May 8, 2017

பொருளியல் தொடர் 27 - சங்கிலித் தொடர் வியாபாரம்

பொருளியல் தொடர் 27 - சங்கிலித் தொடர் வியாபாரம்

நபி (ஸல்) அவர்கள் காலத்திலுள்ள வியாபாரத்தின் வகைகளையும், நபி (ஸல்) அவர்கள் தடை செய்த வியாபாரங்களையும் பார்த்தோம். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் விற்கக் கூடியவன் அந்தப் பொருளைக் காட்டவேண்டும். அப்படி பொருளைக் காட்டவில்லை என்றால் விற்பவனுக்கும் ஹராம்; அதை வாங்குபவனுக்கும் ஹராம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்வதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். ஒரு பொருள் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அதை விற்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விலை பேசுவதைத் தடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.
மேற்கண்ட வியாபாரங்கள் எல்லாம் நபி (ஸல்) காலத்தில் இருந்தவையாகும். இதோடு ஒப்பிட்டு சம காலத்திலுள்ள வியாபாரத்தைப் பார்ப்போம்.

அதில் முதலிடத்தில் இருப்பது மல்டி லெவல் மார்க்கெட்டிங்

எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான்.

சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.

அதிக மதிப்புள்ள பொருளைக் குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.

அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள்.

இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன.
முதல்வகை

நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள்.

உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால் 6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள்

இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள்.

பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள்.

தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும்.

ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள்.

அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார்.

இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள்.

இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும்.

இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்.

இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும்.

இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது.

பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.
இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்?


இது சங்கிலித் தொடர் வியாபாரத்தில் முதல் வகையாகும். இன்னும் சில வகைகள் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

EGATHUVAM JAN 2013