இணை கற்பித்தல் தொடர்:
15 - அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!
உரை: பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
ஒவ்வொரு மனிதருக்கும் தனது தாய் தந்தையர் மீது அன்பு, பாசம் இருக்கும். கெட்ட மனிதருக்கு வேண்டுமானால் பாசம் இல்லாமல்
இருக்கலாம். ஆனால் நல்ல மனிதர் எவருக்கும் தாய், தந்தை
மீது பாசம் இல்லாமல் இருக்காது. அவன் தன்னுடைய பெற்றோர் இவ்வுலகில் நன்றாக இருக்க வேண்டும்
என்று ஆசைப்படுவான். அவர்கள் மரணித்து விட்டால் மறுமையில் அவர்கள் நன்றாக இருப்பதற்காக
நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? என்று சிந்திப்பான். மார்க்கத்தை
சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறந்தவர்களுக்காக கத்தம் பாத்திஹா ஓதுவது கூட அவர்களுக்கு
மறுமையில் ஏதாவது நன்மை கிடைக்கட்டுமே என்ற ஆவலில் தான்.
பெற்றோரைக் காப்பாற்ற முடியாத நபிகள் நாயகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய தகப்பனாரைப் பார்த்ததே
கிடையாது. நபியவர்கள் தமது தாயாரின் வயிற்றில் இருக்கும் போதே அவர்களுடைய தகப்பனார்
இறந்து விட்டார். தாயாரும் அவர்கள் ஆறு வயதை அடைந்த போது மரணித்து விடுகிறார்கள். ஆனால்
அவர்களுக்குத் தாய், தந்தையின் மீது பாசம் இருந்தது.
ஒரு சமயம் மதீனாவிற்குப் பயணம் செய்து போகும் வழியில் தனது தாயார்
இறந்த இடத்தைக் கடந்து செல்லும் போது அவருக்காகப் பாவ மன்னிப்பு தேட அல்லாஹ்விடம் அனுமதி
கேட்கிறார்கள். எனது தாயார் நான் நபியாக அனுப்பப்படுவதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக்
கொள்ளாமலேயே மரணித்து விட்டார்கள். எனவே அவர்களுக்காக நான் பாவமன்னிப்பு கேட்கலாமா? என்று அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அல்லாஹ் அதனை மறுத்து விடுகின்றான்.
இணை வைக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டேன்.
அது உம்முடைய தாயாக இருந்தாலும் சரியே என்று இறைவன் கூறிவிட்டான்.
ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள் அனைத்து இணை வைப்புக் காரியங்களையும்
செய்து விட்டு,
தங்களை நபிமார்கள் காப்பாற்றுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்காக
மறுமையில் சிபாரிசு செய்வார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இணை வைப்பில் இறந்து போன
தம்முடைய தாய் தந்தைக்கு நபியவர்களால் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய முடிந்ததா?
அதுவும் நபியவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்திற்குப் பரிந்துரை
செய்யவில்லை. "என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு தேட வேண்டும். அதற்கு அனுமதி கொடு' என்று பாவமன்னிப்புத் தேட அனுமதி தான் கேட்கின்றார்கள். அதையும்
அல்லாஹ் மறுத்துவிட்டான்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நான் இறைவனிடத்தில் எனது தாயாருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கு
அனுமதி கேட்டேன். ஆனால் இறைவன் அதற்கு அனுமதி தரவில்லை. பிறகு அவருடைய அடக்கத்தலத்தை
சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு இறைவன் அனுமதி கொடுத்தான்.
