நபிவழிக்கு முரணாண மத்ஹபுகள் தொடர் : 4
தடை செய்யப்பட்ட உறவுகள்
மாநபிவழி
இஸ்லாத்தின் பார்வையில் சில உறவுகள் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன.
திருமணம் செய்ய விலக்கப்பட்ட அவர்கள் யார்? யார்? என்ற விவரம் முழுவதையும் இறைவனும், இறைத்தூதரும் நமக்கு விளக்கி விட்டார்கள். அதன் விவரம் வருமாறு:
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின்
சகோதரிகள்,
உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின்
புதல்விகள்,
சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப்
பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள்
தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன்
உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது)
உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும்
(தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:23
(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 5108
இவர்களே திருமணம் புரிய தடை செய்யப்பட்ட உறவுகள் ஆவர். இந்நிலையில்
மத்ஹபு யாரையெல்லாம் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றது? அது மார்க்கத்தின் பார்வையில் சரிதானா? என்பதை இப்போது பார்ப்போம்.
மத்ஹபு வழி
இச்சையுடன் தொட்ட பெண்
இச்சையுடன் ஒரு பெண், ஓர் ஆணைத்
தொட்டால், தொட்டவளின் தாயும், மகளும் அவனுக்குத்
தடையாகி விடுவர். (அதாவது அவ்விருவரையும் அவன் திருமணம் முடிப்பது தடை செய்யப்பட்டு
விட்டது)
நூல்: ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 192
ஒரு பெண், ஓர் ஆணை இச்சையுடன் தான் தொடுகின்றாளா? அல்லது சாதாரணமாகத் தொடுகின்றாளா? என்பதை அவனால் எப்படி அறிந்து கொள்ள இயலும் என்ற கேள்விக்குள்
செல்லாமல் இதை நபிகளார் கூறினார்களா? அதற்கான ஆதாரம்
எங்கே? என்பதே நமது கேள்வி. இது மாத்திரம் அல்ல. மத்ஹபின் பார்வையில்
இன்னும் சில பட்டியல் உள்ளது.
தலைமுடியைத் தொட்டாலே தடை
(தான் மணமுடித்த
பெண்ணின் தாயை (மாமியாரை) ஒருவர் திருமணம் செய்வது தடையாகும் என்ற) திருமணச் சட்டத்தின்
படி தன்னால் விபச்சாரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயைத் திருமணம் முடிப்பது இவனுக்குத்
தடையாகும். (ஜினா என்றால் தவறான உறவு) இவன் இச்சையுடன் தொட்ட பெண்ணின் தாயை இவன் திருமணம்
முடிப்பதற்குத் தடை! அவன் தொட்ட பகுதி உஷ்ணத்தைத் தடுக்காத திரையுடன் கூடிய தலையின்
ஒரு முடியாக இருந்தாலும் சரியே! திருமணம் முடிக்கத் தடை தான்! அவனைத் தொட்டு விட்ட
பெண்ணின் தாயையும் அவன் திருமணம் முடிப்பதற்குத் தடை! அவனது ஆணுறுப்பைப் பார்த்தவளின்
தாயும் அவனுக்குத் தடை! அவன் எவளது வட்ட உள்ளுறுப்பைப் பார்த்தானோ அவளது தாயும் இவனுக்குத்
தடை! அவளது உறுப்பை அவன் கண்ணாடியிலோ அல்லது அவள் தண்ணீரில் நிற்கும் போது பார்த்தாலும்
சரி! அவளது தாய் அவனுக்குத் தடை தான். மேற்கண்ட பெண்ணின் தாய் அவனுக்குத் தடையானது
போல், அவளது மகளும் அவனுக்குத் திருமணம் முடிக்கத் தடை!
(நூல்: துர்ருல் முக்தார்
பாகம் 3,
பக்கம் 32)
இவைகளுக்கெல்லாம் மூல ஆதாரங்கள் எவை? இறை வார்த்தையா? நபிகளாரின்
விளக்கமா?
முடியைத் தொட்டாலும் திருமணத் தடை ஏற்படும் என்று திருக்குர்ஆனின்
எந்த வசனத்தில் உள்ளது? எந்த ஹதீஸிலிருந்து இந்தச் சட்டத்தை
எடுத்தார்கள்?
மத்ஹபை ஆதரிக்கும் போலி உலமாக்களும், அவர்களை நம்பும் அறிவிலிகளும் பதில் சொல்வார்களா?
மதுபான விற்பனை
மாநபி வழி
இஸ்லாத்தில் போதை தரக்கூடிய பொருட்கள் அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. போதை தரும் மதுபானம்
உட்கொள்ளவும்,
விற்கவும் தடை செய்யப்பட்டவைகளில் ஒன்று. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து
அறிந்து கொள்ளலாம்.
நான், அல்லாஹ்வின் தூதரே! எங்கள்
(பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில்
மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும்
என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ ரலி,
நூல்: புகாரி 6124
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த
போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள்
என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்,
நூல்: புகாரி 4296
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்'' என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின்
கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு
அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க
அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்'' எனக்
கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கூடாது! அது ஹராம்!'' எனக் கூறினார்கள்.
