ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு 3 - ஆதம் நபியை அவமதிக்கும் மவ்லிது
தொடர்: 3
எம். ஷம்சுல்லுஹா
கடந்த இதழில், ஹுஸைன் மவ்லிது
ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிப்பதையும், அலட்சியமாக
ஆக்கியதையும் பார்த்தோம். இந்தத் தொடரில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இந்த மவ்லிது
அவமரியாதை செய்வதைப் பார்ப்போம்.
தமிழக முஸ்லிம்கள் வேதமாக நினைக்கும் சுப்ஹான மவ்லிதின் துவக்கத்தில்
ஆதம் நபி அவர்களின் படைப்பு சம்பவம் இடம்பெறுகின்றது.
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, கண்களைத் திறந்ததும் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில்
"லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ்''
என்றும் எழுதப்பட்டிருந்ததாம். "இறைவா உன் பெயருடன் முஹம்மது
என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது
வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை
மீறியதால் வெளியேற்றப்பட்ட போது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது
நினைவுக்கு வந்ததாம். "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.
இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும்
சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின்
அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி
பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து
ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன்2:37)
இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக்
கொண்டார் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில்
கூறப்படாவிட்டாலும் பின்வரும் வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.
"எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை
மன்னித்து,
அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)
ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக்
கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி
அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.
இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான்
என்பதையும் இந்த வசனம் கூறுவதிலிருந்து, ஆதம் (அலை)
முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக சுப்ஹான மவ்லிதில் இடம்பெற்ற செய்தி
கட்டுக்கதை என்பதை அறியலாம்.
எல்லா மவ்லிதுக் கிதாபுகளுமே பொய் மூட்டைகள் தான் என்பதற்கு
இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டாகும்.
சுப்ஹான மவ்லிதில் இந்தக் கதையை இப்படிப் பொருத்திவிட்டு, அதே மவ்லிதின் பிற்பகுதியில் இடம்பெறும் ஹுஸைன் மவ்லிதில் இந்தக்
கதையை சற்று மாற்றம் செய்து பொருத்தியிருக்கிறார்கள்.
முஹம்மது நபியை வஸீலாவாக, ஒரு
சாதனமாகப் பயன்படுத்தி மன்னிப்பு கேட்பது போன்ற மூலக் கருவில் இந்தக் கதை ஒன்றிணைந்தாலும்
அதன் உள்ளடக்கத்தில் முற்றிலும் வேறுபடுகின்றது.
ஆதமும் ஹவ்வாவும் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கும் போது ஜிப்ரயீல்
(அலை) அவ்விருவரையும் தங்கம், வெள்ளியினால் கட்டப்பட்ட ஒரு
கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள் என்ற கதையைக் கடந்த இதழில் கண்டோம். அதில் ஆதம் நபி
செய்த பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள்.
அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, "யா
அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்!
யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு!
என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்'' என்று ஆதம்
(அலை) பிரார்த்தனை செய்தார்கள்.
சுப்ஹான மவ்லிதில் "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால்
என்னை மன்னிப்பாயாக'' என்று ஆதம் நபி பிரார்த்தனை
செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹுஸைன் மவ்லிதில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் சேர்த்துக்
குறிப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டில் எது உண்மை?
மேலும் இந்தக் கதையில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் தெரிந்து
வைத்திருப்பது ஆதம் நபிக்கு ரொம்பவும் முக்கியமல்லவா? அதனால் அந்தப் பெயர்களையும் அதற்கான விளக்கத்தையும் ஜிப்ரயீல்
(அலை) அவர்கள் தாமே முன்வந்து கற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால் சுப்ஹான
மவ்லிதில் அல்லாஹ்வும் ஆதமும் நேரடியாகப் பேசிக் கொண்டதாக வருகின்றது? இந்த முரண்பாடுகளெல்லாம் மேற்கண்ட கதை கடைந்தெடுத்த பொய் என்பதைத்
தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
சுப்ஹானல் அஸீஸில் கஃப்பார் என்று துவங்கி, இந்த மவ்லிதுக் கிதாபு அவ்வளவு பொய்களை அடித்து விடுகின்றது.
அது அளந்துவிட்ட பொய்களில் ஒரே மூலக் கருவைக் கொண்டு, உள்ளே முரண்பட்ட செய்திகளை இடத்திற்குத் தக்கபடி மாற்றம் செய்து, இரு இடங்களில் இரண்டு விதமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பொய்
முக்கியமானதாகும்.
