May 10, 2017

இணை கற்பித்தல் தொடர்: 12 - இறைநேசரின் பிரார்த்தனையும் இறைவனின் மறுப்பும்

இணை கற்பித்தல் தொடர்: 12 - இறைநேசரின் பிரார்த்தனையும் இறைவனின் மறுப்பும்

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாறுகளில் யூனுஸ் நபியின் வரலாறு மிக முக்கியமானதாகும். அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாக்களில் யூனுஸ் நபியும் ஒருவர். யூனுஸ் நபியவர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுப்பப்பட்ட நபியாவார். இவரைத் தவிர வேறு எந்த நபியையும் அதிகமான மக்களுக்கு அனுப்பியதாக இறைவன் சொல்லவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்:

யூனுஸ் தூதர்களில் ஒருவர்.

 (அல்குர்ஆன் 38:139)

அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.

(அல்குர்ஆன் 38:147)

இவர்களும் மற்ற நபிமார்களைப் போல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். எதிர்ப்பையும் சந்திக்கிறார்கள். எல்லா நபிமார்களைப் போல் அவர்களும் பொய்யாக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு சோதனைகளை சகித்துக் கொண்டு பிரச்சாரம் செய்வார்கள். இனிமேல் நம்மால் தாங்க முடியாது. இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று வரும்போது அல்லாஹ்விடம், "இவர்களிடம் நான் எவ்வளவோ சொல்லி விட்டேன்; இவர்கள் திருந்துவது போல் தெரியவில்லை. எனவே இவர்களை நீ தண்டித்து விடு' என்று சொல்வார்கள். இவ்வாறு பல நபிமார்களும் இறைவனிடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் யூனுஸ் நபியவர்களும் பொறுமை தாளாமல் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். இறைவனும் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, "இந்த ஊரை விட்டு நீ வெளியேறி விடு' என்று சொல்கிறான். இறைவன் குற்றவாளிகளை அழிப்பதாக இருந்தால் நல்லவர்களை அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடத்திலிருந்து வெளியேற்றி விட்டு குற்றவாளிகளை மட்டும் தான் தண்டிப்பான்.

சுனாமி. புயல். பூகம்பம் போன்ற அழிவுகள் இவையெல்லாம் ஏற்படும் போது, அல்லாஹ்வின் கோப்பார்வை மனிதன் மீது இறங்கிவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. அல்லாஹ் அவனது கோபப் பார்வையின் காரணத்தால் அழிப்பதாக இருந்தால் நல்லவர்களைப் பிரித்து எடுத்து விட்டுத் தான் கெட்டவர்களை அழிப்பான்.

இதைப் போன்று தான் யூனுஸ் நபி இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்தவுடன் அவரையும் அவர்களுடன் இருந்தவர்களையும் இறைவன் அவ்வூரிலிருந்து வெளியேறச் செய்கிறான். அவர்களும் வெளியேறி விடுகிறார்கள்.

ஆனால் அதுவரை யூனுஸ் நபியை ஏற்றுக் கொள்ளாத அம்மக்கள் இறைவனின் தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடியதால் அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விடுகிறான். பிறகு அவ்வூரார் தண்டிக்கப்படாமல் இருந்ததை யூனுஸ் நபி திரும்பி வந்து பார்த்த போது அவர்களுக்குக் கோபம் ஏற்படுகின்றது. "நான் உன்னிடம் இவர்களை அழித்து விடுமாறு சொன்னேனே! ஏன் அழிக்கவில்லை?'' என்று இறைவனிடமே கோபம் கொள்கிறார்கள். இதைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனில்,

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21:87-88)

அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

அல்குர்ஆன் 68:49

"ஒருவனை அழிப்பதும், அவர்களை அழிக்காமல் விட்டு விடுவதும் எனது அதிகாரத்திற்குட்பட்டது. நீ நினைத்த நேரத்தில் நான் தண்டிக்க மாட்டேன்' என்று இறைவன் அவர்களை கண்டிக்கின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மக்கா காபிர்களால் பல துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். இந்நிலையில் அல்லாஹ் நபியவர்களைப் பார்த்து, "யூனுஸ் நபியைப் போன்று ஆகிவிடாதீர்' என்று சொல்கிறான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.

