விதி ஒரு வரையாவிலக்கணம்
ரஸ்மி, இலங்கை
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய
அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால்
மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான
நம்பிக்கையையும் வைக்க வேண்டும்.
அல்லாஹ்
மலக்குமார்கள்
நபிமார்கள்
வேதங்கள்
இறுதி நாள்
விதி
ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய
முறையில் நம்புவது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றை நம்ப மறுப்பது
அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும்.
எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று
பறைசாற்றுகிறதோ,
எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ
அதில் ஓரம்சம்,
மீதமுள்ள 5 அம்சங்களையும் பொய் என்று பறை
சாற்றுவது போன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும். அது தான் விதி பற்றிய நம்பிக்கை.
எல்லாம் விதிப்படியே நடக்கிறது, அல்லாஹ் எழுதி வைத்த பிரகாரம் தான் இறுதித் தீர்ப்பு உள்ளது
நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று நம்பினால்...
அல்லாஹ் ஏன் எம்மைப் படைக்க வேண்டும்? நாம் ஏன் அவனை வணங்க வேண்டும்? பிரார்த்தனை என்பதற்குக் கூட வேலையே இருக்காது. என்ன தான் செய்தாலும்
சுவர்க்கம்,
நரகம் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றால் அல்லாஹ் நீதியாளன்
கிடையாது என்ற நிலை ஏற்படும். (நஊதுபில்லாஹ்). நீதியில் எள்ளளவு கூட தவறுபவன் கடவுளாக
இருக்க முடியாது. எனவே விதி பற்றிய நம்பிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் அல்லாஹ் பற்றிய
நம்பிக்கை ஆட்டம் காணும்.
மனிதன் செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்ய, நன்மையின் பக்கம் தூண்ட என பல்வேறு வேலைகளின் நிமித்தம் மலக்குகள்
இருப்பதும் கேள்விக்குரியதாகி விடும்.
எல்லாம் விதிப்படி என்றால் அத்தனை நபிமார்களும் அவர்களுக்கு
வழங்கப்பட்ட வேதங்களும் அதன் போதனைகளும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை.
தீர்ப்பு நாள் விசாரணை என்பதெல்லாம் ஒரு நாடகம் என்றாகி தீர்ப்பு
நாளும் பொய்யாகி விடும்.
எனவே விதியை எவ்வாறு நம்புவது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக
விளங்கி வைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்களுக்கும், கேள்வி கேட்டு பதிலளிப்பவரை மடக்கி, தான் ஓர் அறிவாளி என காட்டிக் கொள்பவர்களுக்கும் வணக்கம் புரிய
முடியாத சோம்பேறிகளுக்கும் விதி என்பது பெரிய பாக்கியம் தான்.
இதன் காரணமாகவும் விதி பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றிருப்பது
அவசியம்.
விதியை அல்குர்ஆன் இரண்டு விதமாகப் பிரித்து அணுகுகின்றது.
1. இவ்வுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
2. மறுவுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
இவ்வுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்
இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் அனைத்துப் பாக்கியங்களும்
அல்லாஹ் ஏற்கெனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே ஆகும் என குர்ஆனை ஆராயும் போது தெரிகின்றது.
அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.
(2:212)
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான்.
குறைத்தும் வழங்குகிறான். (13:26)
(மேலும் பார்க்க: 3:27, 3:37, 9:28, 17:30, 24:38, 28:82, 29:62,
34:36, 39:52, 42:12, 42:19)
இவ்வசனங்கள் இவ்வுலகில் நாம் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களும்
அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று கூறுகின்றன.
தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். (2:247)
"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே
உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு
(இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா
தமது சமுதாயத்திடம் கூறினார். (7:128)
இங்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவது அல்லாஹ்வின் நாட்டப்படியே
என்று விளங்குகிறது. மேலும் நமக்கு மத்தியில் நிலவும் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள், மனிதனுக்குக்
கிடைக்கும். கண்ணியம், இழிவு உட்பட அனைத்து இன்ப துன்பங்களும்
அல்லாஹ் விதித்தபடியே நடக்கும். இதில் மனித முயற்சியால் எதையும் அடைந்து விட முடியாது.
(பார்க்க: அல்குர்ஆன் 2:253, 4:90, 3:26, 5:48, 11:118, 16:93, 42:8)
இது போன்ற உலகின் அனைத்துக்
காரியங்களும் விதிப்படியே நடக்கும் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக உள்ளன.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும்
அதை அறிய மாட்டார். தரையிலும், கட-லும் உள்ளவற்றை அவன் அறிவான்.
ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள
விதையானாலும்,
ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(6:59)
வானத்திலும் அணுவளவோ, அதை விடச்
சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான
பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை (10:61)
மேலே நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களிலும் இவ்வுலகத்தில்
கிடைக்கும் பாக்கியங்கள் அனைத்தும் விதியின் அடிப்படையில் வந்து சேருபவையே என்று கூறப்படுகின்றது.