இதை ஓர் எடுத்துக்காட்டாகவே இங்கு குறிப்பிடுகின்றோம். முக்கியமாக
ஹுஸைன் மவ்லிதுக் கதையில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், ஆதம் (அலை) அவர்கள் இங்கு மட்டரகமாக மதிக்கப்படுவதைத் தான்.
ஆதம் இல்லையேல் ஐவரும் இல்லை
சுப்ஹான மவ்லிதிலாவது ஆதம் நபியவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின்
பொருட்டால் துஆச் செய்ததாக வருகின்றது. அவ்வாறு கேட்பது குர்ஆன் வசனத்திற்கு மாற்றமானது
என்பதைக் கண்டோம். ஆனால் இதையாவது ஓரளவு சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஹுஸைன்
மவ்லிதில் உள்ள கதையைச் சகிக்கவே முடியவில்லை.
காரணம், நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரின் பொருட்டால்
ஆதம் நபி பிரார்த்தனை செய்ததாகச் சொல்கின்றார்கள்.
ஆதம் (அலை) அவர்களின் அந்தஸ்து என்ன? அவர்களது தரம் என்ன? ஆதம் நபி இல்லையென்றால்
இந்த ஐவரும் இல்லை. அனைத்து மனித சமுதாயமும் இல்லை. அப்படிப்பட்ட அந்த மனிதகுல மூலவரை, முதல்வரை அவரது சந்ததியில் உள்ள பிள்ளைகள் பொருட்டால் பாவமன்னிப்பு
கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் கொள்ளைப்புற
வழியாக வந்த கள்ள ஷியாக்களின் வேலையைத் தவிர்த்து இது வேறு யாருடைய வேலையாக இருக்க
முடியும்?
ஆதம் நபியின் அருஞ்சிறப்புகள்
ஷியாக்களும், அவர்களது வாரிசுகளும்
உருவாக்கிய மவ்லிது தான் இந்த மட்டரகமான கதையை அடித்து விட்டிருக்கின்றது. ஆதம் நபியைப்
பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது, மலக்குகளையே
திகைக்க வைத்த அற்புதத் திறனை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று கூறுகின்றது.
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்.
பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.
"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை.
நீயே அறிந்தவன்;
ஞானமிக்கவன்'' என்று அவர்கள்
கூறினர். "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர்
கூறிய போது,
"வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.
அல்குர்ஆன் 2:31-33
இப்படிப்பட்ட அபாரமான, அலாதியான அறிவாற்றல்
கொண்ட ஆரம்ப மனிதரைத் தான் ஐவர் குழுவின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்க வைத்திருக்கின்றனர்.
ஆதம் (அலை) பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற
செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன். (மறுமை நாüல்)
அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை
அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர்
(மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான)
நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது
என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக
உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள்
ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ்
தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை
உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்
பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப்
பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும்
(அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்)
கோபம் கொண்டான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும்
அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து
(உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான்
காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (ஆகவே,) நீங்கள்
வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3340
அவர்கள் செய்த பாவம் மரத்தை நெருங்கியது மட்டும் தான். அதுவும்
அவனது விதியின் அடிப்படையில் அமைந்ததாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச்
சொர்க்கத்திலிருந்து வெüயேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய்
ஆக்கியவர்கள் நீங்கள்தாமே!'' என்று மூசா (அலை) அவர்கள் ஆதம்
(அலை) அவர்கüடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் "மூசா!
தன் தூதுச் செய்திகளை (மக்கüடம்) எடுத்துரைப்பதற்காகவும்
தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் "எழுதிவிட்ட' அல்லது "விதித்துவிட்ட' ஒரு
விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்'' என்று
திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத்
தோற்கடித்து விட்டர்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4738
ஆதம் நபி செய்த அந்தப் பாவத்திற்காகக் கூட அவர்களைப் பழிக்க
முடியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
இப்படிப்பட்ட சிறந்த நபியைத் தான் இந்த ஷியா வர்க்கம் கொச்சைப்படுத்துகின்றது.
