May 8, 2017

இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 17 - யூசுப் நபியின் கனவு

இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 17 - யூசுப் நபியின் கனவு

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

உண்மையான பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய திருக்குர்ஆன், மிக அழகிய வரலாறு என்று யூசுப் நபியின் வரலாற்றை வர்ணித்து சான்றளிக்கின்றது. யூசுப் நபியின் வரலாறு முழுவதையும் உளப்பூர்வமாக, கூர்ந்து படிக்கும் எவரும் திருக்குர்ஆன் கூறும் இச்சான்றிதழை மறுக்க மாட்டார். அந்த அளவிற்குப் பல சுவாரசியமான, படிப்பினை மிக்க தகவல்களை அது கொண்டுள்ளது.

அழகான யூசுப் நபியின் அழகிய வாழ்க்கையைக் கூறும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் என்ற பெயரில் பல கதைகள் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை யாவும் திருக்குர்ஆன் கூறும் அர்த்தமுள்ள வரலாற்றை கொச்சைப்படுத்துவதாகவும், யூசுப் நபியை அவமதிப்பதாகவும் உள்ளன. இவை அனைத்தும் இஸ்ரவேர்களால் திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட கட்டுக்கதையே. அவை சில ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இது கட்டுக்கதை தான் என்று பல அறிஞர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள். அவற்றை இப்போது காண்போம்.

பதினோரு நட்சத்திரங்கள்

"என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்'' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

"என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:4, 5

யூசுப் நபி தனது சிறு பிராயத்தில் பதினோரு நட்சத்திரங்கள் மற்றும் சூரியன், சந்திரன் ஆகிய அனைத்தும் தனக்கு ஸஜ்தா செய்வதாகக் கனவு கண்டார் என்று இவ்வசனம் கூறுகின்றது. அதைத் தொடர்ந்து அவரது வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் கூறப்பட்டு யூசுப் நபி கண்ட கனவின் விளக்கம் என்ன என்பதும் கூறப்படுகின்றது.

தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும், என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:100

யூசுப் நபியின் பெற்றோர், சகோதரர்கள் அனைவரும் இறுதியில் யூசுப் நபிக்கு மரியாதை செய்தனர் என்பதே பதினோரு நட்சத்திரங்கள் அவருக்கு ஸஜ்தா செய்ததாக அவர் கண்ட கனவின் விளக்கமாகும். இக்கருத்தை இந்த வசனத்திலிருந்து அறியலாம்.

(முழுமையாக அறிந்து கொள்ள திருக்குர்ஆனின் 12வது அத்தியாயத்தின் துவக்கத்திலிருந்து 100வது வசனம் வரை படிக்கவும்)

யூசுப் நபியின் கனவு பற்றி இது தான் திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது. இதில் தான் முஸ்லிம்களுக்குப் படிப்பினையும் நிறைந்துள்ளது. ஆனால் யூசுப் நபியின் கனவு தொடர்பாக தஃப்ஸீர் நூல்களில் அர்த்தமற்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நட்சத்திரங்களின் பெயர்கள்

யூசுப் நபியவர்கள் பதினோரு நட்சத்திரங்களைக் கனவில் கண்டார்கள் அல்லவா? அதன் பெயர்கள் தொடர்பாகப் பின்வரும் கதை விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளது.

ஜாபிர் (ரலி) கூறியதாவது: ஒரு யூதன் நபியவர்களிடம் வந்து, "முஹம்மதே யூசுப் நபி தனக்கு ஸஜ்தா செய்ததாகக் கனவில் கண்ட நட்சத்திரங்களின் பெயர் என்ன என்று எனக்கு தெரிவிப்பீராக'' என கூறினான். நபியவர்கள் பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாயிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை), நபியவர்களிடம் வந்து அவற்றின் பெயர்களைத் தெரிவித்தார்கள். உடனே நபியவர்கள், "நான் அவற்றின் பெயர்களைச் சொன்னால் நீ நம்பிக்கை கொள்வாயா?'' என்று கேட்க, அவன் சரி என்றான்.  "ஹர்சான், தாரிக், தியால், துல்கஃபதான், காபிஸ், தஸான், ஹவ்தான், ஃபீலிக், மிஸ்பஹ், லரூஹ், ஃபரீக், ழியாஃ, நூர்  ஆகிய நட்சத்திரங்கள் தனக்கு ஸஜ்தா செய்ததாகக் கனவில் கண்டார். அதை யூசுப் தனது தந்தை யஃகூப் (அலை) அவர்களிடம் கூறிய போது, "இது சிதறடிக்கப்பட்ட விஷயம் இதற்குப் பின்னால் அல்லாஹ் அதை ஒன்று சேர்ப்பான்' என்று யஃகூப் நபி கூறினார்கள்'' என நபியவர்கள் (அவற்றின் பெயர்களை) கூறினார்கள். அதற்கு அந்த யூதன், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இவையே அவற்றின் பெயர்கள்'' என்று கூறினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம்: 8, பக்கம்: 182

யூசுப் நபியவர்கள் கனவில் கண்ட பதினோரு நட்சத்திரங்களின் பெயர்களை யூதன் ஒருவன் நபியவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு முதலில் அமைதியாக இருந்து பிறகு நபியவர்கள் பதிலளித்ததாகவும் இந்தச் சம்பவத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க நபியவர்களின் பெயரில் புனைந்து சொல்லப்பட்ட கட்டுக்கதையே.

1. இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதற்கு எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் சான்றாக இல்லை.

2. ஹாகிம், பைஹகீ போன்ற ஹதீஸ் நூல்களில் இது பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இச்செய்தி மிகவும் பலவீனமான செய்தியே. காரணம் இதில் ஹகம் பின் ளஹீர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். பல ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இமாம் புகாரி, "இவர் மறுக்கப்பட வேண்டியவர்' என்றும் இப்னு மயீன் அவர்கள், "இவர் எதற்கும் மதிப்பில்லாதவர், நம்பகமானவர் இல்லை' என்றும் விமர்சித்துள்ளார்கள்.

3. பல விரிவுரை நூல்களில் வெவ்வேறான பதினோரு பெயர்கள் காணப்படுகின்றன. பெயர்களில் காணப்படுகின்ற இந்த முரண்பாடுகளும் இச்சம்பவம் உண்மையல்ல பொய் என்று தெளிவுபடுத்துகின்றது.

4. யூசுப் நபி கண்ட கனவின் விளக்கத்தை திருக்குர்ஆன் அர்த்தத்தோடு தெளிவுபடுத்தும் போது (பொய்யான) பெயர்களைக் கொண்டுள்ள இக்கதையில் என்ன படிப்பினை உள்ளது?

இறைவன், பெயர்களைக் குறிப்பிடாத பலவற்றுக்கும் எவ்வித ஆதாரமுமின்றி பெயரிடப்பட்ட சம்பவங்கள் பல விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ளதை முன்னரே நாம் எழுதி விளக்கியுள்ளோம். (குகையின் பெயர், அதில் இருந்த நாயின் பெயர்) இதுவும் அந்த வகையில் உள்ளது தான்.

எனவே தஃப்ஸீர் நூல்களில் காணப்படும் இவ்விளக்கத்திற்கு வலுவான செய்தி ஏதுமில்லை. இது நபியவர்கள் பெயரில் புனையப்பட்ட கட்டுக்கதையே என்பதை அறிந்து கொள்வோம்.

யூசுப் நபி ஆடையை அவிழ்த்தார்களா?

நபியை அவமதிக்கும் விளக்கம்

யூசுப் நபியவர்களின் கனவை அர்த்தமற்றதாக்கும் வகையில் விளக்கம் கூறியது போதாதென்று யூசுப் நபியின் மீது சேற்றை வாரி இறைக்கும் விதமாக அபத்தமான விளக்கமும் விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது.

தம் சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டு, வணிகக் கூட்டத்தால் கண்டெடுக்கப்பட்டு, விற்கப்பட்ட யூசுப் நபி, மன்னரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னரின் மனைவி யூசுப் நபியின் அழகில் மயங்கி தம்முடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். இதைப்பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மன்னரின் மனைவி தவறு செய்ய வற்புறுத்தி அழைக்கும் போது யூசுப் நபியின் உள்ளம் தீமையை நாடியது. பிறகு உடனே சுதாரித்துக் கொண்டு அத்தீமையிலிருந்து விலகி விட்டார் என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.

உள்ளத்தால் தீமையை நாடினார்களே தவிர அதற்காக எந்த முயற்சியையும் யூசுப் நபி செய்யவில்லை. அதிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்கள் என்று குர்ஆன் தெரிவிக்கின்றது. ஆனால் இறைவசனத்திற்கு எதிராக, யூசுப் நபி அந்தத் தீமையைச் செய்வதற்கான முயற்சிகளைச் செய்தார் என்று விரிவுரை நூல்களில் எழுதப்பபட்டுள்ளது.

அவருக்காக அவள் மல்லாந்து படுத்துக் கொண்டாள். அவளது இரு கால்களுக்கிடையில் அமர்ந்து தனது ஆடைகளையும் அவளது ஆடைகளையும் யூசுப் நபி அவிழ்த்தார்.

அடிப்பகுதி தெரியுமளவு கால் சட்டையை அவிழ்த்தார். அவருக்காக அவள் மல்லாந்து படுத்துக் கொண்டாள்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரி பாகம் 13 பக்கம் 83

தனது கால் சட்டையின் (பேண்ட்) நாடாவை யூசுப் நபி கழட்டினார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ பாகம் 16, பக்கம் 37

இந்த விரிவுரை யூசுப் நபியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் இல்லையா? ஒரு இறைத்தூதர் இவ்வாறு கேவலமான, அருவருப்பான செயலில் ஈடுபடுவார்களா? மனதால் தீமையை எண்ணுவதும், அத்தீமையை புரிய செயல்படுவதும் ஒன்றல்ல. யூசுப் நபி மனதால் தீமையை நாடினார்களே தவிர அதற்காகச் செயல்படவில்லை. மாறாக அதிலிருந்து விலகவே செயல்பட்டுள்ளார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது.

