Apr 3, 2017

மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு

மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு

நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை.

மகராஷ்ட்ரா மாநிலம் கைர்லாஞ்சியில் நான்கு தலித்துகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கின்றது. இந்த நாட்டில்  தலித் மக்களுக்கு இன்னும் தீண்டாமையிலிருந்து விடுதலையோ, விமோசனமோ கிடைக்கவில்லை என்பதை இது உணர்த்திக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்திற்குக் கர்நாடகத்துடன் காவிரிப் பிரச்சனை, கேரளத்துடன் முல்லைப் பெரியாறு பிரச்சனை என்று நாட்டுக்கு நாடு நடக்கும் எல்லைப் பிரச்சனை போன்று ஒன்றுபட்ட இந்தியாவுக்குள்ளேயே மாநிலத்திற்கு மாநிலம் நடைபெறும் ஆற்றுத் தகராறுகள்.

இந்தியா பாகிஸ்தான், சீனா எல்லைப் பிரச்சனைகள், இலங்கை இனப் பிரச்சனை, இராக் ஆக்கிரமிப்பு, ஈரான் மீது பொருளாதாரத் தடை இது போன்ற பிரச்சனைகள் உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் மக்காவில் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.

அது ஒரு மனித நேய மாநாடு! மொழி வெறி ஒழிப்பு மாநாடு! நிற பேத ஒழிப்பு மாநாடு! தேச வெறி ஒழிப்பு மாநாடு! நேச வளர்ப்பு மாநாடு! சகோதரத்துவ, சமத்துவ மாநாடு! தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று நாம் அத்தனை பெயர்களையும் கொண்டு அதை அழைக்கலாம்.

நிகழ்ச்சி நிரல்கள்

வழக்கமாக மனிதர்கள் நடத்தும் மாநாட்டில் பேச்சாளர்கள், பார்வையாளர்கள் என்ற இரண்டு அவைகள் இருக்கும். பேச்சாளர்கள் மேடையிலும், பார்வையாளர்கள் தரையிலுள்ள இருக்கைகளிலும் இருப்பார்கள். பேச்சாளர்கள் தங்கள் தலைவர்களை வானளவுக்குப் புகழ்ந்து தள்ளி தனி நபர் வழிபாட்டை ஆரவாரமான கைத்தட்டல்களுக்கு மத்தியில் அரங்கேற்றிக் கொண்டிருப்பர்.

இந்த மாநாடு அப்படியல்ல! இந்த மாநாட்டில் இரண்டு அவைகள் கிடையாது. ஓரவை தான். அந்தப் பேரவையின் பெருந்தலைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே! அவனை நோக்கி, "நீ தனித்தவன், உனக்கு இணையில்லை, துணையில்லை' என்று அவன் மட்டுமே புகழாரம் சூட்டப்படுகின்றான்.

இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் மினாவுக்குச் செல்லுதல், அரஃபாவுக்குச் செல்லுதல், மினாவில் தங்குதல், கஅபாவை வலம் வருதல்    ஆகியவை அடங்கியிருக்கின்றன. இந்நிகழ்ச்சிகளில் அரஃபாவில் தங்குவது தான் உச்சக்கட்டமாகும்.

அரபா திடலா? அரபிக் கடலா?

உலகிலுள்ள அனைத்துக் கண்டத்தைச் சேர்ந்த மக்களும், குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், பன்மொழி பேசுகின்ற பல்வேறு கலாச்சார, பண்பாட்டு மக்களும் ஒரே விதமான வெள்ளை ஆடையில் அந்த அரஃபா திடலில் சங்கமிக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மனிதத் துளிகள் ஒரே வெண்ணிற ஆடையில் சங்கமிக்கும் அரபியக் கடலாக, ஜன சமுத்திரமாக அரபா திடல் ஆகி விடுகின்றது.

ஹஜ் அல்லாத காலத்தில் ஒருவர் மக்காவுக்குச் சென்றால் அங்கு ஓர் உண்மையைக் கண்கூடாகக் காணலாம். அந்த அரபா, முஸ்தலிபா, மினா போன்ற திடல்களை சாதாரண காலங்களில் மனித சஞ்சாரமில்லாத பகுதிகளாகக் காண்பர்.

