May 7, 2017

இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 15 - அரசியின் அன்பளிப்பு எது?

இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 15 - அரசியின் அன்பளிப்பு எது?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

"மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித் தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்'' என்றும் கூறினாள்.

(அல்குர்ஆன் 27:35)

தனக்குக் கட்டுப்பட்டு தனது அதிகாரத்தின் கீழ் வருமாறும், இஸ்லாத்தை ஏற்குமாறும் நபி சுலைமான் (அலை) அவர்கள், ஸபா எனும் பகுதியின் அரசிக்கு ஓர் கடிதத்தை "ஹுத்ஹுத்'' பறவையின் மூலம் அனுப்புகின்றார்கள்.

அக்கடிதத்தை அரசி பெற்றவுடன் தனது அவையினரிடம், அது தொடர்பாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்கிறாள். ஆலோசனையின் இறுதியாக அரசி கூறிய வார்த்தையே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னோட்டமாக சுலைமான் நபிக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி நிலைமையை கணிக்கப் போகிறேன் என்று அரசி கூறியதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இதன் பின்னர் நடந்தவை வசனத்தின் தொடர்ச்சியில் கூறப்படுகின்றது.

இதில் விஷயம் என்னவெனில் சுலைமான் நபிக்கு அந்த அரசி எதை அன்பளிப்புச் செய்தாள்? இதில் தான் விரிவுரையாளர்கள் தங்கள் கைவரிசையை செமத்தியாகக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் விளக்கவுரை:

ஆண், பெண் பணியாளர்களில் எண்பது பேரை தலையை மூடியவர்களாக அவள் அன்பளிப்பாக அனுப்பினாள். ஆண் அடிமைகள் யார்? பெண் அடிமைகள் யார்? என்பதை (சுலைமான்) அறிந்தால் அவர் நபியாவார். அவ்வாறு அறியவில்லையானால் அவர் நபியல்ல என்றும் கூறினாள் என ஸயீத் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம்11, பக்கம் 365

இப்னு ஜுரைஜ் கூறியதாவது: இருநூறு ஆண் அடிமைகள் மற்றும் இரு நூறு பெண் அடிமைகளை அவள் அன்பளிப்புச் செய்தாள். ஆண்களுக்கு பெண்களின் ஆடைகளையும் பெண்களுக்கு ஆண்களின் ஆடைகளையும் மாற்றி அணிவித்து சுலைமான் நபியிடம் அனுப்பியதாகவும், ஆண்கள் யார்? பெண்கள் யார் என்பதை சுலைமான் சரியாகக் கண்டுபிடிக்கின்றாரா? என்பதைச் சோதிப்பதற்காக அரசி இவ்வாறு செய்ததாகவும் விரிவுரை நூல்களில் கூறப்படுகின்றது.

நூல்: தப்ரீ, பாகம் 18, பக்கம் 53

அபூஸாலிஹ் கூறியதாவது: தங்க செங்கலை அவள் அன்பளிப்புச் செய்து, "அவர் (சுலைமான்) இவ்வுலகை விரும்பினால் அதை நான் அறிவேன். மறுமையை விரும்பினால் அதையும் நான் அறிவேன்' என்று அரசி கூறினாள்.

நூல்: தப்ரீ, பாகம்18, பக்கம் 55

அரசி, சுலைமான் நபிக்கு அன்பளிப்பு வழங்கினாள் என்ற தகவல் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அது என்னவென்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ எங்கும் கூறப்படவில்லை. இந்நிலையில் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டியது என்ன? சுலைமான் நபிக்கு அவள் எதையோ அன்பளிப்பாக வழங்கியிருக்கிறாள் என்று நம்பிவிட்டுப் போகவேண்டும். இதுவே குர்ஆன் கூறும் வழி. இதைத் தாண்டி, அது என்ன பொருள் என்ற ஆய்வுக்குள் செல்வது அவசியமற்றது, தேவையற்றது.

