May 14, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 4 - சூபிஸம் - ஓர் ஆய்வு

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 4 - சூபிஸம் - ஓர் ஆய்வு

தொடர்: 4

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

வழிகேடர்கள் இஹ்யா உலூமித்தீனைப் புகழ்ந்து தள்ளிய புகழ் மாலைகளை ஆய்வு செய்ய நாம் புகுந்தோமானால் அதற்காக அதிகமான பக்கங்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது ஒரு கடினமான பணி மட்டுமல்லாது கால விரயமுமாகும்.

அசத்தியம் எப்போதும் அதிக அளவில் இருக்கும் என்றால் அதை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதை விட அதிக அளவில் இருக்கும்.

மக்கள் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிபவர்களாக இருந்தால் இஸ்லாமிய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் வலம் வருகின்ற இத்தகைய பித்அத் மற்றும் வழிகேடான நூல்களை அவர்கள் ஏறிட்டுக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்கால அறிஞர்கள் இதுபோன்ற நூல்களிலிருந்து தங்கள் விளக்கங்களையும் மேற்கோள்கûயும் பெற்றுக் கொள்கின்றனர். அந்தக் காரியங்களைச் செய்யும் அவர்கள் தாங்கள் அழகிய செயல்கள் புரிவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் யாரேனும் ஒருவரிடத்தில் இஹ்யா மற்றும் அதுபோன்ற நூல்களைப் பற்றிக் கேட்டால், உடனே அந்நூல்களுக்குப் புகழ்மாலைகள் சூட்டி அவற்றைத் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர். தற்கால நூலசிரியர்களில் அதிகமானோரை இந்த நிலையில் தான் நாம் காண முடிகின்றது.

"என் போன்றோரிடம் கூட இஹ்யாவைப் பற்றி மக்கள் வினவுகின்றார்கள்'' என்று இந்த சாரார் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே அந்த சாரார் சூபிஸ முகாமை விட்டும் சற்று தூரமானவர்கள். சூபிஸ முகாமில் உள்ளவர்களாக இருந்தால் இவர்களின் லட்சணம் நான் ஏற்கனவே கூறியது போன்று தான். இந்தச் சிறு நூலை இயற்றுவதற்கு இது தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இஹ்யா ஆசிரியரின் இரு நிலைகள்

நேர்மையான, நியாயமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் மக்கள் பார்த்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நூலை ஆக்கியுள்ளேன். கஸ்ஸாலியைப் பற்றி நான் தன்னிச்சையாக எதையும் கூறவில்லை. ஏற்கனவே ஆலிம்கள் செய்த விமர்சனங்களைத் தான் நான் தொடர்ந்துள்ளேன்.

கஸ்ஸாலிக்கு இரு நிலைகள் உள்ளன. ஒன்று அவர் சூபிஸத்துடன் உழன்று, ஒன்றிணைந்த நிலை! மற்றொன்று சூபிஸத்தை விட்டு விலகி, வெளியேறி அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடி புகாரி, அபூதாவூத் போன்ற நூல்களைப் படித்து அதிலேயே ஆழ்ந்து ஐக்கியமான நிலை!

இந்த இரண்டாம் நிலையில் உள்ள கஸ்ஸாலிக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்க வேண்டும்; அருள் பாலிக்க வேண்டும் என்று அவனிடம் மனம் உருகி, மன்றாடிப் பிரார்த்திக்கின்றோம்.

நாம் விமர்சிப்பதும் விளாசுவதும் முதல் நிலையில் உள்ள கஸ்ஸாலியைத் தான் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தான் எழுதிய நூல்களே கஸ்ஸாலிக்குக் கசக்க ஆரம்பித்து, அவற்றை அவர் வேதனையுடன் வெறுக்கத் தலைப்பட்டார் என்பதற்கு ஒருசில சான்றுகளைத் தருகின்றேன்.

அல் அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யா என்ற நூலில் ஷைகு இப்னு தைமிய்யா அவர்கள் கூறியதாவது:

மார்க்கத்தில் சில விஷயங்கள் எவ்வித மாற்று விளக்கமும் இல்லாமல் நேரடியாக எளிதில் விளங்கி விடும். சில விஷயங்களை நேரடியாக விளங்க முடியாது. அதற்கு மாற்று விளக்கங்கள் தேவைப்படும். இது தொடர்பாகக் கஸ்ஸாலி கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம்.