அது ஒரு விளைச்சல் தரும் வளமிக்க வேளாண் நிலமல்ல! வணிகர்கள் வந்து செல்லும் வணிகத் தலமும் அல்ல! உல்லாசப் பயணிகள் உலா வருகின்ற இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், ஆறுகள், அழகுப் பாங்கான ஏரிகள், இதயங்களை ஈர்க்கின்ற மலைகள் நிறைந்த சுற்றுலாத் தலமும் அல்ல! பீறிட்டு வரும் நீரூற்றுக்கள் நிறைந்த நீர் நிலைகளுமல்ல!

இப்படியொரு பாலைவனத்தில் மனிதர்களைக் கொண்டு வந்து நிறுத்துவதில் உள்ள அர்த்தமென்ன?

மக்களே! இங்கு வெள்ளை ஆடை உடுத்தி நிற்கும் நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களில் அரசன் ஆண்டி, வெள்ளையர் கருப்பர், ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் நீங்கள் அத்தனை பேரும் என்னுடைய அடிமைகள் தான்.

உங்களில் உள்ள குடும்பம், கோத்திரம், கிளைகள் எல்லாமே உங்களை ஒருவர் மற்றவரிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்காகத் தானே தவிர குலப்பெருமை பாராட்டி, கைர்லாஞ்சியில் நான்கு பேர் கொல்லப்பட்டது போன்று அடித்துக் கொள்வதற்காக அல்ல!

நீங்கள் எல்லோரும் சகோதரர்கள். என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு கூடிய உங்களிடம் உங்கள் நிறம் குறுக்கே நிற்கவில்லை; உங்கள் நாடு, தேசம், எல்லைகள் குறுக்கே நிற்கவில்லை; உங்களுடைய இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் எதுவும் குறுக்கே நிற்கவில்லை.

எல்லை, தேசம், இனம், மொழி இவை அனைத்தும் இந்த அரபா திடலில் என் முன்னால் நிற்கும் போது தகர்ந்து நொறுங்கி விட்டன. இந்த நிலை தான் நீங்கள் உங்கள் தாயகங்களுக்குத் திரும்பும் போதும் தொடர்கின்றது; தொடர வேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பாவே! இராக்கை ஆக்கிரமிக்காதே! ஈரானை அழிக்க நினைக்காதே! அவர்கள் யார்? உங்களுடைய தந்தையான ஆதமின் மக்கள் தானே!

சிங்களர்களே! இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்காதீர்கள். தமிழர்களே! சிங்களர்களை அழிக்க நினைக்காதீர்கள். அவர்களும் நீங்களும் ஆதமுக்குப் பிறந்தவர்கள் தான்; சகோதரர்கள் தான்.

கர்நாடகாவே! தமிழகத்திற்குக் காவிரியைத் திறந்து விட மறுக்காதே! அவர்களும் உங்கள் சகோதரர்கள் தானே! என்று அரபா திடலில் நிற்கும் உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்களிடமும் இறைவன் ஓர் ஒற்றுமை உணர்வை, சகோதரத்துவ உணர்வை, பந்தத்தை, பாசத்தை உருவாக்கி, தீண்டாமையை மக்களின் உள்ளங்களிலிருந்து கழற்றி, களைந்து விடுகின்றான்.

ஆண்டுக்கு ஒருமுறை அவன் கூட்டுகின்ற இந்த மாநாட்டில் இப்படி ஒரு தீண்டாமை ஒழிப்பா? தீண்டாமைக்கு இப்படி ஒரு தீர்வா? என்று வியக்கின்ற உலகை நோக்கி, "இதில் மட்டுமல்ல! எனக்குள்ளும் தீண்டாமைக்குத் தீர்வுகளை வைத்திருக்கின்றேன்' என்று கூறி திருக்குர்ஆன் அழைக்கிறது.

திருக்குர்ஆன் கூறும் அந்தத் தீர்வுகளில் கொஞ்சத்தை இந்த ஏகத்துவ இதழ் தொட்டுப் பார்த்திருக்கின்றது.


இந்த இதழ் ஹஜ் எனும் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டின் சிறப்பிதழாக, தீண்டாமை ஒழிப்பு இதழாக மலர்ந்திருக்கின்றது.

EGATHUVAM JAN 2007