Apr 22, 2017

சுனாமியும் சோதிடமும்

சுனாமியும் சோதிடமும்

ஒரு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்த வேண்டும்; நல்ல நேரம் பார்த்துத் தாலி கட்ட வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வீடு குடிபுக வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வியாபாரம் தொடங்க வேண்டும்.
இப்படி நேரம் பார்ப்பது எல்லா சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கும் அறியாமையாகும். இதில் தூய முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றனர். காரணம் அவர்கள் முழுமையாக விதியை நம்புகின்றனர். இதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொரு வரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 57:22, 23

இதனால் தூய முஸ்லிம்கள் நாள் நட்சத்திரம், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது கிடையாது. இந்த விதிக்கு மாற்றமாகக் காலம், நேரத்தின் மீது பழியைச் சுமத்துவதையும், கால நேரத்தைத் திட்டுவதையும்
நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான். ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) என் கையிலேயே அதிகாரம் உள்ளது, நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4826

தூய முஸ்லிம்கள் நாள், நட்சத்திரம் பார்க்காததற்கு இது மற்றொரு காரணமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்கல் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், "இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?'' என்று கேட்டேன். அப்போது, "அல்ல. இது (இறைத் தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது "அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பிறகு என்னிடம், "அடிவானங்கல் இங்கும் இங்கும் பாருங்கள்'' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். "இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்கல் அடங்குவர்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். "நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, "(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்கல் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று பதிலத்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, "அவர்கல் நானும் ஒருவனா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் "இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டு விட்டார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 5705

இந்த ஹதீஸில், கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்களின் பண்புகளில் சகுனம் பார்க்காமல் இருப்பதும் இடம் பெறுகின்றது.

தூய முஸ்லிம்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காததற்கு நபி (ஸல்) அவர்களின் இந்தப் போதனையும் காரணமாகும்.

சகுனம் பார்க்கும் சமுதாயங்கள்

தூய இஸ்லாமிய சமுதாயத்தைத் தவிர்த்து ஏனைய சமுதாயங்கள் சோதிடம் பார்க்கத் தவறுவதில்லை. முஸ்லிம்களில் இஸ்லாத்தை நன்கு புரியாத மக்களும் சோதிடம் பார்க்கின்றனர்.
வாஸ்து சாஸ்திரம் இந்தியா முழுவதும் அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கின்றது.
ராசி பலனுக்கென்று பத்திரிகைகள் தனிப் பக்கத்தை ஒதுக்கி 12 ராசிகளைப் போட்டு அதற்கான பலன்களைச் சொல்கின்றன. டிவிக்களில் ராசி பலன் சொல்லும் சோதிடர்கள் காட்சியளித்து, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் சோதிடம் கூறுகின்றனர்.

சோதிடம் ஒரு சுத்தப் பொய்

இப்போது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளரை நிறுத்தலாம்? எந்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்? என்பதையெல்லாம் பல அரசியல் கட்சிகள் சோதிடர்களைக் கேட்டுத் தான் தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர். அந்த அளவுக்கு சோதிடத்தின் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல! இந்தியாவை, ஏன்? உலக அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் உலகத்தில் உள்ள அனைத்து சோதிடர்களையும் பார்த்து நாம் கேட்கிறோம்.
மார்ச் 11, 2011 அன்று ஜப்பானில் ஏற்பட்ட இந்த சுனாமியை ஏன் உங்களால் முற்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியவில்லை?

அப்படி எச்சரித்திருந்தால் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இன்று பாதிப்புக்குள்ளானது ஜப்பானிய பொருளாதாரம் மட்டுமல்ல! ஒட்டு மொத்த உலகத்தின் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது.

சோதிடர்களே! உங்களால் இதை ஏன் முற்கூட்டியே சொல்ல முடியவில்லை? அப்படிச் சொல்லியிருந்தால் உங்களுக்கும் உலக அளவில் ஒரு மரியாதை கூடியிருக்கும்; ஒரு மதிப்பு ஏறியிருக்கும். உங்களுடைய பொருளாதார வளமும் பெருகியிருக்கும். இதிலிருந்து, நீங்கள் சொல்வது பச்சைப் பொய், பகிரங்கப் பொய் என்பது தெரியவில்லையா?

சோதிட பக்தர்களே! குறிகாரர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்திருப்பவர்களே! சோதிடம் என்பது சுத்தப் பொய் என்பது இப்போதாவது உங்கள் புத்திக்குப் புரிகின்றதா? சோதிடம் ஒரு மோசடி என்று விளங்கவில்லையா?
சுனாமியின் சவால்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்னைப் பற்றி ஏன் அறிவிக்க முடியவில்லை என்று சுனாமி இந்த சோதிடக்காரர்களுக்கு சவால் விடுகின்றது. இந்தச் சவாலுக்கு இவர்களால் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது.

காரணம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வேதம் அடித்துச் சொல்கின்றது.
"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 27:65

அதிலும் குறிப்பாக ஒருவரது வருவாய் மற்றும் மரணம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அதை யாருமே அறிய முடியாது.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்குர்ஆன் 31:34

ஜப்பானில் நேற்று உயிருடன் இருந்தவர்கள் இன்று இல்லை, நேற்று பெரும் பணக்காரராக இருந்தவர் இன்று நடுத் தெருவில் நிற்கிறார். இதை இந்த சோதிடர்களால் அறிவிக்க முடியவில்லை.

வீட்டு சாவி காணாமல் போனது, மோதிரம் காணாமல் போனது, அந்த சோதிடர் கண்டுபிடித்தார், இந்த ஹஜரத் மை போட்டுப் பார்த்துச் சொன்னார் என்று சொல்பவர்களை நோக்கி, இந்த சுனாமியைப் பற்றி உங்களால் சொல்ல முடியுமா? என்று கேளுங்கள். அவர்களால் ஒருபோதும் சொல்ல முடியாது. காரணம் இந்த மறைவான ஞானத்தின் சாவிகள் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானா லும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

EGATHUVAM APR 2011