அப்போது தொடர்ந்து, "அல்லாஹ் யூதர்களை தனது
கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன்
கிரயத்தை சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 2236
இந்த செய்திகள் மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்றும், மீறி விற்றால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் மார்க்கம்
எச்சரிக்கின்றது. நபிகளாரின் இந்த எச்சரிக்கைகளை மனதில் நிறுத்திக் கொண்டு இது தொடர்பான
மத்ஹபு சட்டத்தைக் காண்போம்.
மத்ஹபு வழி
ஒரு முஸ்லிம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக்
கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.
(ஹிதாயா, பாகம் 2, பக்கம் 41)
மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்று ஏராளமான நபிமொழிகள்
எச்சரித்த பிறகும் இப்படி ஒரு சட்டத்தை ஹனபி மத்ஹபு போதிக்கின்றது.
ஒரு முஸ்லிம் நேரடியாக சாராயக்கடை வைத்து விற்பனை செய்யாமல்
கிறித்தவரின் மூலம் கடை வைத்து மதுபானத்தை விற்பனை செய்யலாம் என்று சொல்கின்றார்களே!
இதற்கு என்ன ஆதாரம்? மத்ஹபில் கூறப்பட்டுள்ள இந்தச்
சட்டம் எந்த நபிமொழியை, குர்ஆன் வசனத்தை ஆதாரமாக கொண்டு
எடுக்கப்பட்டுள்ளது? மத்ஹபை பின்பற்றுவோர் பதிலளிப்பார்களா?
மதுவில் கறி சமைத்தல்
மதுவில் சமைக்கப்பட்ட இறைச்சி மூன்று தடவை கொதிக்க வைக்கப்பட்டு
ஆற வைக்கப்பட்டால் தூய்மையாகிவிடும்
(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 361)
மதுவில் கறியைப் போட்டு மூன்று தடவை கொதிக்க வைத்து, ஆற வைத்தால் அந்த மதுக் குழம்பை (கறிக்குழம்பு போன்று மதுக்குழம்பு)
சாப்பிடலாம் என்று ஹனபி மத்ஹபு சொல்கின்றது. இதற்கு என்ன ஆதாரம்?
மது ஹராம் என்று ஆன பிறகு அதை வைத்துக் குழம்பு செய்யலாம் என்று
ஐடியா சொல்லித் தரும் மத்ஹபு நம்மை இறைவழியில், நேரிய பாதையில்
அழைத்துச் செல்லுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படியே போனால் ஜம்ஜம் நீரில் பன்றிக் கறியை சமைத்து ஃப்ரிட்ஜில்
வைத்தால் அது தூய்மையாகி விடும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு
சட்டம் போதிக்கும் மத்ஹபை, மத்ஹபின் இமாம்களைப் பின்பற்றினால்
இறைவன் தடுத்த ஒன்றை ஆகுமாக்குதற்காக எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிவு
பெற்றவர்களாக,
தந்திரம் செய்யும் தந்திரக்காரர்களாக மாறிவிடுவோம். எனவே நபிவழிக்கு
முரணாண மத்ஹபைப் பின்பற்றுவதிலிருந்து விலகிடுவோமாக!
குதிரைக் கறி
மாநபி வழி
குதிரைக் கறியை உண்பது மார்க்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் அதை உண்ண அனுமதி வழங்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்)
கழுதைகüன் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை
(அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-),
நூல்: புகாரி 4219
பல ஸஹாபாக்கள் குதிரைக் கறியை மார்க்கம் அனுமதித்த காரணத்தால்
சாப்பிட்டிருக்கின்றார்கள்.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (நஹ்ர்
செய்து) அதை உண்டோம்.
நூல்: புகாரி 5510
இது பற்றி மத்ஹபு சொல்வதென்ன? பாருங்கள்.
மத்ஹபு வழி
குதிரை இறைச்சியை சாப்பிடுவது அபூஹனீஃபாவிடம் மக்ரூஹ் ஆகும்.
இதுவே மாலிக் இமாமின் கருத்து.
(நூல்: ஹிதாயா, பாகம் : 4, பக்கம் 68)
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைக் கறியை உண்ண
அனுமதி அளித்த பிறகு இமாம் அபூஹனிஃபா, இமாம் மாலிக்
ஆகியோர் வெறுக்கத்தக்கது என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத்
தடை செய்யவோ,
அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
இறைத்தூதர் என்பார் தம் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை அனுமதிக்கவோ, தடை செய்யவோ முடியாது. இறைத்தூதர் ஒன்றை அனுமதி அளித்தால் அது
இறைவன் அனுமதி அளிப்பதைப் போன்றதாகும். இறைத்தூதர் ஒன்றைத் தடை செய்தால் அது இறைவன்
தடை செய்வதைப் போன்றதாகும். இந்தக் கருத்தை குர்ஆனில் பல இடங்களில் இறைவன் தெளிவுபடக்
கூறியிருக்கின்றான்.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம்
உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை
அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார்.
தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார்.
தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.
அல்குர்ஆன் 7 : 157
உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை..
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர
வேறில்லை.
அல்குர்ஆன் 53:3,4,5
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்!
எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
அல்குர்ஆன் 59:7
இந்த வசனங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் அவர்கள் ஒன்றை அனுமதித்தால்
அதை இறைவன் அனுமதிக்கின்றான் என்று பொருள். எனவே குதிரைக் கறியை உண்ண நபிகள் நாயகம்
அனுமதித்தது இறைவன் அளித்த அனுமதியையே அவர்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்.
இறைவன் இதை அனுமதிக்கும் போது இமாம் அபூஹனிபா அதை வெறுக்கத்தக்கது
என்று கூற அவருக்கு அதிகாரம் வழங்கியது யார்?
மார்க்கத்தில் ஒரு காரியத்தை அனுமதிக்கவோ, தடை செய்யவோ, இது நல்லது, இது கெட்டது என்று சொல்லவோ இறைவன் ஒருவனே அதிகாரம் படைத்தவன்.
இறைவனின் தூதர்களுக்கே இந்த அதிகாரம் இல்லை எனும் போது இதை அபூஹனிஃபா கையிலெடுத்து, குதிரைக் கறியை உண்பது வெறுக்கத்தக்கது என்று கூறுகின்றார்.
இது நபிவழியை மீறும் காரியம். மத்ஹபுகள் நபிவழியுடன் மோதக்கூடியதாகவே இருக்கின்றது
என்பதை இது மீண்டும் நிரூபணம் செய்கின்றது.
வாகனத்தில் வித்ர் தொழுவது
மத்ஹபு வழி
வாகனத்தில் வித்ர் தொழுவது கூடாது என அபூஹனிஃபா மற்றும் அவரது
சகாக்கள் கூறுகின்றனர்.
நூல்: ஷரஹ் அபூதாவூத்
பாகம் 5 பக்கம் 92
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு
தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத்
தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் ரலி
நூல்: புகாரி 1000
நபியவர்கள் தமது வாகனத்தில் வித்ர் தொழுவார்கள் என்று இந்தச்
செய்தி தெளிவாகக் கூறுகின்றது. ஆனால் நபிகளாரின்
இந்தச் செயலுக்கு முரணாக ஹனபி மத்ஹபு கூடாது என்று சட்டம் சொல்கின்றது. மத்ஹபு சட்டங்கள்
நபிவழிக்கு முரணாணவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் இதன் மூலம் தெளிவாகின்றது.
தீண்டாமை
மாநபி வழி
இஸ்லாத்தில் தீண்டாமை, கீழ் ஜாதி, மேல் ஜாதி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இதை முஸ்லிம்களை விட
முஸ்லிம் அல்லாதோர் சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆதலால் தான் இன்றளவும்
பலர் சாதிக் கொடுமையிலிருந்து மீள இனிப்பை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளை போன்று
இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இன, குல, மொழி அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு அறவே
காட்டக்கூடாது என்ற பிரச்சாரம் இஸ்லாத்தின் அடிநாதம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே!
உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை.
ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு
கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு
நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு
எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள்.
அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு
எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 22391
குலம், கோத்திரம் என்பது மனிதர்கள்
ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளத் தானே தவிர ஏற்றத்தாழ்வு கற்பிக்க அல்ல என்று குர்ஆன்
கர்ஜிக்கின்றது. அது மட்டுமல்ல! இறைவனை அஞ்சக்கூடியவர்களே இறைவனிடத்தில் உயர்ந்தவர்
என்றும் கூறுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே
அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
இறையச்சம் தான் ஒரு மனிதனை இறைவனிடத்தில் உயர்த்துமே தவிர அவனுடைய
பிறப்பு, செல்வம், குலம், கோத்திரம் எதுவும் இறைவனிடத்தில் அவனை உயர்த்தாது என்பதை இவற்றிலிருந்து
அறியலாம். இதுவே நபிவழி. ஆனால்...
மத்ஹபு வழி ?
அரபி அல்லாதவன் அரபிக்கு நிகரானவனாக மாட்டான். அரபி அல்லாதவன்
ஆலிமாக இருந்தாலும் அல்லது அரசனாக இருந்தாலும் சரியே. இதுவே மிகச்சரியானதாகும்.
(துர்ருல் முஹ்தார், பாகம் : 3, பக்கம் : 101)
ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் இவ்வாறு
கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது?
தீண்டாமையை ஒழித்துகட்டி, மண்ணோடு
மண்ணாக புதைத்து விட்ட இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் மத்ஹபு கூறும் இச்சட்டம்
அமைந்துள்ளது. இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க முயலும் மத்ஹபை மக்கள் தூக்கி எறிவது
அவசியம் என்பதை இக்கருத்து உறுதி செய்கின்றது.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
EGATHUVAM JUN 2012