May 7, 2017

பைத்தியம் பலவிதம் தொடர்: 4 - ஒளிக்கு ஏது உணவும் நீரும்

பைத்தியம் பலவிதம் தொடர்: 4 - ஒளிக்கு ஏது உணவும் நீரும்

"கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடியார்' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 3445

தம்மைக் கடவுள் நிலைக்கு யாரும் உயர்த்தி விடக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள்.

ஆனால் பரேலவிசப் பைத்தியங்களோ நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் ஸ்தானத்தில் தூக்கிக் கொண்டு நிறுத்தி, நபியவர்களின் அந்த எச்சரிக்கையைத் தூக்கி எறிந்து விட்டனர். இதற்கு எடுத்துக்காட்டு தான் நபி (ஸல்) அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று அவர்கள் எடுத்து வைக்கும் வாதம்.

தங்களின் வழிகெட்ட வாதத்திற்காக எப்படியெல்லாம் குர்ஆனையும், ஹதீஸையும் வளைக்கின்றார்கள்; திரிக்கின்றார்கள் என்பதற்குப் பல சான்றுகளை நாம் காட்டலாம். கடந்த இதழ்களில் அந்தச் சான்றுகளில் சிலவற்றை நாம் கண்டோம். இந்தத் தொடரில் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

தொடர் நோன்பு

நாமெல்லாம் நோன்பு நோற்கையில் சூரியன் மறைந்ததும் நோன்பு துறப்போம்; உணவு சாப்பிடுவோம். அடுத்த நாள் நோன்புக்காக ஸஹரில் உணவு சாப்பிடுவோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இப்படி ஓர் இடைவெளி இல்லாமல் பல நாட்கள் நோன்பைத் தொடர்வார்கள். இதைப் பார்த்துவிட்டு நபித்தோழர்களும் அதுபோன்று தொடர் நோன்பு நோற்கலாயினர். இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கின்றார்?'' என்று கேட்டார்கள்.

(பார்க்க: புகாரி 1965, 6851)

நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களைப் போன்று நம்மில் யார் இருக்கின்றார்கள்? சாதாரண மனிதன் என்றால் எத்தனை நாட்கள் பட்டினி கிடக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்புகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல, புனிதப் படைப்பு, ஒளிப் படைப்பு, அதாவது கடவுள் தன்மை கொண்டவர் என்று சொல்ல வருகின்றார்கள்.

யூத சாதியினர்

நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்'' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக்கொள்ள மறுத்தபோது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்'' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 1965, 6851

ஒரு ஹதீஸின் முற்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிற்பகுதியை விடுபவர்களில் இவர்களை விடக் கைதேர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. இவர்கள் அல்லாஹ் சொல்வது போன்று வேதத்தில் கொஞ்சத்தை ஏற்று, மீதியை மறுக்கும் யூத சாதியினர் ஆவர்.

வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

(அல்குர்ஆன் 2:85)

உங்களில் என்னைப் போன்றவர் யார்? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள் அதைத் தொடர்ந்து, "என்னுடைய ரப்பு எனக்கு உணவளிக்கின்றான். குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான்' என்று கூறி இந்தக் கழிவுகெட்ட கப்ரு வணங்கிகளுக்குச் சரியான பதிலடி கொடுக்கின்றார்கள்.

பசி, பட்டினி கிடக்கவில்லை. பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. இந்த இரண்டையும் தன்புறத்திலிருந்து இறைவன் தருகின்றான். உண்ண உணவும், குடிக்க நீரும் இல்லையென்றால் நான் வாழ முடியாது. என்னுடைய இரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் அசைய வேண்டுமென்றால் உணவும் நீரும் வேண்டும். காரணம் நான் மனிதன் தான் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள். ஆனால் இந்த ஜென்மங்கள், சிந்தனையற்ற ஜடங்கள் நபி (ஸல்) அவர்களை ஒளி என்று உளறிக் கொட்டுகின்றனர்.

கருணைமிக்க காருண்ய நபி

நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில், கருணை மிக்கவர், முஃமின்களுக்குக் கஷ்டம் வருவதைக் காணப் பொறுக்காதவர் என்றெல்லாம் குறிப்பிடுகின்றான்.

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

அல்குர்ஆன் 9:128

இப்படி ஒரு கருணையும் கரிசனமும் கொண்ட நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்காமல் தொடர் நோன்பு நோற்றாலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைத்து விடுகின்றது. ஆனால் பாவம், இந்தத் தோழர்கள் பட்டினி கிடக்கின்றார்களே என்ற வேதனையில் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைக் கண்டிக்கும் விதமாக, பிறை தெரியத் தாமதமானால் இன்னும் நோன்பை நீடிக்கச் செய்திருப்பேன் என்று கூறுகின்றார்கள். அதாவது நபித்தோழர்களால் இந்தத் தொடர் நோன்பை நோற்க முடியாது என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு கூறுகின்றார்கள்.

ஆனால் இந்தக் களிமண்களுக்கு இந்த விபரம் புரியாமல் இந்த ஹதீஸை விளங்க வேண்டிய விதத்தில் விளங்காமல், நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற பார்வையைச் செலுத்தி தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பஸ்பமாகும் பாறைகள்

தொடர் நோன்பு குறித்த இந்த ஹதீஸில் இப்படி ஒரு விபரீதப் பார்வையைச் செலுத்தியவர்கள், அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்கள் பாறையை உடைத்த ஹதீஸிலும் இதே விபரீதப் பார்வையை, இஸ்லாமிய விரோதப் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார்கள்.

