Apr 17, 2017

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்!

மக்காவில் ஒரு மனித உரிமைப் பிரகடனம்!

 - தொண்டி அ. சிராஜூத்தீன் - ரியாத்

 இன்று உலகத்தின் எத்திசையை நோக்கினாலும், மனிதன் அமைதிக்காக ஏங்குகின்றான். எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, அத்துமீறல், ஆக்கிரமிப்புப் போர், குண்டு வெடிப்பு, ஏமாற்றுதல், மோசடி, பொருளாதாரச் சுரண்டல், கலப்படம் என்று உலகின் எல்லாப் பகுதிகளும் அமைதியற்றுக் காணப்படுகிறது.  அதே போல் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மனித இனத்தைப் பிளவுபடுத்தி, தாழ்த்தப்பட்டவனின் உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகிறது. உலகில் இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உலகின் இதயம் போன்ற மையப் பகுதியில் அமைந்துள்ள புனித மக்கா நகரம் மட்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. உலகில் மனித உரிமையைப் பாதுகாப்பதற்காகப் பல மனித உரிமை சாசனங்கள் உருவாக்கப்பட்டன. அந்த உரிமைகள் சில நாட்களில் செயலிழந்து போவதைப் பார்க்கிறோம். அதிகாரமுள்ளவன் சட்டத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றான். ஆனால், மக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது விடைபெறும் ஹஜ்ஜின் போது, ஒரு மனித உரிமைப் பிரகடனத்தைச் செய்தார்கள். அது இன்று வரை உலகில் வரையப்பட்ட அனைத்து மனித உரிமைப் பிரகடனங்களை விடவும் உயர்ந்ததாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைப் பார்த்து வியந்து போகின்றார்கள்.

 இஸ்லாம் நான்கு மாதங்களை யுத்தம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டதாக ஆக்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜமாதுஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி)

நூல்: புகாரி 3197

 இந்தச் சட்டத்தை மட்டும் கடைப்பிடித்தால் நான்கு மாதங்கள் உலகம் அமைதியாக இருக்கும்.

 அபாய நகரங்களுக்கு மத்தியில் மக்கா ஓர் அபய நகரமாகத் திகழ்கிறது. அதற்கென்று தனித்துவமான புனிதங்கள் இருக்கின்றன. அதே போல் தான் மனிதனின் உயிர் புனிதமானது என்று நபி (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள். எந்த மனிதனின் உடமையையும் அடுத்தவர் உரிமை கொண்டாட முடியாத அளவு அவனது உரிமையைக் காக்கும் வண்ணம் உயிருக்கும் உடமைக்கும் நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பை வழங்குகின்றார்கள். சாதாரணக் குடிமகன் முதல், நாட்டின் ஆட்சியாளன் வரை அவனது மானம் கண்ணியம் மிகுந்தது என்று தமது மக்கா பிரகடனத்தில் நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

 நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ, அவ்வாறே உங்களின் உயிர்களும், உடைமைகளும், கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்' என்று பல தடவை கூறினார்கள். நூல்: புகாரி 1739

 இந்த மனித உரிமைப் பிரகடனம் மக்கள் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது. குடிமக்களைக் கவனத்திற்கொள்ளாத எந்தப் பிரகடனமும் நடைமுறைச் சாத்தியமற்றுப் போன வரலாறு நிறையவே இருக்கின்றன. ஆனால், இந்த சாசனம் 1400 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியமான உண்மை.

 மனித உரிமை மீறல்கள் அதிகமாக இனவெறியின் காரணமாகவே அரங்கேற்றப்படுகின்றன. அதையும் நபிகளாரின் மக்கா பிரகடனம் தகர்க்கிறது. சகோதரத்துவத்தை வலியுறுத்தி, இனவெறியை ஒழித்தார்கள்.

 மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை இறையச்சத்தைத் தவிர! நூல்: அஹ்மத் 22391 இனமாச்சரியம், குலச்செருக்கு, மொழிவெறி, நிறவெறி போன்ற அனைத்தையும் இப்பிரகடனம் தகர்த்தெறிகிறது.

