May 24, 2017

ஆதி திராவிடர்களும் ஆதமின் மக்களே!

ஆதி திராவிடர்களும் ஆதமின் மக்களே!

கந்த தேவி முதல் கள்ளிமேடு வரை

கள்ளிமேடு...

இது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அமைந்திருக்கும் ஊர். இங்கு பிள்ளைமார் எனும் சாதியினர் வசிக்கின்றனர். பழங்கள்ளிக்காடு என்பது அதன் அருகில் உள்ள ஊராகும். இங்கு ஆதி திராவிடர்கள் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறைந்த அளவில் மற்ற சாதியினரும் வசிக்கின்றனர்.

இவ்விரு ஊர்களுக்கும் பொதுவாக பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 800 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகின்றது. ஆண்டுதோறும் இங்கு ஆடித் திருவிழா நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் மண்டகப்படி செய்யும் உரிமை பிள்ளமார்கள் சாதியினருக்கு மட்டுமே உண்டு. ஆதி திராவிடர்கள் கோவிலில் வழிபாடு செய்யலாம். ஆனால் மண்டகப்படியை வழங்க உரிமையில்லை.

(மண்டகப்படி என்றால் பூஜை உள்ளிட்ட அனைத்து செலவினங்களுக்கும் பொறுப்பேற்று செய்வதாகும்.)

இந்நிலையில் இந்த ஆண்டும் திருவிழாவின் போது தங்களுக்குரிய உரிமை மறுக்கப்படுவதை உணர்ந்த தலித்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறிவிடுவோம் என்று அறிவித்தனர். அவ்வளவு தான் ஆட்சித் தலைவர் முதல் மாநில அமைச்சர்கள் வரை அத்தனை பேர்களும் படையெடுத்து வந்தனர். தலித் மக்களிடத்தில் சமரசம், சமாதானம் பேசினர். மண்டகப்படி நடக்கின்ற 5 நாட்கள் கழித்து தலித்கள் தங்கள் வழிபாடுகளைச் செய்யலாம் என்ற ஒரு தலைப்பட்சமான தீர்வைத் தான் அதிகார வர்க்கம் முன்வைத்தது. அதை தலித்கள் ஏற்க மறுத்து விட்டனர். இறுதியில் திருவிழா நிறுத்தப்பட்டு விட்டது. இதை எதிர்த்து பிள்ளைமார்கள் உயர்நீதிமன்றம் சென்றும் பிரச்சனைக்கு முடிவு ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் தலித்களின் வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவது வரலாற்றில் இது முதல் முறை அல்ல! இதற்கு முன்பு இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பல அநியாயங்கள் அரங்கேறியிருக்கின்றன.

1997ல் சிவகங்கை மாவட்டம் கந்ததேவியில் உள்ள ஸ்வர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களான தேவேந்திர குல வேளாளர்கள் அக்கோயில் திருவிழாக் கொண்டாட்டத்தில் முழு உரிமை கோரினர். இதற்காகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.

ஜூலை 1998ல் உயர் நீதிமன்றம் தாழ்த்தப் பட்டவர்கள் திருவிழாவில் முழுமையாக பங்கேற்க உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். ஆனால் அது பயனற்ற உத்தரவாகிப் போனது.

ஜூன் 2005ல் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ழி.வரதராஜன், உயர்நீதி மன்றம் ஏற்கனவே போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி அதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தலித்களுக்கு கோயில் திருவிழாவில் தேர் இழுக்கும் உரிமையை மறுப்பது அரசியல் சாசனத்தின் 21வது பிரிவை மீறிய செயலாகும் என்றெல்லாம் நீதிபதி வியாக்கியானம் கூறி, உத்தரவைச் செயல்படுத்துமாறு அரசின் நிர்வாக இயந்திரத்திற்கு மறு உத்தரவு போட்டார்.

நடந்தது என்ன? 2005 ஆண்டு நடந்த திருவிழாவில் வழக்கத்திற்கு மாற்றமாக பிரமாண்டமான அளவில் போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. எதற்கு? சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டவா? அப்படித்தான் யாரும் கருதுவார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாற்றம். நூற்றுக்கணக்கான தலித்கள் கைது செய்யப்பட்டனர். தேரிழுக்கும் நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு முன் முற்படுத்தப்பட்டது. பேருக்காக 26 தலித்துகள் மட்டும் தேர் கயிறைப் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அடுத்து வந்த ஆண்டுகளில் தேரிழுப்பு ரத்துச் செய்யப்பட்டு விட்டது.

