May 1, 2017

நெகிழ வைத்த நெல்லைப் பொதுக்குழு

நெகிழ வைத்த நெல்லைப் பொதுக்குழு

அன்று தவ்ஹீதுப் பிரச்சாரம் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்! இன்று இறைவன் அருளால் எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?' என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க அலைகள்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஓர் இருபதாண்டு கால இடைவெளியில் இத்துணை வளர்ச்சி!

அதன் ஒரு கட்ட வளர்ச்சிப் பரிமாணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டங்கள்.

மூவாயிரத்துக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்பு கூடுவதற்குத் தோதான ஒரு கட்டட அமைப்பு, மண்டபம் மாநிலத்தில் கிடைக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் பிற இயக்கங்களில் இருப்பது போன்று பொது அறிவிப்பாக உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கும் வழக்கம் நம்மிடம் இல்லை. நமது ஜமாஅத்தில் மாநில, மாவட்ட, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் மட்டுமே மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கே மண்டபம் கிடைக்கவில்லை. இதில் சிறப்பு அழைப்பு விருந்தினர்களைச் சேர்த்தால் மைதானத்தில் தான் பொதுக்குழு நடத்த வேண்டும்.

பொதுக்கூட்டம் என்றால் ஒரு திறந்த வெளியில் கூடிக் கலையலாம். ஆனால் பத்து மணி நேர அலுவல்களை, நிகழ்ச்சிகளைக் கொண்ட பொதுக்குழுவை, கூரை, குளியலறை, கழிப்பறை வசதிகள் இல்லாமல் கூட்ட முடியாது. அப்படி மைதானத்தில் ஒரு பொதுக்குழு நடத்த வேண்டுமாயின் பொருளாதாரச் செலவு பத்து லட்சத்தைத் தாண்டி விடும். மாநில அளவில் பொருத்தமான ஒரு மண்டபம் கிடைத்தது சேலம் மட்டும் தான். ஒரு மாற்று ஏற்பாடாக பிற மாவட்டத்தில் நடத்துவோம் என்றெண்ணிய தலைமையின் சிந்தனையில் பட்டது திருநெல்வேலி மாவட்டம்.

நெல்லையில் இருப்பதிலேயே அதிகக் கொள்ளளவு கொண்ட ஒரு மண்டபம் பார்வதி சேஷ மஹால். உள்ளே 1400 பேர்; வெளியே 1000 பேர் அமரலாம் என்ற விபரத்தைத் தெரிந்து கொண்டு அந்த மண்டபத்தை தலைமை தேர்வு செய்தது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்தால் இது போதுமானதல்ல என்றாலும் தமிழகத்தின் கடைக்கோடியில் நடத்தப்படுவதால் அதிக தொலைவில் உள்ளவர்கள் மூன்று நாட்களை ஒதுக்க வேண்டும்; அத்துடன் அவர்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் அவர்களால் வர இயலாது; எனவே இந்த இடம் போதுமானதாக இருக்கும் என்று கருதி நெல்லையில் பொதுக்குழு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. பொதுக்குழுவும் இனிதே நடந்து முடிந்தது.

இதில் நெகிழ்வூட்டும் நிகழ்வென்ன?

இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் மேலப்பாளையம். இங்கு தான் 1991ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியன்று உலமா சபையின் பின்னணியிலும் நெல்லையிலுள்ள பணக்காரர்களின் பண பலத்திலும் பி.ஜே. மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக!

அல்குர்ஆன் 27:50, 51

அல்லாஹ்வின் வசனப்படி அந்தச் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

அதன்பின் படிப்படியான ஒரு வளர்ச்சிப் படிமானம் கண்டு, கொள்கைச் சகோதரர்களின் கொள்கைப் பிடிமானத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு உருவாகி, இன்று தனது பொதுக்குழுவை நெல்லையில் நடத்தியது.

இந்தக் கொள்கையை வேரறுக்க நினைத்த ஆலிம்கள் அன்றும் இன்றும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்கள் கண் முன்னாலேயே அவர்களது அசத்தியக் கொள்கை, சன்னம் சன்னமாக சுவாசத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் இவ்வூர் சந்ததியினர், இளைய தலைமுறையினர் தவ்ஹீது தலைமுறையாயினர். இன்று தவ்ஹீது தலைமை என்ற வேர்களுக்குத் தங்கள் உழைப்பு என்ற அர்ப்பணிப்பு மூலம் அந்த மக்கள் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை உபசரிப்பதற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தன்னார்வத் தொண்டர்களாக (வாலண்டியர்ஸ்) இவ்வூரிலிருந்து 150 பேர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

