கடவுளைக் காக்கும் காவல்துறை
அவர்களின் கடவுள்களிடம் சென்று சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று
கேட்டார். பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார். அவர்கள் அவரை நோக்கி
விரைந்து வந்தனர். நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும்
படைத்தான் என்றார்.
அல்குர்ஆன் 37:91-95
இந்தச் சிலைகளுக்குக் கடுகளவும் ஆற்றல் இல்லை. சாப்பிடக் கூட
சக்தியில்லை. தன்னைத் தாக்குகின்றவனைத் தடுக்கவும், சப்தம்
போடவும் சக்தியில்லாத இந்தச் சிலைகளை வணங்கலாமா? என்ற
சிந்தனைப் பொறியை சீற்றமிகு இளைஞர் இப்ராஹீம் (அலை) அவர்கள் கிளப்பி விடுகின்றார்கள்.
இப்ராஹீம் நபியின் இந்தப் பகுத்தறிவு வாதத்தை எல்லாக் காலங்களிலும்
நாம் மக்கள் முன் வைக்க முடியும்.
அண்மையில் பத்திரிகைகளில் வெளியான சிலை திருட்டு குறித்த செய்திகளையும்
கோயில் ஊழியர்கள், பூசாரிகள் அடிக்கின்ற கொள்ளை
மற்றும் கூத்துக்களைப் பற்றிய செய்திகளையும் பார்ப்போம்.
சென்னையில் போலீசார் அதிரடி வேட்டை- வெளிநாட்டுக்குக் கடத்த
முயன்ற 9 சாமி சிலைகள் மீட்பு; 3 பேர் கைது
- என்று ஒரு செய்தி.
இதனையொட்டி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஐ.ஜி. ராஜேந்திரன், இந்த ஆண்டு இது வரை 25 திருட்டு
சிலைகள் மீட்கப் பட்டுள்ளன என்று புள்ளி விவரம் தந்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்திலிருந்து 6 கோடி
ரூபாய் மதிப்புள்ள 26 சிலைகள் - அமெரிக்காவுக்கும், ஹாங்காங்குக்கும் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் அரியலூர்
மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் திருடப்பட்ட 8 சிலைகளும் - அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜப் பெருமாள்
கோவிலில் திருடப்பட்ட 18 சிலைகளும் அடங்கும் இது ஐ.ஜி.
ராஜேந்திரன் வழங்கும் கூடுதல் தகவலாகும்.
பூசாரியே சாமி சிலைகளைத் திருடியது பற்றிய செய்தியை பொருளாதாரக்
குற்றப்பிரிவுக் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. திலகவதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
அவரது பேட்டியின் சில பகுதிகள் வருமாறு:-
தமிழகம் முழுவதும் கோவில்களில் திருட்டுப் போன கலைநயமிக்க புராதனமான
சிலைகளை மீட்கும் பணியில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இது வரை விலை மதிப்புடைய மரகதலிங்கம் உள்பட 33 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 53 கோடியே 85 லட்சமாகும். இதில் தொடர்புடைய
26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பரவாக்கரை என்ற கிராமத்தில்
வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோவிலில்
கடந்த ஜூலை மாதம் விலை மதிப்புள்ள சிலைகள் திருட்டுப் போய் விட்டன.
அருகில் உள்ள பூங்கொடி கிராமத்தில் இருக்கும் சிவன் கோவிலிலும்
சிலைகள் திருட்டு போய் விட்டன. அந்த 2 கிராமங்களின்
மக்களும் திருட்டுப்போன சிலைகளை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்தார்கள்.
அதன் பேரில், ஐ.ஜி.ராஜேந்திரன், துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், ஏட்டுகள்
மதியழகன், சுப்புராஜ், இளங்கோவன், காவலர் ஆல்வின் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையினர் இதற்காக
களத்தில் இறக்கப்பட்டனர்.
தீவிர விசாரணையில், மேற்கண்ட 2 கோவிலிலும் திருடிய சிலைகளை விற்பதற்காக ஒரு கும்பல் சென்னைக்கு
வருகிறார்கள் என்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிண்டி ரெயில் நிலையத்தில் அந்த
கும்பல் சிலைகளை விற்பதற்கு வருவதாகவும் சொல்லப்பட்டது.
