ஆய்வுக்கூடம் - மாநபிக்கு எதிரான மவ்லானா பதில்கள்
காஷிபுல் ஹுதா என்ற மத்ரஸாவின் ஆசிரியர்களைக் கொண்டு மனாருல்
ஹுதா என்ற மாத இதழ் சென்னையிலிருந்து வெளியாகின்றது. இவ்விதழில் மவ்லானா பதில்கள் என்ற
பெயரில் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படுகின்றது. அந்தப் பதில்கள்
ஹனபி மத்ஹபின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலான பதில்கள் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் அப்பாற்பட்டு, நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு நேர் மாற்றமானவையாக அமைந்துள்ளன. இதுபோன்று
பிற இதழ்களில் வெளியாகும் மார்க்கச் சட்டங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதன் மூலம் மத்ஹபுகள் எவ்வாறு மாநபி வழிக்கு மாற்றமாகச் செயல்படுகின்றன
என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் மாற்றுக் கொள்கையுடையவர்களின் கருத்துக்களை அலசுவதற்காகவும்
இந்த "ஆய்வுக்கூடம்' என்ற பகுதி வெளியிடப்படுகின்றது.
இப்போது மவ்லானா பதில்களுக்குச் செல்வோம். மனாருல் ஹுதா, மார்ச் 2013 இதழில் வெளியான கேள்வி பதிலைப்
பார்ப்போம்.
நான்கு ரக்அத் தொழும் தொழுகையில் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம்
கொடுத்து விட்டால் என்ன செய்வது?
இந்தக் கேள்விக்கு மவ்லானா (?) அளித்துள்ள
பதிலைப் பாருங்கள்.
நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகையில் மறந்து இரண்டாவது ரக்அத்திலேயே
ஸலாம் கொடுத்து விட்டவருக்கு, பின்னர் ஞாபகம் வந்தால், அவர் தொழுத இடத்தை விட்டும் நீங்காமல், முகத்தை கிப்லாவை விட்டும் திருப்பாமல், தொழுகையை முறிக்கும் செயல்கள் செய்யாமல் இருப்பின் அவர் உடனே
இரண்டு ரக்அத்துகள் தொழுது தொழுகையை பரிபூரணமாக்கிக் கொண்டு, இறுதியில் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும்.
(அத்தஹ்தாவி 473)
இந்தப் பதில் நபி (ஸல்) அவர்களுடைய நேரடி செயல்முறைக்கு எப்படி
நேர்முரணாக அமைந்திருக்கின்றது என்று பாருங்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத்
தொழுகைகüல் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். - (இதன் அறிவிப்பாளரான)
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா
(ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் அதை மறந்துவிட்டேன்.- (நான்கு ரக்அத்துடைய
அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்துவிட்டார்கள்.
உடனே எழுந்து பள்üக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த
ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர் போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள்.
தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கைவிரல்களை
பின்னிக் கோர்த்துக்கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது
வைத்துக்கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்üயின்
வாயில்கள் வழியாக வெüயேறிய போது "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது
(போலும்)'' என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்)
அவர்கüடம் பேச அவர்கüருவர் (மரியாதை
கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார்.
அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படுவார். அவர், "நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது
தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை'' என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), "துல்யதைன் சொல்வது சரிதானா?'' என்று கேட்க, மக்கள்
"ஆம் (சரிதான்)' என்று பதிலüத்தனர்.
உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது
சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் ("அல்லாஹு அக்பர்' என்று) சொல்லி "(வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது
போன்று' அல்லது "அதைவிட நெடிய (நேரம்)' சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித்
தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி "(வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப்
போன்று' அல்லது "அதைவிட நெடிய (நேரம்)' (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு
தக்பீர் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 482
"தொழுத இடத்தை விட்டும் நீங்காமல்'' என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள்
தொழுத இடத்தை விட்டுக் கிளம்பி பேரீச்சை மரத்தின் அருகே வந்து விடுகின்றார்கள்.
"முகத்தை கிப்லாவை விட்டும் திருப்பாமல்'' என்று மத்ஹபு நூல் அதிகமாக ஏற்றம் கொடுத்துச் சொல்கின்றது. நபி
(ஸல்) அவர்களோ கிப்லாவை விட்டும் திரும்பி பேரீச்சை மரக் கட்டையில் முகத்தை வைக்கின்றார்கள்.
