அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? - 2
எஸ். அப்பாஸ் அலீ
சென்ற இதழின் தொடர்ச்சி...
இறந்துவிட்ட அவ்லியாக்கள், உயிருடன்
இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு பரேலவிகள் திருக்குர்ஆனிலிருந்து காட்டிய
வசனங்களுக்குக் கடந்த ஜூன் மாத ஏகத்துவம் இதழில் பதிலளித்திருந்தோம். இவர்கள் தங்களின்
வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய பதிலை
இந்த இதழில் அறிந்துகொள்வோம்.
மரணித்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாம் என்று கூறும் கப்ரு
வணங்கிகள் தங்களின் இணைவைப்புச் செயலை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தில் ஆதாரம்
இருப்பதாக இட்டுக்கட்டுகின்றனர். இவர்கள் குர்ஆன் வசனங்களில் செய்த தில்லுமுல்லு வேலைகளைக்
கடந்த இதழில் அறிந்துகொண்டோம். ஹதீஸ்கள் என்ற பெயரில் இவர்கள் சில பொய்யான செய்திகளை
ஆதாரமாகக் கூறி வருகின்றனர்.
கப்ரு வணக்கத்தை நியாயப்படுத்துவதற்கு ஒரேயொரு ஆதாரப்பூர்வமான
செய்தி கூட கிடையாது. எனவே தான் கப்ரு வணங்கிகள் பிரபலமான ஹதீஸ் நூற்களான புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது போன்ற ஹதீஸ் நூற்களை விட்டுவிட்டு வேறு நூற்களில் யாருக்கும்
தெரியாத பலவீனமான செய்தியைத் தேடிப்பிடித்து தங்களின் தவறான கொள்கையை நிலைநாட்டும்
முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு இவர்கள் கூறும் ஒரு ஹதீஸைப் பற்றியும் அதன் நிலையைப்
பற்றியும் இந்த இதழில் அறிந்துகொள்வோம். இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குப் பின்வரும்
செய்தியை இவர்கள் ஆதாரமாகக் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம்
இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது, "அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின்
அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கூறுங்கள்.
ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள் இருக்கின்றார்கள். இது
அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
நூல்: தப்ரானீ 14146
இந்தத் செய்தி எவ்வாறு பலவீனமானது என்ற விபரத்தை அறிந்து கொள்வதற்கு
முன்னால் இவர்களின் கொள்கைக்கும், இந்தச் செய்திக்கும் எந்தச்
சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் அறிந்துகொள்வோம்.
இறந்தவர்களிடத்தில் உதவி தேடலாம் என்பதற்கு கப்ரு வணங்கிகள்
இந்தச் செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தச் செய்தியில் இறந்த மனிதர்களை
அழைத்துப் பிரார்த்தனை செய்யலாம் என்று சொல்லப்படவில்லை.
மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின் அடியார்கள்
பூமியில் இருக்கின்றார்கள் என்று இந்த செய்தி கூறுகின்றது. மனிதர்கள் இறந்துவிட்டால்
இந்தப் பூமியை விட்டுப் பிரிந்து மறைவான கப்ரு வாழ்க்கைக்குச் சென்றுவிடுகின்றனர்.
கப்ரில் விசாரணை செய்யப்பட்டு நல்லவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை கப்ரில் உறங்கிக்கொண்டே
இருப்பார்கள். இறந்தவர் தீயவராக இருந்தால் கியாமத் நாள் வரும் வரை வேதனை செய்யப்பட்டுக்கொண்டே
இருப்பார். எனவே இறந்துவிட்ட மனிதர்களுக்கும் இந்தப் பூமி வாழ்வுக்கும் எள்ளளவு கூட
சம்பந்தம் கிடையாது.
