Apr 1, 2017

அறிவியல் அற்புதம் தொடர் 1 - ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீ படை

அறிவியல் அற்புதம் தொடர் 1 - ஜெட் விமானத்தைத் தாக்கிய தேனீ படை

பனி மூட்டம், மேக மூட்டம் போன்ற பருவ நிலை மாற்றம் அல்லது இயந்திரக் கோளாறு போன்ற காரணங்களால் ஒரு விமானம் புறப்படுவதற்குக் கால தாமதம் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். தேனீ படையின் தாக்குதல் காரணமாக சில நிமிடத் துளிகள் அல்ல, முக்கால் மணி நேரம் விமானம் கால தாமதம் என்று நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசயம், அற்புதம் சென்னை விமான நிலையத்தில் மார்ச் 26ம் தேதி நடந்தேறியது.

தேனீப் படைத் தாக்குதல்

இது தொடர்பாக விமான நிலைய இயக்குனர், தினேஷ்குமார் இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இதோ:

விமான நிறுத்தப் பாதை 31ல் ஜெட் விமானம் நின்று கொண்டிருக்கையில் அவரும், விமானத்தின் பைலட் கேப்டன் சந்திரசேகரனும் விமானத்தின் மூக்குப் பகுதியில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். ராட்சத உடலைக் கொண்ட ஜெட் விமான மூக்கின் முகப் பரிமாணமே தெரியாத வண்ணம் தேனீ படையினர் மொய்த்துக் கொண்டிருந்தனர். தேனீக்களைக் கொல்லக் கூடாது என்பதில் குறியாக இருந்த அந்த இரு அதிகாரிகளும், தேனீக்கள் பயணிகளைக் கொட்டி விடக் கூடாது என்பதிலும் கவனமாகச் செயல்பட்டனர்.

இங்கிருந்து கிளம்பி இந்தப் படை அடுத்த நிறுத்தத் தளத்தில் நிற்கும் விமானத்தில் போய் மொய்த்து விடுவதையும் அவர்கள் இருவரும் விரும்பவில்லை.

எனவே அவர்கள் தீயணைப்புப் படை வாகனங்களை வரவழைத்து உள்ளனர். தீயணைப்புப் படையினர் தண்ணீர் குழாய்கள் மூலம் வேக அழுத்தத்துடன் தேனீக்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சி அடித்துள்ளனர். தீயணைப்புப் படையினரின் நீரழுத்தத் தாக்குதலுக்கெல்லாம் தேனீப் படையினர் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் பயணிகள் அனைவரும் விமானத்தின் பின் வாசல்கள் வழியாக விமானத்தில் ஏறும் படி பணிக்கப்பட்டனர். தீயணைப்புப் படையினருக்கு டாட்டா காட்டிய தேனீப் படையினர் கடுகளவு கூட நகரவில்லை. இறுதியாக விமானத்தை இயக்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றானதும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து புறப்படுவதற்கான உத்தரவை கேப்டன் சந்திரசேகரன் பெற்றார். விமானம் ஓட்டுவதில் பலவிதமான சவால்களைச் சந்திப்பதில் சாதனை படைத்த சந்திரசேகர், விமானத்தைத் தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கிக் கிளப்பும் போது மேற்கொள்ளும் சாதாரண வேகத்திற்குப் பதிலாக சம வேகத்தில், சரித்திர வேகத்தில் விமானத்தைக் கிளப்பியுள்ளார்.

அந்தச் சரித்திர வேகத்தில் கூட தேனீப் படையினரில் சிலர் தான் நகர்ந்துள்ளனர். மற்றவர்கள் விமானத் துடன் ஆகாய மண்டலத்திற்குச் சென்று விட்டனர்.

இது இந்து நாளேடு மார்ச் 27ந் தேதி வெளியிட்ட வித்தியாசமான ஒரு செய்தியாகும்.

