May 27, 2017

சத்தியத்தை உலகறியச் செய்த கோவை விவாதம் - 2

சத்தியத்தை உலகறியச் செய்த கோவை விவாதம் - 2

(தொடர் பாகம் 2)

எம்.எஸ். செய்யது இப்ராஹீம்
திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்!என்ற தலைப்பில் கடந்த 19.07.16 மற்றும் 20.07.16 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பரலேவிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற விவாதத்தின் முதல் பகுதியை கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காண்போம்.

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஆதாரப்பூர்வமான செய்திகளாக புகாரி, முஸ்லிம் உட்பட பல நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள எந்த ஒரு செய்தியையும் இதுவரை இஸ்லாமிய வரலாற்றில் எவருமே மறுத்ததில்லை; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் மட்டும்தான் இஸ்லாமிய வரலாற்றில் யாருமே செய்யாத செயலைச் செய்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து காஃபிராகியுள்ளது என்பதுதான் நம்மீது நம்மை எதிர்ப்பவர்கள் வைத்து வரும் பிரதானமான குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது கீழ்க்கண்ட ஆதாரங்களின் வாயிலாக கோவை விவாதத்தில் நிரூபணமானது.

மத்ஹபுவாதிகளால் மதிக்கப்படக்கூடிய பல இமாம்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை மறுத்துள்ளனர். அந்தச் செய்திகளையும், இது குறித்து நாம் எடுத்து வைத்த வாதங்களையும், பரலேவி மதத்தினர் அதற்களித்த உளறல் பதில்களையும் காண்போம்.

திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுத்த புல்கீனி இமாம்:

அல்லாஹ் மறுமையில் சொர்க்கம் நரகம் என்று தீர்ப்பளித்த பிறகு நரகத்திற்கென்றே புதிய படைப்புகளைப் படைத்து நரகத்தில் அந்தப் படைப்புகளைப் போடுவான் என்று புகாரியில் ஒரு செய்தி இடம் பெறுகின்றது.

இந்த ஆதாரப்பூர்வமான செய்தியை நமது தலைவர் புல்கீனி இமாம் அவர்கள் மறுக்கின்றார்கள். அவர்கள் அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கச் சொல்லும் காரணம்,

உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

அல்குர்ஆன் 18:49

என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு இந்த ஹதீஸ் முரணாக உள்ளது என்பதுதான் காரணம். மேற்கண்டவாறு புல்கீனி இமாம் அவர்கள் இந்த ஹதீஸை மறுக்கும் செய்தியை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியை நாம் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினோம். இதுவரை யாருமே திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்திகளையும் மறுத்ததே இல்லை என்று கூறினீர்களே! அவ்வாறு குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுப்பவர் காஃபிர் என்று சொன்னீர்களே! நீங்கள் மதிக்கக்கூடிய புல்கீனி இமாம் காஃபிர் என்று இப்போது சொல்லுங்கள் பார்ப்போம் என கேள்வி எழுப்பினோம். பல அமர்வுகளாகப் பதில் சொல்லாமல் வாயடைத்துப்போன பரலேவி மதத்தினர் நாம் பலமுறை சுட்டிக்காட்டி இந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப கேட்ட பிறகு வேறுவழியில்லாமல் அதற்குப் பதிலளித்தனர்.

உண்மையை ஒப்புக்கொண்ட பரலேவிகள்:

புல்கீனி இமாம் அவர்கள் ஹதீஸை மறுத்ததாக நீங்கள் சொல்லிக் காட்டுகின்றீர்கள். ஆமாம்! அந்தச் செய்தி உண்மையானது தான்.

புல்கீனி இமாம் அவர்கள் ஹதீஸ்களை மறுக்கத் தான் செய்துள்ளார்; அந்த ஹதீஸை அவர் மறுத்தது உண்மை தான்; அது குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸை மறுக்கவில்லை, மாறாக, பல ஹதீஸ்களுக்கு மாறாக அந்த ஹதீஸ் வருவதால் அவர் அதை மறுத்துள்ளார்.

அத்துடன் கூடுதல் ஆதாரமாகத் தான்...

உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 18:49)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையும் சொல்லியுள்ளார் என்று பதிலளித்தனர்.

இந்தப் பதிலின் மூலம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

அதாவது ஹதீஸுக்கு முரணாக இருந்தால் மறுப்பார்களாம்! குர்ஆனுக்கு முரணாக இருந்தால் மறுக்கமாட்டார்களாம்!

என்னே அருமையான விளக்கம். இதன் மூலம் அவர்களது பொய் வாதம் அம்பலமானது.