இந்த தரீக்காவாதிகள் பார்க்கின்ற தறிகெட்ட பார்வைக்குரிய ஹதீஸ் இதோ:

நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெüப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்கüடம் சென்று, "இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது'' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் இறங்கிப் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தாலி எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: புகாரி 4101

பசி பட்டினியும் கிடக்கின்ற சாதாரண மனிதரால் இந்தப் பாறையை உடைக்க முடியுமா? அப்படியானால் அவர்கள் ஒளிப் படைப்பு தான் என்பது இவர்களின் அபத்தமிக்க வாதமாகும்.

இதையும் ஏடாகூடமாக விளங்கிக் கொண்டு இதற்குக் குதர்க்கமான, கோணலான அர்த்தத்தைக் கொடுக்கின்றனர்.

பசி, பட்டினியுடன் கிடக்கும் போதே இப்படி ஒரு பலம் இருக்கின்றதென்றால் சரியான உணவு உண்டால் அவர்களின் பலம் என்ன மாதிரியாக இருக்கும் என்று நபி (ஸல்) அவர்களின் மனிதத் தன்மைக்கு மெருகூட்டுவதாகவும் மேன்மைப்படுத்துவதாகவும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக அவர்களை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கொள்கின்றனர்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

ஒரு பக்கம் நபி (ஸல்) அவர்கள் ஒளிப் படைப்பு என்று சொல்லிக் கொண்டு, மறுபக்கம் நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு என்று அவர்களே வாக்குமூலம் தருகின்றனர். அது எப்படி?

நபியின் பல் நரகைத் தடுப்பதா?

நபி (ஸல்) அவர்களின் சிறுநீரை தோழர்கள் பருகினர். நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை தோழர்கள் சாப்பிட்டனர். அவ்வாறு சாப்பிட்டவர்களை நரகம் தீண்டாது என்ற செய்திகள் தான் இந்தப் பரேலவிகளின் சொற்பொழிவுகளில் ஆக்கிரமிப்பு செய்யும்.

சாதாரண ஓர் அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவீனர்கள் இவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்ததும் தண்ணீரால் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (-அனஸா) எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 152

மற்றவர்களின் சிறுநீரைப் போலவே தனது சிறுநீரும் அசுத்தம் என்பதால் தான் சுத்தம் செய்திருக்கின்றார்கள். இந்த அசுத்தத்தை அடுத்தவர் சாப்பிடச் சொல்வார்களா? அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையான வற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 7:157)

உங்களுக்குக்கு நல்லவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன.

(அல்குர்ஆன் 5:5)

இப்படியிருக்கையில் அசுத்தம் என்று அவர்களே கருதிய தமது சிறுநீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடிக்கச் சொல்வார்களா? என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

அறிவியல் அடிப்படையில் இவை உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள். இந்தக் கழிவு உடலுக்குள் இருந்தால் உபாதையும் உபத்திரமும் ஆகும். இப்படி உடலுக்குத் தீங்கிழைக்கும் ஓர் அசுத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரை, அதிலும் தனது தோழர்களைக் குடிக்கச் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 13

இவ்வாறு இறை நம்பிக்கையாளரின் இலக்கணத்தைக் கூறும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக அவர்கள் சில ஹதீஸ்களைக் கூறுகின்றார்களே என்று கேட்கலாம். இந்த ஹதீஸ்களின் லட்சணம் என்ன என்பதைக் கடந்த ஏகத்துவம் இதழ் தோலுரித்துக் காட்டியது. எனவே இது பரேலவிகளின் பயங்கர அசுத்தமான, அசிங்கமான, அபத்தமிகு வாதமாகும்.

அடுத்து இவர்கள் கூறுகின்ற நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிப்பது தொடர்பான விஷயத்திற்கு வருவோம்.

தடுக்கப்பட்ட இரத்தம்

உயிருடன் உள்ள, செத்த மனிதர்களின் மற்றும் பிராணிகளின் இரத்தம் என்றைக்கும், எப்போதும் ஹராம் ஆகும். இதைத் திருக்குர்ஆனிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

(அல்குர்ஆன் 5:3)

இவ்வாறு தடை செய்யப்பட்ட இரத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரைப் பருகச் சொல்வார்களா? என்பதைக் கூட இந்தப் பைத்தியங்கள் உணரவில்லை. இது தொடர்பாக இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கு இந்த இதழில் தனிக்கட்டுரையில் சம்மட்டி அடி, சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயம் நபி (ஸல்) அவர்கள் ஒளியென்றால் அவர்களுக்கு ஏது இரத்தம்? அவர்களுக்கு ஏது சிறுநீர்? அதை ஏன் இந்த ஈன ஜென்மங்கள் குடிக்கச் சொல்கின்றனர்? அது என்ன ஒளித் திரவமா? இதுவெல்லாம் இந்தப் பண்டாரப் பரதேசிகளுக்கு மண்டையில் பண்டமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு!

பரேலவிகளின் சொற்பொழிவில் நபி (ஸல்) அவர்களின் வியர்வை, முடி போன்றவற்றை நபித்தோழர்கள் சேர்த்து வைத்தார்கள்; சேமித்து வைத்தார்கள் என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

இந்த விஷயத்தில் பின்பற்றுவதற்கு எதுவுமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் இதைச் சொல்வதன் மூலம் தங்கள் ஷைகுகள், பீர்கள், சாதாத்துகள் போன்ற ஷைத்தான்களுக்குப் புனிதம் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ளலாம்.

மறுமையில் நன்மை கிடைப்பது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை வைத்துத் தான். முடி, வியர்வையைப் பாதுகாத்து வைப்பதில் அல்ல என்ற அடிப்படை அறிவும் இவர்களுக்கு இல்லை.


இன்னும் இதுபோன்ற என்னென்ன அபத்தங்களை வைக்கின்றார்கள் என்று இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.

EGATHUVAM AUG 2012