ஏன் என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை
கே.எம். அப்துந் நாசிர்
கடையநல்லூர்
நம் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் துவங்கிய காலம் முதல்
இன்று வரை ஆல விருட்சமாக வேர் விட்டு வானோங்கி வளர்ந்து வருகிறது. அது போல் ஏகத்துவத்திற்கு
எதிரான சக்திகளும் அவ்வப்போது உதயமாகி, வளர்ந்து, வாடிக்
கொண்டு தான் இருக்கின்றன.
இந்த ஏகத்துவக் கொள்கை மிக வீரியமாக மக்கள் மத்தியில் வேரூன்றியதற்குக்
காரணம் இறையுதவிக்கு அடுத்தபடியாக இஸ்லாம் தொடர்பாக மக்களின் சிந்தனை தூண்டப்பட்டது
தான்.
மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் இறையச்சம் உடையவர்கள்
இறைவழி நடப்பதற்காகக் கேட்ட கேள்விகளும், அதற்குத் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலிருந்து
அளிக்கப்பட்ட பதில்களும் தான் என்றால் மிகையாது.
இன்றைக்கும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்களை ஆதாரம் என்ற வார்த்தையினால்
கிண்டலடிக்கக் கூடியவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இதற்குக் காரணம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அறிஞர் கூறினாலும் இதற்கு என்ன ஆதாரம்? இந்த ஹதீஸ் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது? என்று நம் சகோதரர்கள் கேட்கின்ற கேள்விகள் தான்.
மக்களின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத
பரேலவிகள், மத்ஹபுவாதிகள், மார்க்க விரோதிகள், இணை வைப்பாளர்கள் ஒவ்வொரு காலத்திலும் கையிலெடுத்த ஆயுதம், கேள்வி கேட்பது வழிகேடு
என்பதைத் தான்.
நாங்கள் எதைச் சொன்னாலும் உயிருள்ளவன் கைகளில் இறந்தவனுடைய உடல்
எப்படி இருக்குமோ அது போன்று ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் முன்னிலையில் கைகட்டி
வாய்பொத்தி இருக்க வேண்டும். எங்களைப் போன்றவர்களை அவமதித்தால் அதாவது எங்களிடம் வினா
தொடுத்தால் நீங்கள் செல்லுமிடம் நரகம் தான். எங்களின் பெயர்களைக் கூறுவதற்குக் கூட
உங்களுக்குத் தகுதியில்லை என்றுரைத்து ஒன்றுமறியா அப்பாவி மக்களைப் பயமுறுத்தினார்கள்.
தங்களின் அசத்தியக் கருத்துக்களைத் திணிப்பதற்கு இதையே கருவியாகப்
பயன்படுத்தினார்கள். இதற்கும் துணிந்து சிலர் கேள்விகள் கேட்கும் போது அவர்களின் முகங்கள்
கருத்தன. சத்தியத்தின் முன்னால் தங்களின் அசத்தியங்கள் மாண்டு போவதைக் கண்டு அவர்களின்
இதயங்கள் இறுகின. பதில் சொல்ல முடியாமல் திணறினர். இவர்களின் உளறல்களினால் தான் அதிகமான
மக்கள் அவை போலி என்பதை உணர்ந்து சத்தியத்தின் பக்கம் அணி திரண்டனர்.
இன்றைக்கும் சில அசத்திய வாதிகள் தங்களின் வழிகேட்டிற்கு ஆள்
சேர்ப்பதற்காக, கேள்வி கேட்பது அநாவசியம்
என்ற பரேலவியிஸத்தின் ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளனர். இவர்களின் அசத்தியக் கொள்கைக்கு
எதிராக இவர்களிடம் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு இவர்களிடம் திருமறை, மற்றும் திருநபி வழியின் அடிப்படையில் தெளிவான பதில் இல்லையென்பதால்
தான் கேள்வி கேட்பது அநாவசியமாக இவர்களுக்குத் தோன்றுகிறது.