நூல்: முஸ்லிம் 1621
ஆக, பெற்ற தாய் இணை வைத்து விட்டால்
கூட அவர்களுக்கு பாவமன்னிப்பு தேடுவதற்கும், பரிந்துரை
செய்வதற்கும் நபிமார்களுக்கே அனுமதியில்லை எனும் போது நாம் இணை வைத்த நிலையில் மரணித்து
விட்டால் நமக்கு இந்த அவ்லியாக்கள், மகான்கள் பரிந்துரை
செய்ய முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இன்னும் நபி (ஸல்) அவர்களுடைய தந்தைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதுரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை
எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள்,
"(நரக) நெருப்பில்'' என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி
(ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும்
(நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 302
தூதர் அனுப்பப்படாத கால கட்டத்தில் வாழ்ந்தால் கூட அவர்கள் ஏகத்துவத்தை
விட்டு விட்டு இணை வைப்பில் இருந்தால் அவர்களை மன்னிக்க அல்லாஹ் தயாராக இல்லை எனும்
போது தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயம் ஏகத்துவத்தை விட்டு விட்டால் நிலைமை என்னவாகும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தைக்குத் தூதர் அனுப்பப்பட்டாரா? அவர்களுடைய தாயாருக்குத் தூதர் வந்தாரா? அந்தத் தூதர் சொல்லி அதை அவர்கள் நிராகரித்தார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்களுக்கே மன்னிப்பு இல்லை என்கிறான்.
ஆனால் நமக்குத் தூதர் வந்திருக்கிறார்; வேதம் இறக்கப்பட்டிருக்கின்றது; அது பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதில் ஏகத்துவத்தைப் போதிக்கும்
வசனங்கள் திரும்பத் திரும்ப போதிக்கப்பட்டிருக்கின்றது. குர்ஆன் தமிழாக்கம் வந்திருக்கின்றது.
ஹதீஸ் நூல்கள் வந்திருக்கின்றன. இதன் பிறகும் நாம் ஏகத்துவத்தைப் புறக்கணித்து விட்டு
இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தால் நம்மை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? நமது நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டாமா?
ஆக, அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும்
பெற்ற தாய் தந்தையை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. பெற்ற தாய் தந்தையருக்காக
அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை. அந்த அதிகாரத்தை
அவர்களிடமிருந்து பறித்து விட்டான். நான் எடுத்தது தான் முடிவு. அதை யாராலும் மாற்ற
முடியாது என்று கூறிவிட்டான். மேலும் அவன் தனது எஜமான் தனத்தை யாருக்கும் விட்டுக்
கொடுக்க மாட்டான் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றது.
நபிகளாரின் மரணம் தரும் படிப்பினை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள்
என்ற வதந்தி மக்களிடத்தில் பரவியவுடன், அந்தக் களத்தில்
நின்ற அனைத்து ஸஹாபாக்களும் தங்களுடைய உயிரைக் கையில் பிடித்தவாறு. தப்பித்தால் போதும்
என்று பின்வாங்கி ஓடுகின்றார்கள். அந்த நபித்தோழர்களைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும்
வசனத்தை இறக்குகிறான்.
முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று
விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி
சென்று விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு
எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குகிறான்.
அல்குர்ஆன் 3:144
இதே வசனத்தை இன்னொரு சம்பவத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்த உடனே அங்கிருந்த ஸஹாபாக்கள் அனைவரும் தவ்ஹீதைத்
தெளிவாக விளங்கிய பின்னரும், குர்ஆனை நன்றாகத் தெரிந்திருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்கள் மீது வைத்த பாசத்தின் காரணமாக அவர்கள் மரணிக்கவில்லை
என்று கூறிவிடுகிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் என்றால் சாதாரணமான ஆளா? அவர்கள் எப்படி மரணிக்கலாம்? அவர்களுக்கு
மரணம் வருமா?
என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. நபியவர்களின் கடைசிக்
காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்கள் இவ்வாறு நினைத்தால் பரவாயில்லை. ஆரம்பத்திலேயே
இஸ்லாத்தை ஏற்ற உமர் (ரலி) அவர்கள், நபியவர்கள்
மரணிக்கவில்லை என்று வாதிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய கையில் வாளை எடுத்துக் கொண்டு, யாராவது நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று சொன்னால் அவரது
தலையை வெட்டி விடுவேன் என்றும் கூறுகிறார்கள்.
சிலர் மட்டும் நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்றே நம்புகிறார்கள்.
