இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 16 - அல்லாஹ்வை விட அபூயஸீத் சிறந்தவராம்?
தொடர்: 16
கஸ்ஸாலியின் அறியாமை
மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி
தமிழில்: எம். ஷம்சுல்லுஹா
இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்த்து
வருகிறோம். அதில் அறிஞர்கள் வழங்கிய அதிகமான மார்க்கத் தீர்ப்புகள், ஆன்மீகம், மறைமுக ஞானம் என்ற பெயரில் இஹ்யாவில்
இடம்பெற்றுள்ள அபத்தங்கள் பற்றி அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் பார்த்தோம்.
இப்போது, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்
என்பதற்கான அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.
இஹ்யாவில் அடங்கியிருக்கும் தீய நச்சுக் கருத்துக்கள்
இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிரூட்டுதல்) என்ற இந்தப்
பெயரைக் கேட்ட மாத்திரத்தில் குர்ஆன், ஹதீஸை இந்த
நூல் உயிர்ப்பிக்கப் போகின்றது என்றே யாரும் நினைப்பார்கள். உள்ளே நுழைந்தால் தான்
இது மார்க்கக் கல்வியைச் சாகடிக்கும் நூல் என்று விளங்கிக் கொள்வார்கள்.
குர்ஆன், ஹதீஸ் கூறுகின்ற போதனைகளை இது
குழிதோண்டிப் புதைத்து விடும்.
குர்ஆன், ஹதீஸ் கூறுகின்ற ஞானத்தை, அகமிய ஞானம் வந்து உறுதி செய்தால் தான் அது சரியான ஞானம். இல்லையென்றால்
அது அசத்தியம் என்ற கஸ்ஸாலியின் கூற்றை மேற்கோள் காட்டி இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்
கூறியதை முன்னர் பார்த்தோம். கஸ்ஸாலியின் இந்தக் கருத்து, தீனை விட்டு வெளியேற்றுவதற்கும், இறைமறுப்பிற்கும் உரிய இரண்டு அடிப்படைகளாகும் என்று இப்னு தைமிய்யா
கூறியதையும் கண்டோம்.
அல்லாஹ்வைப் பார்க்காதே! அபூயஸீதைப் பார்!
இஹ்யாவிலிருந்து ஒரு முஸ்லிம் இதைப் படித்தால் போதும். அல்லாஹ்வையும்
மறுமை நாளையும் நம்பியிருந்தால் அவர் இதை வைத்தே இஹ்யாவைத் தூக்கி எறிந்துவிடுவார்.
இஹ்யாவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.
அபுத்துராப் அன்னக்ஷபீ என்பார் தன்னுடைய சீடர்களில் ஒருவருடைய
செயல்பாட்டின் மூலம் கவரப்பட்டார். அதனால் அவரைத் தனது நெருக்கமானவராக ஆக்கி, அவரது நலன்களைக் கவனித்து வந்தார். சீடர் தொடர்ந்து இறை தியானத்திலும்
அவனது தேடலிலும் மூழ்கியிருந்தார். நீ அபூயஸீதைப் பார்த்தால் என்ன? என்று ஒரு நாள் சீடரிடம் அபூ துராப் கேட்டார். "நான் வணக்கத்தில்
ஈடுபட்டிருக்கிறேன்; என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சீடர் பதில் தெரிவித்தார்.
"நீ அபூயஸீதைப் பார்த்தால் என்ன?' என்று அபூதுராப் திரும்பத் திரும்ப நச்சரிக்கவும் சீடருக்குக்
கோபம் வந்து விட்டது. அபூயஸீதிடம் எனக்கு என்ன வேலை? நான்
அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன். அதனால் எனக்கு அபூயஸீதைப் பார்க்க வேண்டிய அவசியம்
இல்லை என்று கூறினார்.