இதன் அடிப்படையில் தனிப் படைப் போலீசார் மாறு வேடத்தில் கிண்டி
ரெயில் நிலையத்தில் கண்காணித்தனர். அப்போது 2 சாக்குப்
பைகளை தோளில் போட்டு சுமந்தபடி 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களைப்
பிடிக்க முற்பட்ட போது சாக்குப் பைகளைப் போட்டு விட்டு தப்பி ஓடப் பார்த்தனர். தனிப்படைப்
போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையைத் திறந்து பார்த்த போது அதற்குள்
பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமார், மாரியம்மன், சுப்பிரமணியர், தெய்வானை ஆகிய
7 ஐம்பொன் சிலைகள் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
சிலைகளை விற்பதற்காக வந்த மணிகண்டன் (வயது 29), மருதுபாண்டி
(34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான மணிகண்டன் பரவாக்கரை கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் பூசாரியாக வேலை
பார்த்துள்ளார். பூசாரி தொழிலில் வருமானம் இல்லாததால் மாந்திரீக வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
செய்வினை எடுப்பது, செய்வினை வைப்பது போன்ற செயல்களிலும்
ஈடுபட்டு மக்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
மாந்திரீக தொழிலுக்கு மேற்கண்ட சிலைகளைப் பயன்படுத்துவது போல
பொது மக்களை நம்ப வைத்துள்ளார். சிலைகளை மஞ்சள் துணியால் கட்டி அண்டாவுக்குள் வீடுகளுக்குள்
போட்டு வைத்தால் கஷ்டம் நீங்கும் என்று பொதுமக்களிடம் கூறி ஏமாற்றி உள்ளார்.
அவ்வாறு சிலைகளை அண்டாவுக்குள் போடுவது போல் நடித்து திருடி
விற்க முயற்சித்துள்ளார். பூசாரி வேடம் போட்டு தனது நண்பர்களான மருதுபாண்டி, சுதாகர், கலைச் செல்வன் ஆகியோருடன் சேர்ந்து
சிலைகளைத் திருடியுள்ளார்.
சுதாகரையும், கலைச் செல்வனையும்
தேடி வருகிறோம். மீட்கப்பட்ட சிலைகள் பரவாக்கரை வெங்கடாஜலபதி கோவிலிலும், பூங்கொடி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் திருடப்பட்டவை ஆகும்.
திருடப்பட்ட சிலைகளில் வள்ளி சிலை மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. அந்தச் சிலையை
எங்கு மறைந்து வைத்திருக்கிறார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. மீட்கப்பட்ட சிலைகளை
உரிய பூஜை செய்து கிராம மக்களிடம் ஒப்படைக்க உள்ளோம். - என்று தகவல் தெரிவித்திருக்கிறார்
அவர்.
ஏழுமலையானுக்குக் காணிக்கை அளிக்கப்படும் தங்க நகைகள் - வைர
மாலைகள் - தங்கக் கிரீடங்கள் - வைரக் கிரீடங்கள் எல்லாம் எப்படி சாமர்த்தியமாக களவாடப்படுகின்றன!
கண்டு பிடிக்கப்பட்டால் - அது எப்படி சரி செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு செய்தி
வெளி வந்திருக்கிறது!
