May 14, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 6 -அறியாமைக் கடல் கஸ்ஸாலி

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் 6 -அறியாமைக் கடல் கஸ்ஸாலி

தொடர்: 6

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

கஸ்ஸாலியின் ஆக்கங்களில் மண்டிக் கிடக்கின்ற வழிகேடுகள், அசத்தியக் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் வண்டி வண்டியாக எடுத்து, அவற்றை அலசி ஆய்வு செய்திருக்கின்றார்கள். அவற்றின் சாராம்சக் கருத்துக்களை உங்களின் பார்வைக்குத் தருகின்றோம்.

தர்உ தஆருலில் அக்ல் வந்நக்ல் - அறிவுக்கும் இறைச்செய்திக்கும் இடையிலான மோதலைக் களைதல் என்ற தனது நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியின் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை விமர்சனம் செய்கின்றார்கள். மிஷ்காத்துல் அன்வார் என்பது மக்களின் கைகளில் சாதாரணமாக வலம் வருகின்ற, அச்சிடப்பட்ட ஒரு சிறிய நூல். அந்த நூலை விமர்சிக்கும் போது, "பத்து அறிவுகள்' என்ற கோட்பாட்டை இப்னு தைமிய்யா அவர்கள் அலசுகின்றார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தை இப்போது பார்ப்போம்.

இந்தக் கோட்பாட்டின் கேடுகளை விமர்சிக்கப் புகுந்தால் இதிலிருந்து எளிதில் வெளியில் வர முடியாது. அந்த அளவுக்கு அது மிக நீளமானது; ஆழமானது. இந்நூல் அதைத் தாங்காது. கல்வியிலும் வணக்கத்திலும் புகுந்த பல ஆட்களின் பாதை மாற்றத்திற்கு இந்தக் கோட்பாடு காரணமாக அமைவதால் அதை வெறுமனே தொட்டு மட்டும் காட்டிவிட்டுச் செல்ல என்னால் முடியவில்லை.

(அல்உகூலுல் அஷ்ரா - பத்து அறிவுகள் என்பது தத்துவ ஞானிகள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கையாகும். ஒன்றிலிருந்து ஒன்றே தவிர வேறெதுவும் உருவாகாது. அல்லாஹ் முதல் அறிவை மட்டும் தான் படைத்தான். அவனால் அந்த முதல் அறிவைத் தவிர வேறெதையும் படைக்க இயலாது. இந்த அறிவு விண்வெளியில் உள்ளதாகும். முதல் அறிவு தான் இரண்டாவது அறிவைப் படைத்தது. இப்படியாகப் பத்து அறிவுகள் வரை தொடர்கின்றது. இந்தப் பத்து அறிவுகள் சேர்ந்து தான் வானத்தைப் படைத்தன. இதுதான் கடவுள் தொடர்பான தத்துவ ஞானிகளின் கோட்பாடாகும்.)

கஸ்ஸாலி தனது மிஷ்காத்துல் அன்வார் நூலின் கருத்தையும் கருவையும் இறை மறுப்பாளர்களின் வறட்டு வாதக் கொள்கையின் அடிப்படையிலேயே அமைத்துள்ளார்.

உள்ளங்களில் உருவாகின்ற நற்சிந்தனைகளை, நல்ல கருத்துக்களையெல்லாம் மூஸா நபியிடம் அல்லாஹ் பேசிய பேச்சைப் போன்றது என்று கஸ்ஸாலி ஆக்கிவிட்டார். இந்த ஒரு காரணத்தால் தான் அவரை என்னால் சும்மா விட முடியவில்லை. கராமிதா போன்ற வழிகெட்ட கூட்டத்தினரின் கொள்கையைத் தான் கஸ்ஸாலி எதிரொலிக்கின்றார்.

நேசர்களின் நேரடித் தொடர்பு

இறைவனிடமிருந்து மலக்குகள் செய்திகளைப் பெற்று இறைத் தூதர்களிடம் பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால் அதே இறைவனிடமிருந்து நேரடியாகவே செய்திகளைப் பெறுபவர்கள் தான் முத்திரை பதித்த அவ்லியாக்கள் என்று கஸ்ஸாலி பிதற்றுகின்றார்.

அதாவது, இறைத்தூதர்கள் மலக்குகள் என்ற மீடியேட்டர் மூலமாக செய்திகளைப் பெறுகின்றார்கள். ஆனால் அவ்லியாக்களோ நேரடியாக செய்திகளை உள்வாங்குகின்றனர் என்று கூறுகின்றார்.