இந்தச் செய்தி மனிதர்கள் அல்லாத அல்லாஹ்வின் வேறொரு படைப்பைப்
பற்றிப் பேசுகின்றது. அந்தப் படைப்பு வானவர்கள் தான் என்று இது தொடர்பாக வரும் வேறொரு
பலவீனமான அறிவிப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மரத்தின் இலைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள்
இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே
பயணத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், "அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு
அருள் புரிவான்''
என்று அழைக்கட்டும்.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக அல்லாஹ் சில வானவர்களை பூமியில்
ஏற்படுத்தியுள்ளான். எந்த மனிதரும் இல்லாத இடத்தில் உதவி தேவைப்பட்டால் அந்த வானவர்களை
அழைக்கலாம் என்று தான் இந்தச் செய்தி கூறுகின்றது.
கப்ரு வணங்கிகள் யாரும் இந்தச் செய்தியில் கூறப்பட்டது போல்
மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் ஆபத்து ஏற்படும் போது வானவர்களை அழைப்பதில்லை. மாறாக
இறந்துவிட்டவர்களை அழைத்து வருகின்றனர். இவர்களின் கொள்கைக்கும், செயலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத செய்திகளைக் கொண்டு வந்து
தங்களின் வழிகெட்ட கொள்கையை நியாயப்படுத்த முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும்
இவர்களால் காட்ட இயலாது.
யாரும் இல்லாத நேரத்தில் தேவை ஏற்படும் போது வானவர்களை உதவிக்கு
அழைக்கலாம் என்ற கருத்தும் தவறானதாகும். படைத்த இறைவன் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை
மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடவேண்டுவது போல் வானவர்களை அழைத்து உதவி
தேடினால் அதுவும் இணை கற்பித்தலாகும். இணை கற்பித்தலுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும்
இதற்கு எதிராகவும் பொருந்தும். மனிதர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் வானவர்களை நியமித்து
இருந்தாலும் நாம் அந்த உதவியை அல்லாஹ்விடம்
தான் கோரிப்பெற வேண்டும்.
மேலும் இந்தக் கருத்தைக் கூறும் மேற்கண்ட செய்திகள் பலவீனமாக
உள்ளன. அவை எவ்வாறு பலவீனமானது என்பதை அறிந்துகொள்வோம்.
பலவீனமான அறிவிப்பு - 1
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஏதாவது ஒன்றைத் தவறவிட்டால் அல்லது நீங்கள் மனித இனம்
இல்லாத பகுதியில் இருக்கும் போது உதவி தேவைப்பட்டால் அப்போது "அல்லாஹ்வின் அடியார்களே!
என்னைக் காப்பாற்றுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கூறுங்கள். ஏனென்றால் நம் கண்களுக்குப் புலப்படாத அல்லாஹ்வின்
அடியார்கள் இருக்கின்றார்கள். இது அனுபவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
நூல்: தப்ரானீ (14146)
தப்ரானியில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரின்
பெயர் தவறாக மாற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவரை நூலாசிரியர் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் என்று தவறாகக் கூறியுள்ளார்.
அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் பலவீனமானவர் ஆவார். இவர் ஹதீஸ் துறையில்
பலவீனமானவர் என்று அபூ ஹாதிம் கூறியுள்ளார். இவர் நேர்மையானவர் என்றாலும் தவறிழைப்பவர்
என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
அப்துர் ரஹ்மான் இந்தச் செய்தியை தன்னுடைய தந்தை ஷரீக் பின்
அப்தில்லாஹ் வழியாக அறிவிக்கின்றார். ஷரீக் பின் அப்தில்லாஹ்வும் நினைவாற்றல் குறைபாட்டின்
காரணமாக பலவீனமானவர் ஆவார்.
இவர் நேர்மையானவர் என்றாலும் மிகவும் மோசமான நினைவாற்றல் உள்ளவர்
என யஃகூப் பின் ஷைபா கூறியுள்ளார். ஹதீஸ்களை தவறாக மாற்றி அறிவிப்பவர் என இப்ராஹீம்
பின் யஃகூப் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். மற்றும்
பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (தஹ்தீபுல் கமால்)
மேலும் இவர் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையை
செய்யக்கூடியவர் என்று யஹ்யா பின் கத்தான் கூறியுள்ளார். இவர் மேற்கண்ட செய்தியை யாரிடமிருந்து
அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக இவர் சொல்லவில்லை. இதன் காரணத்தாலும்
இந்தச் செய்தி பலவீனமாகின்றது.