இந்த ஷியாக்களுடைய வேலையே தாங்கள் கடவுளாகக் கொண்டாடும் முஹம்மத்
(ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகியோரைத் தூக்கிப்
பிடிக்க வேண்டும். அவ்வாறு தூக்கிப் பிடிக்கும் போது, மலக்குகள், நபிமார்களைக் காலில் போட்டு
மிதித்தாலும் கவலைப்பட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த ஐவர் மீது அவர்களுக்கு அளவு
கடந்த வெறியூட்டப்பட்டுள்ளது.
ஐந்து கடவுளர்களும் அத்வைதக் கொள்கையும்
இந்தப் பாவிகள், மவ்லிதைப்
பாடுகின்ற மவ்லவிகள், லெப்பைகள் அனைவரும் பஞ்சா என்ற
ஐந்து கடவுள் கொள்கையை, அல்லாஹ் இணை வைப்பிலிருந்து
பாதுகாத்துள்ள சுவனபதியிலிருந்தே துவக்குகின்றார்கள். அத்துடன் நில்லாமல் இதில் அத்வைதக்
கொள்கையை எவ்வித சங்கடமும் இல்லாமல் சந்தோஷமாக நுழைக்கின்றனர்.
(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் - புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது - புகழப்படக்கூடியவர்.
நான் அஃலா - மிக உயர்ந்தவன்; இவர்
அலீ - உயர்வானவர்.
நான் ஃபாத்திர் - முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா
நான் அல்முஹ்ஸின் - நன்மை செய்பவன்; இவர் ஹஸன் - நன்மை.
என்னிடம் இஹ்ஸான் - நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் - சிறிய நன்மை
இந்த ஐவரின் பெயரையும் அல்லாஹ்வுடைய பெயர்களுடன் பின்னிப் பிணைப்பதில்
இந்த ஷியாக்கள் சரியான சதி வேலையைக் கையாள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வும் இந்த ஐவர்
குழுவும் ஒன்று என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தைப் புகுத்துகின்றார்கள்.
மஹ்மூத் என்றால் புகழப்படக்கூடியவன் என்று பொருள். இதை அல்லாஹ்வுடைய
பெயராக ஆக்குகின்றார்கள். முஹம்மது என்றாலும் அதே பொருள் தான். ஆனால் அது நபி (ஸல்)
அவர்களின் பெயராகும். இதன் வேர்ச்சொல் ஹம்து என்பதாகும். இதிலிருந்து தான் மஹ்மூத், முஹம்மது என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. அதாவது அல்லாஹ்வும்
முஹம்மதும் ஒரே ஆள் தான் என்று வாதிக்கின்றனர்.
இதேபோல் அஃலா என்றால் மிக உயர்ந்தவன் என்று பொருள். இதை அல்லாஹ்வின்
பெயராக ஆக்குகின்றார்கள். அலீ என்றால் உயர்ந்தவர். இதை அலீயின் பெயராக ஆக்குகின்றார்கள்.
இதன் வேர்ச்சொல் உலுவ்வுன் என்பதாகும். இதிலிருந்து தான் அஃலா, அலீ என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் அல்லாஹ்வும் அலீயும்
ஒரே ஆள் என்று வாதிக்கின்றனர்.
அல்முஹ்ஸின் என்ற அல்லாஹ்வின் பெயரைக் கூறுகின்றார்கள். ஹஸன்
என்பது ஹஸன் (ரலி) அவர்களின் பெயர். ஆக, அல்லாஹ்வும்
ஹஸனும் ஒன்று என்ற கருத்தைத் திணிக்கிறார்கள்.
ஹுஸைனுக்கு மட்டும் அல்லாஹ்வுடைய பெயராகக் கொண்டு வரவில்லை.
அப்படி ஒரு வார்த்தை இல்லை. அதனால் என்னிடம் ஒரு நன்மை உள்ளது என்று முடிச்சுப் போட்டு, அல்லாஹ்வையும் ஹுஸைனையும் ஒன்றாக்குகின்றனர்.
முஹ்ஸின், ஹஸன், ஹுஸைன் ஆகிய மூன்றுமே ஹுஸ்னுன் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும்.
அவற்றையெல்லாம் குயுக்தியாக பொருத்தியவர்கள், ஃபாத்திமா
என்ற வார்த்தையை மட்டும் அல்லாஹ்வுடைய எந்தப் பெயருடனும் பொருத்த முடியவில்லை. அதனால்
ஃபாத்திர் என்ற அல்லாஹ்வுடைய பெயருடன் பொருத்துகின்றார்கள்.