பொதுவாக நமக்குத் தெரியாத விஷயங்கள் இருக்குமானால் அதைத் தெரிந்து
கொள்வதற்கு ஆசைப்பட வேண்டும். தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக மார்க்கம் தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை எடுக்க
வேண்டும். ஏனெனில் இது மறுமை வாழ்க்கை தொடர்புடையது. இதில் ஏற்படும் தவறுகள் நிரந்தர
வேதனைக்கு நம்மை ஆளாக்கி விடும். எனவே மார்க்க விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவற்றில் பல விஷயங்களை
நாம் அறியாமல் இருக்கிறோம் அல்லது தவறாக விளங்கி வைத்துள்ளோம். இவற்றை நீக்குவதற்கு, மார்க்கம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்கம் தடுத்த சில காரியங்களைக் கூட அவற்றை நன்மை என்று எண்ணி
நாம் செய்து வருகிறோம். தர்ஹாவிற்குச் செல்லுதல், தாயத்து அணிதல் போன்ற ஏராளமான காரியங்களை இதற்குச் சான்றாகச்
சொல்லலாம்.
இது போன்று, கட்டாயம் செய்ய வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்திய பல காரியங்களைச்
செய்யாமல் இருக்கிறோம். தொழுகை, நோன்பு
போன்ற கடமைகளை சரிவரச் செய்வதில்லை.
அல்லது திருக்குர்ஆன் நபிமொழிகளில் குறிப்பிட்டவாறு அந்த வணக்கங்களைச்
செய்வதில்லை. இதற்குக் காரணம் மார்க்கத்தைப் பற்றியும் அதன் சட்டங்களைப் பற்றியும்
நாம் சரியாக அறியாமல் இருப்பதாகும்.
இஸ்லாம் எந்த விஷயத்தையும் குருட்டுத்தனமாக அப்படியே நம்பிவிட
வேண்டும் என்று போதிக்கவில்லை. இறைவன் தந்த வசனங்களில் எவ்வித முரண்பாடும் இருக்கவே
இருக்காது என்றாலும் அதையும் கூட சிந்திக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின்
மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும்
விழ மாட்டார்கள்.
அல்குர்ஆன் 25:73
பல விஷயங்களை கேள்வி கேட்பதின் மூலம் தான் தெளிவுபடுத்திக் கொள்ள
முடியும்.
நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!
அல்குர்ஆன் 16:43
என்ற இறை வசனம், தெரியாத விஷயங்களைத்
தெரியவில்லை என்று விட்டு விடாமல், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பின்வரும் வசனமும் கேள்வி கேட்பதினால் தான் பல விளக்கங்கள் நமக்குக் கிடைக்கும் என்றுரைத்து கேள்வி கேட்பதின் அவசியத்தை
வலியுறுத்துகின்றன.
கேட்போருக்கு யூஸுஃபிடமும், அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 12:7
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட இறை வேதம் தொடர்பாகச்
சந்தேகம் ஏற்பட்டால் அதற்கு முன்பாக அதைத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்
கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
(முஹம்மதே!) நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால்
உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம்
வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர்!
அல்குர்ஆன் 10:94
நபி (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்களும் அன்றைய காலத்து மக்களும்
கேட்ட பல கேள்விகளை திருமறைக் குர்ஆன் பட்டியலிட்டு அதற்குப் பதில் கூறுகிறது.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர் (2:189)
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர் (2:215)
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர்.
(2:217)
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். (2:219)
அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (2:220)
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர் (2:222)
"தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (5:4)
"அந்த நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (7:187)
(முஹம்மதே!) அந்த நேரம் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர்.
(33:63)
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி
(முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். (8:1)
(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (17:85)
(முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.
(18:83)
(முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.
(20:105)
கேள்வி கேட்பது அநாவசியம் என்பவர்கள் மேற்கண்ட அத்தனை இறை வசனங்களுக்கும்
இன்னும் ஹதீஸ்களில் ஸஹாபாக்கள் நபிகள் நாயகத்திடம் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கும்
என்ன பதில் கூறப் போகிறார்கள்?
பின்வரும் ஹதீஸ்கள் மார்க்கம் தொடர்பாகக் கேள்விகள் கேட்க வேண்டும்
என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள்
கேட்டு நபி -ஸல்- அவர்கüடமிருந்து)
நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி
-ஸல்- அவர்கüடம் திரும்பத் திரும்பக்
கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
நூல்: புகாரி 3607
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில்
அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப்
படுக்க வைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் "உங்களில்
முஹம்மது அவர்கள் யார்?'' என்று கேட்டார்.
-அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்- "இதோ சாய்ந்து
அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம்'' என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை
"அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!'' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்
"நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான்
கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டு விடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உம் மனதில் பட்டதைக்
கேளும்!''
என்றார்கள்......
நூல்: புகாரி 63
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது மக்களின்
கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம்
ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின்
தூதரே! நான் பலியிடுவதற்கு முன்பே தெரியாமல் தலையை மழித்து விட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!'' என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து,
"அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே
தெரியாமல் அறுத்துப் பலியிட்டு விட்டேன்'' என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!'' என்றார்கள். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச்
செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச்
செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் "குற்றமில்லை.
(இப்போது) செய்யுங்கள்'' என்றே விடையளித்தார்கள்
(நூல்: முஸ்லிம் 2514)
மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் கேள்வி கேட்டு மார்க்கத்தை அறிந்து
கொள்வது மிக மிக அவசியம் என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பின்வரும்
ஹதீஸும் இதற்கு மற்றொரு சான்றாகும்.
"அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட
மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான்.
கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம்
கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்)
தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல்கள்: புகாரீ 100, முஸ்லிம் 2673
மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்கப்படும் போது அதற்கு அறிவீனமாகப்
பதிலளிப்பவர்களை நபியவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். மார்க்கம் தொடர்பாகக் கேள்வி
கேட்பதே தவறாக இருந்தால் அதற்குப் பதிலளிப்பவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டிய
எந்த அவசியமும் இல்லை. கேள்வி கேட்டால் தானே அவர்கள் தவறாகப் பதிலளிப்பார்கள். கேள்வி
கேட்பதே கூடாது என்று சொன்னால் அவர்கள் தவறாகப் பதிலளிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
ஆனால் நபிவர்கள் தவறாகப் பதிலளிப்பவர்களைப் பற்றித் தான் எச்சரிக்கை
செய்கிறார்களே தவிர கேள்வி கேட்பதைப் பற்றி எச்சரிக்கவில்லை. இதிலிருந்து மார்க்கம்
தொடர்பாகக் கேள்விகள் கேட்பது நபியவர்கள் வழிகாட்டிய ஒன்று என்பதை மிகத் தெளிவாக விளங்கிக்
கொள்ளலாம்.
கேள்விகள் கேட்பது கூடாது என்பதற்குச் சில ஹதீஸ்களை அசத்தியவாதிகள்
எடுத்து வைக்கின்றனர். ஆனால் உண்மையில் அந்தச் செய்திகளைச் சிந்தித்தால் கேள்வி கேட்பதைத்
தான் அச்செய்திகள் வலியுறுத்துகின்றன என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபித் தோழர்கள் (சிலர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம், (அவர்களுக்குப்
பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால்
கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி,
"(நான் அறிகின்றவற்றை நீங்கள்
அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக்
கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெüவு படுத்தாமல் இருக்கப்போவதில்லை'' என்று சொன்னார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும்
திரும்பிப் பார்க்கத் தலைப்பட்ட போது அங்கிருந்த ஒவ்வொருவரும் தத்தமது ஆடையால் தம்
தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுது கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் எனத்
தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது
அவர்,
"அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலüத்தார்கள். நபி (ஸல்) அவர்கüன் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட உமர் (ரலி)
அவர்கள்,
"நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக்
கொண்டோம். சோதனைகüலிருந்து அல்லாஹ்விடம்
பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும்
நான் ஒரு போதும் கண்டதில்லை. எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்)
இந்தச் சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்று சொன்னார்கள்.
(புகாரி 6362)
ஒரு நபித் தோழர் கேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்பட்டுள்ளார்கள்.
எனவே கேள்வி கேட்பது கூடாது. அது அநாவசியமானது என அறியாதவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் இதனைச் சரியாகச் சிந்திக்கவில்லை என்றே கூறலாம்.