தான் கற்றுத் தராததை இறைவன் நம்மிடத்தில் விசாரிக்கப் போவதில்லை. ஆனால் விரிவுரையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்குத் தகுந்தாற் போல ஆளாளுக்கு ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள். இறைவனே கூறாமல் விட்டுவிட்டதை இவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இவ்வாறு கற்பனை அடிப்படையில் விளக்கம் அளிப்பது தேவை தானா? இமாம்களின் தஃப்ஸீர்களில் அர்த்தங்களை விட அபத்தங்களே நிறைந்துள்ளன என்பதை இதன் மூலம் அறியலாம்.

சில கட்டுக்கதைகள்

பறவையின் மூலம் சுலைமான் (அலை) ஸபாவின் அரசிக்குக் கடிதம் அனுப்பியதிலிருந்து அவள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரையிலான தகவல்கள் யாவும் 27வது அத்தியாயத்தின் துவக்கத்தில் கூறப்படுகின்றது. சுலைமான் நபிக்கும் அந்த அரசிக்கும் இடையில் நடந்த உரையாடல்கள், தன்னை விட வலிமையான அதிகாரத்தை இறைவன் சுலைமான் நபிக்கு அளித்ததை அறிந்த அரசி உடனே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என்பன போன்ற விஷயங்கள் யாவும் அதில் இடம் பெற்றுள்ளது. படிப்பினை பெறப் போதுமான தகவல்களை இறைவன் குர்ஆனில் கூறி விட்டான்.

ஆனால் இறைவன் குறிப்பிடாத, இது தொடர்பாக இறைத்தூதர் கற்றுத் தராத பல கட்டுக்கதைகள் விரிவுரை நூல்களில் இமாம்களின் விளக்கம் என்ற பெயரில் பரவலாகக் காணப்படுகின்றது. அந்த கதைகளையும் அறியத் தருகிறோம்.

சுலைமான் நபியும் ஷைத்தானும்

சுவையான (தூய்மையான) தண்ணீரை (எது என) எனக்கு தெரிவியுங்கள், அது பூமியிலிருந்தோ, வானத்திலிருந்தோ இருக்கக்கூடாது என சுலைமான் நபியிடம் அரசி கேட்டாள். சுலைமான் நபியின் வழக்கம் தனக்கு தெரியாத (கேள்வி) ஏதும் வந்தால் அதைப் பற்றி மனிதர்களிடம் கேட்பார். அதற்கான விளக்கம் அவர்களிடம் இருந்தால் சரி, இல்லையெனில் ஜின்களிடம் கேட்பார். அவர்கள் அறிந்தால் சரி, இல்லையெனில் ஷைத்தான்களிடம் கேட்பார். (இதற்கான பதில் மனித, ஜின்களில் யாருக்கும் தெரியாததால்) ஷைத்தான்களிடம் கேட்டார். இது மிகவும் எளிதானது என ஷைத்தான்கள் பதில் கூறின. குதிரைகளை ஓடவிட்டு பிறகு அதன் வியர்வையை பாத்திரத்தில் நிரப்புங்கள் (அதுவே அவள் குறிப்பிட்ட தண்ணீர்) என்று ஷைத்தான்கள் பதிலளித்தன. அதன் பிறகு குதிரைகளின் வியர்வை என சுலைமான் நபி, அவளிடம் கூறினார். நீங்கள் சரியாகச் சொன்னீர்கள் என்று அரசி கூறி, இறைவனின் நிறத்தை எனக்குச் சொல்லுங்கள் என (இரண்டாவதாக) கேட்டாள்.

இதைக் கேட்டு சுலைமான் நபி தனது அரியணையிலிருந்து பாய்ந்து சுஜுதில் விழுந்தார். இது சுலைமான் நபிக்கு (பதிலளிக்க) சிரமமளித்தது. அவள் சுலைமான் நபியிடமிருந்து எழுந்து நிற்க, அவளது படையினரும் (எழுந்து) பிரிந்து செல்லலானார்கள். இந்நிலையில் தூதுவர் (வானவர்) சுலைமானிடம் வந்து உமது காரியம் என்ன? என்று இறைவன் கேட்டான் என கூறினார். அதற்கு சுலைமான், இறைவா அவள் கூறியதை நீ நன்கு அறிவாய் என்று கூறினார். அதற்கு வானவர், உங்கள் அரியணையிடம் நீங்கள் திரும்பி செல்லுமாறும் அவளிடமும் அவளது படையினரிடமும் ஆளனுப்பி (அவர்களை வரவழைத்து) அவள் முதலில் உங்களிடம் கேட்டதை பற்றி திரும்ப அவர்களிடம் கேட்பீராக. இதை இறைவன் உமக்கு உத்தரவிடுகிறான் என்று (வானவர்) கூறினார்.