அதிலே கூட திருப்பதி கோயில் நகைகள் திருட்டு என்று குறிப்பிடப்படவில்லை
பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது! திருப்பதி
கோயிலில் நகைகளைத் திருடுபவர்கள் - அல்லது மாயம் செய்பவர்கள் - பல லட்சக்கணக்கிலான
மதிப்புள்ள நகைகளை மாயம் செய்துவிட்டு - எப்படி சில நூறு ரூபாய்களை இழப்பீடாகச் செலுத்திவிட்டு
தப்பி விடுகிறார்கள் என்பதை அந்தச் செய்தி விவரமாகத் தந்திருக்கிறது! திருப்பதி ஏழுமலையான்
கோயிலில் நகைகள் மாயமானதாகக் கூறி, அவற்றுக்குக்
குறைந்த அளவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு
சில ஆயிரங்களே ஈடு கட்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானின்
நகைகள் விவரம் குறித்துத் தகவல் தர வேண்டும் என்ற பொது நல வழக்கின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு
ஐதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி
தேவஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லா கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
சுவாமி நகைகள் பாதுகாப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகி உள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு வரையில் ஏழுமலையான்
நகைகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பில் இருந்தன. அதன் பிறகு விஜிலென்ஸ்
அதிகாரிகள்,
தனி கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் நகை விவரங்கள் ஆண்டுதோறும்
பதிவு செய்து வந்தனர்.
* விலை உயர்ந்த கோமேதக கற்கள், வைர
கிரீடத்தில் இருந்து உதிர்ந்து மாயமாகி விட்டதாகக் கூறி அதற்குத் தேவஸ்தானம் சார்பில்
ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.
* கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மேலும் ஒரு கோமேதக கல் மாயமாகி விட்டதாகக் கூறி அதற்கு
ரூ.200 மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
* ரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியில் இருந்த கோமேதகக் கற்கள்
உதிர்ந்துவிட்டதாகக் கூறி, ஒவ்வொன்றுக்கும் ரூ.50 வீதம் செலுத்தியுள்ளனர்.
* மற்றொரு கிரீடத்தில் இருந்த 5 வைரக்
கற்கள் மாயமானதாகக் கூறி 50 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
* இதே போல் 6 முத்துக்கள் உதிர்ந்து விட்டன எனத் தெரிவித்து ரூ.60 மட்டும் செலுத்தப்பட்டுள்ளது.
* மூலவருக்கு அணிவிக்கப்படும் வைர கிரீடத்தில் ஒரு வைரம் மாயமாகி
விட்டதாகக் கூறி, அதற்கு ரூ.10 மட்டும் செலுத்தியுள்ளனர்.
* மேலும் 13 தங்க நகைகள் தொலைந்து போனதாகக்
கூறி 23,850 ரூபாய் மட்டுமே ஈடுகட்டப்பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
மாயமானதாகக் கூறப்படும் இந்த 13 நகைகள் மட்டும் பல லட்சம் இருக்கலாம்
என கூறப்படுகிறது.
* இவை தவிர 23 கிலோ எடையுள்ள 15 வெள்ளி பொருட்கள் காணாமல் போய் விட்டது என கணக்குக் காண்பித்துள்ளனர்.
* மேலும் 36 வெள்ளிப் பொருட்கள் உபயோகப்படுத்தாமல்
வைத்திருந்ததால் அதன் எடை 411 கிராம் குறைந்துள்ளது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மூலவரின் வைர கிரீடத்தில் இருந்த 2 தங்கத் தாமரைகள் மாயமானதாக ரூ.8 ஆயிரம் ஈடுகட்டியுள்ளனர்.
* கடந்த 2007 மார்ச் 16ஆம் தேதி 16 பவளம் பொறித்த டாலர் வைத்த
தங்க செயினில் டாலர் மாயம் எனக் கூறி ரூ.10 மட்டுமே செலுத்தியுள்ளனர்.
* ரத்தினக் கற்கள் பதித்த சூரியன், சந்திரன் தங்க ஜடை பில்லைகள் மாயமானதாக ரூ.300 ஈடு கட்டியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு
சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளனர்
இவ்வாறு அந்தச் செய்தி கூறுகின்றது.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகி விடுமாம் - 200 ரூபாய், 50 ரூபாய், 60 ரூபாய், 10 ரூபாய் என்று இழப்பீட்டுத்
தொகை செலுத்துவார்களாம்! புனிதமானது என்று கூறப்படும் கோயிலில் நகைத் திருட்டு கூட
- நகை மாயம் என்ற பெயரில் புனிதம் அடைந்து விடும் அதிசயம் அல்லது அருள்மிகு செய்தி
இது!