(அல்குர்ஆன் 68:48)

இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

(அல்குர்ஆன் 37:144)

மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் ஒரு நபிக்கு உரிய எல்லை என்ன? அதிகாரம் எவ்வளவு? அவர் விரும்பியதை அல்லாஹ் செய்வானா? அவர் விரும்பியதைச் செய்யவில்லை என்பதற்காக படைத்த இறைவனையே கோபிக்க இயலுமா?

இத்தனைக்கும் யூனுஸ் நபிக்கும் அந்த மக்களுக்கும் சொந்தப் பகையா? கொடுக்கல் வாங்கலில் ஏதேனும் பிரச்சினையா? எதுவும் இல்லை. அனைத்துமே தீனுக்காகத் தான். இறைவனுக்காகத் தான்.

யூனுஸ் நபிக்குக் கோபம் வரக் காரணமே, "இந்த மக்கள் இவ்வளவு அக்கிரமக்காரர்களாக இருக்கிறார்களே! இவர்களை அல்லாஹ் அழிக்காமல் விட்டு விட்டானே' என்பதற்காகத் தான். ஆனால் அதற்காகக் கூட கோபம் வரக்கூடாது என்பதை மேற்கண்ட வசனத்தில் நமக்கு உணர்த்துகிறான்.

இன்றைக்கு நாமும் தவ்ஹீதை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொல்கிறோம். இதனால் நமக்குப் பல பிரச்சினைகள், துன்பங்கள் எதிரிகளால் கொடுக்கப்படுகின்றன. அடி உதைகளை வாங்குகின்றோம். அதற்காக நாம் கொள்கையை விட்டு விடமுடியுமா?

அல்லது நாங்கள் மட்டும் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் உனக்காகப் பாடுபடுகிறோம். எங்களுடைய கை ஓங்காமல் எதிரிகளுடைய கை மட்டும் ஓங்கிக் கொண்டு இருக்கிறதே என்று அல்லாஹ்விடத்தில் கோபப்பட முடியுமா? அல்லாஹ் நினைத்தால் எதிரிகளுடைய கையை ஓங்க வைப்பான். நமக்குச் சிறு தடுமாற்றத்தைத் தருவான். அவன் நினைத்தால் எதிரிகளை சரிவுக்குள்ளாக்குவான். அனைத்தும் அவனது அதிகாரத்திற்குட்பட்டது. ஏன் என்று கேள்வி கேட்கக்கூடாது. யூனுஸ் நபியவர்கள் அவ்வாறு கேட்டதால் தான் இறைவன் அவர்களைத் தண்டிக்கிறான்.

இந்த வரலாறு நமக்கு எதை உணர்த்துகின்றது என்றால், நல்லடியார்களாக இருந்தாலும் நபிமார்களாக இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அதனை மீறி ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே தவிர இறைவனுக்குக் கட்டளை இடும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நோய் நீக்கும் அதிகாரம் இறைவனுக்கே!

அய்யூப் நபியின் வரலாற்றையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இவர்களுடைய பிரச்சாரப் பயணம் எவ்வாறு இருந்தது என்பதைச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பம், நோயை பற்றி சொல்லிக் காட்டுகிறான். அவருக்கு மிகக் கடுமையான துன்பம் வந்த போதும் அதைச் சகித்துக் கொண்டு இருந்தார். நான் தான் நபியல்லவா? எனக்கு ஏன் இப்படிப்பட்ட துன்பம் ஏற்பட வேண்டும்? என்று இறைவனிடத்தில் கோபம் கொள்ளவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்:

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).

அல்குர்ஆன் 38:41-42.

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன். 21:83, 84

அவரைத் தண்டிப்பதற்காக இறைவன் இதனைச் செய்யவில்லை. அவர் மீதுள்ள கோபப் பார்வையினால் இந்த நோயை ஏற்படுத்தவில்லை. அவரிடம் எந்தத் தவறும் இருந்ததில்லை. ஆனால் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் சரி, நல்லடியாராக இருந்தாலும் சரி; தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அவனிடம் தான் மனு போட முடியுமே தவிர தன்னால் அதனைச் சரி செய்ய முடியாது. அத்துன்பத்தை தானாக நீக்க முடியாது என்பதை இறைவனை மாத்திரமே வணங்கக் கூடியவர்களுக்கு ஒரு பாடமாக, ஒரு படிப்பினையாகவே இறைவன் அய்யூப் நபியின் வரலாற்றைக் கூறுகிறான்.

ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் ஒரு தலைவலி உட்பட என்ன நோய் வந்தாலும் அவ்லியாக்களிடம் சென்று அதை நீக்குமாறு கேட்கிறார்கள். மவ்லிது புத்தகங்களில் இதைத் தான் எழுதி வைத்து பாடுகிறார்கள்.

நாகூராரே! என்னுடைய வயிற்று வலியைப் போக்குங்கள். எங்களுக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். எங்களுடைய கண் பார்வையயை நீங்கள் தான் குணப்படுத்த வேண்டும். எங்கள் காதுகளில் உள்ள கோளாறுகளை நீங்கள் தான் போக்க வேண்டும். நீண்ட நாள் ஆயுளை எங்களுக்குத் தாரும். எங்களின் வாழ்நாளை குறைத்து விடாதீர்கள் என்றெல்லாம் பாடுகிறார்கள்.

இறந்து போன அவ்லியாக்கள் எல்லா நோயையும் நீக்கி விடுவார்கள் என்று நினைப்பவர்களுக்கு இந்த அய்யூப் நபியின் வரலாறு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

ஒரு நபியாலேயே தனக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க இயலாமல் இருந்த போது, இறந்து போன அவ்லியாக்கள் அடுத்தவர்களுடைய நோய்களை எவ்வாறு தீர்ப்பார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த வரலாறை ஒருவன் படித்து, சிந்திக்க ஆரம்பித்தால் அவன் எந்த அவ்லியாக்களிடமும் சென்று தன்னுடைய துன்பத்தைப் போக்குமாறு கேட்க மாட்டான் என்பது மட்டும் உறுதி.

அற்புதங்கள் செய்தாலும் கடவுளாக முடியாது

அதேபோன்று ஈஸா நபியின் வரலாறையும் அல்லாஹ் குர்ஆனில் படிப்பினையாகக் கூறுகிறான். மற்ற நபிமார்களை விட ஈஸா நபியவர்கள் பல சிறப்புகளைப் பெற்ற ஒரு நபி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அற்புதங்களை எடுத்துக் கொண்டாலும் மற்ற நபிமார்களை விட இவர்களுக்கு அதிகமாக அல்லாஹ் வழங்கியிருந்தான்.

நாம் குர்ஆனைப் படித்துப் பார்த்தால் ஈஸா நபியவர்களுக்கு அல்லாஹ் நிறைய அற்புதங்களை வழங்கியிருப்பதைக் காணலாம். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது. இவரை ரூஹுல் குதுஸைக் கொண்டு பலப்படுத்தினோம் என்று கூறுகிறான். அவர் எங்கே சென்றாலும் அவருடன் ஜிப்ரயீல் (பரிசுத்த ஆவி) இருப்பார் என்று கூறுகிறான்.

மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.

அல்குர்ஆன் 2:253

மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

அல்குர்ஆன் 2:87

அதைப் போன்று அவர் பிறந்தவுடனேயே தொட்டிலில் இருக்கும் போது பேசினார். இது எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத ஒரு சிறப்பாகும்.

"அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார்''

அல்குர்ஆன் 3:46

அவர் தந்தை இல்லாமல் பிறந்தார் என்றும், ஜிப்ரயீலை அனுப்பி அல்லாஹ்வின் ரூஹை ஊதி அதன் மூலமாகப் பிறந்தார் என்றும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

"இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்? '' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் "ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று இறைவன் கூறினான்.





அல்குர்ஆன் 3:47

அதைப் போன்று அவர் செய்த அற்புதங்களையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவர் களிமண்ணை எடுத்து உருட்டி பறவையைப் போன்று வடிவமைத்து அதில் ஊதினால் அது நிஜப் பறவையைப் போன்று பறந்து செல்லும். வெண்குஷ்ட நோய், பிறவிக் குருடு ஆகியவற்றை அவரது கையைக் கொண்டு தடவினால் அந்தக் குறை நீங்கிவிடும். சில நேரங்களில் இறந்தவர்களை உயிர்ப்பிப்பார். வீட்டில் ஒருவர் இன்றைக்கு என்ன சாப்பிட்டார் என்பதை சொல்வார். இப்படிப்பட்ட அற்புதங்களை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன் அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' (என்றார்)