அல்குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதம்

இங்கே இந்தச் செய்தியை ஆள்வதற்கான பின்னணி என்ன? அறிவியல் கண்டுபிடிப்பை, அணுகுண்டு வெடிப்பைக் கண்டிராத, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் செய்தியை அல்குர்ஆன் சொல்லி இருக்கின்றது என்றால் அது மனித மூளையில் உதித்த செய்தி அல்ல; அனைத்தையும் படைத்த ஓர் அற்புத சக்தியிடமிருந்து பிறந்த உண்மை ஒளிக்கதிர் என்பதைப் போட்டு உடைப்பதற்காகவே இந்தச் செய்தி இங்கே ஆளப்படுகின்றது. இப்போது திருக்குர்ஆனின் தித்திக்கும் தேனீ அத்தியாயத்திற்குள் நுழைவோம். அந்தத் தேனடையில் ஒழுகி வழியும் தேனான கருத்தைப் பருகி வருவோம்.

தேனடையின் தொழில் நுட்பமும் திட்பமும்

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறு களிலிருந்து மாறுபட்ட நிறங்களை உடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. 
(அல்குர்ஆன் 16:68,69)

இந்த வசனம் தேனீயின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுகின்றது.

பொதுவாக பூச்சிகள், புழுக்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை ரகசியங்கள், இரைக்கான ஆதாரங்கள், உறைவிடங்கள் அனைத்திலும் மனிதனை அதிர வைக்கும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் காணக் கிடைக்கின்றன. இவற்றில் தேனீ கட்டும் கூட்டில் என்று சொல்வதை விட இன்றைய அறிவியல் உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் தேனீக்கள் கட்டுகின்ற வீட்டில் பல அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன.

தேன் கூட்டின் பலம்

ஒரு கட்டடப் பொறியாளர் இன்று கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அவருக்குக் கட்டடம் எப்படிக் கட்ட வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. அந்த இடத்தில் பூகம்பம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து அதற்குத் தக்க கட்டடத்தை வடிவமைக்கும் கல்வியையும் கற்றிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது. அதனால் இப்போது சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் இந்தப் படிப்பையும் சேர்த்துப் படித்து வருகின்றனர். இது பகுத்தறிவுப் பிராணி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் மனிதன் ஒரு வீடு கட்டுவதற்காக எடுக்கும் அதிகப் பட்சமான பாதுகாப்பு நடவடிக்கை!

இதோ பாருங்கள்! ஈ என்ற ஓர் அற்பப் படைப்பு படைக்கின்ற அற்புதப் படைப்பையும் அது கொண்டிருக்கின்ற அறிவியல் படிப்பையும் பாருங்கள். அது எந்த மரத்தில் கூடு கட்டுவதாக இருந்தாலும் அந்த வழியில் புயல் காற்று வீசுமா என்று பார்த்துக் கொள்கின்றது. புயல் காற்று வரும் திசையில் வீடு கட்டுவது கிடையாது.

என்ன ஒரு அறிவாற்றல்! இப்போது தான் அல்லாஹ் தேனீக்குக் கூறிய "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்ற அந்த வார்த்தை எவ்வளவு அற்புதமாக அர்த்தப்படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

பேயாட்டத்தில் பிய்யாத கூடு

தேனீக்கள் அவ்வாறு ஆய்வு செய்து கூடு கட்டி விட்டால் எந்தப் புயல் வீசினாலும் அந்தக் கூட்டைப் பிய்த்து விட முடியாது. தான் கட்டியிருக்கும் அந்தக் கம்பம், கிளை ஓயாத பேயாட்டம் ஆடினாலும் அந்தக் கூடு பிய்யாது, பிரியாது. இது தேன் கூடு பற்றி இன்றைய அறிவியல் கண்கூடாக நிரூபிக்கும் உண்மை நிரூபணமாகும். மழையில் கரையாத, புயல் அலையில் கலையாத இந்தத் தேன் கூட்டுக்கே இந்தப் பலம் இருக்கின்றது என்றால் அந்தத் தேனீக்களுக்கு எத்தனை பலம் இருக்கும் என்பதை உணர முடிகின்றது அல்லவா?

