Apr 10, 2017

பருவ மழையும் பாவ மன்னிப்பும்

பருவ மழையும் பாவ மன்னிப்பும்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா காஃபிர்களிடம் கொண்டு வந்தார்கள்.

அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை.

அல்குர்ஆன் 22:62

இந்த வசனத்தின் மூலம் மக்கா காஃபிர்கள் வணங்கிய கடவுள்கள் பொய்யானவை என்று பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் அம்மக்கள் நபி (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்கவில்லை. அது மட்டுமின்றி நபியவர்களையும், இந்தக் கொள்கையை ஏற்ற மக்களையும் சித்ரவதை செய்தனர். பெரும் கொடுமைக்கு உள்ளாக்கினர்.

இந்தச் சமயத்தில் அந்த மக்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். "யூசுப் நபியின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போன்று பஞ்சத்தை ஏற்படுத்து'' என்று அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். இந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு பஞ்சம் ஏற்படுகின்றது. தாங்க முடியாத பஞ்சத்தின் காரணமாக இறந்தவற்றைக் கூட மக்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். மழை வராதா? என்று வானத்தை நோக்கி ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். வானம் மழை பொழியவில்லை; வறட்சி நீங்கவில்லை; வறுமை விலகவில்லை.

வேறு வழியில்லாமல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மழைக்காகப் பிரார்த்திக்கும்படி கோரிக்கை வைக்கின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களுக்குச் சரியான நெஞ்சழுத்தம் தான். அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது என்று நான் உங்களிடம் பிரச்சாரம் செய்கின்றேன். இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். அதற்காகத் தான் இந்தத் தண்டனை உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. நீங்களோ அதைக் கண்டு கொள்ளாது மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யச் சொல்கின்றீர்களே! இணை வைப்பை விட்டும் விலக மாட்டீர்கள். ஆனால் மழை மட்டும் வேண்டுமா?' என்று கேட்டு விட்டு, மழைக்காகப் பிரார்த்தனை செய்கின்றார்கள். மழையும் பொழிகின்றது.

இந்தச் செய்தி புகாரியில் 4774வது ஹதீஸாகவும், முஸ்லிமில் 5007வது ஹதீஸாகவும் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில் மக்கத்துக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிரார்த்தனை செய்யச் சொன்னதன் மூலம், தங்கள் தெய்வங்கள் பொய்யானவை; அல்லாஹ் மட்டும் தான் உண்மையானவன் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்கள்.

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

அல்குர்ஆன் 29:63

மழை பொய்த்துப் போகும் கட்டங்களில் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடி, அவனிடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் மழைத் தொழுகை என்ற வணக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ஏனெனில் அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் மழையை அனுப்பாவிட்டால் இந்தப் பூமியை உயிர்ப்பிக்க வேறு எந்தச் சக்தியாலும், எத்தகைய மகான், அவ்லியா, பெரியார்கள் வந்தாலும் முடியாது.

எனவே தான் அவனிடம் மன்றாடி மழை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும் என்ற வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

பொதுவாக தமிழகத்தில் வறட்சி நிலவுகின்ற போதெல்லாம் தவ்ஹீது ஜமாஅத் மழைத் தொழுகை நடத்தத் தவறுவதில்லை. இந்த நபிவழியை தமிழகத்தில் வேறெந்த ஜமாஅத்தும் நடைமுறைப்படுத்துவதில்லை. கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களில், பல்வேறு கட்டங்களில் மழைத் தொழுகை நடத்தி வந்திருக்கின்றோம்.

தமிழகத்தின் வளமே தென்மேற்குப் பருவ மழை தான். வடகிழக்குப் பருவ மழை என்பது தமிழகத்திற்கு உபரியாகக் கிடைக்கும் வளமாகும். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனது.

பருவ மழை பொய்த்துப் போனால் என்ன விளைவு ஏற்படும்?

உணவுப் பஞ்சம்

குடிநீர் தட்டுப்பாடு

நிலத்தடி நீர் வற்றிப் போதல்

மின்சார உற்பத்தியில் பாதிப்பு

விவசாயம் சார்ந்த தொழில் துறைகள் நசிந்து போதல்

கால்நடைகள் அழிதல்

இவற்றால் ஏற்படும் விலைவாசி உயர்வுகள்

ஏற்கனவே நீராவி எஞ்சின்கள், வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியிடுகின்ற கார்பன் டை ஆக்ஸைட் வாயுவினால் பூமியின் வெப்பம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மழை பொழியா விட்டால் பூமியின் வெப்பம் மேலும் அதிகமாகி இந்தப் புவியே அக்கினி மயமாக மாறும் அபாயம்!

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் மேற்கண்ட விளைவுகள் அனைத்தையும் தமிழகம் கண்டது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் சில ஊர்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழைத் தொழுகை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் பருவ மழை தொடங்கி, தற்போது தொடர்ந்து பெய்து வரும் நற்செய்தியை அடைந்திருக்கின்றோம்.

மழைத் தொழுகை என்பது உடனடி நிவாரணம் தான்.  தொடர்ந்து மழை பொழியாமல் நின்று போவதற்குக் காரணம், இஸ்லாமிய சமுதாயத்தில் நிலைத்து நிற்கும் இணை வைப்பு முதற்கொண்டு நாம் சாதாரண பாவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற, நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் டி.வி.க்களின் படக் காட்சிகள் வரையுள்ள பாவங்களில் இருந்து மக்கள் வெளியேறி, திருந்தி அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

அல்லாஹ் மழையைத் தராமல் இருப்பதற்கு முழுக் காரணம் நாம் செய்கின்ற பாவங்கள் தான்.  இதைக் கீழ்க்காணும் வசனங்கள் தெளிவாக்குகின்றன.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 7:96

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்.  உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.  செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 71:10-12

இதனால் தான், முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது.  நிச்சயமாக ஒரு நாளில் நூறு தடவை அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடுகின்றேன்'' என்று கூறுகின்றார்கள்.

பாவங்கள் அதிகம் செய்கின்ற நாம் இந்தப் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.


இனியேனும் தினந்தோறும் பாவ மன்னிப்பு தேடுவதுடன், பாவங்களை விட்டும் விலகி விடுவோமாக!

EGATHUVAM NOV 2008