பள்ளிவாசலின் சிறப்புகள் -
3
எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி., மங்கலம்
சென்ற இதழின் தொடர்ச்சி…
பள்ளிவாசலின் தகுதியை இழந்த இடங்கள்
அல்லாஹ்வின் ஆலயம் எப்படி இருக்க வேண்டும்; எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மார்க்கம் ஆணை பிறப்பித்துள்ளதோ
அதன்படி அது அமைந்திருப்பது அவசியம். அதற்கு மாற்றமாக இருந்தால் அது தனக்குரிய அந்தஸ்த்தை
இழந்துவிடும். இதைப் புரிந்து கொள்ளாமல், அதிக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழ்படுத்தி வருகிறார்கள்.
மக்களெல்லாம் பள்ளிவாசல் என்று அழைத்தால் மட்டும் போதாது; அல்லாஹ்வின் பார்வையில் அது பள்ளிவாசலாக இருக்க வேண்டும் என்பதை
நினைவில் கொள்ள மறந்துவிட்டார்கள். இது குறித்து இருக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப்
புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை’’ என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே’’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத்
தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
(திருக்குர்ஆன் 9:107-109)
இந்த வசனம் சொல்வதைப் போன்று பள்ளிவாசலின் தகுதியை இழக்க வைக்கும்
காரியங்கள் இன்றைய பெரும்பாலான பள்ளிவாசல்களில் தாரளமாக, சகஜமாக இருக்கின்றன.
பள்ளிவாசலில் வரதட்சணைத் திருமணங்கள் நடைபெறுகின்றன; பள்ளிவாசல் பணம் வட்டிக்கு விடப்படுகின்றது. பள்ளிவாசலுக்குள்
தர்ஹா கட்டி கும்பிடுகிறார்கள்; அந்த
தர்ஹாவில் கோரிக்கை வைத்து மன்றாடுகிறார்கள். மத்ஹபுகளின் பெயரால் மார்க்கச் சட்டங்களைக்
கூறுபோட்டு மக்களைப் பிரிக்கிறார்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய மார்க்க நெறிகளை அழித்து நாசமாக்கத்
துடிக்கும் சூபியிஸம், ஷியாயிஸத்தின்
சடங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுகின்றன. பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, பால் கிதாபு பார்ப்பது போன்ற பிறமதக் கலாச்சாரங்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறெல்லாம், திருமறை வசனங்கள் கண்டித்துள்ள பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்
இடங்கள் பள்ளிவாசல்கள் அல்ல. அவற்றில் தொழுவதற்கும் ஒருபோதும் அனுமதி இல்லை என்பதே
மார்க்கத்தின் நிலைபாடு!
பள்ளிவாசல் நிர்வாகிகளின் பண்புகள்
மஸ்ஜிதுக்குரிய இலக்கணம் சொல்லப்பட்டு இருப்பது போன்று அதனை
நிர்வாகம் செய்பவர்களுக்குரிய தகுதிகளும் சொல்லப்பட்டு உள்ளன. மார்க்கம் கூறும் இறை
நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் செயல்பாடுகளிலும் சரியாக இருக்க வேண்டும். மார்க்கத்தைக்
கடைப்பிடிப்பதில் மற்ற மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இப்படித்தான் பள்ளிவாசல்
நிர்வாகிகளுக்கு மார்க்கம் வரையறை வகுக்கிறது என்பதற்குப் பின்வரும் வசனங்கள் சான்றுகளாக
உள்ளன.
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை
நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(திருக்குர்ஆன் 9:17)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து
அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க
வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
(திருக்குர்ஆன் 9:18)
இந்தக் கட்டளைகளும் பல இடங்களில், பள்ளிவாசல் நிர்வாகத்தில் மீறப்படுகின்றன. வட்டி, வரதட்சணை போன்ற பெரும்பாவங்களிலும், சமூகத் தீமைகளிலும் பங்கெடுப்பவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக
இருக்கிறார்கள். புகை பிடிப்பவர்கள், ஒழுக்க வீழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுள் தாயத்து, தகடு போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கியவர்கள், தர்ஹாக்களுக்கு வலம் போகும் அவ்லியா பக்தர்கள் இருக்கிறார்கள்.