உண்மையில் கேள்வி கேட்பது தவறு என்று சொன்னால் ஸஹாபாக்கள் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு
குர்ஆனிலும் ஹதீஸிலும் பதில் சொல்லப்பட்டிருக்கக் கூடாது. மேலும் இந்த ஹதீஸிலும் கூட,
"நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான்
உங்களுக்குத் தெüவு படுத்தாமல்
இருக்கப்போவதில்லை''
என்று நபியவர்கள் கூறிய வாசகம் கேள்வி கேட்பது மற்றும் அதற்கு
பதிலளிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
கேள்வி கேட்டதினால் நபியவர்கள் கோபப்படவில்லை. கேட்கப்பட்ட கேள்வி
மார்க்கம் தொடர்பற்றதாகும். தனி நபர் தொடர்பானதாகும். இதனால் இம்மை மறுமை பயன் விளையப்
போவதில்லை. மார்க்கத்தை அறிவதற்காகக் கேட்கப்பட்ட கேள்வியாக அது இல்லை. கேலிக்காகத்
தான் இவ்வாறு கேள்வி கேட்டார் என்றும் சில அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத்
தான் நபியவர்கள் கோபம் கொண்டார்கள். எனவே மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பதைத் தடை
செய்வதற்கு இதனை ஆதாரம் காட்டுவது தவறான புரிதல் என்பதைத் தவிர வேறில்லை.
மேலும் அவசியமற்ற கேள்வியாக இருந்தும் கூட நபியவர்கள் பதிலளித்து
விட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவையின்றி)
அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: புகாரி (5975)
கேள்விகள் கேட்பது ஹராம் என்று கூறக் கூடியவர்கள் அதற்குச் சான்றாக
மேற்கண்ட ஹதீஸையும் எடுத்துரைக்கின்றனர்.
மேற்கண்ட செய்தியும் சத்தியத்தை அறிவதற்காக, அசத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதற்காக கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு
எதிரானதல்ல. இதில் நபியவர்கள் கஸ்ரத்துஸ் ஸுஆல் என்ற வாசகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இதன் பொருள் அதிகமாகக் கேட்பது என்பதாகும். இவ்வாசகத்திற்கு இரண்டு பொருள்கள் உள்ளன.
ஒன்று அதிகம் கேள்வி கேட்பது. மற்றொன்று அதிகம் யாசகம் கேட்பது. இதில் இரண்டாவது பொருள்
மிகவும் பொருத்தமானது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஏனெனில் யாசகம்
கேட்பதை இழிவானதாகக் கருதி ஏராளமான நபிமொழிகள் வந்துள்ளன.
ஆனால் அதிகமாகக் கேள்வி கேட்பது என்ற பொருளைக் கொடுத்தால் மார்க்கத்திற்குத்
தொடர்பில்லாத தனி நபர் தொடர்பாகவோ அல்லது வீணிற்காக, விளையாட்டிற்காக, கேலிக்காக அதிகம் கேள்விகள் கேட்பது தான் வெறுக்கத் தக்கது என்கின்ற
கருத்தைத் தான் அது குறிக்கும். ஏனெனில் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் அதிகமதிகம் கேள்விகளைக்
கேட்டுள்ளனர். அதற்கு நாம் திருமறைக் குர்ஆனிலிருந்தே ஏராளமான சான்றுகளைக் காட்டியுள்ளோம்.
கேள்வி கேட்பதை விட விவாதம் செய்தல் என்பது மிகப் பெரும் விசயமாகும்.
ஏனெனில் கேள்வி கேட்டல் என்பது கேட்பதோடு நின்று போய்விடும். பதிலளிப்பவர் அதற்குத்
தவறாகச் சொன்னாலும் சரியாகச் சொன்னாலும் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. ஆனால் விவாதம்
செய்யும் போது அதிகமதிகம் கேள்விகள் தான் கேட்கப்படும். சஹாபாக்கள் மார்க்கச் சட்டங்கள்
தொடர்பாக விவாதம் செய்ததைக் கூட திருமறைக் குர்ஆன் கண்டிக்கவில்லை. மாறாக பாராட்டியே
கூறுகிறது.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின்
சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ்
செவியுறுபவன்; பார்ப்பவன்.
அல்குர்ஆன் 58:1
கேள்வி கேட்பதே தவறு என்று சொன்னால் விவாதம் செய்வது அதை விட
பெரிய தவறாகும். ஆனால் ஸஹாபாக்கள் நபியவர்களிடம் விவாதமே செய்துள்ளனர். எனவே அதிகம்
கேட்பது என்பதற்கு அதிகமாகக் கேள்வி கேட்டல் என்ற பொருளைக் கொடுத்தால் அதில் மார்க்கம்
தொடர்பாகக் கேள்வி கேட்பது ஒருபோதும் அடங்காது என்பது மிகத் தெளிவானதாகும். அப்படி
யாராவது வாதிட்டால் அவர் ஏராளமான வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை மறுத்த குற்றத்திற்குள்ளாவார்.