2014ல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை மேற்படி உத்தரவுக்கு உயிர் கொடுத்தது. நீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் பவனி வரக் கூடிய தேரை, பழுது என்ற பெயரில் கூடாரத்தில் படுக்க வைத்து விட்டு தேரில்லாமலேயே திருவிழா நடந்து முடிந்தது.

1996ல் கோவில்பட்டி செண்பகவல்லி- பூவனந்தனார் கோயிலின் வருடாந்திர திருவிழா நடந்தது. இதற்கும் தலித்கள் மண்டகப்படி உரிமை கோரினார்கள். அப்போது 1995ல் அதே பகுதியிலுள்ள கொடியன்குளத்தில் தலித்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறிய அராஜகம் அரங்கேறிய நேரம். தேவேந்திர குலத்தவர்களும், தேவர் சாதியினரும் மோதிக் கொண்டு இரத்தக் குளியல் நடத்திக் கொண்டிருந்த கால கட்டம். அதனால் தலித்துகளின் அந்தக் கோரிக்கையும் இரத்தக் களறியில் தான் முடிந்தது. தேர் திருவிழா முழுவதுமாக முடங்கியே போனது.

சில வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கரிசல்குளத்தில் தலித்கள் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவில் தானியங்களைக் கொண்டு படையலிடும் முளைப்பாறி உரிமையைக் கோரினர். நீண்ட சமாதானப் பேச்சுகளுக்குப் பிறகு தலித்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் முளைப்பாறி நடத்தினர்.

தொடர்ந்து தலித்துகளின் உரிமைகள் ஆதிக்க சாதிக் காரர்களின் அராஜகப் போக்கால் பறிக்கப்பட்டே வருகின்றன.

நீதிமன்றம் அரசியல் சாசனத்தை அமல்படுத்து என்று காவல் துறைக்கும், நிர்வாகத் துறைக்கும் உத்தரவிடுகின்றது. உத்தரவை மீறியதற்காக நீதிமன்றம் அதிகாரிகளுக்கு எந்தத் தண்டனையும் விதிப்பதில்லை. வேறுவிதமாகத் தீர்ப்பு சொல்ல சட்டம் இடமளிக்கவில்லை என்பதற்காகவே உயிரற்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

நீதிமன்றம் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்பதை அறிந்து வைத்துள்ள காவல் துறை தடியடிப் பிரயோகம் முதல் துப்பாக்கிச் சூடு வரை நடத்தி, தலித் மக்களை ஒடுக்கி வருகின்றது.

இப்படித் தான் தலித்களின் வழிபாட்டு உரிமை கந்ததேவியிலிருந்து கள்ளிமேடு வரை மறுக்கப்பட்டே வருகின்றது. இது உணர்த்துகின்ற பாடமும் படிப்பினையும் என்ன? தலித்கள் இந்து மதத்தில் இருக்கின்ற வரை அவர்களது தீண்டாமைக்குத் தீர்வே கிடையாது என்பது தான். வழிப்பாட்டுரிமைக்குரிய வாசல் திறக்கப்படாது என்பது தான்.

அப்படியானால், இதற்கு விடிவும் முடிவும் தான் என்ன? இதற்கு அதே கள்ளிமேட்டின் அருகில் உள்ள பழங்கள்ளிக்காடே வழிகாட்டுகின்றது.

இவ்வூர் மக்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்குத் தகவல் சொன்ன மாத்திரத்தில் அதன் தலைவர் அல்தாஃபி அவர்கள் நேரடியாகச் சென்று, ‘‘இஸ்லாமிய மார்க்கம் கோபத்தில் ஏற்கும் மார்க்கமல்ல. சிந்தித்து நிதானித்து ஏற்க வேண்டிய மார்க்கம்’’ என்று விளக்கினார். இந்த விளக்கத்தைக் கேட்டு விட்டு ஆறுபேர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். அலஹம்துலில்லாஹ்.

இவர்கள் தான் சரியான முடிவை எடுத்துள்ளனர். ஆலயம் என்றால் அனைவரையும் வரவேற்க வேண்டும். அது பாரபட்சம் காட்டுகின்றது என்றால் அந்த ஆலயத்தை மாற்ற வேண்டும். வாழ்த்தி, வரவேற்கின்ற ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். அதைத் தான் இந்த ஆறு பேர்களும் செய்திருக்கின்றனர்.

இப்போது மக்கள் மக்காவை நோக்கி ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். எதற்கு? அங்கு நடைபெறும் மக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக!

வெள்ளையர், கருப்பர், வலியவன், எளியவன், அரசன், ஆண்டி என்று பல்வேறு நாடு. இனம், மொழிகள் பேசக்கூடிய அத்தனை பேரும் சங்கமிக்கின்ற மாநாடு தான் ஹஜ் என்று வணக்கமாகும்.