இப்போது அபூதுராபுக்குக் கோபம் வந்து, "உனக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வைப் பார்த்து விட்டோம் என்ற
ஏமாற்றத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அபூயஸீதை நிங்கள் ஒரு தடவை பார்ப்பது அல்லாஹ்வை
எழுபது தடவை பார்ப்பதை விடச் சிறந்தது'' என்று கூறினார்.
இந்த உலகத்தில் அல்லாஹ்வை யாரும் பார்க்க முடியாது. ஏனென்றால்
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன்
நுட்பமானவன்;
நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 6:103
மரணிக்காத வரை உங்களுடைய இறைவனை நீங்கள் பார்க்க முடியாது என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலி
நூல்: இப்னுமாஜா 4067
நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் இந்த உலகில் அல்லாஹ்வைப் பார்க்க
முடியாது என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கே இந்த இரண்டு ஆதாரங்கள்
போதும்.
இதன்படி இந்த உலகில் எவரும் அல்லாஹ்வைக் காண முடியாது எனும்
போது, அல்லாஹ்வைப் பார்த்தேன் என்று ஒரு சீடர் சொல்வதும், அதை ஆன்மீக குரு (?) ஆமோதிப்பதும்
பகிரங்கப் புளுகும் புருடாவுமாகும்; குர்ஆன் ஹதீஸ்
ஆதாரங்களை நேரடியாக மறுப்பதாகும்.
இந்த இஹ்யாவைத் தான் தமிழக உலமாக்கள் தங்கள் நெஞ்சத் தாமரையில்
வேதமாக ஏந்தியுள்ளனர்.
இறைக்காட்சியே பேரின்பம்
ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வை இந்த உலகில் பார்க்கின்ற வாய்ப்பு
கிடைக்கின்றது என்றால் அதை விடச் சிறந்த பாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது. இந்த
உலகத்தில் உள்ள அனைத்தையும் விட மிகப்பெரிய பாக்கியமாகும்.
மறுமையில் சுவனத்தில் உள்ள பேறுகளை விட வேறெந்த சிறந்த பேறும்
இருக்க முடியாது. அவை அத்தனையும் விட படைத்த இறைவனைப் பார்ப்பது தான் பேரின்பம் என்று
பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்)
அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள்
விரும்புகின்றீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள்
"(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச்
செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?'' என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும்
இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக்
(காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் 266
ரப்புல் ஆலமீனைப் பார்ப்பது, சுவனத்தில்
அத்தனை பேரின்பங்களை விடவும் சிறந்தது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட
பாக்கியத்தை விட, அல்லாஹ்வைப் பார்க்கும் பேரின்பத்தை
விட அபூயஸீத் என்ற அற்ப மனிதனைப் பார்ப்பது சிறந்தது என்று அபூதுராப் என்பவர் சொல்கின்றார்
என்றால் இந்த ஆசாமிகள் யார்? இவர்கள் இஸ்லாத்தின் பெயரால்
அத்வைதம் என்ற மோசமான சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.
இந்த விஷக்கருத்தைப் பதிய வைத்து, முஃமின்களின் பாதையை மாற்றி விடுகின்ற வேலையைச் செய்கின்ற கஸ்ஸாலி
யார்? இறை தரிசனத்தை வெறுப்பவன் வேறு யாராக இருக்க முடியும்?
இறை நிராகரிப்பு, இணை வைப்பு
வார்த்தைகளைக் கொப்பளிக்கின்ற இந்த இஹ்யாவை ஆதரிப்பவர்கள் இஸ்லாத்தில் இருப்பதாகக்
கற்பனை செய்ய முடியுமா? இவர்கள் ஏகத்துவவாதிகள் மீது
இறைமறுப்பு சாயத்தைப் பூசுவது வேடிக்கையான விஷயமாகும்.