மனிதன் முயற்சி செய்தால் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அல்லாஹ் எங்குமே குறிப்பிடவில்லை.
மேலும் இது ஈமானுக்குப் பங்கம் விளைவிக்குமளவு சர்ச்சைக்குரிய
விஷயம் ஒன்றும் அல்ல! இவ்வுலக சுக போகங்கள் என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை அற்பமானதே!
மறுவுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்
மறுமை பாக்கியங்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது இரண்டு வேறுபட்ட விதமாகக் குறிப்பிடுகிறான்.
அதில் முதல் வகை, சுவர்க்கத்தையோ
அல்லது நரகத்தையோ மனிதன் அடைவதென்பது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது. தானாக ஒரு மனிதன்
நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைய முடியாது. மனிதனுக்கு நல்வழி காட்டுவதும் வழிகெடுப்பதும்
அல்லாஹ்வின் பாற்பட்டது என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் கூறுகின்றது.
உதாரணமாக
அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக
தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (2:272)
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்!
அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப்
பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு
(3:176)
எனவே அல்லாஹ் நாடுவதால் தான் ஒருவன் நரகத்தை அடைகிறான் என்பதை
இவ்வசனங்களும் கீழே குறிப்பிடும் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து
செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே
கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு
சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை
விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால்
அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப் படாவிட்டால் அதைத் தவிர்த்து
விடுங்கள்!''
என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து
காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க
விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
(5:41)
"நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழி கேட்டில் விட்டு விட
அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. (11:34)
மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 4:94,
4:88, 4:143, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30,
7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18,
13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46,
17:97, 18:17, 18:57, 22:16, 24:21,
24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35,
42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31
இங்கு நேர்வழியும், வழிகேடும்
விதிப்படியே என்பதை அல்லாஹ் ஆணித்தரமாகக் கூறுகிறான்
விதி சம்பந்தமாக ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் நடைபெற்ற ஓர் உரையாடலை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறார்கள்
(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும்
தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்கüடம் மூசா
(அலை) அவர்கள் "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்)
எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்தி-ருந்து எங்களை வெüயேற்றி விட்டீர்கள்'' என்று சொன்னார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "மூசாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை)
வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்
மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீர்களா?'' என்று கேட்டார்கள். "(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை
ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து
விட்டார்கள்''
என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
நூல்: புகாரி 6614
ஆனால் இதைவிட அதிகமான வசனங்களில் இதற்கு மாற்றமாக மனிதன் மறுமையில்
சந்திக்கப் போகும் விளைவுகளுக்கு அல்லாஹ் பொறுப்பாளியல்ல. மனிதனே அதைத் தீர்மானிக்கிறான்
என்று அல்லாஹ் குறிப்பிடுபிறான்.
உதாரணமாக
"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது.
நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி
கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்'' என்று
(முஹம்மதே!) கூறுவீராக! (10:108)
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர்
தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு
தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை. (17:15)
மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம்.
நேர் வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி
கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல. (39:41)
மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள்
ஐயத்திற்கிடமின்றி சொல்கின்றன.
இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக்
கொள்வார்.
(73:19)
எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும்
போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட
மாட்டார்கள். (3:25)
மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225,
2:281,286, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116,
6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70,
9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101,
13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29,
18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7,
39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18,
62:7, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24
மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள் பறைசாற்றுகின்றன.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக
ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். (7:20)
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக்
கொள்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்களுக்கு
எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும்
அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும்
இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
(17:64)
அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து
விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். (25:29)
மேலும் பார்க்க: அல் குர்ஆன் 2:36, 2:268, 3:155,
3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 16:63, 17:27, 19:58, 20:120, 27:24
மேலே உள்ள வசனங்கள், வழிகெடுப்பது
ஷைத்தானின் வேலை என்று கூறுகின்றன.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று
நரகத்தை அடைவதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று ஒரு வகையான வசனங்கள் கூறுகின்றன.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று
நரகத்தை அடைவதும் தானாக தேடிக் கொள்வது அல்லது ஷைத்தான் வழிகெடுப்பது தான் காரணமே தவிர
அதற்கு இறைவன் பொறுப்பாளியல்ல என்று வேறு சில வகையான வசனங்கள் சொல்கின்றன.
இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இரண்டு வகையான வசனங்களும்
ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பது உண்மை தான்.
இப்போது நாம் என்ன செய்வது? முதலில்
ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதம் தான் என்பதற்கு பெரிய
சான்று அது முரண்பாடுகள் அற்றதாக இருப்பது தான் என அல்லாஹ்வே கூறுகிறான்
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான
முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)
குர்ஆனைப் பற்றி குர்ஆனே இவ்வாறு சான்று பகரும் போது, மேலே எடுத்துக் காட்டிய விதியைப் பற்றிக் கூறக் கூடிய அத்தனை
வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பது ஏன்?
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM MAR 2008