பிரம்மன் தலையில் பிறந்தவன் பிராமணன்! தோளில் பிறந்தவன் சத்திரியன்! தொடையில் பிறந்தவன் வைசியன்! காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துகின்ற வர்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்து, மனிதன் அனைவரும் ஆதம் என்ற ஒரே ஒரு மனிதனிடமிருந்து உருவானவர்கள் என்ற சமத்துவத்தை, சகோதரத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றுகின்ற மாநாடாகும்.

இதோ திருக்குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற அந்த சகோதரத்துவ, சமத்துவ முழக்கம்:

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

கடவுளை பயப்படுவதில் முந்துபவர்கள் தான் அவனிடம் மரியாதைக்குரியவர்கள். இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட சாதிய அடிப்படையில் அல்ல என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்துகின்றது. இந்த சகோதரத்துவ உணர்வைப் புதுப்பிப்பதற்கும், பதிப்பிப்பதற்கும் தான் ஆண்டு தோறும் இந்த மாநாடு, நம்மைப் படைத்த இறைவனின் கட்டளைப்படி மக்காவில் நடத்தப்படுகின்றது.

இதில் பங்கேற்க உலக மக்கள் அனைவரையும் இஸ்லாமிய மார்க்கம் அழைப்பு விடுக்கின்றது.

மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள்.

அல்குர்ஆன் 22:27

மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 22:25

கந்ததேவி முதல் கள்ளிமேடு வரை உள்ள ஆலயங்கள் தலித் மக்களை விரட்டியடிக்கின்ற வேளையில் அவர்களை வாருங்கள்! அள்ளி அரவணைக்கின்றோம்; காலெடுத்து வையுங்கள்! கட்டித் தழுவுகின்றோம் என்று சாதி வேறுபாடின்றி மக்களை அந்த இறைவன் கஃபா என்ற அந்தப் புனித ஆலயத்திற்கு அழைக்கின்றான.

அந்த ஆலயம் சாமானியமான ஆலய மல்ல; சாதாரணமான ஆலயமல்ல! இந்த ஆதி திராவிடர்களுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தந்தையான ஆதம் என்ற முதல் மனிதனால் பூமியில் முதன் முதலில் கட்டப்பட்ட புனித ஆலயம்.

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில்  உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

அந்த ஆலயத்திற்குப் போய் வர சக்தி பெறாதவர்களுக்கு ஊருக்குள்ளே ஆயிரமாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அந்தப் பள்ளிவாசல்கள் புனிதத்தில் கஃபா என்ற ஆலயத்தைப் போல் அல்ல என்றாலும் சமத்துவத்தில் அதற்கு ஒத்தவையாகும்.

இங்குள்ள ஆலயங்களில் பாகுபாடு, பாரபட்சம், வித்தியாசம், வேறுபாடு காட்டுவது இருக்காது. அந்த ஆலயங்கள் கள்ளி மேடு, பழங்கள்ளிக்காடு தலித் மக்களை அள்ளி அரவணைக்கவும் ஆரத் தழுவவும் தயாராக இருக்கின்றன.

ஆனால் ஒரு நிபந்தனை. இவ்வளவு பாகுபாடுகளுக்கும், பாரபட்சங்களுக்கும் அடிப்படை காரணம் பலதெய்வக் கொள்கை தான். அந்தப் பலதெய்வக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு, உங்களைப் படைத்த உண்மையான ஒரே ஒரு கடவுளை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களை ஆலயத்திற்குள் வரவிடாமல் தடுக்கின்ற ஆதிக்க சாதிய சக்திகளைத் தண்டிப்பதற்கு அறவே சக்தியற்ற அந்த தெய்வங்களைத் தூர வீசி விட்டு, தங்கள் கடவுள் ஒரே ஒருவன் மட்டும் தான் என்ற கொள்கையின் பக்கம் வந்து விட்டால் குலம் ஒன்றாகி விடும். அந்தக் குலம் ஆதி மனிதன் ஆதமுக்குப் பிறந்த மனித குலமாகும். அது பாகுபாடு காட்டுகின்ற சாதிய குலமல்ல!

தலித்களே! உங்கள் தன்மானம் காக்க, சாதிய இழிவு நீங்க, உங்களைப் படைத்த அந்த இறைவனின் அழைப்புக்குப் பதில் அளியுங்கள்! அவனது ஆலயத்திற்குள் பிரவேசியுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.

EGATHUVAM SEP 2016