ஆனால் உமர் (ரலி) அவர்கள், அந்தச் சிலரையும் மிரட்டி தன்னுடைய
கருத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். அந்த அளவுக்கு நபிகளாரின் மீது பாசம் வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் இல்லை. அப்போது அவர்கள் மதீனாவில்
இல்லை. பிறகு நபியவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களைப்
பார்க்க வருகிறார்கள். அங்கு வந்த போது நடந்த நிகழ்ச்சியை கேள்விப்படுகிறார்கள். இதற்குப்
பிறகு நடந்த சம்பவத்தைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
என் தந்தை அபூபக்கர் (ரலி) மதீனாவிற்கு சற்று தொலைவிலுள்ள சுன்ஹ்
என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற
தகவல் எட்டுகிறது. அப்போது உமர் (ரலி) எழுந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்கள் இறக்கவில்லை. என்
உள்ளத்தில் அப்படித்தான்- நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை
அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி-ஸல்-அவர்கள்
இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்'' என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்து அல்லாஹ்வின்
தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். நீங்கள்
உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள்.
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை
உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.
(வெளியே வந்தபின்
உமர் அவர்களை நோக்கி) "நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லையென்று சத்தியம் செய்பவரே!
நிதானமாயிருங்கள்'' என்று கூறினார்கள். அபூபக்கர்
(ரலி) பேசிய போது உமர் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள்.
அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப்
போற்றி விட்டு,
"முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) இறந்து விட்டார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர், அல்லாஹ் (என்றும்)
உயிர் வாழ்பவன். அவன் இறக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.
மேலும், "(முஹம்மதே!) நீர் இறப்பவரே.
அவர்களும் இறப்போரே.'' எனும் (திருக்குர்ஆன் 39:30) வசனத்தையும், "முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.
அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே
முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்'' என்னும் (திருக்குர்ஆன் 3:144) வசனத்தையும் ஓதினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூபக்கர் (ரலி) இந்த வசனத்தை ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இதனை
இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்கரிடமிருந்து அதை செவியேற்ற
மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.
நூல்: புகாரி 3667, 3668
இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியவுடன் உமருடைய கையில்
இருந்த வாள் கீழே விழுகின்றது. நாம் பெரிய தவறையல்லவா செய்துவிட்டோம். நபியவர்கள் மீது
கொண்ட அளவு கடந்த பாசத்தினால் நாம் எதையும் சிந்திக்காமல் பேசி விட்டோமே என்று நினைக்கிறார்கள்.
அதுவரை உமர் (ரலி) அவர்களின் பக்கம் இருந்த மற்ற ஸஹாபாக்களும், அபூபக்கர் இவ்வாறு அடுக்கடுக்கான ஆதாரத்தையும், சான்றுகளையும் வைத்தவுடன் தாங்கள் செய்ததைத் தவறு என்று உணர்ந்தனர்.
அதற்கு பிறகு தான் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற செய்தியை அனைவரும் ஒப்புக்
கொள்கிறார்கள்.
நாம் இங்கு இதனை குறிப்பிடுவதற்குக் காரணம், மனிதன் என்ற அடிப்படையில் இந்த மாதிரியான பலவீனம் வரும்போது
கூட அதற்கும் ஒரு மறுப்பு கொடுக்கும் விதமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனை ஆக்கி வைத்திருக்கிறான்.
இந்தக் குர்ஆனுடைய வசனங்களை வைத்துத் தான் அந்த மக்கள் வழிகேட்டிற்குப் போகாமல் தப்பித்துக்
கொண்டார்கள்.
அந்த வசனம் இன்றைக்கு வரைக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால்
இந்த மக்களோ,
அவ்லியாக்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு
இருக்கிறார்கள். மவ்லுது ஓதினால் நபியவர்கள் வருவார்கள் என்று நம்புகிறார்கள். யா நபி
ஸலாம் அலைக்கும் என்று ஓதினால் நபியவர்கள் தாங்கள் இருக்கும் சபைக்கு வந்து விடுவார்கள்
என்று நம்புகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் குர்ஆனை
எந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள்?