ஃபாத்திமா என்ற பெயருக்கு ஏதுவாக ஃபாதிம் என்று தான் கொண்டு
வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் அவ்வாறு கொண்டு வரமுடியவில்லை. ஃபத்ம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து
பிறந்த ஃபாத்திமா என்ற வார்த்தைக்குப் பொருள், பால்குடியை
மறக்கடித்தல் என்பதாகும்.
ஆனால் ஃபாத்திர் என்ற வார்த்தை, ஃபத்ரு - பிளத்தல், படைத்தல் என்ற
மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். இங்குதான் அவர்களால் முடிச்சுப் போட முடியவில்லை.
இவ்விரண்டும் வெவ்வேறு வார்த்தைகளாகும். இதனால் இவர்களது சதி வேலை வெளிச்சத்திற்கு
வந்து விட்டது. அத்வைதக் கொள்கை என்ற அபத்தம் அம்பலத்திற்கு வந்து விட்டது.
அல்லாஹ்வும் அடியார்களும் ஒன்று தான்; காணும் பொருள் எல்லாம் கடவுள் தான் என்பது அத்வைதக் கொள்கையாகும்.
இந்தக் கொள்கையை இஸ்லாமியக் கொள்கை என்ற பெயரில் சின்னஞ்சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குப்
போதிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ள தாய்மார்கள், "அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்' என்று
பிள்ளைகளுக்குப் போதிக்கின்றனர். இது ஷியாக் கொள்கையின் வெளிப்பாடு தான். எல்லாம் வல்ல
அல்லாஹ் தனது திருமறையில் இந்தக் கொள்கையைத் தகர்த்தெறிகிறான்.
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)
அவன் வானத்திற்கு மேல் இருப்பதாகப் பின்வரும் வசனம் தெரிவிக்கின்றது.
வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று
இருக்கிறீர்களா?
அப்போது (பூமி) நடுங்கும். (அல்குர்ஆன் 67:16)
அல்லாஹ், தூணிலோ துரும்பிலோ இல்லை என்று
திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது. எந்த மனிதருடனும், அடியானுடனும் அவன் ஒன்றாகக் கலக்கவோ, ஒருங்கிணையவோ மாட்டான். ஆனால் ஷியாக்களோ, அடியார்களான முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரையும் அல்லாஹ்வையும் ஒன்றாக்குகின்ற விஷ
வேலையைச் செய்கின்றனர். இந்தக் கேடுகெட்ட கொள்கை தான் ஹுஸைன் மவ்லிது என்ற பெயரில்
பாடப்படுகின்றது.
அல்லாஹ்வின் மீது அப்பட்டமான பொய்
அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், "(இந்த வார்த்தைகளின் மூலம்) உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து
நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்'' என்று வஹீ அறிவித்தான்.
இவ்வாறு இந்த மவ்லிது கூறுகின்றது. ஆதம் நபிக்கு இந்தச் செய்தியை
அல்லாஹ் வஹீ அறிவித்திருந்தால் அதை ஆதம் நபியே கூறியிருக்க வேண்டும். அது திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால்
அவ்விரண்டிலும் அது வரவில்லை எனும் போது இது பொய்யான செய்தியாகும்.
ஆதமை நோக்கி அல்லாஹ் சொல்வதாக இப்படி ஒரு பொய்யைக் கூறுகின்றார்கள்.
உண்மையில் இது அல்லாஹ்வின் மீது சொல்கின்ற அப்பட்டமான பொய்யாகும். இதற்கு அல்லாஹ் கடுமையான
தண்டனையை அளிக்கின்றான். இதைப் பின்வரும் வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும்
"எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின்
வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே
வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும்
வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (அல்குர்ஆன்
6:93)
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகவும் அநீதி
இழைத்தவன் யார்?
அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே
தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள்
கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.
(அல்குர்ஆன் 11:18)
அல்லாஹ்வின் சாபத்தையும் இந்த அநியாயக்காரர்களுக்கு எதிரான சாட்சியத்தையும்
இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. இப்படிப்பட்ட தண்டனையையும் இறைச் சாபத்தையும் பெற்றுத்
தருகின்ற ஹுஸைன் மவ்லிதைத் தான் மவ்லவிகள், லெப்பைமார்கள்
ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
EGATHUVAM FEB 2015