கால கால ரசூலுல்லாஹ்...கண்டு கொள்ளுமா பள்ளி நிர்வாகம்?
ஷாபி மத்ஹப் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவின் போது
இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னால் முஅத்தின் ஒரு வரவேற்புரை நிகழ்த்துவார். அதற்கு
நடைமுறையில் மஃஷர் என்று கூறுவார்கள்.
மஆஷரில் முஸ்லிமீன் என்ற வாசகம் அதில் இடம்பெறுவதால் அதற்கு
இந்தப் பெயர் கூறப்படுகின்றது. மஆஷர் என்பது மஃஷர் என்ற வார்த்தையின் பன்மையாகும்.
மஃஷர் என்றால் "மக்களே' என்று பொருள்.
முஅத்தின் இவ்வாறு அழைத்து, "ரவல் புகாரி வ முஸ்லிம் அன் அபீஹுரைரத்த கால கால ரசூலுல்லாஹி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்'' என்று அரபியில் விளாசித் தள்ளுவார்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவிக்கின்றார்கள்.
இதை புகாரி,
முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்'' என்பது இதன் பொருளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறுவது என்ன?
புகாரி, முஸ்லிம் பதிவு செய்த செய்தி
என்ன?
"அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகராஇ வஈதுல் மஸாகீன். இதா ஸயிதல் கதீபு
அலல் மிம்பரி ஃபலா யதகல்லம் அஹ்துக்கும் ஃபமன் தகல்லம ஃபகத் லகா. வமன் லகா ஃபலா ஜும்அத்த
லஹு''
இது தான் அந்த முஅத்தின் கூறும் செய்தியாகும். இப்படி ஒரு ஹதீஸ்
புகாரி, முஸ்லிமில் இல்லவே இல்லை. புகாரி, முஸ்லிமில் இருந்தால் எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொய்யான ஹதீஸ், புரட்டான ஹதீஸ்
தங்களது நூல்களில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகப் பெரும் முயற்சியும் முனைப்பும், உழைப்பும் அர்ப்பணிப்பும் செய்த இமாம்களான புகாரி, முஸ்லிம் பெயரால் இப்படி ஒரு பொய்யா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். ஆனால் எந்த மாற்றமும்
நிகழவில்லை. வழக்கம் போல் மத்ஹபு ஆலிம்களிடமிருந்து மவ்னமே பதிலாக வந்தது.
"என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது
இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 110, முஸ்லிம்
4
அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையைச் சொல்லி பலமுறை எச்சரித்துள்ளோம்.
இவ்வளவு எச்சரிக்கைக்குப் பிறகும் வெள்ளிக்கிழமைகளில் புனித ஜும்ஆவில் முஅத்தின் புளுகித்
தள்ளிக் கொண்டு தான் இருக்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக புகாரி, முஸ்லிமில் வருவதாக இரண்டு பொய்களைப் புனைந்து சொல்கின்றார்.
1. அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகரா வ ஈதுல் மஸாகீன் - ஜும்ஆ என்பது
ஏழைகளுக்கு ஹஜ்;
வறியவர்களுக்குப் பெருநாள்.
இது நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
2. உரையாற்றுபவர் மிம்பரில் ஏறிவிட்டால் உங்களில் எவரும் பேச வேண்டாம்.
இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்கு எந்த அடிப்படையும்
இல்லை.
இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன.
3. யார் பேசுகின்றாரோ அவர் ஜும்ஆவை வீணாக்கி விட்டார்.
4. யார் வீணாக்கி விட்டாரோ அவருக்கு ஜும்ஆ இல்லை.
இப்படி நேரடியாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸில் இடம்பெறவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது
உன் அருகிலிப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும்
நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 934, முஸ்லிம்
1404
இந்த வார்த்தைகளைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கால கால ரசூலுல்லாஹ்... என்று சொல்லி விட்டால் அது ஹதீஸ் ஆகிவிடாது.
தாங்கள் கூறுவது ஹதீஸ் இல்லை. புகாரி, முஸ்லிமில்
இந்தச் செய்தி பதிவாகவில்லை என்பது அந்த அப்பாவியான முஅத்தின்களுக்குத் தெரியாது. தான்
சொல்வதன் பொருள் என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஆலிம்களுக்கு நன்றாகத்
தெரியும். ஆனால் தெரிந்தே, திட்டமிட்டே அதை ஆதரிக்கின்றார்கள்.