"இத்தகைய விஷயங்கள் அல்லாஹ்வின் தனி உதவியைக் கொண்டே தவிர ஒரு மகானுக்குப் புலனாகாது. அவர் அந்த விஷயத்தை உள்ளது உள்ளபடிக் காணுகின்றார். இவ்வாறு கண்டுவிட்டு அது தொடர்பாக செவி வழியாக இந்தச் செய்தியையும், அதன் வாசகங்களையும் ஆய்வு செய்கின்றார். உள்ளது உள்ளபடியாக, தான் கண்டதற்கு அது ஒத்திருந்தால் அதை ஏற்றுக் கொள்கின்றார். இல்லையேல் அதற்கு மாற்று விளக்கம் கொடுக்கின்றார்.

இது கஸ்ஸாலி கொடுக்கின்ற விளக்கமாகும். இதுபோன்று வேறு சிலரும் கூறியிருக்கின்றார்கள்.

இம்ரானின் மகனான மூஸா நபி, அல்லாஹ்வின் பேச்சைச் செவியுற்றது போன்று அவ்லியாக்களில் ஒருவர் செவியுற்றிருக்கின்றார் என்றும் கஸ்ஸாலி வேறொரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

புகாரி, முஸ்லிமில் புகுந்த கஸ்ஸாலி

இவ்வாறு கூறிக் கொண்டிருந்த கஸ்ஸாலிக்கு அவரது வாழ்நாளின் கடைசியில் இந்த சூபிஸம் தனக்குக் கை கொடுக்காது என்ற உண்மை புலப்பட்டதும், பூரணமாகத் தெரிந்ததும் அதிலிருந்து முற்றிலும் மாறி நபிவழியில் நேர்வழியைத் தேட முயன்று புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டார்.

தான் எழுதிய நூல்களில் மக்கள் வெறுத்த விஷயங்களை தானும் வெறுத்து ஒதுக்கினார்.

இது இப்னு தைமிய்யா அவர்கள் அல்அகீதத்துல் அஸ்ஃபஹானிய்யாவில் கூறியுள்ள கருத்தாகும்.

"இறையியல், தத்துவயியல் போன்ற தர்க்கக் கலையினரின் வாதங்களைப் பார்த்து விட்டு வணக்கம், பயிற்சி, துறவு என்ற பாதைகளில் பயணம் சென்ற கஸ்ஸாலி, தன் வாழ்நாள் கடைசியில் ஒருவிதமான தடுமாற்றத்திற்கு உள்ளானார். அவர் தன் வாழ்நாளின் கடைசியில் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் ஈடுபடலானார்'' என்று இப்னு தைமிய்யா, மின்ஹாஜுஸ் ஸுன்னாவில் தெரிவிக்கின்றார்.

பல்வேறு நூலாசிரியர்களால் பொறாமை கொள்ளப்படுபவர் என்று கருதப்படக்கூடியவரும், மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலின் ஆசிரியருமான கஸ்ஸாலியின் உரையில் இதுபோன்ற கருத்து இடம்பெற்றிருக்கின்றது. அவர் வேறு சில இடங்களில் இந்த சூபிஸப் பேர்வழிகளை இறை மறுப்பாளர்கள் என்று சாடியும் உள்ளார். அந்த சூபிஸக் கருத்திலிருந்து திரும்பி, புகாரி முஸ்லிம் போன்ற நூல்களை ஆய்வு செய்யும் பணியில் முழுமையாகக் களம் இறங்கி விட்டார் என்றும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா மீண்டும் கூறுகின்றார்.

கஸ்ஸாலியின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஹதீஸ் நூற்களின்பால் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விட்டார் என்று அவர்கள் ஊர்ஜிதம் செய்கின்றனர்.

தான் எழுதிய நூற்களிலிருந்து கஸ்ஸாலியே தனது பாதையையும் பயணத்தையும் ஹதீஸ் நூற்களை நோக்கித் திருப்பி விட்ட பிறகு தற்கால அறிஞர்கள் கஸ்ஸாலியின் நூற்களை ஏன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்? அவற்றை ஏன் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்?