சுலைமானும் அவ்வாறே செய்தார். (அரசியும் அவளது படை) அவர்கள் சுலைமானிடம் வந்த போது நீ என்னிடம் என்ன வினவினாய்? என்று சுலைமான் (அரசியை நோக்கி) கேட்டார். நான் வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் இல்லாத சுவையான தண்ணீரை பற்றி கேட்டேன். அதற்கு நீங்கள் பதிலளித்து விட்டீர்கள் என அவள் கூறினாள். அதற்கு சுலைமான் வேறு ஏதேனும் என்னிடம் கேட்டாயா? என்று கேட்க, இதை தவிர வேறு எதுவும் நான் கேட்கவில்லை என்று அரசி பதிலளித்தாள். அவர்கள் அனைவருக்கும் அதை (இறைவனின் நிறம் பற்றிய கேள்வியை) மறக்கடிக்கச் செய்தான். 

(நூல்: அல்கஷ்பு வல் பயான், பாகம் 7, பக்கம் 213, 214)

இவ்வாறு ஒரு கட்டுக்கதை பரவலாக விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது. பல அபத்தங்கள் நிறைந்த கட்டுக்கதை இது. இப்படியொரு சம்பவம் நடந்ததற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ்வின் தூதர் இதைக் கூறினார்களா?

இதில் குதிரையின் வியர்வை சுவையாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது? யார் இதை சுவைத்துப் பார்த்தது? இதற்காகக் குதிரையை எதற்கு ஓட விட வேண்டும்? ஆடு, மாடு போன்ற பிராணிகளும் இந்த நிபந்தனையில் வருமல்லவா? எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு கதையைப் பாருங்கள்.

அவள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அவளது விஷயத்தில் இமாம்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். அவள் முஸ்லிமாகி விட்ட போது சுலைமான் நபி அவளை திருமணம் செய்ய விரும்பினார். இதை அவர் நாடும் போது அவளின் இரு கெண்டைக்கால்களில் இருந்த அதிகமான முடியை பார்த்ததால் (அதை) வெறுத்தார். எவ்வளவு அருவருக்கத்தக்கது? என்று கூறி இதை அகற்றும் வழி என்ன? என்று மனிதர்களிடம் கேட்டார். அவர்கள் கத்தி என்றனர். இதுவரை என்னை எந்த இரும்பும் தீண்டியதில்லை என்று அவள் கூறினாள். எனவே அது அவளது கால் கெண்டையை துண்டித்துவிடும் என்று கூறி கத்தியை சுலைமான் (வேண்டாமென) வெறுத்தார். பிறகு ஜின்களிடம் (வழி) கேட்டபோது எங்களுக்கு தெரியாது என்றனர். பிறகு ஷைத்தான்களிடம் கேட்டார். அதற்கு அவை சற்று தாமதித்து உங்களுக்காக அதை வெண்மையான வெள்ளியாக்குவதற்கு நாங்கள் தந்திரம் செய்கிறோம், அவளுக்காக முடி அகற்றும் கருவியையும் குளியலைறையையும் ஏற்பாடு செய்யுங்கள் என்று ஷைத்தான்கள் கூறின.

நூல்: தஃப்ஸீருல் குர்ஆன், பாகம்7, பக்கம் 214

இது இறைத்தூதர் மீது இட்டுக்கட்டிப் பொய் கூறும் ஒரு மாபாதகச் செயல். கண்டிப்பாக இஸ்லாத்தின் எதிரிகள், இறைத்தூதர்களின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் வேண்டும் என்றே இட்டுக்கட்டி அவிழ்த்து விட்டிருக்கும் ஒரு கட்டுக்கதை, பொய்க் கதை தான் இது.