இத்தகைய நபர்கள் நிர்வாகத்தில் அமர அறவே அனுமதிக்க கூடாது. இந்தப் பாவ காரியங்களில்
ஈடுபடுபவர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகளாக வந்து விடாமல் இருக்க முஸ்லிம்கள் கவனம் செலுத்தி, இதிலும் மார்க்கத்தை நிலைநிறுத்த வேண்டும்.
பள்ளிவாசலும் பராமரிப்பும்
எந்த நோக்கத்திற்காகப் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ அந்த எண்ணம்
நிறைவேற வேண்டும்; நீடிக்க வேண்டும்
என்றால் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். பள்ளிவாசல் கட்டுவதற்கு அளிப்பதைக் காட்டிலும்
அதன் பராமரிப்புக்கு நன்கொடை அளிப்பதில் அநேக மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் ஆலயத்திற்காக செலவளிப் பதற்கும் நிச்சயம் நன்மை
உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அங்கு நிறைவேற்றப்படும் நற்காரியங்கள், வணக்க வழிபாடுகள் மூலம் அதேபோன்று நன்மை நமக்கும் கிடைக்கும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு
உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.
(திருக்குர்ஆன் 47:7)
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த “ஒரு கறுப்பு ஆண்’ அல்லது “ஒரு
கறுப்புப் பெண்’ இறந்துவிட்டார். ஆகவே அவரைப்
பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்போது மக்கள், “அவர் இறந்துவிட்டார்’’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதா? “அவருடைய அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்’’ என்று கூறிவிட்டு அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக
பிரார்த்தனைத் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புஹாரி (458)
அல்லாஹ்வின் ஆலயத்தைப் பராமரிப்பதற்கும் நம்மால் முடிந்த உதவிகளைச்
செய்ய வேண்டும். நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்
கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டு பள்ளிவாசலின் தூய்மையைக் கெடுக்கும்
வகையில் ஒருபோதும் ஈடுபட்டு விடக்கூடாது. அதன் பொருட்களை, வளங்களை சேதப்படுத்தி விடக்கூடாது.
நம்முடைய வீட்டில் எவ்வாறு அக்கறையோடு நடந்து கொள்வோமோ அதைவிட
அதிகமாக அல்லாஹ்வின் ஆலயத்தில் பொதுநலத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்திலும்
நபிகளாரிடம் நமக்கு முன்மாதிரி இருக்கிறது.
கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள்
கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின்
முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள்.
பிறகு ‘‘உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது ‘அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்’ அல்லது ‘அவருக்கும்
கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்’. ஆகவே, எவரும்
தமது கிப்லாத் திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது
பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்துகொள்ளட்டும்’’ என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு
பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, ‘‘அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (405)
பள்ளிவாசலும் தொழுகை அழைப்பும்
பள்ளிவாசல் என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய அடையாளம்.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டிப்பாகப் பள்ளிவாசல் இருக்க வேண்டும். அதன் மூலம்
பாங்கு சொல்லி மக்களை, படைத்தவனை
வணங்குவதன் பக்கம் அழைக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் கற்றுக் கொடுத்த அந்த அழைப்பில்
எந்தவொரு கூடுதல் குறையும் செய்யாமல் அதில் உள்ளவாறு சொல்ல வேண்டும். தொழுகையை நிலைநாட்ட
வேண்டும்.
(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள்
கருதியபோது) மக்கள் நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் கூறினார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு எனும் தொழுகை அறிவிப்பிற்குரிய வாசகங்களை
(கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும்
படியும் (நபியவர்கள் மூலம்) உத்தரவிடப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புஹாரி (603)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச்
சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்டால்
தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின்
தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
EGATHUVAM SEP 2016