May 30, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 29 - குருநாதர் கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 29 -  குருநாதர் கஸ்ஸாலியின் குர்ஆனிய வெறுப்பு

தொடர்: 29

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

வாரிசுரிமைச் சட்டம், விவாகரத்து, குற்றவியல் தண்டனைகள் மற்றும் இன்ன பிற சட்டங்கள் இடம் பெறுகின்ற வசனங்களும் இவ்வாறு  பொருத்தமாக அமையாது. உள்ளத்தை உருக்குகின்ற ஒரே ஆயுதம் அதற்குப் பொருத்தமாக அமைகின்ற இசை பாடல்கள்  தான். கவிஞர்கள் வடிக்கின்ற கவிதைகள் அனைத்தும் வெறும் கவிதைகள் அல்ல! கவிஞன் உள்ளத்தின் நிலைகளைத் தான் வார்த்தைகளின்  வாயிலாக வெளியே கொண்டு வருகின்றான். இந்த அடிப்படையில் அவனது கவிதைகள் உள்ளத்தின் வெளிப்பாடுகளாகும். அதனால் சோகத்தில் உள்ளவன் அதை விளங்குவதற்கு சிரமப் பட வேண்டியதில்லை என்ற கஸ்ஸாலியின் வாதத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.

குர்ஆனை விட இன்னிசைக் கவிதைகள் தான் எளிமையானவை; இனிமையானவை என்பதைத் கஸ்ஸாலியின் இந்த வாதம் நிறுவுகின்றது.

கவிதை பற்றிய குர்ஆனின் மதிப்பீடு

கஸ்ஸாலியின் இந்த வாதத்தைக் குர்ஆனும், ஹதீஸும் தகர்த்தெறிகின்றது. இதோ அல்லாஹ் சொல்கின்றான்:

கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.

அல்குர்ஆன் 26:224-227

இந்த வசனங்களின் மூலம் கவிதைக்கு அல்லாஹ் மரண அடி கொடுக்கின்றான்.

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:  புகாரி 6154

கவிதைக்கு நபி (ஸல்) அவர்களும் சாவு மணி அடிக்கின்றார்கள். அதிகப்பட்சமாக நபி (ஸல்) அவர்கள் கவிதைக்கு கொடுத்த மரியாதை போர்க்களத்தில் வசை பாடுவதற்காகத் தான். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா போரின் போது ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி, ‘‘இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறு துணையாக) இருப்பார்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிஃப் (ரலி)

நூல்:  புகாரி 4124

(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’’ என்னும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3841

இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கின்ற கவிதை வரிகள் போன்று சில கவிதைகள் உண்மையைப் பேசுகின்றன. அதனால் நபி (ஸல்) அவர்கள்  நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று கூறிப் பாராட்டுகின்றார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

 நூல்: புகாரி 6145

இந்த அளவுக்குத் தான் நபி (ஸல்) அவர்கள் கவிதைக்கு மரியாதை கொடுக்கின்றார்கள். ஒரு நல்ல கருத்தை ஒரு கவிதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று தான் குறிப்பிடுகின்றார்களே தவிர அதற்கென்று நேரம் காலத்தைச் செலவழித்து அதைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்ற அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு மரியாதை அளிக்கவில்லை. அதற்கு அந்த அளவுக்கு மதிப்பும் கொடுக்கவில்லை.

கஸ்ஸாலி வைக்கும் விநோதமான வாதம்

கவலையில் இருப்பவனிடம் மேற்கண்ட இரு வசனங்களை ஓதும் போது அவை அவனுடைய இதயத்தை ஈர்க்காது என்று குறிப்பிடுகின்றார்.  குர்ஆன் மனிதனுடைய வார்த்தைகள் இல்லை. அல்லாஹ்வின் வார்த்தைகள்! ஒரு மனிதனுடைய சூழ்நிலைக்கு ஏற்ப இந்தப் பாகப் பிரிவினை சம்பந்தப்பட்ட வசனம் இருக்கலாம். அவதூறுக்குரிய தண்டனை பற்றிய வசனமாக இருக்கலாம். இந்த இடத்தில் அவை பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த வசனங்கள் ஒரு தூண்டில் போன்று அவனது சிந்தனையை இழுத்துக் கொண்டு போய் பொருத்தமான இடத்தில்  இதயத்தை கட்டிப் போட்டு விடும்.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’’ என்று அவர்கள் கூறுவார்கள்.அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

 அல்குர்ஆன் 2:156,157

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

 அல்குர்ஆன் 57 : 22,23

இதுபோன்ற வசனங்களில் மனம் லயித்து விட்டால் அவனுடைய கவலைகள் அப்படியே பறந்து போய் விடும். இவனும் அந்தக் கவலையை விட்டும் மறந்து போய் விடுவான். இது தான் குர்ஆனின் ஈர்ப்பு மற்றும் இழுப்பு சக்தியாகும். இது அல்லாஹ்வின் விந்தைமிகு வித்தியாசமிகு வழிமுறையாகும்.