அல்குர்ஆன் 3:49

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண் குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தோரை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏக இறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக! என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 5:110

இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்களே! குஷ்ட நோய்களைக் குணப்படுத்தி இருக்கிறார்களே! மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட செயல்களை ஈஸா நபியவர்கள் செய்திருக்கிறார்களே என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால் இத்தனையையும் அவர் சுயமாகச் செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதி பெற்றுத் தான் செய்தார்கள்.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

இத்தனை அற்புதங்களையும் அவர் செய்ததால் அவரை நாம் அல்லாஹ்விடத்தின் இடத்தில் வைத்தால் அவன் பொறுத்துக் கொள்வானா? ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக

அல்குர்ஆன் 5:75

இத்தனை அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தந்தை இல்லாமல் பிறந்தாலும், இன்னும் சாகாமல் இருந்தாலும், இறந்தவர்களை உயிர்ப்பித்திருந்தாலும் அவர் தூதரைத் தவிர வேறில்லை. அவர் கடவுள் கிடையாது; அதுமட்டுமல்லாமல் அவருக்குத் தாய் இருந்தார். ஈஸா (அலை) அவர்களும் அவரது தாயார் மர்யம் (அலை) அவர்களும் உணவு சாப்பிட்டார்கள் என்கின்ற போது அவர் எப்படிக் கடவுளாக இருப்பார் என்று அல்லாஹ் கூறிக் காட்டுகின்றான்.

மேலும் இந்த உலகில் யாரெல்லாம் ஈஸாவைக் கடவுளாக வழிபட்டார்களோ, அவரிடம் பிரார்த்தித்தார்களோ, அவரிடம் உதவி தேடினார்களோ அவர்களை மறுமையில் ஒன்று திரட்டி, அவர்கள் முன்னிலையில் ஈஸா நபியிடம் அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

"மர்யமின் மகன் ஈஸாவே! "அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!' என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?'' என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, "நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.

அல்குர்ஆன் 5:11

"இறைவா! நீயே குறைகளுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு தகுதியில்லாத ஒன்றை நான் எப்படிச் சொல்வேன். நானே உன்னால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு. நான் ஒரு மனிதன். நான் சில அற்புதங்களை நீ கொடுத்த நேரத்தில் உன்னுடைய அனுமதியுடன் நான் செய்திருக்கிறேன். இவ்வாறு இருக்கையில் என்னை வணங்குமாறு சொல்வேனா? நான் சொன்னதும் கிடையாது. அந்தத் தகுதியும் எனக்குக் கிடையாது. அவ்வாறு நான் சொல்லியிருந்தாலும் அது உனக்கு தெரியாமலா இருக்கும்? நான் மக்களிடம் சென்று என்னை வணங்குமாறு சொல்லியிருந்தால் நீ நியமித்துள்ள மலக்குமார்கள் விட்டு வைப்பார்களா? அதைப் பதிவு செய்திருப்பார்கள். அது எழுத்துப்பூர்வமாக உன்னிடத்தில் ஆதாரமாக இருக்கும். நான் செய்வதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டும் இருக்கிறாய். என்னுடைய மனதில் நான் என்ன நினைத்தாலும் அது உனக்கு தெரியாமல் இருக்காது. நான் சொல்லவில்லை என்று உனக்கும் தெரிந்திருக்க ஏன் இவ்வாறு என்னிடம் கேட்கிறாய்?'' என்ற கருத்தில் ஈஸா (அலை) அவர்கள் இறைவனிடத்தில் கேட்பார்கள்.

ஆனால் அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பது எதற்காக? அவர் அற்புதங்களைச் செய்ததால் அவருக்குக் கடவுள் தன்மை வந்துவிட்டது என்று நம்பியிருந்தார்களே! அந்த மக்களுக்குச் சம்மட்டி அடி கொடுப்பதற்காகத் தான் இந்த நீதிமன்றத்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். அவர்களுடைய நம்பிக்கையை மறுத்து. அவர்கள் தன்னை வணங்கியதையும் பொய்ப்பித்து கடைசியில் அவரைப் பின்வாங்கச் செய்து விடுகின்றான்.

மேலும் அதே போன்று நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாக புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி, இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களைத் தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து, தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகிறான். இன்ஷா அல்லாஹ் அவர்களுடைய சிறப்பைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.


EGATHUVAM JUN 2013