பின்வரும் ஹதீசும் சிந்திக்கத் தக்கதாகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள்.
அப்போது,
"மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கி
விட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்'' என்றார்கள். அப்போது ஒரு மனிதர்,
"ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்)
அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"நான் ஆம் என்று சொல்லி விட்டால் அது (ஒவ்வோர்
ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகி விடும்'' என்று கூறிவிட்டு, "நான் எதைச் (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு
விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு
முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத் தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும்
அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும் தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான்
கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச்
செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்)
விட்டுவிடுங்கள்!'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 2599
மேற்கண்ட ஹதீஸ் மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது கூடத் தவறு
என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால் இந்தச் சம்பவத்தை சற்று ஆழ்ந்து
சிந்தித்தால் இதன் தெளிவான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.
"மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கி விட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்'' என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
அப்போது தான் ஒரு மனிதர் "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய
வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கிறார்.
இவர் இவ்வாறு கேட்கும் போது,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்.
ஒரு கேள்வி கேட்கும் போது நபியவர்கள் பதிலளிக்காமல் இருந்தால்
அந்தக் கேள்வியை அப்படியே விட்டு விடவேண்டும். கேள்வி கேட்பதே கூடாது என்பதால் நபியவர்கள்
கோபப்படவில்லை. மாறாக அவர் அக்கேள்வியைக் கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள்.
இரண்டாவது தடவை கேட்கும் போதும் மவுனமாக இருக்கின்றார்கள். இதனை அவர் குறிப்பால் உணர்ந்து
மூன்றாவது தடவை கேட்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் துருவித் துருவி கேட்கின்றார்.
இதனால் தான் நபியவர்கள் கோபப்படுகிறார்கள்.
இதன் மூலம் நாம் விளங்க வேண்டிய கருத்து இது தான். நபியவர்களிடம்
எந்தக் கேள்வி கேட்கும் போது அவர்கள் மவுனமாக இருக்கிறார்களோ அந்தக் கேள்வியை மீண்டும்
ஒரு முறை கேட்பது கூடாது. இதற்கான காரணத்தை பின்வரும் ஹதீஸ்களைப் படித்தால் தெளிவாக
விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் எதை(ச் செய்யுங்கள்
என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ
அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்''
நூல்: முஸ்லிம் 4703
நபியவர்கள் நம்முடைய முடிவிற்கு விட்டு விட்டார்கள் என்பதை அவர்களிடம்
கேள்வி கேட்கும் போது அவர்கள் அதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருப்பதன் மூலம் தான்
நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மாறாகக் கேள்வியே கேட்காமல் ஸஹாபாக்களாக முடிவு செய்து
கொள்தல் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.
கேள்வி கேட்கும் போது நபியவர்கள் மவுனமாக இருக்கின்றார்கள்.
அதற்குப் பிறகும் ஒருவர் கேள்வி கேட்டால் அது மாபெரும் குற்றமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிம்களுக்குத் தடை
விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்) கேள்வி
கேட்டு,
அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டு
விடுமானால், அவர் தான் முஸ்லிம்களிலேயே
முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ்(ரலி)
நூல்: முஸ்லிம் 4704
எனவே மார்க்கம் தொடர்பாகக் கேள்வி கேட்பது தவறு என்பதை வலியுறுத்துவதாக
மேற்கண்ட ஹதீஸ் அமையவில்லை. மாறாக மார்க்கம் தொடர்பாக நபியவர்களிடம் ஒன்றைக் கேட்கும்
போது அவர்கள் மவுனமாக இருந்தால் அதை மீண்டும் மீண்டும் கேட்பது கூடாது என்பது தான்
இதன் விளக்கமாகும்.
மேலும் நபியவர்களின் காலத்திற்கு மட்டும் தான் இது பொருத்தமாகும்.