அறப்போரை அலட்சியம் செய்தவர்
இஹ்யாவில் பாட வாரியாகப் பார்த்தால் அதில் அதிகமான பாடங்களைக்
கொண்டு வந்திருக்கிறார். வறுமை, துறவு, செவியேற்பதன் ஒழுக்கங்கள், தனிமை, மனதைப் பயிற்றுவித்தல், இரு ஆசைகளைத்
தகர்த்தெறிதல் என்ற தலைப்புகளின் கீழ் அந்தப் பாடங்களை அளிக்கின்றார். பசியின் சிறப்பு, பசியின் பலன்கள் போன்றவையும் அவற்றில் அடங்கியிருக்கின்றது.
இந்தப் பாடங்களை அவர் கூறாமல் விட்டிருந்தாலும் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாதிப்பை
ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் அவற்றை விட்டு விடுவது தான் சிறந்த காரியமாகும்.
வேறு சில பாடங்கள், அதில் அடங்கியிருக்கும்
அசத்தியக் கருத்தை எடுத்துச் சொன்னால் அது நீண்டு கொண்டே போகும்.
மார்க்க அடிப்படையிலான முஸ்லிம்களுடைய நூல்களில் ஜிஹாத் என்ற
தலைப்பு இடம்பெறாமல் இருக்காது. காரணம், அந்த அளவுக்கு
அதைச் சிறப்பித்து குர்ஆன் வசனங்கள், நபி (ஸல்)
அவர்களின் ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. இதுதான் இஸ்லாமிய சமுதாயத்திற்குரிய போராட்ட உணர்வாகும்.
(மார்க்கம் அனுமதித்த வழியில் இஸ்லாமிய அரசு செய்யும் ஜிஹாதை இது குறிக்கின்றது. இன்றைய
காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தப்படும் ஜிஹாத் அல்ல.)
கண்ட கண்ட பாடங்களை எல்லாம் கொண்டு வந்த கஸ்ஸாலி, இஸ்லாத்தின் உயிர்நாடியான ஜிஹாத் என்ற பாடத்தை, மார்க்க ஞானங்களுக்கு உயிரூட்டல் என்ற இந்த நூலில் ஏன் கொண்டு
வரவில்லை? கஸ்ஸாலியின் பக்தகோடிகள் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்? ஜிஹாத் என்ற வணக்கம், மார்க்கத்தை
உயிர்ப்பிக்கவில்லை என்றால் வேறெது உயிர்ப்பிக்கப் போகின்றது?
பொதுவாக ஆலிம்கள் என்றால் அவர்களிடம் வீரம், துணிச்சல் எதுவும் இருக்காது. நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர், ஊர் முத்தவல்லி
போன்றோரைப் பார்த்துப் பயந்து நடுங்குவது தான் ஆலிம்களின் குணாதிசயமாகிவிட்டது.
காவல்துறை, காக்கிச் சட்டைகளைக் கண்டால்
ஆலிம்களின் அடிவயிறுகள் கலங்க ஆரம்பித்து விடும். அதிலும், நியாயமான கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதையெல்லாம்
ஆலிம்களிடம் எதிர்பார்க்கவே முடியாது. இந்த வீர உணர்வுகளை மங்கி, மழுங்கிப் போகக்கூடிய வேலையைத் தான் கஸ்ஸாலியின் துறவு போன்ற
பாடங்கள் செய்கின்றன.
இப்போது நாம் இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் இரு அட்டைகளுக்கு
இடையே கொட்டி,
குவிந்து கிடக்கின்ற, குடலைப் புரட்டுகின்ற
நச்சுக் கருத்துக்களை அலசத் துவங்குவோம்.
ஒவ்வொன்றாக தோலுரித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு
எடுத்துக் காட்ட ஆரம்பித்தால் அதற்கு பல பாகங்கள் தேவைப்படும். ஒரு சில எடுத்துக்ôகட்டுக்களை, மேற்கோள்களைக்
காட்டினால் போதும். அனைத்தையும் எடுத்துக் காட்டத் துவங்கினால் அதற்கு இந்தச் சிறு
ஏடு தாங்காது.