யூசுப் நபி ஓடினார்

மன்னரின் மனைவி அழைத்தும் யூசுப் நபி வெளிப்பகுதியை நோக்கி ஓடினார் என்றும் அவள் யூசுப் நபியை துரத்தி பிடிக்க முயற்சித்ததில் அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டது என்றும் இறைவன் கூறுகின்றான்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். "உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?'' என்று அவள் கூறினாள்.

அல்குர்ஆன் 12:25

"இவள் தான் என்னை மயக்கலானாள்'' என்று அவர் கூறினார். "அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்'' என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, "இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார்.

அல்குர்ஆன் 12:26, 27, 28

யூசுப் நபி ஓடியதும் அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதும் அவர் தீமைக்கான செயல்களைச் செய்யவில்லை; அதிலிருந்து விலகவே முற்பட்டார்கள் என்று தெளிவாக்குகின்றது. மேலும் யூசுப் நபி அருவருக்கத்தக்க செயலில் இருந்து விலகிக் கொண்டார் என்று இறைவன் கூறுகிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மேற்கண்ட விரிவுரை நூலில் கூறப்பட்ட தகவல் இவ்வசனங்களுக்கு எதிராக உள்ளதைச் சிந்திக்க வேண்டும்.

யூசுப் நபி அவள் மேல் அமர்ந்தார் என்று விரிவுரை சொல்கிறது.

அவர் தப்பிக்க வாசலை நோக்கி ஓடினார் என்று இறைவன் சொல்கிறான்.

அவர் சட்டை, பேண்ட்டை கழற்றினார் என்று விரிவுரை சொல்கிறது

அவரை விட்டும் வெட்கக்கேடான செயலைத் தடுத்தோம் என்று இறைவன் சொல்கிறான்.

இதில் எது உண்மை?

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யாரிருக்க முடியும்?

அல்குர்ஆன் 4:87

இறைவன் கூறிய உண்மைத்தகவலுக்கு மாற்றமாக விரிவுரை நூலில் காணப்படும் இது விளக்கமன்று. மாறாக இஸ்லாத்தின் எதிரிகளால் புனைந்து சொல்லப்பட்டிருக்கும் பொய்யே என்பது உறுதி.

ஆகவே இமாம்கள், ஸஹாபாக்கள் பெயரில் விரிவுரை நூலில் காணப்படும் இவ்விளக்கம் குர்ஆனுக்கு எதிரான கட்டுக்கதையே என்பதில் சந்தேகமில்லை.

யூசுப் நபி பார்த்த இறைவனின் சான்று

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

மன்னரின் மனைவி யூசுப் நபியை வற்புறுத்திய போதும் அவர் இறைவனின் சான்றைப் பார்த்த காரணத்தால் அதற்கு இணங்காது விலகி விட்டார் என்று இறைவன் கூறுகிறான்.

யூசுப் நபி பார்த்தது இன்ன சான்று தான் என்று குறிப்பிட்டு எந்த வசனமோ, ஹதீஸோ வரவில்லை. இந்நிலையில்

யூசுப் நபி பார்த்த இறைவனின் சான்று எதுவென்பதைப் பற்றி சில வினோத விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவை உங்கள் பார்வைக்கு...

யூசுப் நபி பார்த்த சான்றாகிறது, இறைவேதத்தில் உள்ள மூன்று வசனங்களாகும். "உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.  நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்' எனும் (82:10,11,12) வசனம், "ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை' எனும் 10:61  வசனம், "ஒவ்வொருவரும் செய்பவற்றை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்க, அவர்கள் அவனுக்கு இணை கற்பிக்கிறார்களா?' எனும் 13:33 வசனம் ஆகிய மூன்று வசனங்களாகும் என்று முஹம்மத் பின் கஃப் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8 பக்கம் 228

ஹஸன் கூறுகிறார்: (கோபத்தால்) விரலை கடித்துக் கொண்ட நிலையில் (தனது தந்தை) யஃகூப், "யூசுபே! யூசுபே!'' என்று கூறியதை அவர் கண்டார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8 பக்கம் 225

இது போன்ற பல வினோதமான விளக்கங்கள் விரிவுரை நூல்களில் இடம்பெற்றுள்ளன. இதற்கு என்ன ஆதாரம்? இதை நபியவர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா?

இறைவனின் கண்காணிப்பு தொடர்பாக திருக்குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களைக் குறிப்பிட்டு, இதுதான் யூசுப் நபி பார்த்த சான்றுக்கான விளக்கம் என்கிறார்கள். குர்ஆனுடைய வசனங்கள் யாவும் நமது நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டவை. இந்த வசனங்களை எப்படி யூசுப் நபி பார்த்திருப்பார்?


யூசுப் நபி தொடர்பான இந்த விளக்கங்களுக்கும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை அறியலாம்.

EGATHUVAM FEB 2013