எவ்வித மறுப்புமின்றி இது போன்ற கப்ஸாக்களை விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் எனில் விரிவுரை நூல்களை வேதமாகப் பார்க்கும் முஸ்லிம்கள், ஆலிம்கள் தங்கள் பார்வையைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? திருக்குர்ஆன் ஒன்று தான் தவறே இல்லாத வேதம் என்பதை இதன் மூலம் மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.

ஆதம் நபி நெருங்கிய மரம்

"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.

(அல்குர்ஆன் 2:35)

ஆதம் (அலை) அவர்களையும், அவர்களிலிருந்து அவருக்கான துணையையும் இறைவன் படைத்து இருவரையும் சொர்க்கத்தில் வசிக்கச் செய்தான். அதில் தாராளமாக உண்ணுமாறும் குறிப்பிட்ட மரத்தை இருவரும் நெருங்க வேண்டாம் என்றும் இறைவன் உத்தரவிட்டான். இதை இருவரும் மீறியதால் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது அனைவரும் அறிந்த வரலாறு தான். இறைவனின் உத்தரவை மீறினால் இறைவனின் கோபத்திற்கு, தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதே இவ்வரலாற்றிலிருந்து பெற வேண்டிய படிப்பினை ஆகும். இதில் விளக்குவதற்கு வேறு ஒன்றும் இல்லை.

இருவரையும் நெருங்க கூடாது என்று தடுத்த மரம் எதுவென்பதை இறைவன் குறிப்பிடவில்லை. அதைக் குறிப்பிடாமல் போவதால் இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினையில் எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை.

தஃப்ஸீர் நூல்களில் அது எந்த மரம் என்று எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இமாம்கள் விளக்கமளித்துள்ளனர். அது பற்றி:

வஹ்ப் பின் முனப்பஹ் கூறியதாவது: இறைவன் ஆதம் (அலை) அவர்களை (நெருங்க விடாது) தடுத்த மரம் கோதுமை ஆகும். எனினும் சொர்க்கத்தில் அதன் ஒரு தானியம், மாட்டின் இரு கொம்புகளை போன்றது. நுரையை விட மென்மையானது. தேனை விட சுவையானது.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 283

அது அத்திமரம் என்று கதாதா கூறுகிறார்.

அது பேரிச்ச மரம் என அபூமாலிக் கூறுகிறார்.

அது ஆரஞ்சு மரம் என யஸீத் கூறுகிறார்.

ஜஃத் பின் ஹுபைரா கூறுவதாவது: ஆதம் (அலை) அவர்களை இறைவன் சோதித்த மரம் திராட்சை ஆகும்.

என்ன நடக்கிறது இங்கே? இறைவன் கூறாத ஒன்றை ஆளாளுக்கு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்ற, வாய்க்கு வருகின்ற பழங்கள் அத்தனையையும் குறிப்பிடுகின்றார்கள். இவை தான் குர்ஆனை நன்கு விளங்கிட உதவும் விளக்கங்களா? தஃப்ஸீர்களா?

இவர்கள் குறிப்பிட்டதில் சிலவற்றுக்கும் மரத்திற்கும் சம்பந்தமில்லை என்பது தனி விஷயம். கோதுமை எந்த மரத்தில் விளைகின்றது?


சாதாரண அறிவும், கொஞ்சம் இறை நம்பிக்கையும் உள்ள யாரும் இது அதிகப் பிரசங்கித்தனம், இறைவனுடைய எல்லையை மீறும் எகத்தாளம் என்று அறிந்து கொள்ள இயலும். இதிலிருந்து இமாம்களின் விளக்கங்களில் சில உண்மை இருந்தாலும் உளறல்களுக்கும் பஞ்சமில்லை என்ற பேருண்மையை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொண்டால் சரி.

EGATHUVAM AUG 2012