அதனால் தான் மனித மூக்கில் உட்கார்ந்து கொண்டு சாதாரண ஈ மனிதனிடம் விளையாட்டுக் காட்டுவது போல் ஜெட் விமானத்தின் மூக்கில் உட்கார்ந்து கொண்டு இந்தத் தேனீக்கள் தீயணைப்புத் துறையிடம் விளையாட்டுக் காட்டியிருக்கின்றது. இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம், தேன் அடையின், தேனீ படையின் பலத்தைத் தான்.

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் அந்தக் கட்டடக் கலையின் அற்புதம் இந்தத் தேனீக்கள் மூலம் ஜெட் விமானத்தின் மூக்கில் அப்படியே அர்த்தப் படுவதைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து அல்குர்ஆன் கூறுகின்ற இந்த அறிவியல் அற்புதம் நூற்றுக்கு நூறு சரியாவதைப் பார்க்கின்றோம். இந்த வேதம் மனித் சொல் அல்ல! மந்திரச் சொல்லல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அற்புதச் சொல் என்று நம்மிடம் வேர் பிடித்த இந்தக் கொள்கை மேலும் நீர் பிடித்துக் கொள்கின்றது.

தேன் கூட்டின் தொழில் நுட்பம்
இதுவரை தேன் கூட்டின் பலத்தையும் அதன் திட்பத்தையும் பார்த்தோம். இப்போது அதன் தொழில் நுட்பத்தைப் பார்ப்போம்.

மனிதன் தான் தொழில் நுட்பத்தில் சிறந்தவன். வட்டம், அரை வட்டம், கால் வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுங்கோணம் போன்ற வடிவியலின் (ஏங்ர்ம்ங்ற்ழ்ஹ்) கணக்குகள் தெரிந்தவன். அந்தக் கணக்குகளைப் பின்புலமாகக் கொண்டு வானளாவ எழுந்து நிற்கும் அன்றைய தாஜ்மஹாலிலிருந்து இன்றை உலக வர்த்தக மையம் வரையிலான கட்டடங்களைக் கட்டத் தெரிந்த தொழில் நுட்ப நிபுணன்! பொறியியல் வல்லுனன் என்று பெயரெடுத்த இவன் கட்டடக் கலையில் தேனீயிடம் பிச்சை வாங்க வேண்டும்.

சதுரம் சதுரமாக ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு சென்றால் சதுர அமைப்பில் தான் அதை முடிக்க முடியுமே தவிர அதைக் கூடு வடிவில் கொண்டு வர முடியாது.

அது போல் வட்டம் வட்டமாக ஒரு கூட்டைக் கட்டினால் அதில் ஓட்டைகள் ஏற்படும். அந்தக் கூட்டைப் பூர்த்தி செய்ய முடியாது. நான்கு வட்டங்களை சேர்ந்தாற் போல் வைத்துப் பார்த்தால் அவற்றின் இடையே ஒரு துண்டு விழுவதைப் பார்க்கலாம்.

ஆனால் தேனீக்கள் கட்டுகின்ற இந்தக் கூட்டின், தொழில் நுட்பம் மிக்க வீட்டின் வடிவமைப்பைப் பாருங்கள். ஓட்டை இல்லாமல், உடைசல்கள் இல்லாமல் கூடு வடிவில் உருவாக்கப் படுகின்றது. எப்படி? இதன் அறுங்கோண வடிவ அமைப்பு தான் இதற்குக் காரணம்!

இந்த அறுங்கோண வடிவத்திலான செங்கல்களைச் சேர்த்து இந்தக் கூட்டைக் கட்டினால் தான் ஓட்டை ஏற்படாமல் குடியிருப்பதற்குத் தக்கக் கூடாக அமையும். மலர்களில் மொண்டு, தன் வயிறுகளில் சுமந்து கொண்டு வந்து கொட்டுகின்ற தேன் சொட்டுக்களுக்கு உரிய பாதுகாப்பு வங்கியாக இருக்கும் வகையில் அறுங்கோண வடிவில் அமைக்கும் அறிவியல் அறிவு அதற்கு எப்படி வந்தது?

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்!'' என்று அல்லாஹ் கற்றுக் கொடுக்கும் வஹீயின் அடிப்படையில் தான் வந்தது.

EGATHUVAM MAY 2006