பாதை மாறாத பக்தர்கள்

இந்த நவீன அறிஞர்கள் கஸ்ஸாலியைப் போன்று பாதை மாறி, புகாரி, முஸ்லிம், இதர ஹதீஸ் நூற்கள், முன்னோர்களின் குர்ஆன் விளக்கவுரைகள், சரியான கொள்கை நூல்கள், பயனுள்ள கல்வி தொடர்பான நூல்கள் போன்றவற்றைப் படிக்குமாறு மக்களிடம் அறிவுரை கூற வேண்டாமா?

பொய், புனை சுருட்டுதல், தத்துவவியல், இறையியல் போன்ற காலத்தையும் நேரத்தையும் கண்ணியமிக்க மார்க்கத்தையும் வீணாக்குகின்ற நூல்களைப் படிக்க வேண்டாம் என்று மக்களுக்கு இவர்கள் எச்சரிக்கை செய்ய வேண்டமா?

இவ்வாறு அறிவுரை செய்து எச்சரித்தால் தானே கஸ்ஸாலிக்கு ஏற்பட்ட கால விரயம் இந்த மக்களுக்கும் ஏற்படாமல் அவர்களையும் அவர்களது மார்க்கத்தையும், அவர்களின் ஆயுளையும் காக்க முடியும்.

சமுதாயத்தையே வழிகேட்டில் நிரப்பி விட்டுப் பின்னர் அதை விட்டு நேர்வழியின் பக்கம் கஸ்ஸாலி திரும்பியுள்ளார்.

நீண்ட நாட்களை வீணாகக் கழித்துவிட்ட கஸ்ஸாலியிடமிருந்தும் இன்னும் அவர்களைப் போன்றோரிடமிருந்தும் இத்தகையோர் பாடமும் படிப்பினையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விடமிருந்து பெற்ற தண்டனையாக நாற்பதாண்டுகள் ஊர் தடை செய்யப்பட்டு, தட்டழிந்து, நாடோடிகளாகத் திரிந்த பனூ இஸ்ரவேலர்கள் போன்று தான் இவர்களின் நிலை அமைந்துள்ளது.

தூதுச் செய்திக்கும் அதன் விளக்கத்திற்கும் எதிராகப் பிடிவாதத்துடன் செயல்பட்டதால் தான் பனூ இஸ்ரவேலர்கள் இந்தத் தண்டனையை அனுபவித்தனர்.

தூதுச் செய்தியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் இன்றைய உலமாக்களுக்கும் பனூ இஸ்ரவேலர்களின் கதி தான் ஏற்படும். கஸ்ஸாலி ஆரம்பத்தில் தட்டழிந்தது போன்று அவர்களும் தட்டழிய வேண்டியது தான்.

அல்லாஹ் மட்டும் அவரை தனது அன்பால் அரவணைக்கவில்லை என்றால் மரணம் வரும் வரை இப்படியே நீடித்திருப்பார். அவரது நல்லெண்ணம், நல்ல நோக்கம் அவர் இந்த நன்மையை அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் அல்லாஹ் அவரை அரவணைத்து விட்டான். இதனால் அவர் தவ்பா செய்து திருந்தி, தான் எழுதிய வழிகேட்டை வெறுத்திருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இதை உணரவில்லை. அவர்கள் கண்மூடித்தனமாகவும் குருட்டுத்தனமாகவும் அவர் எழுதிய நூல்கள் மீது வீழ்ந்து கிடக்கின்றனர் என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

இவற்றில் உள்ள தவறுகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகின்றனர். அவற்றில் உள்ள வழிகேடுகள், இறை மறுப்புகளுக்கு மாற்று விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

சாக்குப்போக்குகளும் சப்பைக்கட்டுகளும்

அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆன், அவனுடைய தூதரின் வழிமுறையில் சரியான நேரிய பாதையில் பிடிமானம் கொண்ட எவராலும் எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாத சாக்குப்போக்குகளையும் காரணங்களையும் இந்த ஆசாமிகள் கஸ்ஸாலியின் நூல்களுக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.

இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது நிச்சயமாக அரசியல் நோக்கம் தான் என்று மக்கள் பேசிக் கொண்டனர். பல்வேறு ஏடுகளும் இந்தக் கருத்தைப் பிரதிபலித்தன.

கொள்கை அடிப்படையிலான இந்த நூலை நான் எழுதுவதற்கு மேற்கண்ட தவறான பிரச்சாரமும் ஒரு காரணமாகும்.