நபியவர்கள் மீது அன்பு வைக்கின்றோம் என்ற பெயரில் இணை வைத்தல்
காரியம் நடக்கிறது. நபியவர்கள் மீது அபூபக்கர் (ரலி) வைத்த அன்பு, பாசத்தை விட நாம் பாசம் வைத்துவிட முடியுமா? உலகத்தில் எவரும் நபியவர்கள் மீது அபூபக்கர் வைத்த அன்பை விடக்
கூடுதலாக அன்பு வைத்துவிட முடியுமா?
தமது தோழர்களில் அபூபக்கருக்கு நிகராக யாரும் இல்லை என்று நபி
(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் அவரை மட்டும் தான் நபியவர்களுடைய
தோழர் என்று சொல்கின்றான். வேறு யாரையும் நபியவர்களுடைய தோழர் என்று சொல்லவில்லை. பின்வரும்
ஹதீஸ் அதற்குச் சான்றாக அமைகிறது.
நபியவர்களை மக்கா காபிர்கள் கொல்வதற்கு தேடிய நேரத்தில் நபியவர்களும்.
அபூபக்கர் (ரலி) அவர்களும் ஸவ்ர் என்னும் குகையில் இருந்தனர்.
நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் ("ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒüந்து
கொண்டு)இருந்தேன். அப்போது நான் இணை வைப்பாளர்கüன்
(கால்) சுவடுகளைக் கண்டேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத்
தேடி வந்துள்ள) இவர்கüல் ஒருவன் தன் காலைத் தூக்கி(க்
குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவானே!'' என்று
(அச்சத்துடன்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "எந்த
இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி)
நூல்: புகாரி 4663
நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை)
மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், "நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான்.
தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான்.
(தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது.
அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:40
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த
போது)மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், "அல்லாஹ்
ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக்
கொண்டார்'' என்று சொன்னார்கள். உடனே, அபூபக்ர்
(ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்கüன் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து)
அழுதார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரும்பியதைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அüக்கப்பட்ட
அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். அல்லாஹ்வின் தூதர் தாம் அந்த
சுயாதிகாரம் அüக்கப்பட்ட அடியார். (நபி -ஸல்- அவர்கüன் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூபக்ர் -ரலி- அவர்கள்
அறிந்து கொண்டார்கள். ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்கüல் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
"தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு
மக்கüலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத
வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களையே
ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும்
அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன.
(எனது இந்தப்) பள்ü வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல்
இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3654
நபிகளாருக்குப் பொருளாதார ரீதியாக அவ்வளவு உதவிகளைச் செய்தவர்
அபூபக்கர் (ரலி) ஆவார்கள். துவக்கத்தில் மக்காவில் இருந்த காலத்தில் அவர் தான் அதிக
அளவிலான பொருளாதார உதவி செய்தவர். அதுமட்டுமல்லாமல் நபிகள் நாயகம் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு
செல்வதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தவரும் அவர் தான். அவருடைய பொருட்செலவில்
தான் நபிகளாரை அழைத்துக் கொண்டு வந்தார்.
இப்படிப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் மீது இந்த
அளவுக்குப் பாசம் இருந்தும் கூட குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு, இறைத்தூதர் என்றால் அவர்களும் மனிதர் தான். அவர்களுக்கும் மரணம்
ஏற்படும். மற்ற மனிதர்கள் மரணிப்பதைப் போல் அவர்களும் மரணிப்பார்கள். மரணிக்காத தன்மை
இறைவனுடைய தன்மை, இதை நபியவர்களுக்கு ஒருபோதும்
நாம் கொடுக்கக்கூடாது என்று மக்களிடம் அறிவிக்கின்றார்கள்.
இதைப் போன்று, நபி (ஸல்)
அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நாம் சொல்லும் போது, "இவர்களுக்கு நபியவர்கள் மீது பாசம் இல்லை' என்று நம்மை விமர்சிக்கின்றார்கள். நபிகள் நாயகம் மரணிக்கவில்லை
என்று சொல்வது தான் அவர்கள் மீது காட்டும் அன்பு என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள்.