இந்த வறட்டு வாதப் பேர்வழிகளின், வழிகேடர்களின் பார்வையில் மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்புகள் அல்லர். மாறாக, அவர்கள் நபிமார்களின் உள்ளத்தில் தோன்றுகின்ற, ஒளிவடிவிலான வெறும் கற்பனைத் தோற்றங்கள் தான். நபியின் உள்ளத்தில் உதிக்கின்ற இந்த ஒளிக்காட்சிகள் தான் அல்லாஹ்வின் உரையாடல் ஆகும்.

இறைநேசர் அறிவு ஞானத்தை அப்படியே பெற்றுக் கொள்கிறார். ஆனால் நபியோ அறிவு ஞானத்தை அவரது உள்ளத்தில் தோன்றும் கற்பனைக் காட்சிகள் மூலம் பெறுகின்றார். இதுதான் இவர்களது நிலைப்பாடு.

இந்த வழிகேடர்கள் இந்நிலைபாட்டில் இருப்பதால் தான் அவ்லியாக்களிடம் அல்லாஹ் நடத்தும் உரையாடல், இம்ரானின் மகன் மூஸா நபியிடம் அவன் நடத்திய உரையாடலை விட மிகச் சிறந்ததாகும் என்று கூறுகின்றனர்.

மூஸா நபி, எழுத்துக்கள் அல்லது ஓசை என்ற சாதனத்தின் மூலம் அல்லாஹ்விடம் பேசினார். அதே சமயம் இவர்கள் இந்தச் சாதனங்கள் இல்லாமலேயே அல்லாஹ்விடம் பேசுகின்றனர். அல்லாஹ் தன் கருத்துக்களை அவர்களுடைய உள்ளத்தில் போடுவது தான் அது.

"கல்உன் னஃலைன்' என்ற நூலாசிரியர் மேற்கண்ட இந்தக் கருத்தைக் கொண்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் வகுத்த விதியின் அடிப்படையில் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலில் கொள்கை, கோட்பாடுகளை கஸ்ஸாலி கட்டமைத்துள்ளார். சூபிஸ ஆசாமிகள் இந்தக் கோட்பாடுகளையே கைக்கொண்டுள்ளனர்.

அல்லாஹ், மூஸா நபியிடம் பேசினான் என்றால் இது ஞானங்களிலிருந்து அவரது உள்ளத்தில் தோன்றிய ஒரு வெளிப்பாடு தான் என்றும் இந்த வழிகேடர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதான் மிஷ்காத்துல் அன்வார் தொடர்பான இப்னு தைமிய்யா அவர்களின் ஆய்வுக் கருத்தாகும்.

நடிகர்களான நபிமார்கள்

அடுத்து, இப்னு ருஷ்து என்பவரின் கருத்துக்களை ஆய்வு செய்யும் போது இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிப்பதாவது:

இப்னு ஸீனா மற்றும் அகமிய அந்தரங்க ஞானவான்களின், வழிகேடர்களின் வறட்டுத் தத்துவக் கருத்தைத் தான் இந்த ஆள் (கஸ்ஸாலி) கொண்டிருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது.

"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்ப வேண்டும் என்று நபிமார்கள் மக்களிடம் போதிக்கின்றனர். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் இதற்கு நேர்மாறான நிலைபாடே குடிகொண்டிருக்கின்றது. இவ்வாறு உள்ளொன்று வைத்து, புறமொன்று போதிப்பதற்குக் காரணம், மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான். நபிமார்கள் உண்மையைப் போட்டு உடைத்து விட்டால் அல்லாஹ்வுக்குத் தனித்தன்மைகள் இல்லை என்று தான் மக்கள் விளங்குவார்கள். அதனால் மக்கள் பயன்பெறுவதற்கு வசதியாக, யதார்த்தத்திற்கு ஏற்ப, ஒத்த வகையில் விஷயங்களை கற்பனையாகவும் உதாரணமாகவும் வடித்துக் கூறியிருக்கின்றனர்' என்பது இவர்களது கொள்கையாகும்.

கஸ்ஸாலி தனது நூலில் பல இடங்களில் இந்தச் சிந்தனையைத் தான் பிரதிபலிக்கின்றார். இல்ஜாமுல் அவாம் (பொதுமக்களுக்குக் கடிவாளமிடல்), அத்தஃப்ரிக்கத் பைனல் ஈமானி வஸ்ஸன்த்தகதி (நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் மதம் மாறுதலுக்கு மத்தியிலுள்ள வேறுபாடு) என்ற நூலில், அல்லாஹ்வுடைய பண்புகளைச் சொல்கின்ற குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கக்கூடாது என்ற பொது நிலைப்பாட்டை கஸ்ஸாலி கூறுகின்றார்.

