அறிவியல் அற்புதங்கள் - திருக்குர்ஆன்
கூறும் தேனும் தேனீயும்
திருக்குர்ஆன்
கூறும் தேனும் தேனீயும்
எம். ஷம்சுல்லுஹா
தேனீ...
இது திருக்குர்ஆனில்
ஓர் அத்தியாயம்! திருக்குர்ஆனின் 16வது அத்தியாயமான இதன் மொத்த வசனங்களும் தேனீயைப் பற்றிப் பேசவில்லை. 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டுமே தேனையும், தேனீயையும் பற்றிப் பேசுகின்றன.
திருக்குர்ஆனின்
நடையைத் தெரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். 286 வசனங்கள் கொண்டு, குர்ஆனிலேயே
மிகப் பெரும் அத்தியாயமாகத் திகழும் ஓர் அத்தியாயத்திற்கு அல்பகரா - மாடு என்று பெயர்.
அந்த அத்தியாயத்தில் 67 முதல் 70 வரையிலான வசனங்களில் மாடு தொடர்பான நிகழ்ச்சி
இடம் பெறுவதால் இந்தப் பெயர். அது போன்று தான் தேனீ என்ற இந்த அத்தியாயத்தில் 68, 69 ஆகிய இரு வசனங்கள் மட்டும் தேனீயைப் பற்றி
- தேனைப் பற்றிப் பேசுகின்றன.
இந்த இரண்டு
வசனங்களும் விலங்கியல் - ழர்ர்ப்ர்ஞ்ஹ் என்ற ஒரு துறையே இல்லாத காலத்தில், எதையும் நுணுகிப் பார்க்கும் நுண்ணோக்கிகள்
இல்லாத கால கட்டத்தில், இன்றைய அறிவியல்
உலகம் அதிர்கின்ற வகையில், தேனீக்கள் பற்றி
அன்று வெளிவராத ரகசியங்களை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கின்றன.
தேனீக்கள் கட்டுகின்ற
கூடுகள், அவை சாப்பிடுகின்ற
கனிகள், அவை சென்று வருகின்ற
பாதைகள் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவரும் பானம், அதன் பல வண்ணங்கள், தேனில் ஏற்படும்
நிவாரணம் என்று இவ்விரு வசனங்களில் தேனீ மற்றும் தேன் பற்றிய அதிசயங்களையும், அற்புதங்களையும் கூறிய பின்னர், "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று
உள்ளது' என்று முத்தாய்ப்பாகக்
கூறப்படுகிறது. அந்தச் சான்று என்ன? என்பதை அறியவே நமது தேடல் தொடர்கிறது.
படைப்பின் ரகசியங்கள்
பொதுவாகவே உலகிலுள்ள
அனைத்துப் பொருட்களும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டிருக்கின்றன. இதை அல்லாஹ் தனது திருமறையில்
இவ்வாறு கூறுகின்றான்.
அவனே பூமியில்
உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்.
அல்குர்ஆன் 2:29
இதன் படி ஊர்வன, பறப்பன, மிதப்பன மற்றும் மரம், செடி கொடிகள்
ஆகிய அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
கால்நடைகள், கடல் மீன்கள் நமக்கு உணவாகப் பயன்படுவதன்
மூலம் அவற்றின் பயன்பாடு நமக்கு நேரடியாகத் தெரிகின்றது. அதனால் அவை மட்டும் தான் நமக்குப்
பயனுள்ளவை என்று விளங்கி வைத்திருக்கிறோம். ஆனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்
வாழ் இனங்களிலும், உயிரற்ற பொருட்களிலும்
நமக்குப் பயன்பாடுகள் இருக்கின்றன. மறைமுகப் பயன் உள்ளவை நமக்குத் தெரிவதில்லை. அவற்றை
இன்றைய அறிவியல் உலகம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. இதன் மூலம் உலகில் உள்ள அனைத்துப்
பொருட்களின் படைப்பின் ரகசியங்களை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.
தாவரம்! இது
தருகின்ற ஆக்ஸிஜன் மூலம் தான் மனிதன் உயிர் வாழ முடிகின்றது என்பதை இன்றைய அறிவியல்
விளக்குகிறது. ஆனால் இது நமக்கு நேரடியாகத் தெரிவதில்லை. மனித இனத்திற்கு உயிராகவும், கால்நடைகளுக்கு உணவாகவும் உள்ள தவாரம் பெருகுவதற்கு
மிக அடிப்படையாக அமைந்திருப்பது மகரந்தச் சேர்க்கை! இந்த மகரந்தச் சேர்க்கைக்கு மிகப்
பெரிய அளவில் உதவுவது இந்தத் தேனீக்கள்!