"தொழுகையை முறிக்கும் செயல்களைச் செய்யாமல்'' என்று நிபந்தனை வைக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள்
கேள்வி கேட்டு அதற்குப் பதிலும் சொல்லி ஓர் உரையாடலே நடத்தி, அதன் பின்னர் தான் விடுபட்ட மீதமுள்ள தொழுகைகளைத் தொழுகின்றார்கள்.
பின்னர் மறதிக்கான ஸஜ்தாவும் செய்கின்றார்கள் என்பதை மேற்கண்ட புகாரி ஹதீஸிலும் முஸ்லிம்
896வது ஹதீஸிலும் பார்க்க முடிகின்றது.
இந்த நபிவழிக்கு நேர்மாற்றமான மேற்கண்ட மத்ஹபு நூலை ஆதாரமாகக்
காட்டி மார்க்கத் தீர்ப்பளிக்கின்றார் மனாருல் ஹுதாவின் மவ்லானா!
மக்ரூஹான மாநபியின் தொழுகை
ரமளானில் கடைசிப் பத்தில் தொழப்படும் கியாமுல் லைல் தொழுகை ஜமாஅத்துடன்
தொழ அனுமதியுள்ளதா?
இந்தக் கேள்விக்கு மவ்லானா அளித்துள்ள பதில் இதோ:
கியாமுல் லைல், தஹஜ்ஜுத் மற்றும்
நஃபிலான தொழுகைகள் அனைத்தும் ரமளானில் தொழுதாலும் ரமளான் அல்லாத காலங்களில் தொழுதாலும்
ஜமாஅத்துடன் தொழுவது ஹதீஸிலோ ஸஹாபாக்கள் வழிமுறையிலோ இல்லாத ஒன்று. எனவே ஹனபி மத்ஹப்
பிரகாரம் மேற்கூறிய தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதை முக்கியத்துவப்படுத்தி ஜமாஅத் வைப்பது
மக்ரூஹ் தஹ்ரீமாவாகும்.
மாறாக ஜமாஅத்திற்கான எந்த முன்னேற்பாடுமின்றி திடீரென இருவர்
ஒன்று சேர்ந்த போது ஜமாஅத் வைத்துக் கொண்டால் பரவாயில்லை.
(நூல்: அத்துர்ருல் முக்தார் 664)
ரமளானில் நின்று வணங்குதல் என்று ஹதீஸில் கூறப்படுவதன் நோக்கம்
தஹஜ்ஜுத் அல்ல. அது தராவீஹ் தொழுகையையே குறிக்கும். எனவே அதை மட்டும் ஜமாஅத்துடன் தொழுவது
சுன்னத் ஆகும்.
ஷம்சுல் அயிம்மா இமாம் ஸரக்ஸி (ரஹ்) அவர்கள் நஃபில் தொழுகை ஜமாஅத்தாகத்
தொழுவது விரும்பத்தக்கதாக இருந்திருப்பின் இரவில் நின்று வணங்கும் நல்லோர்கள் அதை முக்கியத்துவப்படுத்தி
தொழுதிருப்பர். ஆனால் ஸஹாபாக்கள், நல்லோர்கள், எவரும் ஜமாஅத்தாகத் தொழுததாக நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்கள்.
(நூல்: அல்மப்ஸுத் 2:144)
இதை வைத்து ஹனஃபி மத்ஹபின் படி ரமளான் இறுதிப் பத்தில் ஜமாஅத்துடன்
தொழப்படும் கியாமுல் லைல் தொழுகை மக்ரூஹ்ஆகும். அதைத் தவிர்ந்து கொண்டு தனியே ஜமாஅத்தின்றி
நாம் எவ்வளவு நஃபில்கள் தொழுதாலும் அது சிறப்பிக்குரியதாகும்.
(ஷாஃபிஈ: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது சுன்னத்துமல்ல, மக்ரூஹும் அல்ல! ஆகுமானது.)
இந்தப் பதிலில் மூன்று அபத்தங்களைப் பார்க்கிறோம்.
1. கியாமுல் லைல், தஹஜ்ஜத் மற்றும்
நஃபிலான தொழுகைகளை நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ
ஜமாஅத்தாகத் தொழவில்லை.
2. தஹஜ்ஜத்தும் தராவீஹும் தனித்தனி தொழுகைகள்
3. கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மக்ரூஹ் ஆகும்.
மவ்லானாவின் இந்தப் பதிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கியாமுல் லைல், தஹஜ்ஜத் மற்றும்
நஃபிலான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையல்லாத ஒன்று என்று
துர்ருல் முக்தார் கூறுகின்றது.