முஸ்லிம்கள் எப்போதும் கவனக்குறைவிலும், வழிகேட்டிலும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற, ஆர்வம் காட்டுகின்ற ஏமாற்றுப் பேர்வழிகள், கிழக்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் அவர்களது எடுபிடிகளின் ஏமாற்று வித்தை தான் இந்தத் தவறான பிரச்சாரம் என்பதை நான் எழுதிய இந்த நூலைப் படிப்பவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

இந்நூலை எழுத இன்றியமையாத காரணம்

இஹ்யா உலூமித்தீனையும் அதுபோன்ற வழிகேடு நிறைந்த ஒவ்வொரு நூலையும் எரிப்பதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. அவை வருமாறு:

முதல் காரணம்:

நபி (ஸல்) அவர்கள் மீதும், நன்மையில் அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் மீதும், தாபியீன்கள் மீதும் பொய் சொல்லுதல்.

இரண்டாவது காரணம்:

சூஃபிகளிடமும் மற்றவர்களிடமும் பரவியிருக்கின்ற ஒவ்வொரு பித்அத்துக்கும் அடிப்படையாகவும் ஆணிவேராகவும் இருப்பது இந்த இஹ்யா உலூமித்தீன் தான்.

மூன்றாவது காரணம்:

அந்நூலில் உள்ள கொள்கை ரீதியிலான பெரும் வழிகேடுகளும் பேரழிவு மிக்க அசத்தியக் கருத்துக்களும்.

நான்காவது காரணம்:

இஹ்யா ஒரு வழிகேட்டு நூல். முஸ்லிம்கள் அதன் மூலமாக வழிகெட்டு விடக்கூடாது என்பதற்காக வேண்டி அதை முஸ்லிம்களை விட்டு அகற்றுவதும் அதைத் தீயிலிட்டுப் பொசுக்குவதும் காலத்தின் கட்டாயமாகும்.

முன்னுரை

சூபிஸம்...

இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும்.

முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும்.

படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும்.

மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலமாக, தீமைக்கு எதிராக இதுவரை இஸ்லாமிய உலகம் சாத்தி வைத்திருந்த கதவடைப்பை தாமதமின்றி, தயக்கமின்றி திறந்து விடவேண்டும்.

இவை தான் சூபிஸம் என்ற இந்த அந்நியக் கொள்கையின் லட்சியமாகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இஸ்லாத்திற்கு எதிராகப் பின்னப்பட்ட சதி வலை!

சூபிஸத்தின் வரலாற்றைத் தெரியாதவர்களை அதன் விபரீதத்தை அறியாதவர் என்று தான் கூற வேண்டும்.

நான் கஸ்ஸாலியின் இஹ்யாவை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்வதற்கு முன்னால், பிற மதத்திலிருந்து களவாடப்பட்ட இந்தக் கள்ளக் கலாச்சாரத்தின் நச்சுக்கருத்தை விவரிக்கும் விதமாக, முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை முதலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

முதல் ஆய்வு

சூபிஸம் என்ற பெயர் சூட்டலின் சூட்சுமம்

சூபிஸம் என்ற இந்த வார்த்தையே இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமல்ல, அரபிய மொழிக்கும் அந்நியமானது. இந்த வார்த்தையின் ஆணிவேரை அடைவதிலும் அடையாளம் காண்பதிலும் முன்னோர்களும் பின்னோர்களும் கருத்துவேறுபாடு கொள்கின்றனர். முரண்பட்ட இவர்களின் கருத்துக்களைப் படித்த பிறகு சூபிஸம் என்ற பெயர் சூட்டலுக்கு ஒரு பொருத்தமான விடையைக் காண முடியவில்லை.

காரணம், இதற்கு மொழி என்ற அளவுகோலின்படி விளக்கம் காண முடியவில்லை. அதை அடுத்தது, அறிவு என்ற அளவுகோல். அதைக் கொண்டும் சூபிஸம் என்ற பெயருக்கான விடையைக் காண முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்கம் என்ற அளவுகோல். அதைக் கொண்டும் விடை காண முடியவில்லை.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது என்று பார்க்கும் போது அதுவும் சூனியமாகவே இருக்கின்றது.


வளரும் இன்ஷா அல்லாஹ்

EGATHUVAM NOV 2013