May 11, 2017

சிகரத்தில் சவூதிப் பெண் சாதனையா? சாபமா?

சிகரத்தில் சவூதிப் பெண் சாதனையா? சாபமா?

கடந்த மே 18ஆம் தேதியன்று ஊடகங்களை ஒரு முக்கியச் செய்தி ஆக்கிரமித்திருந்தது. அது சவூதி அரேபியாவைப் பற்றித் தான். அதிலும் குறிப்பாக சவூதிப் பெண் பற்றித் தான்.

இவ்வாறு சொல்கின்ற போது சவூதிப் பெண்களுக்கு ஷரீஅத் விதித்திருக்கும் கட்டுப்பாட்டைப் பற்றிய விமர்சனமாக இது இருக்கும் என்று படிப்பவர்களுக்கு பரபரப்பான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்தச் செய்தி அந்த ரகத்தைச் சார்ந்ததல்ல.

ஒரு சவூதிப் பெண் இஸ்லாமியப் பண்பாட்டிற்கும் ஷரீஅத்தின் கட்டுப்பாட்டிற்கும் நேர் எதிர்த் திசையில் செய்கின்ற பயணம் தொடர்பான செய்தி தான் அது.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

அல்குர்ஆன் 2:120

இன்னோர் இடத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.

நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 2:109

யூத, கிறித்தவ சக்திகள் முஸ்லிம்கள் தங்களைப் போன்று ஆகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர். அப்போது தான் முஸ்லிம்களும் அவர்களும் ஒரு கோட்டில் சமமாகவும் கொள்கையில் சமரசமாகவும் ஆகிவிடுவார்கள் அல்லவா?

"அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர்.

அல்குர்ஆன் 4:89

ஜித்தாவை சொந்த ஊராகக் கொண்டு, துபையில் பயில்கின்ற 25 வயது மாணவி ரஹா முஹர்க்க என்பவர் உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கின்றாள். இந்த வகையில் சவூதிப் பெண் மகுடம் பெற்றிருக்கின்றாள்.

மனம் பூரிக்க, அங்கங்கள் புடைக்க, கைகளை உயர்த்தி மலை மேல் நின்று அவள் கொடுக்கின்ற போஸ், கருப்புக் கூந்தலைக் காற்றில் அலைய விட்டு அவள் காட்டுகின்ற ஆர்ப்பாட்டமான காட்சி உலக முஸ்லிம்களை முகம் சுளிக்க வைக்கின்றது.

பொதுவாக மலை ஏறுவதில் இரு வகைகள் உள்ளன.

ஒன்று ஆய்வு நோக்கம். இதற்காக ஒருவர் பயணம் மேற்கொள்கின்றார். மார்க்க அடிப்படையிலும் உலக அடிப்படையிலும் இதை வரவேற்கலாம். அத்தகைய பயணத்தை ஊக்கப்படுத்தலாம்; உற்சாகப்படுத்தலாம்.

மற்றொன்று, ஆவண நோக்கம். அதாவது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தன் பெயர் பதிவாவதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்வதாகும். இது சுத்த பைத்தியக்காரத்தனம்; பித்துக்குளித்தனம். இத்தகையவர்கள் கால நேரத்தின் அருமை தெரியாத முட்டாள்கள்.

இப்படிப்பட்ட வகையைச் சார்ந்தது தான் இந்த ஆர்ப்பாட்டப் பெண்ணின் அர்த்தமற்ற பயணம்; அடாவடிப் பயணம்.

இந்தப் பயணத்தில் இஸ்லாத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் கழற்றி எறிந்து விட்டார்.

1. இந்தப் பெண், கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்தானி, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ராயித் ஜைதான், ஈரானைச் சேர்ந்த மஸ்வூத் முஹம்மத் ஆகிய மூன்று ஆடவருடன் பயணம் செய்திருக்கின்றாள்.

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1082

நபி (ஸல்) அவர்களின் கட்டளையை எந்த உறுத்தலுமின்றி மீறியிருக்கின்றார்.

2.  தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 24:31

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:59

இந்த இறை வசனங்களின் கட்டளையையும் மீறியிருக்கின்றார்.

3. உடைக் கட்டுப்பாடு, உரிய உறவினருடன் பயணம் செய்தல் அனைத்தையும் மீறி மேற்கொள்கின்ற பயணம் அறியாமைக் காலத்துப் பயணமாகும்.

இப்படிப்பட்ட பயணத்திற்கு அல்லாஹ் தடை விதித்திருக்கின்றான்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 33:33

இந்த வகையில் அல்லாஹ்வின் இந்தத் தடையையும் இந்தப் பெண் மீறியிருக்கின்றாள்.

இந்த லட்சணத்தில் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வந்ததும் இவளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, "பெண்கள் தங்களுக்குத் தாங்களே சவால்களாகத் திகழ வேண்டும்'' என்று அறிவுரை வேறு வழங்கியிருக்கின்றாள்.

ஒரு பெண் உலகின் உயர்ந்த மலை உச்சிக்குச் செல்வது சாதனையல்ல. அது ஒரு சாபம். ஒரு பெண் ஒழுக்கத்தின் உச்சிக்குச் செல்ல வேண்டும். அது தான் நபி (ஸல்) அவர்கள் கண்ட, காணச் செய்த முஸ்லிம் பெண்ணின் இலக்கணம்.


சவூதியில் பெண்கள் மீதுள்ள ஷரீஅத் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றது. இது உலக ஊடகங்களுக்கு உற்சாகமாகவும், உத்வேகமாகவும் அமைந்திருக்கின்றது. அதனால் சவூதிப் பெண்ணின் இந்த சாபக்கேட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு மகிழ்கின்றன. இதற்குக் காரணம் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் விரச சிந்தனையைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

EGATHUVAM JUL 2013