ஆனால் கஸ்ஸாலியின் கொள்கைப்படி பார்த்தால், தத்துவஞானிகளின் கடவுள் கொள்கைக்கு மாற்று விளக்கம் கூடாது என்று கூறுவதாகவே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மக்களை சீர்திருத்தக்கூடிய ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் மக்களைச் செயல்பட வைப்பது கடமையாகும். அந்த ஆதாரங்களை, அவை கூறுகின்ற வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில் நம்ப வேண்டும் என்று சூபிஸவாதிகள் ஒப்புக் கொள்கின்றனர். அதேவேளையில் நபிமார்கள் சத்தியத்தைச் சரியாக விளக்கவில்லை, ஆலிம்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய எந்தக் கல்வியையும் அவர்களுக்காக நபிமார்கள் விட்டுச் செல்லவில்லை என்பது இவர்களின் நிலைப்பாடு. இவர்களது பார்வையில் உண்மையான கல்வியைப் பெற்றவர்கள் ஜஹ்மிய்யா போன்ற கூட்டத்தினர் தான்.

ஜஹ்மிய்யா கூட்டத்தினர் அல்லாஹ்வுக்குரிய இறைத் தன்மைகளை, இறைப் பண்புகளை ஏற்க மறுக்கும் கூட்டத்தினர் ஆவர்.

மிஷ்காத்துல் அன்வார் என்றால் ஒளியின் மாடம் என்று பொருள். அவர் கூறிய இந்தக் கருத்தை உண்மையான குர்ஆன், ஹதீஸ் என்ற ஒளியின் மாடத்திலிருந்து பெறவில்லை. கஸ்ஸாலி என்ற மாடத்திலிருந்து உருவான சொந்தச் சரக்காகும். இந்த வழிகெட்ட வறட்டு வாதப் பேர்வழிகள் சென்ற பாதையில் சட்ட ஆய்வாளர்கள் ஒருசிலர் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற இவர்கள் அல்லாஹ்வின் பண்புகள், அத்தாட்சிகள் விஷயத்தில் இறைமறுப்பாளர்கள் ஆவர்.

அல்லாஹ்வின் தூதர் உறுதிப்படுத்திய விஷயங்களை மறுக்கும் சிந்தனை கொண்டவர்கள் இறை மறுப்பில் வீழ்ந்தவராவார். இத்தகையோர் பிந்தைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர். முந்திய காலகட்டத்தில் மிகக் குறைவு.

குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ் விளக்கவுரையாளர்கள், எதிர்மறைக் கடவுள் கொள்கை தத்துவவியல் நூலாசிரியர்கள் போன்றோரின் கருத்தை ஆய்வு செய்வோர் எவரும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

இவை தான் இப்னு ருஷ்தின் கூற்றுக்களை ஆய்வு செய்யும் போது இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறிய கருத்துக்களாகும்.

குழப்பத்தின் மறுபெயர் கஸ்ஸாலி

இப்னு ருஷ்தை மேற்கோள் காட்டி மற்றோர் இடத்தில் இப்னு தைமிய்யா கூறியதாவது:

இந்த நோயை முதன்முதலில் புகுத்தியவர்கள் காரிஜிய்யாக்கள். இரண்டாவது முஃதஸிலாக்கள். அடுத்து அஷ்அரிய்யா, பிறகு சூஃபிய்யாக்கள். இதற்குப் பின்னால் வந்தவர் கஸ்ஸாலி. சூபிஸ சிந்தனை அணையை மக்களிடம் திறந்து விட்டவர்.

அவரது சுய விளக்கம் அவரை ஆட்டுவித்தது. அதன் அடிப்படையில் தத்துவத்தையும், தத்துவ ஞானிகளின் கருத்துக்களையும் கற்பனைகளையும் பொதுமக்களிடம் அவிழ்த்துவிட்டார்.

இந்தக் கருத்துக்கள் அடங்கிய அந்த நூலுக்கு மகாஸித் - நோக்கங்கள் என்று பெயரிட்டிருந்தார். அந்த நூலை இயற்றியதே தத்துவ ஞானிகளுக்குப் பதில் சொல்வதற்காகத் தான் என்றும் சொல்லிக் கொண்டார்.

