May 15, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 11 - உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 11 - உமருக்குப் பதவி வெறியாம் உளறும் கஸ்ஸாலி

தொடர்: 11

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவைப் பற்றி அறிஞர்களின் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் சாய்வு, சார்பு சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட அலாதியான அலசல்களையும் பார்த்து வருகிறோம்.

கனவில் கஸ்ஸாலியின் நூல்களைக் கண்டேன். அவரது நூல்களின் எழுத்துக்கள் படங்களாகக் காட்சியளித்தன என்று அபூநஸ்ர் அஹ்மத் பின் முஹம்மது பின் அப்துல்காதிர் என்பார் சத்தியமிட்டுக் கூறியதை நான் செவியுற்றேன் என அபூ ஆமிரில் அப்தரீ விமர்சனம் செய்துள்ளார்.

இதை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரில் தெரிவிக்கின்றார்.

கஸ்ஸாலியின் நூல்களுக்கு மதிப்பேற்றுவதற்காக மலிவான இந்தக் கனவுக் கதைகளை அடித்து விடுகிறார்கள் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஷியா தாக்கம்

தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்களிடம் ஷியா மார்க்கமே ஆக்கிரமித்து அரசாட்சி செய்கின்றது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய காலத்திலிருந்து பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை அடையாளம் காட்டி வருகின்றது. இன்னும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத் அடையாளப்படுத்தி, அம்பலமாக்கிய ஷியா மார்க்கக் கூறுகள் இதோ:

1. தர்ஹா வழிபாடு

இறந்தவர்களை வழிபடுவது ஷியாக்களின் வழிமுறையாகும். அது தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2. தனிமனித வழிபாடு

ஷைகு, முரீது, பீர், தரீக்கா என தனி மனிதர்களைக் கடவுளாக்கும் அனைத்தும் ஷியாக்களின் நடைமுறைகளாகும். இது தமிழகத்தில் தலைவிரித்தாடுகின்றது.

3. தரீக்காக்களின் தலைவர் அலீ (ரலி)

தமிழகத்திலுள்ள தரீக்காக்கள் அனைத்தும் அலீ (ரலி) அவர்களிடம் தான் போய் முடியும். ஒரு தரீக்கா கூட அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்ற தலைசிறந்த கலீபாக்களிடம் போய் முடியாது.

4. பஞ்சா எடுத்தல்

முஹர்ரம் பத்தாம் நாளில் பஞ்சா எடுக்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. பஞ்சா என்றாலே ஐந்து என்று பொருள். அதாவது, முஹம்மது (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரையும் கடவுளாக்கி வழிபாடு செய்யும் விழா தான் பஞ்சாவாகும்.

5. மீன் உணவுக்குத் தடை

ஹுசைன் (ரலி) கொல்லப்பட்ட சோகத்தின் காரணமாக முஹர்ரம் பத்து நாட்களும் மீன் சாப்பிடத் தடை செய்வார்கள். கணவன் மனைவி தாம்பத்தியத்திற்கும் தடை விதிப்பார்கள்.

6. ஹுசைனுக்காக ஆஷுரா நோன்பு

முஹர்ரம் 10ஆம் நாள் மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்ட நாளாகும். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் ஆஷுரா நோன்பு என்பது ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக வைக்கப்படும் சோக நோன்பு என்று தமிழகத்திலுள்ள பெண்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

7. மகான்களுக்கு மறைவான ஞானம்

இருக்கின்ற, இறந்து போன மகான்களுக்கு, இமாம்களுக்கு, தலைவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்பது ஷியாக்களின் நம்பிக்கையாகும். அதே நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன், நாகூர் ஷாகுல் ஹமீது போன்ற இறந்து போன அடியார்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புகிறார்கள். தமிழக உலமாக்களும் இதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.

8. கலீபாக்கள் மீது கசப்புணர்வு

அலீ (ரலி) அவர்களைத் தவிர ஏனைய கலீபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய கலீபாக்களையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அல்லாத ஏனைய நபித்தோழர்கள் யாரையும் ஷியாக்களுக்கு அறவே பிடிக்காது. அந்த நபித்தோழர்களைத் திட்டுவதும் அவர்களின் கொள்கையாகும். அந்த ஷியாக்களின் கொள்கையை தமிழக உலமாக்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

நாம் இவ்வாறு சொல்லும் போது, குற்றம் சாட்டும் போது, "எங்களைப் போன்று ஸஹாபாக்களை மதிப்பவர்கள் யார்?' என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். ஆனால் இவர்கள் உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறிபிடித்தவர் என்று விமர்சிக்கின்றனர்.

