Apr 5, 2017

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது.

இந்த இதழ் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது.

திருக்குர்ஆன் சிறப்பிதழ் என்று கூறி விட்டு, இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் எழுதுவது என்ன நியாயம்? என்று கேட்கலாம்.

முறையாக, திருக்குர்ஆன் ஓர் இயற்கை வேதம் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறினாலும், இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று கூறினாலும் அது குறிக்கப் போவது திருக்குர்ஆனைத் தான்.

ஏனெனில் இஸ்லாம் என்பது திருக்குர்ஆனின்  நேரடி வழிகாட்டல் ஆகும்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

அல்குர்ஆன் 2:185

இறைத் தூதர் ஓர் இயற்கைத் தூதர் என்று சொன்னால் அதுவும் குர்ஆனையே குறிக்கும்.

(முஹம்மதே!) மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ் வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

அல்குர்ஆன் 16:64

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் விளக்கவுரை என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்து கின்றன. இந்த அடிப்படையில் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தலைப்பில் இந்தத் திருக்குர்ஆன் சிறப்பு மலர் தன் பயணத்தைத் தொடர்கிறது.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம்.

இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் அனைத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.

அது போன்று நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் இவ்வளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்; இவ்வளவு இனிப்புச் சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதாச்சாரத்தைத் தாண்டினால் உடல் கடுமையான நோய்களுக்கு இலக்காகின்றது. இதைத் தான் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் இது இறைவன் வகுத்த விதியாகும்.

இப்படியொரு இயற்கை விதியை வகுத்த அந்த நாயன்அதற்கேற்ப மனித சமுதாயம் வாழ்வதற்காக அளித்த விதிகள் தான் திருக்குர்ஆன்.

மார்க்கச் சட்டங்கள், மார்க்க விதிகள் என்பவை, ஏற்கனவே இந்த உலகம் இயங்குவதற்காக அல்லாஹ் வகுத்திருக்கின்ற இயற்கை விதிகளுக்கு ஏற்ப அமைந்தவை தான் என்ற கருத்தை விளக்கவே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாது நாத்திகர்கள் கூட ஒப்புக் கொள்ளும் விஷயம் அந்த இயற்கை விதிகள் தான். இயற்கை விதிகளை அனைவரும் நம்புகின்றார்கள்.

இவர்கள் நம்பும் அந்த இயற்கை விதிகளை வகுத்த அதே இறைவன் தான் இஸ்லாம் எனும் இந்த விதிகளையும் வகுத்திருக்கிறான் என்பதை உற்று நோக்கச் சொல்வது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகின்றான்.

உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 30:30


இந்த இயற்கை மார்க்கத்தில் ஓர் இனிய உலா சென்று வருவோம்.

EGATHUVAM SEP 2007