அதாவது ஒவ்வொரு ஜும்ஆவின் போதும் நரகத்திற்கு முன்பதிவு செய்து கொள்கின்றார்கள்.
இத்தனைக்கிடையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிக் காட்டிய பிறகும் வம்புக்கும்
வீம்புக்கும் இதைச் செய்கின்றார்கள்.
"அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!'' என்று அவனிடம்
கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது.
அது மிகக் கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் 2:206
இப்போது முஅத்தின் கூறுகின்ற அந்தப் பொய்யான ஹதீசுக்கு வருவோம்.
இவ்வளவு நாளும் நாம் இந்தப் பொய்யான செய்தியை நிறுத்துங்கள்
என்று சொன்ன போது நிறுத்த மறுத்தார்கள். இப்போது ஒரு பரேலவி மாத இதழ் மேற்படி பொய்யான
ஹதீஸ் புகாரி,
முஸ்லிமில் இல்லை என்று மறுக்கின்றது. பொய்யான செய்திகளை ஹதீஸ்கள்
என்று சொல்லி நியாயப்படுத்துபவர்கள் தான் பரேலவிகள். அவர்களே இந்தச் செய்தியை மறுத்துள்ளனர்.
இப்போதாவது சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் இந்தப் பொய்யை நிறுத்துவார்களா? என்று கேள்வி எழுப்புகின்றோம்.
ஜும்ஆ வசதியற்றோருக்கு ஹஜ்ஜாகும். ஏழைகளுக்குப் பெருநாளாகும்.
பிரசங்கி மிம்பர் (மேடை) ஏறிவிட்டால் உங்களில் ஒருவரும் பேச வேண்டாம். அப்படிப் பேசினால்
அவர் பாழாக்கி விட்டார். எவர் பாழாக்கிவிட்டாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மைகள் இல்லை
என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகவும் இதை
இமாம் புகாரி,
இமாம் முஸ்லிம் தங்களின் நூல்களில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேல்குறிப்பிட்ட நபிமொழியின் வாசகம் முழுவதுமாக புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நபிமொழிக் கிரந்தங்களில் மட்டும் காணமுடியவில்லை.
ஆனால் வேறு சில நூல்களில் இதன் கருத்தைக் காணமுடிகின்றது. இங்கும் அங்குமாய் சேகரித்து
இதை புகாரி,
முஸ்லிம் நூல்களில் வருவதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.
மேலும் இக்குற்றத்திற்கு பள்ளியின் இமாமே மூல காரணியாவார். இது முஅத்தாவில் இடம்பெற்றுள்ள
நபிமொழியைக் கவனிக்கவும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ தினத்தில் இமாம் (குத்பா) பிரசங்கம் செய்யும் போது (பேசிக்
கொண்டிருக்கும்) உன் தோழரிடம் "மௌனமாக இரு' என்று
கூறினால் நீ (ஜும்ஆவை) பாழாக்கிவிட்டாய். (நூல்: முஅத்தா இமாம் மாலிக்)
இந்த நபிமொழியை இமாம் மிம்பரின் மீது ஏறுவதற்கு முன்பு தமிழில்
வாசித்தால் அனைவருக்கும் பிரயோஜனமாகும். மாறாக அரபியில் வாசிப்பதால் யாருக்கு என்ன
பயன்?
அஹ்லுஸ் சுன்னா, நவம்பர் 2013
பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!
உங்களின் ஆலிம்கள் ஒருபோதும் அல்லாஹ்வை அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்குத்
தேவை வருவாய் தான். எனவே பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். நபி
(ஸல்) அவர்கள் மீது அவர்கள் சொல்லாததை சொன்னதாக, தெரிந்தே
பொய் சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் பாவமாகும். அத்தகைய பாவத்தை முஅத்தின், மஃஷர் என்ற பெயரில் செய்ய அனுமதித்தால் அந்தப் பாவத்தில் நிர்வாகத்தினராகிய
நீங்களும் சேர்ந்து கூட்டாவீர்கள்.
எனவே இந்தப் பாவத்தைத் தடுத்து, அந்தப் பாவத்தில் பங்கெடுக்காமல் விலகிக் கொள்ள வேண்டும் என்று
பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.
EGATHUVAM DEC 2013