திருப்பதி மகாத்மியம் இத்தோடு முடிந்து விடவில்லை. இன்னொரு செய்தி
- அதுவும் திருப்பதி செய்தி. திருமலை திருப்பதி - தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருப்பதியில்
உள்ள கோதண்ட ராமசுவாமி கோயிலில் 1.6 கிலோ எடையுள்ள 2 தங்க மாலைகள் காணாமல் போயுள்ளது தெரிந்தது. (காணாமல் போகும்
- மாயமாகும் - ஒரு போதும் அது திருட்டு என்று ஆகாது - அது தான் ஏழுமலையானின் சட்டச்
சொற்கள்) கண்காணிப்பு அதிகாரிகள், கோயிலின் அர்ச்சகர் வெங்கட்ரமண
தீட்சிதரிடம் விசாரிக்க முடிவு செய்தார்கள். இது தெரிந்ததும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத்
தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மருத்துவமனையில் விஜிலென்ஸ் அதிகாரிகள், வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரித்தார்கள்.
வெங்கட்ரமண தீட்சிதர் மட்டும் திருடினேன் என்றா வாக்குமூலம்
கொடுப்பார்?
திருப்பதி கோயிலின் அகராதியில் - காணாமல் போகும், மாயமாகுமே தவிர திருட்டுப் போகுமா? எனது மகள் திருமணச் செலவுகளுக்காக சுவாமியின் நகைகளை அடகு வைத்தேன்
என்றார் அவர்! காணாமல் போய்விட்டது, மாயமாகி விட்டது
என்று சொல்லியிருந்தால் அவரிடம் 50 ரூபாயோ 100 ரூபாயோ இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்து
விட்டு விட்டிருப்பார்கள். அவர் அடகு வைத்தேன் - என்று சொன்னதாலோ என்னவோ அவரைக் கைது
செய்து விட்டார்கள். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரு செக்யூரிட்டி ஊழியர்களை சஸ்பெண்ட்
செய்து விட்டார்கள். திருப்பதி கடையில் அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை - சென்னையில்
உள்ள ஓர் அடகுக் கடையிலிருந்து மீட்டு விட்டார்கள்!
இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் திருப்பதி ஏழுமலையானின்
பக்தர்களுக்கு என்ன தோன்றும்? திருப்பதி சென்று பக்த கோடிகள்
நேர்த்திக் கடன் என்ற பேரால் மொட்டை அடித்துக் கொள்வதுண்டு - பட்டை நாமமும் தரித்துக்
கொள்வதுண்டு! ஆனால்- பக்தர்கள் தந்த காணிக்கைப் பொருள்களை அபகரித்துக் கொண்டு பக்தர்களுக்கு
இலவச மொட்டையும் - இலவச நாமமும் போடும் காரியங்களல்லவா திருப்பதியில் நடைபெறுகிறது!
- என்று நினைப்பார்கள் பக்தர்கள் - ஆனால் - இத்தனையையும் பார்த்துக் கொண்டு சகல சக்திகளும்
படைத்த திருப்பதி ஏழுமலையான் சும்மா தானே இருக்கிறார். நகைகளை மாயமாக்கியவர்களை விஜிலென்ஸ்
அதிகாரிகளும்,
போலீசாரும் தான் பிடிக்கிறார்களே தவிர - திருப்பதி வெங்கடாசலபதி
- யாரையும் பிடித்ததாக - தண்டித்ததாக செய்தி எதுவும் வருவதில்லையே; ஏன்? என்று எந்த ஒரு பக்தராவது நினைப்பாரா?
தம்மைக் காக்காதவை நம்மைக் காக்குமா?
திருட்டை விட்டுக் காக்க வேண்டிய தெய்வங்களே திருட்டுப் போகின்றன.
களவைத் தடுத்து நிறுத்தி, பக்தனைக் காக்க வேண்டிய கடவுள்களே
களவாடப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர். கடைசியில்
காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுகின்றனர். இப்படித் தம்மையே காக்க முடியாதவர்கள்
நம்மை எப்படிக் காப்பார்கள் என்பது தான் இப்ராஹீம் நபியவர்கள் உலக மக்களுக்கு உணர்த்துகின்ற
உன்னத, உயரிய பாடம்.