மனோஇச்சையை விட்டு விட்டு, மார்க்க
ஆதாரங்களை மட்டும் பார்ப்பவருக்கு இவையே போதுமானதாகும். இவர்களிடத்தில் அந்த ஆதாரங்கள்
மட்டும் தான் பேசும். குர்ஆனுடைய நடைமுறையும் இது தான்.
பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
இந்தத் தலைப்புக்குள் செல்வதற்கு முன்னால், கஸ்ஸாலியின் ஆளுமையை, ஹதீஸில் அவருக்குரிய
இடத்தை முதலில் பார்த்துக் கொள்வோம். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதற்குரிய
தண்டனையை, அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கையை நாம் காணலாம்.
நான் ஹதீஸைத் தெரிந்தவன் அல்லன். அதைக் கற்றவனும் அல்லன் என்று
கஸ்ஸாலியே வலிய வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்.
ஹதீஸில் எனக்குப் போதிய ஞானமில்லை என்று கானூன் அத்தஃவீல் என்ற
தனது சிறிய ஏட்டில் குறிப்பிடுகின்றார்.
"ஹதீஸைக் கற்க முனைந்ததும், ஹதீஸ்
துறை அறிஞர்களுடன் அமர்ந்ததும், புகாரி முஸ்லிமைப் பார்ப்பதும்
தான் கஸ்ஸாலியின் இறுதிக்கட்ட வாழ்க்கையாக அமைந்தது. அவர் மட்டும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால்
வெகு குறைவான காலத்தில் மற்றவர் அனைவரையும் ஹதீஸ் துறையில் விஞ்சியிருப்பார். ஆனால்
ஹதீஸ் அறிவிப்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்று
தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
"மூஸா பின் இம்ரான் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேச்சை செவியுற்றது
போன்று அவ்லியாக்களில் ஒருவர் செவியுற்றார்'' என்றும், அதுபோன்ற மோசமான கருத்துக்களையும் கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார்.
அவரது இறுதிக்கட்ட வாழ்க்கையில் சூஃபிய்யாக்ளின் பாதை, நோக்கத்தை அடைய உதவாது என்று விளங்கி நபிவழியில் நேர்வழியைத்
தேடத் துவங்கிவிட்டார். புகாரி, முஸ்லிமில் முழு ஈடுபாட்டுடன்
அவர் இறங்கி விட்டார்.
நூலாசிரியர் மக்ராவியின் விளக்கம்
தனக்கு ஹதீஸில் ஞானமில்லை எனறு கஸ்ஸாலி ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்து விட்டார். கஸ்ஸாலியின் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்கள், அவரது செய்திகள், வரலாறுகள், ஆக்கங்கள் போன்ற நூற்களை அக்குவேறு ஆணிவேறு அலசிய ஆய்வாளர்கள், கஸ்ஸாலி ஹதீஸ் கலையைக் கற்கவில்லை, படிக்கவுமில்லை என்று வாக்குமூலம் தருகின்றனர்.
தப்பும் தவறுமான சித்தாந்தங்களை பற்பல பாகங்கள் அடங்கிய நூற்களாக
எழுதிக் குவித்த பிறகு தான் ஹதீஸ் கலையைக் கற்க ஆரம்பித்தார் என்று அவர்கள் தெளிவாக
எடுத்துச் சொல்கின்றனர்.
தனது வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் நபிவழியைக் கற்பதற்குரிய
நேர்வழியைப் பெற்றார்; புகாரி முஸ்லிமைப் படித்தார்.
அல்லாஹ் அவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வானாக! முஸ்லிம்களுடைய
கொள்கையிலேயே குழப்பத்தை விளைவித்த அவரது காரியங்களை அவன் கண்டு கொள்ளாமல் விடுவானாக
என்றும் பிரார்த்திக்கின்றேன்.