ஆம்! இவர்களது ஆன்மீக ஆசான், கண் குளிர்ச்சி, கல்விக் கடல் கஸ்ஸாலி தான் இந்த மட்டரகமான, மலிவான விமர்சனத்தை உமர் (ரலி) அவர்கள் மீது முன்வைக்கின்றார். அதை அப்படியே இந்த உலமாக்கள் ஆமோதிக்கின்றனர். இதன்படி தங்களை ஷியாக்களின் வாரிசுகள் என்பதைப் பகிரங்கமாக நிரூபிக்கின்றனர்.

கஸ்ஸாலியின் அந்தக் கொடூர விமர்சனத்தைத் தான் இப்போது நாம் பார்க்கவிருக்கின்றோம்.

உமர் (ரலி) அவர்களின் பதவி வெறி

இமாம் இப்னுல் ஜவ்ஸியின் பேரர் அபுல் முளஃப்பர் யூசுப் என்பார், "ரியாளுல் அஃப்ஹாம் ஃபீ மனாகிபி அஹ்லில் பைத்' (நபியவர்களின் குடும்பத்தாரின் மகிமை போற்றும் சிந்தனைத் தோட்டங்கள்) என்ற நூலை எழுதியுள்ளார்.

அந்த நூலில் ஸிர்ருல் ஆலமீன் கஷ்ஃபு மாஃபித் தாரைன் (அகிலத்தாரின் ரகசியம், ஈருலக ஞானத்தில் அகமியம்) என்ற கஸ்ஸாலியின் நூலை மேற்கோள் காட்டி அவர் குறிப்பிடுவதாவது:

"நான் யாருக்குப் பொறுப்பாளனோ அவருக்கு அலீயும் பொறுப்பாளர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், "சபாஷ்! சபாஷ்! ஒவ்வொரு முஃமினான ஆண், பெண்ணுக்கு நீங்கள் பொறுப்பாளராக ஆகிவிட்டீர்கள்'' என்று உமர் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கிக் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 17749

(குறிப்பு: மேற்கண்ட அஹ்மத் ஹதீஸில் அலீ பின் ஜைத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். அதனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

இதே செய்தியில் உமர் (ரலி) அவர்களின் பாராட்டு இல்லாமல் திர்மிதியில் 3646வது ஹதீஸ் இடம் பெறுகின்றது. அது சரியான அறிவிப்பாகும்.

இந்த ஹதீஸில் "மவ்லா' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதற்குத் தான் "பொறுப்பாளர்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு எஜமானன், நேசன், நண்பன் என்ற அர்த்தங்களும் உண்டு.

இதன்படி, நான் நட்பு கொண்டவருடன் அலீயும் நட்பு கொள்வார் என்பது தான் இந்த ஹதீஸின் பொருளாகும். நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை அலீ அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்ளக்கூடாது.)

இந்த ஹதீஸைக் குறிப்பிட்டு உமர் (ரலி) அவர்களைப் பற்றி கஸ்ஸாலி செய்கின்ற விமர்சனம் இதோ:

அலீ (ரலி) மீதான நபி (ஸல்) அவர்களின் இந்தப் பாராட்டை உமர் (ரலி) அப்படியே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றார்கள். அப்படியே திருப்தியுடன் பொருந்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் இதற்குப் பின்னால் ஆட்சி, அதிகார, தலைமைப் பதவியிலும் அதற்கான நிபந்தனைகளை விதிப்பதிலும், ஆணைகள், தடைகளைப் பிறப்பிப்பதிலும் கொண்ட வெறியின் காரணமாக மனோஇச்சை உமரிடம் மிகைத்து மேலோங்கியது. அதனால் அவர் நபித்தோழர்களைக் கருத்து வேறுபாடு கொள்ளத் தூண்டினார்.

நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தனர். அதை அற்பக் கிரயத்திற்கு விற்றனர். அவர்களின் இந்த வியாபாரம் மிகக் கெட்டதாகும்.

இது உமர் (ரலி) அவர்களைப் பற்றி கஸ்ஸாலி செய்கின்ற விமர்சனமாகும்.

ஷியா இமாம்கள் கொட்டுகின்ற விஷக் கருத்தை கஸ்ஸாலி அப்படியே அள்ளிக் கொட்டியிருக்கின்றார். அவர் இதற்காக இறைவனிடத்தில் என்ன சாக்குப் போக்கு சொல்லப் போகின்றார் என்று எனக்குத் தெரியவில்லை.