பிறகு, தஹாஃபுதுல் ஃபிலாஸஃபா - தத்துவத்தின் வீழ்ச்சி என்ற பெயரில் ஒரு நூலை இயற்றினார். அந்த நூலில் தத்துவ ஞானிகளை மூன்று சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் இறைமறுப்பாளர்களாக்கினார்.

இவராக வைத்துக் கொண்ட அல்லது உருவாக்கிக் கொண்ட இஜ்மாவுக்கு, ஏகோபித்த முடிவுக்கு அவர்கள் மாற்றமாக நடந்துவிட்டார்களாம். அடுத்து, சூபியாக்கள் வகுத்துள்ள சட்டங்களில் பித்அத்களைப் புகுத்தி விட்டார்களாம். இதுபோன்ற காரணங்ளால் அவர்கள் இறை மறுப்பாளர்கள் என்று கூறினார். அவற்றில், சந்தேகத்தில் வீழ்த்தக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருந்தார். தடுமாற்றத்தில் தள்ளி விடும் ஐயப்பாடுகளைக் கொண்டு வந்து கொட்டியிருந்தார்.

அவரது இந்த ஆதாரங்களும் ஐயப்பாடுகளும் அதிகமான மக்களை மார்க்கத்திலிருந்தும், குர்ஆன் ஹதீஸிலிருந்து பெறப்படும் தத்துவக் கருத்துக்களிலிருந்தும் வழிகெட வைத்துவிட்டன.

தஹாஃபுத் என்ற நூலில், தான் பதிய வைத்த கருத்துக்கள் தர்க்கரீதியிலான வாதங்கள் என்றும், அல்மள்னூன் பிஹி அலா கைரி அஹ்லிஹா என்று நூலில் தான் உண்மையான சத்தியக் கருத்தைப் பதிய வைத்ததாகவும் ஜவாஹிருல் குர்ஆன் என்ற தமது நூலில் கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார். இப்படிப் பல்வேறு குழப்பமான கருத்துக்களைப் பதிய வைக்கின்றார்.

ஏகத்துவத்தில் இடறிய கஸ்ஸாலி

மிஷ்காத்துல் அன்வார் நூலில் ஆரிஃபின்களின் (அல்லாஹ்வை அறிந்தவர்கள்) தரங்களைப் பட்டியலிடுகின்றார்.

அல்லாஹ் முதல் வானத்தை இயக்குபவன் அல்லன். அதே சமயம் அதை இயக்கும் ஆற்றல் அவனிடமிருந்து உருவானது என்று நம்பிக்கை கொண்ட ஞானிகளைத் தவிர மற்ற ஞானிகள் அனைவரும் (இறை தரிசனத்தை விட்டும்) தடுக்கப்பட்டவர்கள் என்று அதில் குறிப்பிடுகின்றார். தத்துவஞானிகளின் கடவுள் கொள்கையையே இவரும் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இவர் அறிவிக்கின்ற கொள்கைப் பிரகடனம் இது! தத்துவஞானிகளின் கடவுள் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் ஊகங்களேயாகும்.

ஒருபுறம் தத்துவஞானிகளின் கடவுள் கொள்கையை ஆதரிக்கும் கஸ்ஸாலி, மற்றோரிடத்தில் தத்துவஞானிகளுக்கு எதிராகவும் கருத்து கூறியுள்ளார். அல்முன்கித் மினள் ளலால் (வழிகேட்டிலிருந்து காப்பாற்றக்கூடியது) என்ற நூலில் தத்துவஞானிகளை கஸ்ஸாலி சாடித் தள்ளியிருக்கின்றார். ஞானத்தைப் பெறுவதற்காக தத்துவஞானிகளைத் தேடிப் போக வேண்டியதில்லை. தனிமையில் இருப்பதாலும் சிந்திப்பதாலும் கிடைக்கக்கூடியது தான் ஞானம். இதுதான் ஞானத்தில் நபிமார்களின் வரிசையில் உள்ளதாகும் என்று தெரிவிக்கின்றார்.

இதே கருத்தைத் தான் கீமியாஉஸ் ஸஆதா - வெற்றியின் வேதிப் பொருள் என்ற நூலிலும் பதிவு செய்கின்றார்.


இந்தக் குழப்பம், கலங்கடிப்பு காரணமாக மக்கள் இரு சாரார்களாகப் பிரிந்து விட்டனர். ஒரு சாரார் தத்துவம், தத்துவக் கொள்கைகளை இகழக் கிளம்பிவிட்டனர். இன்னொரு சாரார் மார்க்கத்தை தத்துவமாகத் திருப்பும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

EGATHUVAM JAN 2014