நபிவழிக்குத் தொடர்பில்லாத, ஏன்? குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் நேர் முரணான விஷயங்களில், தான் இதுநாள் வரை மூழ்கி, முடங்கிக்
கிடந்ததை எண்ணி அவர் வருத்தத்திற்கு வேதனைக்கும் உள்ளானார்.
கஸ்ஸாலியின் சீடர் சிகாமணிகள், பக்த கோடிகள் அவரது வாழ்க்கையின் முந்தைய பகுதிகளை விட்டு விட்டு, பிந்தைய பகுதிகளைப் பாடமாகக் கொள்வார்கள் என்று ஆதரவு வைக்கின்றேன்.
தனது சொந்த வாக்குமூலத்தின் மூலமும், கல்விமான்கள், ஆய்வாளர்கள்
என்று சான்றளிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மூலமும் அவர் மார்க்கக் கல்வியின் அடிப்படையைக்
கூடத் தெரியாமல் இருந்திருக்கிறார் என்பதை கஸ்ஸாலியின் நேசர்கள் விளங்கிக் கொள்வார்கள்
என்று எதிர்பார்க்கிறேன்.
உயிரூட்டுகின்ற மார்க்கக் கல்வியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில், கருத்தில் நூல் இயற்றுகின்றார் என்றால் அவர் ஆதாரப்பூர்வமான
புகாரி போன்ற ஹதீஸ்களின் அடிப்படையில் தான் இயற்றியாக வேண்டும்.
கஸ்ஸாலி இப்படி ஒரு நூலை இயற்றுவது ஒருபுறமிருக்கட்டும். மார்க்கக்
கல்வியைக் கற்று, தன்னளவில் கூடப் பயன்பெற முடியாத
ஒரு நிலையில் தான் அவரது காலம் கடந்து விட்டது என்பதை அவரது நேயர்கள் அறிந்து கொள்வார்கள்
என்று உளப்பூர்வமாக நம்புகின்றேன்.
நபி மீது பொய்! நரகமே பரிசு!
இப்போது நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவருக்கு மார்க்கம்
அடிக்கின்ற எச்சரிக்கை மணியைப் பார்ப்போம்.
காரண காரியங்கள் எதுவாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, அவர்கள் மீது எந்த ஒரு கட்டத்திலும் இட்டுக்கட்டிச் சொல்லக்
கூடாது என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர். நபி (ஸல்) அவர்கள்
மீது திட்டமிட்டுப் பொய் சொல்வது பெரும்பாவமாகும்.
இவ்வாறு பொய் சொல்வோருக்கு நரகமே தங்குமிடம் என்று நபி (ஸல்)
அவர்கள் எச்சரிப்பது தான் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே
பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 110, முஸ்லிம்
4
இது ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பெரிய எண்ணிக்கையினர் அறிவிக்கின்ற
"முதவாத்திர்' என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
என் மீது பொய்யுரைக்காதீர்கள். என் மீது பொய் சொல்பவர் நரகில்
நுழைவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 2
நபி (ஸல்) அவர்கள் மீது ஒருவர் பொய் சொல்லிவிட்டால், ஏதோ ஒரு பொய் என்ற மட்டில் அது நிற்பதில்லை. மாறாக, மார்க்கத்தில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் மார்க்கச் சட்டமாகக் கொள்ளப்படுகின்றது.
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
"என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப்
போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை
நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்'
நூற்கள்: புகாரி 1291, முஸ்லிம்
5
இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பெரும்பாவமாகும்
என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் இருக்கின்றனர்.
இமாம் அப்துல்லாஹ் பின் யூசுப் அல்ஜுவைனி போன்ற அறிஞர்கள், "நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்
(காஃபிர்கள்);
அவரது தலை துண்டிக்கப்பட வேண்டும்'' என்ற அளவுக்கு உச்சக்கட்டமாகக் கூறியுள்ளனர்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM FEB 2015