உண்மையில் இந்த விஷக் கருத்திலிருந்து விலகி, சத்தியத்தைப் பின்பற்றியிருப்பார் என்று தான் நினைக்கிறேன். காரணம், இவர் ஒரு கல்விக் கடல். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இவ்வாறு அபுல் முளஃப்பர் கஸ்ஸாலியின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி விமர்சிக்கின்றார்.

நூலாசிரியர் மக்ராவியின் விமர்சனம்

கஸ்ஸாலியின் நூல்களில் இதுபோன்ற விஷக் கருத்துக்களைப் படிக்கும் போது அவர் மீது கொண்டிருக்கும் நல்லெண்ணம் காரணமாக உலமாக்கள் ஏதாவது முட்டுக் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயல்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தில் ஒருபோதும் அவரைக் காப்பாற்ற முடியாது. காரணம், கஸ்ஸாலியின் இந்தக் கூற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதன் பின்னால் அவர்களால் எப்படிக் காப்பாற்ற முடியும்?

பாவமன்னிப்பே பரிகாரம்

ஒரேயொரு பரிகாரம் பாவமன்னிப்பு தான். அவர் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தியிருந்தால் அல்லாஹ் அவரை மன்னித்து அவரது மன்னிப்பை அவன் ஏற்றிருப்பான். ஏனெனில் அவனது அருள் விசாலமானதாகும்.

நூலாக்கம் என்பது நிரந்தர நன்மையைக் கொண்டு வருகின்ற தர்மங்களின் பட்டியலில் இடம்பிடிக்கும். அல்லது தொடர்ந்து வருகின்ற சாபக்கேட்டின் பட்டியலில் இடம்பிடிக்கும். இவரது இந்த நூல் இரண்டாவது ரகம் தான் என்பதற்கு இந்தக் கருத்துக்களே சாட்சி சொல்கின்றன.

முஃமீன்களின் தலைவரான உமர் (ரலி) அவர்கள் மீது இப்படி ஒரு தவறான எண்ணம் தோன்ற முடியுமா? இப்படி ஒரு விமர்சனத்தை அவருக்கு எதிராகச் சொல்ல முடியுமா?

அவ்வாறு சொல்பவர் எவராக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் இழிவை அழிப்பானாக! கஸ்ஸாலியின் இந்தக் கூற்று நிரூபணமானால் அவர் மட்டரகமான, மலிவான, கேவலமான, கேடுகெட்ட ராஃபிளிய்யா (ஷியா) பேர்வழி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

ராஃபிளிய்யாவின் கருத்துக்கள் இஹ்யாவில் பெரிய அளவில் மண்டிக் கிடக்கின்றன. அவ்வாறு மண்டிக் கிடக்கும் அந்தக் கருத்துக்கள் சுய அடையாளங்களைக் காட்டிக் கொண்டு கிடக்காமல் சூபிஸத்தின் பேரில் சூழ்ந்து கிடக்கின்றன. சூபிஸம் என்பது ராபிளிய்யாவின் கள்ள, செல்லப் பிள்ளையாகும்.

இவ்வாறு மக்ராவி அவர்கள் கூறுகின்றார்கள்.

நமது விமர்சனம்

கஸ்ஸாலியைத் தங்கள் கண்குளிர்ச்சியாகவும், மலர்ச்சியாகவும் காணும் மக்களுக்கு இந்தச் செய்தி எரிச்சலாகவே அமையும்.

உமர் (ரலி) அவர்களைப் பற்றிய கஸ்ஸாலியின் இந்தக் கருத்து நூலாசிரியர் மக்ராவி குறிப்பிடுவது போன்று கொடிய, கொடூரமான விஷமாகும். உண்மையில் இது ஷியாக்களின் நச்சுக் கருத்தே தவிர வேறில்லை.

ஷியாக்கள் தான் அலீ (ரலி) அவர்கள் மீது அலாதியான, அபாரமான பிரியத்தை வெளிப்படுத்துவார்கள். நபித்தோழர்களில் உச்ச இடத்தில் இருக்கும் அபூபக்ர் (ரலி), அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் உமர் (ரலி), இன்னும் ஏனைய நபித்தோழர்கள் மீது கசப்பையும் காழ்ப்பையும் கக்குவார்கள். அந்தக் கசப்பையும் காழ்ப்பையும் கஸ்ஸாலி தனது நூலான ஸிர்ருல் ஆலமீனில் வெளிப்படுத்தியுள்ளார்.