இந்த பாக்கியம் இறை நம்பிக்கையில் உறுதியில்லாத சூஃபியாக்கள் என்ற பைத்தியங்களுக்கு வாய்க்கப் பெறாது; வழங்கப்படாது. இதற்குத் தான் இந்தக் கல்விக் கடல் வாரி வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசுகின்றார்.

கஸ்ஸாலி வாதப் படியே கவிதை தான் கவலையின் வடிகால் வாரியம் என்று வைத்துக் கொண்டு பார்ப்போம். வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருப்பவன் முன்னால் இன்னிசை பாடல் படித்தால் அது அவனுக்கு ஆறுதல் தருமா? அருமருந்தாகுமா? என்றால் நிச்சயமாகக் கிடையாது.  அதனால் கஸ்ஸாலியின் இந்த வாதம் ஒரு கவைக்கும் உதவாத வாதமாகும்அர்த்தமற்ற பிதற்றலாகும்.

கஸ்ஸாலியின் பித்தர்கள், இந்தப் புத்திசாலிக்குத் தான் கல்விக் கடல் என்று பட்டம் சூட்டி மகிழ்கின்றார்கள். இதில் அவர் கொண்டு வந்திருக்கின்ற புறா கவிதை வேடிக்கையிலும் வேடிக்கையாகும்; விநோதத்திலும் விநோதமாகும்.

அதில் என்ன அவர்கள் உள்ளங்கள் நெகிழ்ந்து போயின? அதில் அந்த சன்னிதானங்கள்  உள்ளங்கள் உருகிப் போயின? அந்த  வானத்து புறாக்கள் இவர்களிடம் என்ன கவலைக்குரிய வசனத்தை புலம்பித் தள்ளின? எல்லாமே சுத்த புலம்பலும் புரட்டலும் தவிர்த்து இதில் எந்த உண்மையும் இல்லை. அந்தக் கவிதைகளில் அர்த்தமும் இல்லை; ஆக்கப்பூர்வமான கருத்துமில்லை. மாறாக, அரைவேக்காட்டுத்தனமும் அபத்தமும் தான் அடங்கியிருக்கின்றன.

இதோ ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்...

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப் பட்டார்களா? அல்லது அவர்களே படைப்பவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அல்லது அவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்களா?’’ எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது

நூல்: புகாரி 4854

ஜுபைர் பின் முத்இம் (ரலி)யின் காதில் விழுந்த வசனங்கள் முன் பின் தொடர்பில்லாதவை தான். இந்தக் காந்தமிகு வசனங்கள் தான் அவர்கள் சிந்தனையில் பட்டுத் தெறித்து, இதயத்தைத் தொட்டு விட்டன. இறுதியில், அவர்களை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டன. இது தான் குர்ஆனின் ஈர்ப்பு, இழுப்பு சக்தியாகும். ஆனால் கஸ்ஸாலியோ கவிதைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது என்று குர்ஆனின் மீதுள்ள வெறுப்பைப் பதிய வைக்கின்றார். இன்னிசை பாடலை தூக்கிப் பிடிக்கின்றார்.

அவர் கூறிய இந்தக் கவிதை வரிகளில் இந்தக் காந்த சக்தி இருக்கிறதா? இருக்கத் தான் முடியுமாஒரு போதும் இருக்காது; இருக்கவும் முடியாது. மொத்தத்தில், கஸ்ஸாலியின் இந்த வாதம் அவர் குர்ஆன் மீது கொண்டிருக்கின்ற வெறுப்பை வெளிப்படுத்தி விட்டது. இதன் பின்னராவது கஸ்ஸாலியின் பித்தர்கள் கஸ்ஸாலியின் இந்தப் பிதற்றலை உணர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

எல்லோருக்கும் புரிகின்ற எளிய குர்ஆன் வேதம்

கஸ்ஸாலி நிறுவுகின்ற இரண்டாவது வாதம் சிந்தனைத் திறன் மிக்க பண்டிதற்கு மட்டும் தான் குர்ஆன் புரியும். சாதாரண பாமரனுக்கு அது எளிதில் புரியாது என்பதாகும். இந்த வாதத்தையும்  எல்லாம் வல்ல அல்லாஹ் இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17) என்ற வசனத்தின் மூலம்  தகர்த்தெறிகின்றான்.

இந்த வேதம் அருளப்பட்ட தூதரும் மக்களும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்பதே பண்டிதருக்கும் பாமரருக்கும் விளங்கும் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அறிஞர் கஸ்ஸாலியின் அறிவார்ந்த  வாதம் (?)

அடுத்து குர்ஆனைப் பற்றிய கஸ்ஸாலியின் மற்றொரு உளறல் வாதத்தைப் பாருங்கள்...

‘‘இரண்டு பெண்களின் (சொத்து) பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்ற அல்லாஹ்வின் வார்த்தை, ஓர் ஆண் பெண்ணை விட சிறந்தவன் என்பதால் இந்தச் சிறப்பை அல்லாஹ்  இந்த உலகத்தில் அல்லாஹ் அளித்திருக்கின்றான்; மறுமையில் ஆண்களுக்குச் சிறப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களை  அல்லாஹ்வின் நினைவிலிருந்து வர்த்தகமோ, வணிகமோ திசை திருப்பாதது தான்.

அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பிய  ஒரு பொருள், அல்லாஹ் அல்லாத ஒரு சக்தி உலகத்தில் இருக்குமானால் அது  நிச்சயமாக இந்தப் பெண்கள் தான்! அது ஆண்கள் அல்ல என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை இப்படி உலகப் பொருளாதாரத்தில் பெண்கள் பின்னுக்கு தள்ளப்பட்டது போன்று தான் மறுமையின் அருள்கொடையிலிருந்து பின்னுக்கு தள்ளப்படலாம் அல்லது அருளிலிருந்து தடுக்கப் படலாம் என்று அவர் பயப்பட நேரிடலாம்....

கஸ்ஸாலியின் இவ்வாதத்தில் பெண்களுக்கு மறுமையில் சிறப்பில்லை. அதற்கு காரணம் அவர்கள் ஆண்களை அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசை திருப்பியது தான் என்று கூறுகின்றார். உண்மையில் ஆண்களை அல்லாஹ்வின் நினைவிலிருந்து திசை திருப்புவது பிள்ளைகளும், பொருளாதாரமும் தான். இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ்வே சொல்கின்றான்.

‘‘நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 63:9

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் நினைவை விட்டும் திசை திருப்பும் ஒரு பொருள் இருக்குமானால் அது பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் என்று தான் குறிப்பிடுகின்றான்.

கஸ்ஸாலி வைக்கின்ற இந்த அபத்த வாதத்தின் படி பார்த்தால் நாம் பெற்ற பிள்ளைகளுக்கும் மறுமையில் சிறப்பு இல்லாமல் போய் விடும். அதனால் பெண்களுக்கு மறுமையில் சிறப்பில்லை என்று சொல்வது கஸ்ஸாலியின் அதீதமான யூகத்தைத் தவிர வேறு எதுவுமிருக்க முடியாது. அத்துடன், பெண்கள் வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை.

‘‘(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

அல்குர்ஆன் 24:36,37

இந்த வசனத்தில் அல்லாஹ் ஆண்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றான். அதை வைத்துத் தான் கஸ்ஸாலி இந்த வாதத்தை நிறுவுகின்றார். இங்கு ஆண்கள் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தாலும் இதில் வரும் சிறப்பு பெண்களையும் சேர்த்து தான் குறிக்கும். விதிவிலக்கு என்றால் அதை அல்லாஹ்வோ அவனுடைய திருத்தூதரோ தெரிவித்திருப்பார்கள். அவ்வாறு தெரிவிக்காத வரை இந்தச் சிறப்பு இரு பாலருக்கும் பொதுவானது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் படி, பெண்களுக்கு மறுமையில் சிறப்பு  கிடையாது என்ற கஸ்ஸாலியின் வாதம் ஓர் அபத்தமான வாதம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மவ்லிதுகளின் தலைமை பீடத்தில் இருப்பது சுப்ஹான மவ்லிது. அந்த சுப்ஹான மவ்லிதை இயற்றியவரின் பெயரை துவக்கத்தில் குறிப்பிடும் போது கதீபி என்ற பெயருடன் சேர்த்து ஒரு கீலின் படி - அதாவது ஒரு கருத்தின் படி - ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் கஸ்ஸாலி என்று எழுதப்பட்டுள்ளது.

கஸ்ஸாலிக்கும் இந்த மவ்லிதுக்கும் என்ன சம்பந்தம்? என்று பார்ப்பவரின் உள்ளத்தில் சந்தேகம் வரும். கஸ்ஸாலியின் இஹ்யாவுடைய அரபி நடையுடன் இந்த மவ்லிதை ஒப்பிடும் போது இந்த மவ்லிதின்  அரபி  நடை வெறும் குப்பை நடை; குமட்டல் நடை.  அந்த மவ்லிதை கஸ்ஸாலி  இயற்றவில்லை என்பதும் அவருக்கு அதில் சம்பந்தமில்லை என்பதும் இதிலிருந்தே நன்றாக விளங்கி விடுகின்றது. இருப்பினும், அவரது பெயரை அவர்கள் வலுக்கட்டாயமாக நுழைப்பதற்குக் காரணம் குர்ஆனை விட கவிதைக்கு ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கின்றது என்று கவிதைக்கு பச்சைக் கொடி காட்டியதற்கு நன்றிக் கடனாகத் தான்! கஸ்ஸாலியின் பித்தர்கள்  குர்ஆனை விட மவ்லிதை தூக்கிப் பிடிப்பதற்குரிய காரணத்தையும் இதிலிருந்து  நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.


அதனால் தான் குருவின் வழியில் சிஷ்ய கோடிகள் மவ்லிதுகள் என்ற கவிதை மாலைகளை, குர்ஆனை விட அதிகமதிகம் நேசிக்கின்றார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் இழவு வீடுகளில் தான்  குர்ஆன் ஓதப்படும். அதே சமயம் வீடு குடி புகுதல் போன்ற சுப காரியங்களில் மவ்லிதுகள் தான் ஓதப்படும். இதற்கெல்லாம் காரணம் கஸ்ஸாலி தான் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். 

EGATHUVAM NOV 2016