பைத்தியம் பலவிதம் தொடர்:
4 - நபியின் கை நாயனின் கையா?
மறுமையில் நன்மை கிடைப்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை
வைத்துத் தானே தவிர அவர்களது முடி, வியர்வை போன்றவற்றைப்
பாதுகாத்து வைப்பதில் அல்ல என்ற விபரத்தைச் சென்ற இதழில் பார்த்தோம். இதற்கு ஆதாரமாக
நபி (ஸல்) அவர்களின் பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தாலோ அல்லது காரி
உமிழ்ந்தாலோ நபித்தோழர்கள் அந்த எச்சிலையும் உளூச் செய்த தண்ணீரையும் விரைந்து எடுத்து, அதைத் தங்களுடைய முகங்களிலும் உடல்களிலும் தடவிக் கொள்வார்கள்.
"ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் வினவினார்கள். "இதனால் நாங்கள் பரக்கத் தேடுகிறோம்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வும் அவனது தூதரும் தன்னை நேசிக்க
வேண்டும் என்று விரும்புபவர் உண்மையைப் பேசுவாராக! அமானிதத்தை நிறைவேற்றுவாராக! அண்டை
வீட்டாருக்கு இடையூறு செய்யாதிருப்பாராக!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுஹ்ரி,
நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்
இந்த ஹதீஸை நம்பிக்கைக்குரிய அன்சாரித் தோழர் அறிவிப்பதாக ஜுஹ்ரி
அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபித்தோழர் பெயர் குறிப்பிடாததைக் காரணம் காட்டி இந்த
ஹதீஸை முர்ஸல் என்று வாதிட முடியாது. நம்பகமான அறிவிப்பாளர்கள் நபித்தோழரின் பெயரைக்
குறிப்பிடாமல் அறிவிப்பது ஹதீஸ் கலையில் ஒரு கோளாறு கிடையாது என்பது அனைவரும் அறிந்த
உண்மை.
ஜுஹ்ரி என்றழைக்கப்படும் முஹம்மத் பின் முஸ்லிம் பின் ஷிஹாப்
என்பார் நம்பத்தகுந்த, ஐயத்திற்கு அப்பாற்பட்ட நேர்மையான
அறிவிப்பாளர். இவர் தாபிஃ ஆவார். இவர் நபித்தோழர்களிடம் செவியுற்றுள்ளார்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான செய்தியில் தான் நபி (ஸல்)
அவர்களின் எச்சிலையும் உளூச் செய்த தண்ணீரையும் நபித்தோழர்கள் தடவிக் கொண்டனர் என்ற
விபரம் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்புத் தொடரில் இதே ஜுஹ்ரி தான் இடம்பெறுகின்றார்.
அந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் தொடர் ஒரு பலமான அறிவிப்பாளர் தொடராக அமைகின்றது.
எனவே இந்த ஹதீஸிலிருந்து நமக்குத் தெரிய வருகின்ற விஷயம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற காரியங்களைத் தடுத்திருக்கின்றார்கள்
என்பது தான்.
பொதுவாகவே பரேலவிகள் குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் தங்களுக்குச்
சாதகமானவற்றை எடுத்துக் கொண்டு, பாதகமானவற்றை மறைத்து விடுவார்கள்; மறுத்து விடுவார்கள். அந்த வகையில் இதுவும் ஒன்று என்பதை நாம்
அறிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் நபி (ஸல்) அவர்களின் முடிகளைச் சேகரித்து வைப்பதாலோ, வியர்வைத் துளிகளைச் சேகரித்து வைப்பதாலோ அல்லது அவர்களது ரத்தம், சிறுநீர் போன்றவற்றைக் குடிப்பதாலோ எந்தப் பலனும் இல்லை. மாறாக, மார்க்கத்தில் இதற்குத் தடை தான் உள்ளது. எனவே இவற்றை விடுத்து
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுதான் குர்ஆன் மற்றும்
நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும்.
நபியின் கை நாயனின் கையா?
இந்தப் பரேலவிகள் வைக்கின்ற படுபயங்கரமான, அபாண்டமும் அபத்தமும் மிகுந்த மற்றொரு கூற்று, நபி (ஸல்) அவர்களது கை அல்லாஹ்வின் கை என்ற கூற்றாகும்.