ஒரு மத்ஹபின் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான பக்தி, சரியான மார்க்கத்தைப் பார்ப்பதை விட்டும், அதைப் பின்பற்றுவதை விட்டும் எப்படித் தடுக்கின்றது என்று பாருங்கள்.
இவர்கள் சொல்வது போன்று நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு வழிமுறை
இல்லையா? நிச்சயமாக இருக்கின்றது. அதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.
மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு
கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். "சிறுவன்
தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள்.
நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள்.
அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப்
புறப்பட்டார்கள்.
நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859,
992, 1198, 4570, 4571, 4572, 5919
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ்
(ரலி) தனியாகத் தொழாமல் நபியவர்களுடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில்
இல்லாதது என்றால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள்.
அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும்.
விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபி (ஸல்) அவர்கள் தொழுத
போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது
மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து
விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு
நபி (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று
அஞ்சினேன்''
என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 729, 924, 1129
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு)
வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும்
மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து
நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர்.
மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபி (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள்.
அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள
முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் வராமல்)
பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப்
போற்றி புகழ்ந்து விட்டு, "நீங்கள் இருந்தது எனக்குத்
தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி
விடுவீர்களோ என்று அஞ்சினேன்'' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே
நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2012
இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக
நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள்
என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால்
மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபி (ஸல்) அவர்கள் பின்னர்
அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத்
தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு
விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ
நபி (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக்
கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி
விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால்
எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 3316, 6295
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபி (ஸல்) அவர்கள்
கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும்
நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட
தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று
நபி (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால்
வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை
ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில்
உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.
இது போல் தான் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத்
தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன்
இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை
நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.
எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபி (ஸல்) அவர்கள் வழியாகத்
தான் இறைவன் கடமையாக்குவான். நபி (ஸல்) இறுதி
நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.
நபி (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள்
எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை ஒருபோதும் கடமையாகப் போவதில்லை. நபி (ஸல்)
அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப்
பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே
சரியான கருத்தாகும்.
நபி (ஸல்) அவர்களின் வழிமுறை தெளிவாக ஹதீஸ்களில் விளக்கப்பட்டிருந்தும்
மத்ஹபின் மீது கொண்டுள்ள பக்தி தான் மாநபியின் இந்த வழிமுறையை அவர்களது கண்களை விட்டும்
மறைக்கின்றது என்பதை மேற்கண்ட மவ்லானாவின் பதிலிலிருந்து விளங்க முடிகின்றது.
அடுத்து, ஸஹாபாக்களின் நடைமுறையிலும்
இது இல்லை என்று துர்ருல் முக்தார் சாதிக்கின்றது. ஆனால் நபித்தோழர்களின் வழிமுறையில்
இதற்கு ஆதாரம் இருக்கின்றது. இதையும் இவர்களது மத்ஹபு வெறி மறைக்கின்றது.
ஸஹாபாக்களின் வழிமுறை என்றவுடன், இப்படி ஒரு வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் ஒப்புக் கொள்கின்றது என்று
விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கத்தின் ஆதாரங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று, அல்குர்ஆன்; மற்றொன்று
நபிவழி. இதைத் தாண்டி வேறு ஓர் ஆதாரம் மார்க்கத்தில் இல்லை என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின்
நிலைப்பாடு. ஸஹாபாக்களின் வழிமுறை என்று நாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த மத்ஹபுவாதிகள் இது பற்றிக் கூறும் பொய்யை அம்பலப்படுத்துவதற்காகத்
தான்.
ஸஹாபாக்களின் வழிமுறையில் இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழும்
வழக்கம் இல்லை என்ற இவர்களின் வாதத்திற்கு வருவோம்.
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின்
ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர்.
சிலரைப் பின் பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுதுகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி)
அவர்கள் "இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!'' என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு
உறுதியாக வந்து,
மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள்.
பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள்
இமாமைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "இந்தப்
புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்)
நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!'' என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுவந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்காரீ
நூல்: புகாரி 2010
இந்த ஹதீஸ் ஸஹாபாக்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதிருக்கின்றார்கள்
என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
"இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப்
பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!'' என்ற உமர் (ரலி) அவர்களின் கூற்று, பிந்திய இரவில் தொழுகின்ற தொழுகை தஹஜ்ஜத்தைத் தான் நபித்தோழர்கள்
முந்தைய இரவில் தொழுகின்றார்கள் என்பதையும் மிக விளக்கமாகத் தெரிவிக்கின்றது.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், நபித்தோழர்கள் ஜமாஅத்தில் தொழுதிருக்கின்றார்கள் என்பதற்கு இது
ஐயத்திற்கு இடமில்லாத ஆதாரமாகும்.
ஸஹாபாக்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாக இவர்கள் சொல்வது உண்மையானால்
இதையாவது இவர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் ஸஹாபாக்களையும் மிஞ்சி
அபூஹனீபாவின் பிரியம் இருப்பதால் இதையும் மறுக்கின்றார்கள்.
2. தராவீஹ், தஹஜ்ஜத் இரண்டும் தனித்தனி தொழுகைகள், இரண்டும் ஒன்றல்ல என்பது இவர்களின் இரண்டாவது வாதம். இதற்குரிய
விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள்
உள்ளதாக இவர்கள் நினைக்கின்றனர்.
தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர் தொழுவது தஹஜ்ஜுத் தொழுகை, தூங்குவதற்கு முன் தொழுவது தராவீஹ் தொழுகை என்று எவ்வித ஆதாரமும்
இன்றி நம்புவது தான் குழப்பத்திற்கு முக்கியக் காரணம்.
ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபி (ஸல்) அவர்களுடன்
இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில்
இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று
நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588
ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக்
காட்டிய ஹதீஸ் ஒன்றே இவர்களின் நம்பிக்கை தவறு என்பதற்குப் போதுமான சான்று.
இரவுத் தொழுகையை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத்
தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு
இது சான்றாக அமைந்துள்ளது.
எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா
(ரலி) அவர்கள் வீட்டில், நபி (ஸல்) அவர்களின் இரவுத்
தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபி
(ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள்.
இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள்
உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள்.
பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்)
தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ்
தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து
தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது முடிப்பதற்கும் சுபுஹ்
தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கும் சரியாக இருந்தது என்பதையும் இரவின் கடைசி நேரத்தில்
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின்
கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் இரண்டும் ஒன்று தான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
3. கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மக்ரூஹ் என்ற இவர்களின்
அடுத்த வாதத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக
இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்கüன் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்கüல் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால்
நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இரண்டாம் நாüல் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப்போதும்
சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது
மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு
தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்கüடம்) பேசியபோது, "இரவுத்
தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 729, 924, 1129, 2012
நபி (ஸல்) அவர்கள் நான்காவது இரவில் தொழுகைக்கு வரவில்லை என்றாலும்
தொழுவதற்கு அனுமதித்திருக்கின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து மக்கள்
சிறு சிறு குழுக்களாகத் தொழுது கொண்டிருந்தார்கள் என்பதை உமர் (ரலி) அவர்களின் புகாரி
2010வது ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த கியாமுல் லைல் ரமளானில் முழுவதுமோ, அல்லது முற்பகுதியிலோ, அல்லது நடுப்பகுதியிலோ, அல்லது இறுதிப் பகுதியிலோ தொழலாம். இதை யாரும் தடுக்க முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த இரவுத் தொழுகையைத்
தான் துர்ருல் முக்தார் நூல், மக்ரூஹ் தஹ்ரீமா என்று சொல்கின்றது.
இதை மனாருல் ஹுதாவின் மவ்லானாவும் ஒப்புவித்து, மக்ரூஹ் - வெறுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த கியாமுல் லைல் இறைச் செய்தியின் அடிப்படையில் அமைந்ததாகும்.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும்
செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:3, 4
அல்லாஹ்வின் வஹ்யீயை இவர்கள் வெறுக்கின்றார்கள் என்றால் இவர்களின்
நிலையைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில்
அதிகமானோர் உண்மையை வெறுப்பவர்கள்.
அல்குர்ஆன் 43:78
தமது தூதரைப் பற்றி அவர்கள் அறியாமல் இருந்து அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா? அல்லது அவருக்குப் பைத்தியம் உள்ளது எனக் கூறுகிறார்களா? மாறாக அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தார். அவர்களில் பெரும்பாலோர்
உண்மையை வெறுப்போராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 23:69, 70
இத்தகைய நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
EGATHUVAM APR 2013