திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 10 - கியாமத் நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்
இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின்
தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள்
சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச்
சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார்.
நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப்
பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே
இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:157, 158
இவ்விரு வசனங்களையும், அல்லாஹ்வின்
வல்லமையை உணர்ந்து, விதண்டாவாதமும், வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை
யாரும் தெளிவாக அறியலாம்.
"அவரை அவர்கள் கொல்லவில்லை'' என்பது
அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத் தான் குறிக்கும்.
வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று சிலர் வாதிக்கின்றனர்.
இத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது வாதம் பொருத்தமானதே!
"மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்'' என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் அல்லாஹ் உயர்த்திக்
கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.
அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக்
கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.
அவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும் போது திடீரென்று அந்தஸ்து
என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.
அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான்
என்பது பொருத்தமாக அமைகிறது.
ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம்.
வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எறிகின்றன.
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே
சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். ((அல்குர்ஆன் 43:61))
ஈஸா (அலை) அவர்கள் இறுதிக் காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம்
பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா (அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில்
சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரை
நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனிமேல் அந்த
அடையாளம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ
இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.
கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை
மனதில் இருத்திக் கொண்டு, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்
கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக
இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட "மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்'' என்பது மிகத் தெளிவாக இந்த உண்மையைக் கூறிவிடுகின்றது. ஈஸா நபி
மரணித்துவிட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூற
முடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.
ஈஸா (அலை) இன்று வரை மரணிக்கவில்லை; உடலுடன் உயர்த்தப்பட்ட அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவார்கள்
என்பதற்குச் சான்றாக மற்றுமொரு தெளிவான திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! "அல்லாஹ்
அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்'' என்ற வசனத்திற்கு
அடுத்த வசனமாக இந்த வசனம் இடம் பெற்றுள்ளது.
வேதமுடையவர்களில் எவரும் அவர் (ஈஸா) இறப்பதற்கு முன் அவர் (ஈஸா)
மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராகச்
சாட்சி சொல்பவராக இருப்பார்.
அல்குர்ஆன் 4:159
ஈஸா (அலை) அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு
முன்பே மரணித்துவிட்டார்கள் என்று கூறக்கூடியவர்களின் நம்பிக்கைப்படியும் இந்த வசனத்திற்குப்
பொருள் கொண்டு பார்ப்போம். ஈஸா (அலை) அவர்கள் இன்று வரை மரணிக்கவில்லை என்று கூறுவோரின்
நம்பிக்கைப்படியும் பொருள் கொண்டு பார்ப்போம். எது சரியான பொருள் என்பதை இதன் மூலம்
அறிந்துகொள்ளலாம்.
"ஈஸா நபியின் மரணத்திற்கு முன்'' என்ற சொற்றொடருக்கு முதல் சாராரின் நம்பிக்கைப் பிரகாரம் எப்படிப்
பொருள் வரும்?
ஈஸா நபியின் மரணத்திற்கு முன் என்றால் அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது
என்றுதான் இவர்கள் பொருள் கொள்ள முடியும். ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அதாவது அவர்
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்பது தான் இந்தச் சொற்றொடரின் பொருளாகிறது.
வேதமுடையவர்கள் அனைவரும் ஈஸா (அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான்
கொள்வார்கள் என்பது மொத்த வசனத்தின் பொருளாகிறது. ஈஸா (அலை) வாழ்ந்த காலத்தில் இனி
ஈமான் கொள்வார்கள் என்பதற்கு ஏதேனும் பொருளிருக்கிறதா? அல்லாஹ்வின் வசனம் எந்த அர்த்தமுமில்லாததாக அல்லவா ஆகிவிடும்?
ஈஸா (அலை) இனிமேல் மரணிப்பதற்கு முன் - இனி மேல் வேதமுடையவர்கள்
ஈமான் கொள்வார்கள் என்பது தான் பொருத்தமாக உள்ளது. ஈஸா நபி வாழ்ந்த காலத்தில் இனி ஈமான்
கொள்வார்கள் என்பதில் எவ்வளவு குழப்பம் என்று பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இனி
ஈஸா (அலை) மீது ஈமான் கொள்வார்கள் என்று அவர் மரணித்த பிறகு அல்லாஹ் சொல்வானா?
இதைச் சிந்தித்தால், ஈஸா (அலை)
இன்றுவரை மரணிக்கவில்லை; அவர் மரணிப்பதற்கு முன்னால்
வேதமுடையோர் அனைவரும் அவரை நேரில் பார்த்து ஈமான் கொள்வார்கள் என்பது தெளிவாகும். எவ்வளவு
அழுத்தமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் குர்ஆன் கூறுகிறது என்று சிந்தியுங்கள்!
மேலும் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் எனக் கூறப்படுவதால் உயர்த்திக்
கொண்டான் என்பது உடலுடன் தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM JUL 2012