 உலகில் முதன் முதலாக ஒரே இறைவனை வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட கஅபா எனும் ஆலயம் உலக மக்களின் ஒருமைப்பாட்டுச் சின்னம். கருப்பன், சிவப்பன் என்ற நிற வேறுபாடுகள் அங்கு இல்லை. ஆசியன், ஆப்பிரிக்கன், அமெரிக்கன் என்ற தேசியப் பிரிவினைவாத வேற்றுமைகள் அங்கு வேரற்றுப் போகின்றன. ஆங்கிலேயன், அரேபியன் என்ற மொழி வேறுபாடுகள் அங்கு  இல்லை. ஆண்டான் - அடிமை, மன்னன் - குடிமக்கள் என்ற உயர்வு, தாழ்வுகள் இல்லை. இவ்வாறு ஏற்றத் தாழ்வுகளை இஸ்லாம் துடைத்தெறிகின்றது. ஒருமைப்பாட்டின் உன்னதத்தை மனிதர்களை உணரச் செய்கிறது. மனித நேயத்தை மனித உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைக்கிறது. மனிதர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. நிறம், மொழி, குலம், கோத்திரம் என்பவற்றை முதன்மைப்படுத்தி வேற்றுமைகளைத் தோற்றுவிக்கக் கூடாது என்று நபியவர்கள் பிரகடனம் செய்தார்கள். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்கள் தான். உங்களுக்குள் வேறுபாடு இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

இன்று உலகிலுள்ள பல முக்கிய வழிபாட்டுத் தளங்களில் வேற்றுமை தலை தூக்கியுள்ளது. ஆனால், உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடும் கஅபாவில் ஒற்றுமையைத் தவிர எந்த வேற்றுமையும் இல்லை.

 மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)

 ஸகாத் என்ற புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி வட்டியையும் சுரண்டலையும் ஒழித்து, அடிமட்ட மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு வழிகாட்டினார்கள்.

 அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது. நூல்கள்: முஸ்லிம் 2137 நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கணவன் மனைவி உரிமைகளை தனது உரிமைப் பிரகடனத்தில் உள்ளடக்கினார்கள்.

 'பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.

நூல்: முஸ்லிம் 2137

 பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது. அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும். நூல்கள்: திர்மிதீ 1083, 3012. இப்னுமாஜா 1841

 ஆள்வோருக்கு ஒரு சட்டம்; ஆளப்படுவோருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தவில்லை. மனு தர்மத்தைப் போல் பிராமணர்களுக்கு ஒரு சட்டம்; சூத்திரர்களுக்கு ஒரு சட்டம் என்று வேறுபாடு காட்டவில்லை. திருக்குர்ஆனின் சட்டத்தைச் செயல்படுத்திக் காட்டிய திருத்தூதர் (ஸல்) அவர்கள்  சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதைக் கடுகளவு கூட அனுமதிக்கவில்லை.

 குரைஷிக் குலத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)

 இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். ''நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?'' என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?'' என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.

''உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால்தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்' என்று பிரகடனம் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3475

 உயர் குலத்தவர்களாக இருந்தால் அவர்களுக்குத் தனிச் சட்டம் இல்லை; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைத் தன் மகளை முன்னிறுத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கின்றார்கள். உன்னதமான மனித சமத்துவத்தையும் ஒழுக்கப் பண்பாட்டையும் உலகுக்குச் சட்டமாக வரைந்து கொடுத்தார்கள்.

 பழிவாங்கும் உணர்வை அகற்றி மன்னிக்கும் மனப்பான்மையை தன்னிலிருந்தே ஆரம்பித்து வைத்து மனித உரிமையைப் பிரகடனம் செய்த மாமேதையாக மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்.

 அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய  பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இது வரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்.) அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137


 இவ்வாறு நபியவர்கள் அறிமுகப்படுத்திய மனித உரிமைப் பிரகடனம் உன்னத இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.

EGATHUVAM JAN 2010