பெற்ற மகளையும் காப்பாற்ற முடியாது
நபியவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை அல்லாஹ்
படிப்படியாகத் தான் கட்டளையிடுகின்றான். நபியாகத் தேர்ந்தெடுத்த மாத்திரத்திலேயே அனைவருக்கும்
சொல்ல வேண்டும் என்று கட்டளையிடவில்லை. ஆரம்பத்தில் வந்த கட்டளை என்னவென்றால்
"நீர் ஓதுவீராக'' என்பது தான். மற்றவர்களுக்குப்
பிரச்சாரம் செய்யச் சொல்லி எந்தக் கட்டளையும் வரவில்லை.
படைத்த உமது இரட்சகனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1)
பிறகு இரண்டாவதாகத் தான், "உறவினர்களுக்குச் சொல்வீராக' என்ற
கட்டளை வந்தது.
"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருüய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "குறைஷிக் குலத்தாரே!' என்றோ அது
போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), "ஓரிறை
வணக்கத்தையும்,
நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து)
விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற
என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால்
சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின்
தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை
(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற
முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்
(தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து
என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2753, 4771
இந்த செய்தியின் மூலம், இஸ்லாத்தை
மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டும் தான் உம்முடைய பணியே தவிர, அவர்களை நேர்வழிப்படுத்துவதும், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்துரை செய்து அவர்களை தண்டனையிலிருந்து
காப்பாற்றுவதும், மறுமையில் வெற்றி பெற வைப்பதும்
உமது கடமையல்ல. அல்லாஹ் நாடினால் உமது மகளைக் கூட தண்டித்து விடுவான்; தண்டிக்காமல் விட்டும் விடுவான் என்பதை இறைவன் புரிய வைக்கிறான்.
ஆக, நபியவர்களுக்கே இந்த நிலைமை
என்றால் நம்மை எவ்வாறு பெரியார்கள், மகான்கள், அவ்வலியாக்கள் எல்லாம் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல முடியும்? முரீது வாங்கினால் நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு போய் சேர்த்து
விடுவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? முரீது கொடுக்கக்
கூடியவன் சொர்க்கத்திற்குச் செல்வானா என்பதையே சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால்
முரீது கொடுத்து நம்மை ஏமாற்றிய காரணத்தினாலேயே அவன் நரகத்திற்குச் சென்றுவிடுவான்.
தமக்காக பாவ மன்னிப்பு தேடிய நபிகள் நாயகம்
நாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம். இதற்காக ஒவ்வொரு நாளும் நாம்
பாவமன்னிப்பு தேடுகின்றோமா? இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாப் பாவத்தையும்
மன்னித்து விட்டான். பாவமன்னிப்பு தேடாவிட்டாலும் அவர்களை மன்னித்து விட்டான். இதைப்பற்றி
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான
பாதையைக் காட்டுவதற்காகவும் அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும் இவ்வெற்றியை
அளித்தான்.
அல்குர்ஆன் 48:2,3
இந்த வசனம் இறங்குவதற்கு முன்னால் நீ செய்த பாவத்தையும், இந்த வசனம் இறங்கிய பிறகு இனிமேல் நீ செய்கின்ற பாவத்தையும்
நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.
நபியவர்களிடம் எந்தப் பாவங்கள் நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அல்லாஹ்விடத்தில்
கேள்வி கிடையாது. ஏனென்றால் முன்தேதியிட்டே அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டான்.
இருந்தாலும்,
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், தாமும்
மனிதன் தான்,
தம்மிடமும் பாவம் ஏற்படத் தான் செய்யும் என்று நினைத்து அல்லாஹ்விடத்தில்
அதிகமாக பாவமன்னிப்பு தேடக்கூடியவர்களாக இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல்
அஸ்தக்ஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6307. முஸ்லிம்
4870,4871
நபியவர்களுடைய நிலை இவ்வாறு இருக்கும் போது, நாம் அவர்களிடம் போய், "அன்த்த
கஃப்ஃபாருல் ஹதாயா'' (நீர் தான் பாவங்களை மன்னிப்பவர்)
என்று மவ்லீதை ஓதுகின்றோமே! இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
EGATHUVAM OCT 2013