பதவி வெறி, மனோ இச்சை என்ற வார்த்தைக் கணைகளை நா கூசாமல் சர்வ சாதாரணமாக உமர் (ரலி) மீது ஏவி விடுகின்றார். உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களால் சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

"அபூபக்ர் சுவனத்தில் உள்ளார். உமர், உஸ்மான், அலீ, தல்ஹா, சுபைர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ஆகியோர் சுவனத்தில் உள்ளனர். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் சுவனத்தில் உள்ளார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்கள்: திர்மிதி 3680, முஸ்னத் அஹ்மத் 1585

இப்படி சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறி பிடித்தவர் என்று சர்வ சாதாரணமாக கஸ்ஸாலி விமர்சிக்கின்றார்; குற்றம் சாட்டுகின்றார். உமர் (ரலி) அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரியவர்களா என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பதவியை விரும்பாத பண்பாளர் உமர்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப் போரில்) வெற்றியை அளிப்பான்'' என்று சொன்னார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள்  கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவனாக நான் தலையை உயர்த்திக்காட்டினேன்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2405

பதவியை நான் ஒருபோதும் விரும்பியதே இல்லை. இப்போது விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் அளிக்கப் போகும் பதவியைப் பெறுபவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக விரும்பினேன் என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதாவது, அல்லாஹ்வுடைய, அவனது தூதருடைய பிரியத்திற்குரியவனாக வேண்டும் என்பதற்காக அந்தப் பொறுப்பை அடையவேண்டும் என்று விரும்பினேன் என்று கூறுகின்றார்கள். இவர்களைப் போய் பதவி வெறியர் என்று சொல்ல முடியுமா? ஆனால் தமிழக உலமாக்களின் சன்னிதானமாக, ஆன்மீக அவதாரமாகத் திகழ்கின்ற கஸ்ஸாலி, உமர் (ரலி) அவர்களைப் பதவி வெறியர் என்று சொல்கின்றார். (நபியவர்கள் நோயுற்ற போது) மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.-ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்'' என்று கூறினர். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் - அன்னார் இளகிய மனம் உடையவர் - "உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று (உமர் ரலி அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இதற்கு நீங்கள்தாம் என்னைவிடத் தகுதியுடையவர்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

நூல்: புகாரி 687

அபூபக்ர் (ரலி), உமரை நோக்கித் தான் தொழுவிக்குமாறு கூறுகின்றார்கள். ஆனால் உமர் (ரலி) அதை மறுப்பதுடன், நீங்கள் தாம் இந்தப் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்று குறிப்பிடுவதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

முன்னுரிமை அபூபக்ருக்கே!

உமர் (ரலி) அவர்களுக்குப் பதவி வெறி இருக்குமானால் அதை அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கள் தேர்வு செய்யும் போது அந்தரங்கமாகவோ, அப்பட்டமாகவோ வெளிப்படுத்தியிருக்கலாமே! அப்படி அவர்கள் செய்யவில்லை என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

(நபியவர்கள் மரணித்த போது, அடுத்த ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், "(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், "இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் உங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இல்லை; நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்'' என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

நூல்: புகாரி 3668

பதவியில் பற்றில்லாதவர்

உமர் (ரலி) அவர்களுக்குப் பதவியில் அறவே பற்று கிடையாது என்பதை இன்னும் அதிகமாகப் பின்வரும் ஹதீஸில் பார்க்க முடியும்.

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது உரையில்) குறிப்பிட்டார்கள்: (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டு வருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகக் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் (போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே நான் விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

நூல்: புகாரி 6830

பதவியின் மீது பற்றில்லாமல் வாழ்ந்த பரிசுத்தமான உமர் (ரலி) அவர்கள் மீது தான் பதவிவெறி என்ற சேற்றை கஸ்ஸாலி வாரி வீசுகின்றார். இவரைத் தான் தமிழக ஆலிம்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இது ஷியா உணர்வைத் தவிர வேறெதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் தமிழகத்தில் ஷியாக்களின் தாக்கம் என்ற தலைப்பில், ஷியா கொள்கை தமிழக முஸ்லிம்களிடம் எப்படி ஆட்கொண்டு அவர்களை ஆட்டிப் படைக்கின்றது; அலைக்கழிக்கின்றது என்பதைக் கண்டோம். அதன்படி இஹ்யா என்பது ஷியாக் கொள்கையின் மறு ஆக்கம், மறுபிறவியாகும். இதை எரித்துச் சாம்பலாக்குவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்று சொன்னால் அது மிகையல்ல.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM JUN 2014