இந்த வகையில் இப்பொதுக்குழு உள்ளத்தை நெகிழ வைத்த பொதுக்குழுவாகும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்க்கும் பொதுக்குழுவாகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13வது பொதுக்குழு இது! புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் மூன்றாவது பொதுக்குழு! சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு மாநில நிர்வாகத் தேர்தலை மையமாகக் கொண்டது. இரண்டாவது பொதுக்குழு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

இந்தப் பொதுக்குழு ஆண்டுக்கொரு முறை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கூட்டப்பட்டது. அவ்வாறு கூட்டுவதற்கு முன், இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டிற்கான திட்டத்தை இப்பொதுக்குழுவில் அறிவிக்கலாம் என்று யோசித்து, தலைமை அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்டது. இதில் அதிகமான மாவட்டங்கள் அழைப்புப் பணிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்தனர். அதன்படி இந்தப் பொதுக்குழு அழைப்புப் பணியை மையமாகக் கொண்டு அமைந்தது. மாவட்டங்களுக்கிடையில் அழைப்புப் பணிக்கான புள்ளிகளைப் பெறுவதில் போட்டி போடும் பொதுக்குழுவாக அமைந்தது. இந்த அமைப்பு உலக ஆதாயத்தை மையமாகக் கொண்டதல்ல. மறுமை ஆதாயத்தை மையமாகக் கொண்ட அமைப்பு என்பதை இப்பொதுக்குழு நிரூபணமாக்கி நம்மை நெகிழ வைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக மண்டப உரிமையாளர் நம்மிடத்தில் மனம் திறந்தது தான் ஹைலைட்.

மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் இரத்த தானம் பற்றிப் பேசுகையில், அரசு மருத்துவமனையில் நமது ஜமாஅத்திற்குத் தெரிவித்த பாராட்டைப் பற்றி விவரித்தார். மற்ற இரத்த தானக் கழகங்கள், அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் தருகின்ற இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தருகின்ற இரத்தம் சுத்தமான கலப்படமற்ற இரத்தம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டதை அப்துல் ஜப்பார் விவரித்தார்.

இதைக் கூர்ந்து கவனித்த மண்டப உரிமையாளர், "இரத்த தானம் குறித்து அவர் பேசியது உண்மை தான். இவ்வளவு பெரிய கூட்டத்தில் புகை பிடிக்கும் ஒருவரைக் கூட நான் காணவில்லை. மற்றவர்கள் கூடும் போது மண்டபம் புகை மூட்டமாகக் காட்சியளிக்கும். மண்டபத்திலும் கழிவறைகளிலும் பீடி, சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில் அதைக் காண முடியவில்லை. இதிலிருந்தே இது ஒரு ஒழுக்கமிக்க கூட்டம் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்'' என்று குறிப்பிட்டார்.

அவரது இந்த மனம் திறப்பும் ஒரு நெகிழ்வை அளித்தது.

தவ்ஹீத் ஜமாஅத் தான் பீடி, சிகரெட் ஹராம் என்று தெரிவித்து ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகின்றது. நமது பத்திரிகைகளில் கூட அது சார்ந்த விளம்பரங்கள் வராமல் ஓர் உறுதிப்பாட்டைக் காத்து வருகின்றது. உறுப்பினர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த ஜமாஅத்தும் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்களில் ஒரு சிலர் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சகோதரர்களுக்கு முன்னால் நமது ஜமாஅத்தைப் பற்றிய மண்டப உரிமையாளரின் மதிப்பீட்டையும் பார்வையையும் முன்வைக்கின்றோம். இந்த மதிப்பீட்டைப் பொய்யாக்காமல், அல்லாஹ்வுக்குப் பயந்து இந்தத் தீய பழக்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இறுதியாக, இந்தப் பொதுக்குழுவை ஒட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தலைமை பரிசாக வழங்கியது. மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும் என்ற தலைப்பில் பி.ஜே. ஆற்றிய உரைக்குப் பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுரையாக, இறுதி நபித்துவம்' என்ற தலைப்பிலான இந்த உரை அமைந்தது. காதியானிகளை மட்டுமல்லாது, சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஜமாஅத்துல் உலமாவையும் ஆட்டம் காண வைத்துள்ள இந்த உரை, நேரிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அனைவரையும் நெகிழ வைத்தது; மன நிறைவை அளித்தது.

சத்தியப் பாதையில் நாம் காணும் இந்த வளர்ச்சி நமக்குப் போதை அளித்து விடாமல், நமது கொள்கைப் பயணத்தைத் தொடர்வோமாக! அல்லாஹ் கூறும் எச்சரிக்கையை நம் மனதில் கொள்வோமாக!

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.


அல்குர்ஆன் 9:25

EGATHUVAM JAN 2012