தேனீக்களின்
தனித்தன்மை
மகரந்தச் சேர்க்கைக்காக
ஆயிரமாயிரம் முகவர்கள் உள்ளனர். மனிதர்கள் அனைவரின் எண்ணத்தைக் கவர்கின்ற வண்ணத்துப்
பூச்சிகள், வட்டமடிக்கும்
ரீங்கார வண்டுகள், விளக்கு வெளிச்சத்தில்
வந்து சாகின்ற விட்டில் பூச்சிகள், ஈக்கள், பறவைகள், பாலூட்டி இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள், எலிகள் போன்றவை மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்
முகவர்கள். காற்றும் இந்த மகரந்தச் சேர்க்ûக்குரிய ஒரு முகவர் தான்.
அறிவியல் கருவுற்றிராத
காலத்தில், ஆய்வுக்குரிய
கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், எல்லா பொருட்களிலும் ஜோடியைப் படைத்திருப்பதாக எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.
பூமியை விரித்தோம்.
நாம் அழகுற விரிப்பவர்கள். நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.
அல்குர்ஆன் 51:48, 49
அதிலும் குறிப்பாக
தாவர இனத்திலும் ஜோடி இருப்பதாக மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்.
பூமி முளைக்கச்
செய்வதில் இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும்
உருவாக்கியவன் தூயவன்.
அல்குர்ஆன் 36:36
தாவர இனத்தின்
இந்த ஜோடிகளை இணைக்கும் பணியை மேலே நாம் பட்டியலிட்ட முகவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்குப் பெயர் தான் மகரந்தச் சேர்க்கை!
இந்த மகரந்தச்
சேர்க்கை இல்லையென்றால் அல்லாஹ் கூறும் ஜோடி என்ற அற்புதம் இல்லை என்றாகி விடும். இந்த
ஜோடி என்ற அற்புதம் நிலைக்கவும், நீடிக்கவும்
காரணமாக அமைவது மகரந்தச் சேர்க்கை தான்.
ஆகாரமே ஆதாயம்
மகரந்தச் சேர்க்கை
மூலம் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. 1. தாவர இனப் பெருக்கம், 2. மகரந்தச் சேர்க்கைக்கு
உதவும் முகவர்களுக்குத் தேவையான ஆகாரம்.
தாவரத்தால் இந்த
முகவர்களுக்கு வாழ்க்கை!
முகவர்களால்
தாவரத்திற்கு வாழ்க்கை!
இந்த முகவர்களின்
பட்டியலில் தேனீ மட்டும் மற்ற முகவர்களை விட்டும் வேறுபடுகிறது.
தாவர இனப்பெருக்கம், தேனீக்களின் உணவு ஆகிய மேலே கூறிய இரண்டு
நன்மைகள் போக தேனீக்கள் சேகரிக்கும் தேன் மனித சமுதாயத்திற்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
இங்கு தான் தேனீ
மற்ற முகவர்களை விட வித்தியாசப்படுகிறது. இந்தப் பலன்களையும் இன்னும் ஏராளமான படிப்பினைகளையும், படைப்பின் ரகசியங்களையும் கொண்டே தேனீ பற்றிய
திருக்குர்ஆனின் பார்வையும் அமைந்திருக்கின்றது.
இந்த வசனங்களின்
இறுதியில் எல்லாம் வல்ல அல்லாஹ், "சிந்திக்கும்
சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது' என்று குறிப்பிடுவதால் அந்தச் சான்றைப் பார்ப்பது நமது கடமையாகும்.
சிந்திக்கும்
சமுதாயத்திற்குச் சான்று என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கோடிட்டுக் காட்டும் செய்திகள்
எல்லாம் சாதாரண செய்திகளாக இல்லை! அவை மகத்தான விஷயங்களை, படைப்பின் மாபெரும் அற்புதங்களைத் தெரிவிக்கின்றன.
அவனே பூமியை
விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில்
அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும்
சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 13:3
விரிந்து கிடக்கும்
பூமி, உயர்ந்து நிற்கும்
மலைகள், ஓடுகின்ற ஆறுகள்
போன்றவை பற்றி இந்த வசனம் தெரிவிக்கின்றது.
அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும்
அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு
இதில் சான்று இருக்கிறது.