ஓரிருவர் அறிவிக்கும் செய்திகளை விட திருக்குர்ஆன் வசனங்களே வலிமையானவை - ஒப்புக் கொண்ட பரலேவிகள்:

ஒருவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் உளு முறிந்துவிடும் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஹனஃபி மத்ஹபு அறிஞர் ஸர்கசீ அவர்கள் அத்தவ்பா அத்தியாயத்தில் வரும் 108வது வசனமான அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர் என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்துக்காட்டி மறுத்துள்ளார்கள்.

(இந்த 9:108 வசனத்திற்கும், அந்த ஹதீஸிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தனி விஷயம்)

இந்தச் செய்தியைச் சொல்லி ஹனஃபி மத்ஹபு அறிஞர் ஸர்கசீ அவர்களை யூதன் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என நாம் கேள்வி எழுப்பியதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைதான் சரியான கொள்கை என்பதை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையைப் பறைசாற்றி விவாதத்தில் முழங்கிய பரலேவிகள்:

ஸர்கசீ இமாம் அவர்கள், ஒருவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவரது உளு நீங்கிவிடும் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸை ஏன் மறுத்தார்கள் தெரியுமா? அத்தவ்பா அத்தியாயத்தின் 108வது வசனத்தில் பள்ளிவாசல்களைப் பற்றி சொல்லும் போது அதில் தூய்மையை விரும்பக்கூடிய ஆண்கள் உள்ளதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அப்படியானால் ஒருவர் தனது உடலுறுப்பில் ஒன்றான ஆணுறுப்பை தொடுவதால் உளு முறியும் என்ற செய்தி இதற்கு முரணாக இருப்பதால்தான் அதை எங்கள் இமாம் அவர்கள் மறுத்துள்ளார்கள்.

ஏனென்றால் திருக்குர்ஆன் என்பது அனைவராலும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி. ஆனால் மர்ம உறுப்பைத்தொட்டால் உளு முறியும் என்ற செய்தி ஹதீஸ்களில் வந்துள்ள செய்தி. அதாவது இதற்கு, “ஹபர வாஹித் என்று சொல்லப்படும். அதாவது ஹதீஸ்களில் வருபவை ஓரிரு நபர்கள் அறிவிக்கும் செய்திகள். ஓரிரு நபர்கள் அறிவிக்கும் செய்திகளை விட அனைவராலும் ஒட்டு மொத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்வது தானே சரி; அதுதானே நமது கொள்கை என்று கூறி உண்மையை ஒப்புக் கொண்டனர்.

எதிர் தரப்பினரும் நமது கொள்கைக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்து நமது கொள்கையை நிலை நிறுத்த தவ்ஹீத் ஜமாஅத்தின் நபராகவே மாறி விவாதித்தது அல்லாஹ் இந்த விவாதத்திற்கு அளித்த மகத்தான வெற்றியாகும்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களை பொய்யர்களாக்கிய ராசி இமாம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3357

மேற்கண்ட செய்தியில் இப்ராஹீம் நபி மூன்று பொய் சொன்னதாக நபிகளார் கூறியதாக புகாரியில் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆதாரப்பூர்வமான செய்தியை ஹனஃபி மத்ஹபு இமாம் ராசி அவர்கள் பொய் என்று சொல்லி மறுக்கின்றார். அது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்த போதிலும் அந்தச் செய்தியைப் பொய் என்று கூறி அதை அவர் மறுப்பதற்குச் சொல்லும் காரணத்தைத் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது...

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும் இதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இதை நாம் ஏற்றால் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பொய்யராக ஆக்கியவர்களாக ஆவோம். இப்ராஹீம் நபியைப் பொய்யராக ஆக்குவதைவிட இந்தச் செய்தியை அறிவித்த நபர்களைப் பொய்யர் என்று சொல்லுவதுதான் சரியானதாகும் என ராசி இமாம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பினோம்.

இன்னும் கூடுதலாகச் சொல்வதாக இருந்தால் நாம் ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியை திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லும்போது அந்த ஆதாரப்பூர்வமான செய்தியை அறிவித்தவர்களில் யார் யார் பொய்யர் என்றோ யார் இதில் இட்டுக்கட்டினார் என்றோ நாம் சொல்வதில்லை. மாறாக இதில் இட்டுக்கட்டியவர்; அல்லது தவறிழைத்தவர் யார் என்பது குறித்து நமக்குத் தெரியாது என்றே சொல்கின்றோம். ஆனால் இமாம் ராசி அவர்களோ அந்தச் செய்தியை அறிவித்த அனைவரும் பொய்யர்கள் என்று அறிவித்துள்ளார். அப்படியானால் இந்த ராசி இமாமைப் பற்றி ஏன் இவர்கள் வாய்திறக்கவில்லை?

நீங்கள் எந்த மத்ஹபைப் பின்பற்றுவதாகச் சொல்லுகின்றீர்களோ அந்த இமாம் பஹ்ருத்தீன் ராசி அவர்கள் இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள். அப்படியானால் நீங்கள் பின்பற்றும் மத்ஹபு இமாம் காஃபிரா?

இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று இந்த இமாம் குறித்து அறிவிக்கத் தயாரா?

நீங்கள் அந்த இமாமின் மத்ஹபில் தானே இருக்கின்றீர்கள்; அப்படியானால் நீங்களும் புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானா? என அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தோம். கடைசி வரைக்கும் வாய்திறக்கவில்லை. அவர்களது கள்ள மௌனமே நமது கொள்கை நல்ல கொள்கைதான்; சரியான கொள்கை தான் என்பதை உறுதிப்படுத்தியது.

உமூமுல் பல்வாவிற்கு மாற்றமாக இருந்தால் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது:

ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டும் என்ற ஹதீஸை மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை எடுத்து வைத்தோம். இதற்கு மத்ஹபு இமாம்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை நாங்கள் மறுக்கின்றோம் என்றோ அல்லது இந்தச் செய்தி இன்ன பிற ஹதீஸ்களுக்கு மாற்றமாக இருப்பதால் அதை மறுக்கின்றோம் என்றோ சொல்லவில்லை. மாறாக ஒட்டக இறைச்சியை உண்டு விட்டு இதன் காரணமாக எங்களது உளு முறிந்துவிட்டது எனச் சொல்லி அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களில் எவருமே மறுபடியும் உளு செய்யவில்லை. எனவே ஒட்டக இறைச்சி உண்டால் உளு முறியும் என்ற செய்தி உமுமுல் பல்வாவிற்கு மாற்றமாக உள்ளதாம்; அதாவது நடைமுறையில் உள்ள நிகழ்வுகளுக்கு எதிராக உள்ளதாம். அதனால் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

எப்படியெல்லாம் ஹதீஸ்களை மறுத்து உள்ளார்கள். இவர்களையெல்லாம் காஃபிர்கள் என்று சொல்வீர்களா? எனக் கேட்டதற்கு, அந்தக் காரணம் மட்டுமா அதில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹதீஸை மறுப்பதற்கு இன்னும் பல காரணங்கள் அதற்குக் கீழ் உள்ள வரிகளில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டீர்களே! என்று சொல்லி உண்மையை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல காரணங்களையும் ஹதீஸ்களை மறுப்பதற்காக மத்ஹபு இமாம்கள் சொல்லியுள்ளார்கள் என்ற உண்மையையும் சேர்த்து ஒப்புக் கொண்டனர்.

தானியங்களில் ஐந்து வஸக் அளவிற்கு விளைந்தவைகளுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை திருக்குர்ஆன் வசனத்தைக் காட்டி மறுத்த ஹனஃபி மத்ஹபு அறிஞர்களை காஃபிர்கள் என்று சொல்வீர்களா? எனக்கேள்வி எழுப்பினோம்.

அவ்வாறு சொல்லப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று நம்மிடம் பிரிண்ட் அவுட்டை கேட்டனர். பிரிண்ட் அவுட் கொடுத்த பிறகு வாய் மூடியவர்கள் தான் இது குறித்து கடைசி வரைக்கும் வாய்திறக்கவே இல்லை.

நாட்டுக் கழுதையைச் சாப்பிடுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை’’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:145) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டி மறுத்த செய்தியை எடுத்து வைத்ததற்கு அதற்கு விரிவுரையாக எழுதப்பட்ட சம்பந்தமில்லாத செய்தியைக் காட்டி சமாளித்தார்களே தவிர இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்த செய்திக்கு எவ்வித பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏழு தடவை கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?’’ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவைகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். (அல்குர்ஆன் 5:4) என்ற வசனத்தை மேற்கோள்காட்டி மாலிக் இமாம் மறுத்துள்ளார்கள் என்ற செய்தியை நாம் எடுத்துக்காட்டிய போதும் கடைசி வரைக்கும் அதற்கும் வாய் திறக்கவில்லை.

உளு செய்யும் போது தலைப்பாகை மீது மஸஹ் செய்து கொள்ளலாம் என்ற ஹதீஸை, நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 5:6) என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி பஹ்ருர் ராயிக் என்ற நூலில் ஹனஃபி மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ள செய்தியை ஆதாரமாகக் காட்டியதற்கு விழி பிதுங்கினார்களே தவிர வாய் திறக்கவில்லை.


இதுமட்டுமல்ல! இதைவிட இன்னும் பல ஆதாரப்பூர்வமான செய்திகளை விதவிதமான 

காரணங்களைக் கூறி மத்ஹபு இமாம்கள் மறுத்துள்ளனர். நபித்தோழர்களும் பல 

ஆதாரப் பூர்வமான செய்திகளை திருக்குர்ஆன் வசனத்திற்கு முரண்படுவதாகச் சொல்லி 

மறுத்துள்ளார்கள். அந்தச் செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.


EGATHUVAM SEP 2016