ஏனெனில் நபியவர்கள் ஆம் என்று கூறினால் தான் மார்க்கத்தில் ஒன்று கடமையாகும். அவர்களுக்குப்
பின் வேறு யாருக்கும் இந்த அதிகாரம் கிடையாது. எனவே நபியவர்களைத் தவிர மற்றவர்களிடம்
மார்க்கம் தொடர்பாக விளங்கிக் கொள்வதற்காக எத்தனை தடவை திருப்பித் திருப்பிக் கேட்டாலும்
அது தவறானதாகாது.
எனவே இந்த ஹதீஸின் சரியான கருத்தை விளங்காமல் கேள்வி கேட்பது
தவறு என்பதற்கு ஆதாரமாக இதனை எடுத்துரைப்பது அவர்கள் சரியாக விளங்கவில்லை என்பதையே
படம் பிடித்துக் காட்டுகிறது.
மார்க்கம் தொடர்பான செய்திகளைப் பற்றி விவரம் கேட்கும் போது, பதிலளிப்பவர் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின்
அடிப்படையில் பதிலளிப்பவரா? என்பதைக் கவனத்தில்
கொள்ளுங்கள்.
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!
அல்குர்ஆன் 8:1
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே
அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
அல்குர்ஆன்8:20
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்
கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
அல்குர்ஆன் 47:33
இஸ்லாத்தின் அடிப்படைகள் திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள்
காட்டிய வழிமுறைகளும் தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும்
இந்த இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு மனிதர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்
வழங்கினால் அவர்கள் முஃமின்களாக இருக்க மாட்டார்கள் என்பதையும் பின்வரும் வசனங்கள்
தெளிவு படுத்துகின்றன.
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப்
பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (நேரான)
வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன்
உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன் 6:145
இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி மட்டுமே நேரான வழி!
அந்த ஒரு வழியை மட்டுமே நாம் பின்பற்றி நடக்க வேண்டும். மற்ற வழிகளைத் தேர்வு செய்யக்கூடாது.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே
வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 24:51
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை
கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும்
தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
அல்குர்ஆன் 33:36
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட
சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
அல்குர்ஆன் 4:65
இதைப் போன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்
எனவும்,
அதை முஃமின்கள் ஏற்று நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.
இவ்வாறு செய்பவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
"அல்லாஹ் கல்வியை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட
மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான்.
கடைசியாக ஒரு அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும், மக்கள் அறிவீனர்களைத் தமது தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம்
கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்)
தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)
நூல்கள்: புகாரீ 100, முஸ்லிம் 2673
இந்த நபிமொழியில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்வுகள் இன்று நடைமுறையில்
இருப்பதை நாம் காண முடிகிறது. இன்று இஸ்லாத்தின் பெயரால் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே
மாற்றமான பல ஃபத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புகளை) கூறி வருகின்றனர்.
குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படையான ஓரிறைக் கொள்கையைக் குழி
தோண்டிப் புதைக்கும் தர்ஹா வழிபாட்டைக் கூடும் என்று கூறும் ஆலிம்களும் இன்று உள்ளனர்.
அவர்களை இன்றும் பெரிய அறிஞர்கள் என்று மக்கள் நம்புகின்றனர். இவர்களைப் போன்றவர்களிடம்
எச்சரிக்கையாக இருப்பதற்குத் தான் மேற்கூறப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
குறிப்பிடுகின்றார்கள்.
எனவே மார்க்கத் தீர்ப்பு கேட்கும் போது, அதற்குப் பதில் சொல்பவர் எதன் அடிப்படையில் பதிலளிக்கிறார் என்பதைக்
கவனித்து,
கேள்வியைக் கேளுங்கள்.
நமது இதழிலும் மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு திருக்குர்ஆன்
மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாக வைத்துப் பதில் அளிப்போம். இதில் தவறுகள்
தென்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்கலாம். சரியான விமர்சனமாக இருந்தால் தவறைத் திருத்திக்
கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் மூன்று விஷயங்களை எனக்கும் என் சகோதரர்களுக்கும் விரும்புகிறேன்:
1.
இந்த நபிவழியை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; அதைப் பற்றி (அறிந்திட) நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.
2. இந்தக் குர்ஆனை அவர்கள்
விளங்கி அதைப் பற்றி (இன்னும் அறிந்திட) மக்கüடம் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும்.
3. மக்களுக்கு நன்மையே நாட வேண்டும்.
நூல்: புகாரி 7275
EGATHUVAM NOV 2008