அல்குர்ஆன் 16:11
தாவரப் படைப்பின்
அற்புதத்தை இந்த வசனம் தெரிவிக்கிறது.
நீங்கள் அமைதி
பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது
சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:21
மனித இனத்தில்
உள்ள ஜோடிகளைப் பற்றி இந்த வசனம் கூறுகின்றது.
உயிர்களை அவை
மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை
அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ
அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.
சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 39:42
இவ்வசனம் மனித
உயிரின் அற்புதத்தைப் பற்றி விளக்குகிறது.
வானங்களில் உள்ளவை, பூமியில் உள்ளவை அனைத்தையும் அவன் உங்களுக்குப்
பயன்படச் செய்தான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன
அல்குர்ஆன் 45:13
வானம், பூமி ஆகியவை மனிதனுக்கு வசப்பட்டிருப்பதைப்
பற்றி இந்த வசனம் கூறுகின்றது.
இவ்வுலக வாழ்க்கைக்கு
உதாரணம், வானிலிருந்து
நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி
அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி
இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது
போல் அறுக்கப் பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத்
தெளிவு படுத்துகிறோம்.
அல்குர்ஆன் 10:24
இந்த வசனம் விளைச்சலைப்
பற்றி விவரிக்கின்றது.
இந்த அனைத்து
வசனங்களிலும் இறுதியில் "சிந்திக்கும் சமுதாயத்திற்குச் சான்று இருக்கிறது' என்று கூறுகின்றான். இவ்வாறு அல்லாஹ் பட்டியல்
போடுகின்ற அற்புதப் படைப்புகளுக்கு மத்தியில் தான் தேனீயைப் பற்றியும் கூறுகின்றான்.
அதனால் தேனீயைப் பற்றிய சான்று சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சிந்தனையும்
ஒரு வணக்கமே!
பொதுவாக, தொழுவது, நோன்பு நோற்பது, ஜகாத் வழங்குவது, ஹஜ் செய்வது போன்றவை தான் வணக்கம் என்று நாம்
விளங்கி வைத்திருக்கிறோம். அல்லாஹ்வுடைய படைப்பின் ஆற்றலைப் பற்றியும், அற்புதத்தைப் பற்றியும் நாம் செய்கின்ற சிந்தனையை
யாரும் வணக்கமாகக் கருதுவது கிடையாது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப்
பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும்
அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.
"எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து
எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள்
கூறுவார்கள்)
அல்குர்ஆன் 3:190, 191
இந்த வசனங்களில்
அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்திப்பதையும் வணக்கத்தின் பட்டியலில் இறைவன் சேர்த்திருக்கிறான்.
இதன்படி அவனது படைப்பைப் பற்றிய சிந்தனை, ஆய்வு மிகச் சிறந்த வணக்கமாக அமைகின்றது.
அவனுடைய படைப்பாற்றலைப்
பற்றி எண்ணி வியப்பது, சுப்ஹானல்லாஹ்
எனறு கூறி அவனது படைப்புத் திறமையைப் போற்றுவது நமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கமாக
ஆகி விடுகின்றது. அந்த அடிப்படையில் அல்லாஹ் தேனீயில் கூறும் சான்றைக் கொஞ்சம் பார்ப்போம்.
இன்று மனித சமுதாயத்தின்
மொத்த உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி, இந்தப் பூச்சியினங்கள் தாவரத்தில் செய்கின்ற மகரந்தச் சேர்க்கையினால் தான் கிடைக்கின்றது.
இந்த மகரந்தச் சேர்க்கையில், மனித சமுதாயத்தின்
உணவாக விளங்கும் தாவரங்களின் இனப் பெருக்கத்தில் அதிகமான அளவில் ஈடுபடுவது தேனீ தான்
என்று இன்றைய அறிவியல் கூறும் போது அல்லாஹ்வின் இந்தச் சிறிய, அரிய அற்புதப் படைப்பை எண்ணி வியக்கிறோம்.
சுப்ஹானல்லாஹ் என்று சொல்லி அதிசயிக்கிறோம்.
மகரந்தச் சேர்க்கையில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் ஈடுபட்டு நிற்கும் போது, இந்தப் பணியில் ஈடுபடுகின்ற தேனீயைப் பற்றி
அல்லாஹ் ஏன் சிறப்பித்துக் கூற வேண்டும்? என்ற அறிவியல் சான்றைத் தேடிச் செல்கிறோம்.
வளரும் இன்ஷா
அல்லாஹ்
EGATHUVAM MAR 2007