இத்துடன் இந்த அறிவிப்பாளர் தொடரில் முறிவும் உள்ளது. இந்தச்
செய்தியை உத்பா பின் கஸ்வான் என்ற நபித்தோழரிடமிருந்து ஸைத் பின் அலீ என்பவர் அறிவிப்பதாகக்
கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி உள்ளது.
நபித்தோழர் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 17 வது வருடத்தில் மரணிக்கின்றார். ஆனால் ஸைத் பின் அலீ ஹிஜ்ரீ
80 வது வருடத்தில் தான் பிறக்கின்றார். உத்பா பின் கஸ்வான் (ரலி)
அவர்கள் மரணித்து 63 வருடங்களுக்குப் பிறகே ஸைத்
பின் அலீ பிறக்கின்றார். எனவே இவ்விருவருக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளனர். இது
மோசமான அறிவிப்பாளர் தொடர் முறிவாகும். இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீஜுல் அத்கார் என்ற நூலில் இதன்
அறிவிப்பாளர் தொடரில் முறிவுள்ளது என்று கூறியுள்ளார். இமாம் ஹைஸமீ அவர்கள் மஜ்மவுஸ்
ஸவாயித் என்ற நூலில் ஸைத் பின் அலீ என்பார் உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களை அடையவில்லை
என்றும் இதன் அறிவிப்பாளர்களில் சிலர் பலவீனமானவர்கள் என்றும் கூறியுள்ளார். அல்பானீ
அவர்களும் மேற்கண்ட காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில் இந்தச் செய்தி நான்கு காரணங்களால் பலவீனமாக உள்ளது.
1. அப்துர் ரஹ்மான்
பின் ஷரீக் பலவீனமானவர்.
2. ஷரீக் பின்
அப்தில்லாஹ் பலவீனமானவர்
3. ஷரீக் பின்
அப்தில்லாஹ் தத்லீஸ் செய்யக்கூடியவர்.
4. அறிவிப்பாளர்
தொடர் முறிவு
இப்படிப்பட்ட மிகவும் பலவீனமான செய்தியைத் தான் கப்ரு வணங்கிகள்
தங்களின் வழிகெட்டக் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். மக்களின் அறியாமையை தங்களுக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடுகின்றனர்.
பலவீனமான அறிவிப்பு - 2
இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தாக
இன்னொரு அறிவிப்பும் உள்ளது. இதுவும் பலவீனமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பாலைவனப் பகுதியில் இருக்கும் போது அவருடைய
வாகனம் தப்பிவிட்டால் அவர், "அல்லாஹ்வின் அடியார்களே!
என்னிடத்தில் (வாகனத்தை) அனுப்புங்கள். அல்லாஹ்வின் அடியார்களே! என்னிடத்தில் (வாகனத்தை)
அனுப்புங்கள்''
என்று கூறட்டும். ஏனென்றால் பூமியில் அல்லாஹ்விற்காக சிலர் இருக்கின்றனர்.
அவர்கள் அதை உங்களிடத்தில் திருப்பி அனுப்புவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: தப்ரானி
இந்தச் செய்தியில் மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இவர் யார் என அறியப்படாதவர்
என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களை தவறுதலாக அறிவிப்பவர் என இப்னு அதீ கூறியுள்ளார்.
(நூல்: லிஸானுல் மீஸான்)
இந்தச் செய்தியில் இன்னொரு குறையும் உள்ளது. இந்தச் செய்தியை
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் புரைதா என்பவர் அறிவிக்கின்றார்.
இவ்விருவருக்கிடையே அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 32ல் மரணிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் புரைதா ஹிஜ்ரீ 105ல் மரணிக்கின்றார். இருவரின் மரணத்திற்கும் இடையில் 73 வருடங்கள் உள்ளது. எனவே அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்பதால் இதன் தொடர் முறிவுள்ளதாகின்றது.
இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாக உள்ளது.
பலவீனமான அறிவிப்பு - 3
இந்தச் செய்திக்கு இன்னொரு பலவீனமான அறிவிப்பும் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம்
அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர், "அல்லாஹ்வின்
அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்'' என்று கூறட்டும்.
அவருக்கு உதவி செய்யப்படும்.
நூல்: முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா
இந்தச் செய்தியில் இரண்டு பலவீனங்கள் உள்ளன. முதலாவது பலவீனம்
என்னவென்றால் இதில் இடம்பெறும் முஹம்மது பின் இஸ்ஹாக் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ்
என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப்
போன்றவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறினாலே இவரின் அறிவிப்பு
ஏற்கப்படும். ஆனால் மேலுள்ள அறிவிப்பில் இவர் அப்பான் பின் ஸாலிஹிடம் தான் நேரடியாகக்
கேட்டதாக கூறவில்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்.
இரண்டாவது பலவீனம் என்னவென்றால் இந்தச் செய்தியை அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அப்பான் பின் ஸாலிஹ் என்பவர் தான் அறிவிக்கின்றார்.
இவர் நபித்தோழர் அல்ல. இவர் ஹிஜ்ரீ 100க்குப் பிறகு
மரணிக்கின்றார். இவர் எந்த நபித்தோழரையும் சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர்
தொடரில் பலர் விடுபட்டிருக்கிறார்கள். விடுபட்டவர்கள் யார்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமாக உள்ளது.
பலவீனமான அறிவிப்பு - 4
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
மரத்தின் இழைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள்
இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே
பயனத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், "அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு
அருள் புரிவான்''
என்று அழைக்கட்டும்.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
இந்த அறிவிப்பில் உசாமா பின் ஸைத் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா
பின் மயீன்,
அபூ ஹாதிம், நஸாயீ, இப்னு சஅத், இப்னு ஹிப்பான், அபூ தாவுத், இப்னு ஹஜர், தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
இவர் இந்தச் செய்தியை அறிவிக்கையில் பலருக்கு இதை நபித்தோழர்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். அபூகாலித் என்பவருக்கு மட்டும்
நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில்
அறிவிக்காமல் குழம்பியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
இத்துடன் இவரை விட வலிமையானவரான முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்புக்கு
மாற்றமாகவும் இவருடைய அறிவிப்பு உள்ளது.
முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள் அப்பான் பின் ஸாலிஹிடமிருந்து
அறிவிக்கையில் முழு அறிவிப்பாளர் தொடரையும் கூறாமல் முர்சலாகவே அறிவித்தார். அதாவது
நபித்தோழரை குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். மூன்றாவது பலவீனமான அறிவிப்பாக மேலே நாம்
இதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.
ஆனால் உசாமா பின் ஸைத் அவர்கள் அப்பான் பின் சாலிஹிடமிருந்து
அறிவிக்கையில் முர்சலாக அறிவிக்காமல் முழு அறிவிப்பாளர் தொடரையும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்பதால் இந்த முரண்பாட்டின் மூலம் இவர் இந்தச் செய்தியை சரியான அடிப்படையில்
அறிவிக்கவில்லை என்பது உறுதியாகின்றது.
இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து அல்லாஹ்விடம்
மட்டுமே கேட்க வேண்டிய உதவியை வானவர்களிடமோ, இந்த உலகத்தை
விட்டும் உலகத்தின் அனைத்துத் தொடர்புகளை விட்டும் முழுவதுமாகப் பிரிந்துவிட்ட இறந்தவர்களிடமோ
கேட்க முடியாது.
மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் நமக்கு ஆபத்து ஏற்பட்டால்
பிடரி நரம்பை விட நமக்கு மிக அருகில் இருக்கும் சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ்வை மட்டுமே
நாம் அழைக்க வேண்டும். அவனிடம் மட்டுமே உதவிதேட வேண்டும்.
EGATHUVAM SEP 2014