இதை மனிதர்கள் சிந்திப்பதில்லை. இஸ்லாம் இந்தச் சிந்தனையை மக்களுக்குத்
தூண்டுகின்றது. அல்குர்ஆன் இந்தத் தெய்வங்களின் பலவீனத்தை எடுத்துக் கூறி மனிதனின்
பகுத்தறிவைப் பட்டை தீட்டுகின்றது.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக்
கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும்
ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை
அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் 22:73
ஓர் ஈயைப் படைப்பது ஒரு புறமிருக்கட்டும். அது பறித்துச் சென்ற, அதன் மயிர்க் கால்களில் ஒட்டியிருக்கின்ற அற்பப் பொருளை மீட்பதற்குக்
கூட இந்தச் சிலைகளுக்குச் சக்தியில்லை என்று அதன் பலவீனத்தை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக்
காட்டுகின்றது.
இப்படி எந்தச் சக்தியும் இல்லாத இந்தக் கல் அல்லது மண் பாண்டம்
நம்மை எப்படிக் காப்பாற்றும் என்ற சிந்தனை மனிதனுக்கு வேண்டும்.
பிறரால் கடத்தப்படும் போது தம்மையே காப்பாற்றிக் கொள்ளாத இந்தத்
தெய்வங்கள் நம்மை எப்படிக் காப்பாற்றும் என்று மனிதன் சிந்திப்பதில்லை. மற்றவர்கள்
சிந்திப்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் கடவுள்களை மீட்டுக் காப்பாற்றும் காவலர்களும்
சிந்திப்பதில்லை. மத சார்பின்மையுடைய நாட்டில் தங்களுடைய காவல்துறை அலுவலகத்தில் இந்தக்
கடவுள் சிலைகளை வைத்து, அவை தங்களைக் காப்பாற்றும் என்று
இவர்கள் நம்புவது தான் வேடிக்கையான விஷயமாகும்.
அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக
இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.
அல்குர்ஆன் 36:75
இந்த வசனம் கூறுவது போன்று இந்தச் சிலைகளுக்குத் தான் இவர்கள்
பாதுகாப்புக் கொடுக்கும் நிலையில் உள்ளார்களே தவிர இவை எப்படி நம்மைப் பாதுகாக்கும்
என்பதை யோசிப்பதில்லை.
இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலைகளுக்கு இறைவன் சொல்கின்ற இந்த வாதங்கள் அனைத்தும் தர்ஹாக்களுக்கும்
பொருந்தும். தர்ஹாக்களில் களவு போகும் போது, காவல்துறையைத்
தான் தர்ஹா டிரஸ்டிகள் நாடுகின்றனர். கோயில் கொள்ளையை அதிலுள்ள கடவுள்கள் தடுத்து நிறுத்தாதது
போல், தர்ஹாக்களில் நடைபெறும் கொள்ளையை, தர்ஹாக்களின் சொத்துக்களை பிறர் அபகரிப்பதை இந்த அவ்லியாக்கள்
தடுத்து நிறுத்துவதில்லை.
பள்ளிவாசல்களில் மவ்லிது ஓதுவதை தவ்ஹீது ஜமாஅத்தினர் தடுத்து
நிறுத்துவதால் காவல்துறையை அணுகி, அவர்களது பாதுகாப்புடன் சில
இடங்களில் மவ்லிது ஓதுகின்றனர். உலகக் காவல்துறைத் தலைவராக (?) இவர்கள் கருதும் முஹ்யித்தீன் இருக்கும் போது எதற்காக இந்த லோக்கல்
போலீஸை அணுக வேண்டும் என்பதை இவர்களும் சிந்திப்பதில்லை. இவர்களை ஆதரிக்கும் மக்களும்
சிந்திப்பதில்லை.
இறந்து போன பிணங்களிடம் போய் தங்கள் கோரிக்கையைக் கேட்கும் ஜனங்கள்
இதைச் சிந்திப்பார்களா?
EGATHUVAM MAR 2010