத்தகைய பண்புகளை கைக்கொள்ள வேண்டும்; கடைப்பிடிக்க வேண்டும்.

விருந்தாளிகளைக் கண்ணியப்படுத்துவதற்கு ஆண்கள் பெரும்பாலும் தயங்குவதற்குக் காரணம் பெண்களைக் கவனத்தில் கொண்டு தான். எனவே பெண்கள் தான் விருந்தோம்பலுக்கு முன்வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழியர் எப்படி விருந்து உபசரிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்கüடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்கüடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இன்றிரவு இவருக்கு விருந்தüக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "நான் (இவருக்கு விருந்தüக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, "(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் விருந்தாü. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே!'' என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகüன் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை'' என்று பதிலüத்தார். அவர், "(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாüக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்'' என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தüத்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், "இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் "வியப்படைந்தான்' அல்லது (மகிழ்ச்சியால்) "சிரித்துக்கொண்டான்' என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், "தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்...'' எனும் (59:9ஆவது) வசனத்தை அருüனான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4889


தங்களுக்கு இல்லாமல் விருந்தினருக்கு வழங்கிய இந்தப் பண்பைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். நமக்கு இல்லாமல் நாம் வழங்க வேண்டியதில்லை. நம்மிடம் இருப்பதையாவது விருந்தாளிக்கு வழங்கி இறை திருப்தியையும் திருப் பொருத்தத்தையும் பெறுவோமாக!

EGATHUVAM JUN 2010