எவ்வளவு துணிச்சலாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றார்கள்? இதுபற்றி இவர்களுக்கு எந்த ஓர் உறுத்தலும் கடுகளவு பயமும் இல்லாமல்
இப்படி ஒப்பிடுகின்றார்கள் என்று பாருங்கள். இதற்கு அவர்கள் காட்டுகின்ற ஆதாரம் என்ன?
உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி
எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர்
தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ
அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
(அல்குர்ஆன் 48:10)
நபித்தோழர்களின் கை மீது நபியவர்களின் கை இல்லை, அல்லாஹ்வின் கை இருக்கின்றது என்று ஒரு பயங்கர இணை வைப்பை இந்த
வசனத்திற்கு விளக்கமாகக் கூறுகின்றார்கள்.
நேரடியாகவும் மிகவும் எளிதாகவும் எடுக்க வேண்டிய விஷயத்தைக்
கோணலாகவும் குதர்க்கமாகவும் எடுக்கின்றார்கள்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் அந்த நாட்டு அமைச்சருடன் ஒப்பந்தம்
போடுகிறார் என்றால் அந்த ஒப்பந்தம், அந்தத் தூதருடன்
போட்ட ஒப்பந்தமல்ல, இந்திய நாட்டுப் பிரதமருடன்
போட்ட ஒப்பந்தமாகும்.
இதுபோல் நபித்தோழர்கள், நபி (ஸல்)
அவர்களிடத்தில் செய்த ஒப்பந்தம், கொடுத்த வாக்குறுதி அல்லாஹ்விடம்
செய்த ஒப்பந்தம், அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதி
என்று தான் சரியான மார்க்க அறிவுள்ளவர்கள் இதை விளங்குவார்கள். அவர்களின் கை மீது அல்லாஹ்வின்
கை இருக்கின்றது என்று கூறப்படுவது அந்த அர்த்தத்தில் தான்.
இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வாக ஆக்கும் அநியாயத்தைச்
செய்கின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
எறிந்த கை யாருடைய கை?
தங்கள் அபாண்டத்திற்கும் அபத்தத்திற்கும் ஆதாரமாகக் காட்டுகின்ற
மற்றொரு வசனம்:
அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான்.
(முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ்
செவியுறுபவன்;
அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:17)
நபி (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் "பத்ருப்
போர்' என்பதை நாம் அறிவோம்.
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை
நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான்
(8:9)
* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு
ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான்.
(8:11)
* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின்
பாதங்களையும் உறுதிப்படுத்தினான்
(8:11)
* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்
(8:12)
* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான்
(8:12)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத்
தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.
"பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா'' என்று நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலிலி) அவர்களிடம் கூறினார்கள்.
அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபி (ஸல்) எறிந்தனர். எதிரிக்
கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவை பட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர்
எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான்
எறிந்தான்''
என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(நூல்: தப்ரானி)
இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ, அது
போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள்
ஏற்பட்டன.
இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில்
பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வளவு தெளிவான வசனத்தை, பரேலவிகள்
தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல; இருவரும்
ஒருவர் தான்''
என்றெல்லாம் உளறுகின்றனர். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப
இவர்கள் உருவாக்கியுள்ளனர். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள்
மிஞ்சி விட்டார்கள்.
இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் கொடுத்த இவர்களின் தலைவனான இப்னு
அரபி என்பவன் பிற மதங்களில் உள்ள "அத்வைதம்' என்ற
கொள்கையைக் காப்பி அடித்து இஸ்லாத்துக்குள்ளேயும் திணிக்க முயன்றான். காணும் பொருள்
அனைத்துமே அல்லாஹ் என்று இவன் கூறினான். இவனை மகான் என்று கூறும் மூடர்கள் தான் பரேலவிகள்.
இந்த இப்னு அரபி, திருக்குர்ஆனிலும்
நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு கருத்து கொண்ட வாக்கியங்களுக்குத் தவறான பொருள்
கொடுத்து இவன் மக்களை வழிகெடுக்க முயன்றான்.
குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ
வளைத்து, தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத்
தென்பட்டது.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் ஒரு கைப்பிடி
கற்களால் அனைத்து எதிரிகளின் கண்களிலும் படுமாறு வீச முடியுமா? முஹம்மது நபியே அல்லாஹ்வாக இருந்தால் தானே அப்படி வீச முடியும்? அவர்கள் எறிந்ததை, தான் எறிந்ததாக
அல்லவா அல்லாஹ் கூறுகிறான்? எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அல்லாஹ்வும் ஒன்றே'' என்று இவர்கள்
உளறுகின்றனர்.
இணை வைத்தலிலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள்
விளையாடுகின்றனர்.
ஆனால் இந்த வசனம் இவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.
"நான் கல்லை வீசினால் போதும், எதிரிகள்
ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது
வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்'' என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும்
நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைப் பற்றிக்
கூறுவதற்கு முன், நபித் தோழர்கள் போரில் எதிரிகளை
வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை.
மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.
நபித் தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித் தோழர்களின்
கரத்தால் செய்யப்பட்ட இந்தத் தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது
போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக
இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?
"அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ்'' என்று இவர்கள் கூறியது போல் "அல்லாஹ் தான் நபித் தோழர்கள், நபித் தோழர்கள் தான் அல்லாஹ்'' எனவும்
கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பத்ருப் போரில் பல நபித் தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின்
கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.
"எதிரிகளின் படை பலத்தில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருந்தும்
உங்களால் எதிரிகளை வெல்ல முடிந்தது என்றால் அத்ற்கேற்ப பல சூழ்நிலைகளை நான் தான் ஏற்படுத்தினேன்'' என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ, அவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகவே, தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ்
நினைவுபடுத்துகிறான்.
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே
ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர்
நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 18:110)
நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மல ஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப்
பிறந்தது, மனைவி, மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல்
இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள்
அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கும், நபித் தோழர்களுக்கும்
மட்டுமல்ல,
எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப்
பயன்படுத்தியுள்ளான்.
நீங்கள் பயிரிடுவதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம்
செய்கிறீர்களா?
அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கேட்கிறான்.
மனிதர்கள் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள்
விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறானே! விவசாயிகள்
அனைவரும் அல்லாஹ்வா? இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச்
செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று
இதையும் விளங்கிக் கொள்கிறோம்.
அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு
அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.
* நீர் எறிந்த போது
* நீர் எறியவில்லை
என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த
போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.
எதை ஒப்புக் கொண்டானோ அதையே "நீர் எறியவில்லை' எனக்
கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது.
"நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று நாம்
கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.
ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால்
இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக்
கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.
நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை; அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால், பயிரிடுதல் என்பதற்கு இருவேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை
நாம் கவனத்தில் கொள்கிறோம்.
அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம்
அதை (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.
இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் எறிந்த போது, அதாவது
"பொடிக் கற்களை நீர் வீசிய போது''
நீர் எறியவில்லை, அதாவது
"ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை''
என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும், மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும்
உரிய இலக்கணம் இல்லை.
இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால்
எறிந்தது நபிகள் நாயகம்; அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது
அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு, அவன்
தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு, அவன் தூதர்
வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.
"யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டரோ அவரை
நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவன் கேட்கும் காதாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும்
கையாக அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரி 6502) என்பது போன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்கு ஆதாரமாகக்
காட்டுகிறார்கள்.
"பார்த்தீர்களா? அவ்லியாக்கள்
வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழி கெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர்.
மரணிக்கவும் செய்தனர். இறை நேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று
இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.
பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது
போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சகஜமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக
இருக்கிறார்'
என்று கூறினால் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
"ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்' என்று கூறப்பட்டால்
அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக்
காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"நான் பசியாக இருந்த போது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்த போது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்த போது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான்
"நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன்
"ஒரு ஏழை பசி என்று கேட்ட போது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.
(பார்க்க: முஸ்லிம்
4661)
அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லாம் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?
இப்படிக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரித்துப் பேசுவது
தான் இவர்களின் வாடிக்கை! இந்த அசத்தியவாதிகளின் வாதங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிக்
கொண்டிருக்கின்றன. இவர்களின் போலி வாதம் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது.
உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக்
கேடுதான். (அல்குர்ஆன்21:18)
அல்லாஹ்வின் இந்த வசனத்தை இவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
EGATHUVAM SEP 2012