ஒலிம்பிக் கூத்துக்களும் ஒரிசா அவலமும்
மரணித்துப் போன மனிதநேயம்
இந்தப் படத்தைப் பாருங்கள்! திரைப்படத்தில் கதாநாயகியை கதாநாயகன்
செந்தூக்காகத் தூக்கி, செந்தூரமே! சந்தனமே! தேனே! தெள்ளமுதே
என்று தித்திக்கும் பாட்டுப் பாடி ஆடுகின்ற காதல் படக் காட்சியல்ல!
கப்பல் கவிழ்ந்து கடலின் கரையில் ஒதுங்கிய சிரிய அகதிச் சிறுவன் ஆயிலான் குர்தியின் உடல், உலக மக்களின் உள்ளங்களை நொறுக்கி எடுத்தது போன்று மறுபடியும்
மக்களின் உள்ளங்களை நொறுக்கி எடுத்த ஒரு கொடிய சோக நிகழ்ச்சியாகும். அது என்ன?
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் ஏற்படும்போது, சடலத்தை இலவச வாகனங்களில் எடுத்துச் செல்லும் சட்டம் ஒடிசாவில்
அமலில் உள்ளது. இந்த நிலையில் காளஹன்டி மாவட்டம், மெல்கரா
என்ற கிராமத்தைச் சேர்ந்த தானாமாஜி என்பவரின் மனைவி காசநோய் காரணமாக மாவட்ட மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை
60 கிலோ மீட்டரில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல எந்த உதவியும்
மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை.
இதையடுத்து பழங்குடி இனத்தைச் சார்ந்த அவர் தனது மனைவியின் சடலத்தைப்
போர்வையில் சுற்றி, தனது தோளில் சுமந்து செல்கின்ற
காட்சி தான் இது! அவருடன் 12 வயது மகளும் நடந்து செல்கிறார்.
கொஞ்ச நஞ்ச தூரமில்லை. 12 கிலோ மீட்டர் தூரம் வரை அழுகின்ற
கண்களுடன் அருகில் அந்தச் சிறுமி நடந்து சென்ற காட்சி பத்திரிக்கையாளர்களைப் பாதிக்கச் செய்தது.
அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத் தொடர்பு கொண்ட பிறகு தான் அமரர் ஊர்தி அனுப்பப்பட்டு
மீதி 48 கிலோ மீட்டர் தூரம் அவர்களால் கடக்க முடிந்தது.
தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தானாமாஜி, “மருத்துவமனை அலுவலர்கள் வாகனங்கள் இல்லையென தெரிவித்துவிட்டனர்.
நான் மிகவும் ஏழை, மனைவியின் உடலை எடுத்துச் செல்ல
வாகன வசதி ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்குப் பணம் இல்லை எனக் கூறினேன். நான் பலமுறை
அழுதும், அவர்கள் மனம் இரங்கி எனக்கு உதவ முன்வரவில்லை” என்றார்.
இந்த வீடியோ பதிவுகளைப் பார்க்கின்ற போது பார்ப்போர் விழிகள்
நீர் வீழ்ச்சிகளாகின்றன. ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சி மட்டும் குருடாகிப் போய்
விட்டது; குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கின்றது. இது கொடுமையிலும்
கொடுமையாகும். மாட்டுக்காக மனித உயிரைக் கொல்லும் புனித நாடல்லவா நமது நாடு?
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு அரசாங்கங்கள், கம்பெனிகள், தனி நபர்கள்
மூலம் கோடானுகோடி பணத்தைக் கொண்டு போய்க் கொட்டுகின்ற
புண்ணிய நாடல்லவா நமது நாடு?
மல்யுத்த வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கோடிக்கணக்கில்
பணத்தைக் கொட்டி அழுகின்ற நாடல்லவா நமது நாடு? இதோ ஒலிம்பிக்கில்
வெற்றி பெற்ற இந்த வீராங்கனைகளுக்கு அரசாங்கங்கள், அமைப்புகள், தனி நபர்கள் கொட்டி அழுத கோடிக்கணக்கான பொருளாதார பரிமாணத்தையும்
பிரமாண்டத்தையும் பாருங்கள்:
ரியோ ஒலிம்பிக்கில் முதன் முதலில் பேட்மிண்டன் விளையாட்டில்
வெள்ளிப் பதக்கம் வென்ற ஹைதரபாத்தைச் சார்ந்த பி.வி சிந்துக்கு இந்தியாவில் பண மழை
பொழிகின்றது. இதுவரைக்கும் கொட்டிய பணமழைப் பட்டியல்:
1) தெலுங்கானா அரசாங்கத்தின் சார்பாக 5 கோடி ரூபாய். ஆயிரம் சதுர அடியில் நகரத்தில் வீட்டு மனை, அரசாங்க வேலை.
2) ஆந்திர மாநிலத்தில் 3 கோடி ரூபாய், புதிய தலைநகரமாகிய அமராவதியில் ஆயிரம் சதுர அடியில் ஒரு வீட்டு மனை.
3) டெல்லி அரசாங்கம் சார்பில் 2 கோடி
ரூபாய்.
4) பேட்மிண்டன் அசோசியேஷன் ஆஃப் இண்டியா, விளையாட்டு அமைச்சகம், ஹர்யானா, மத்திய பிரதேச அரசாங்கங்கள் சார்பில் தலா 50 லட்சம்.
5) பாரத் பெட்ரோல் கார்பரேஷன் சார்பில் 75 லட்சம்.
6) கேரளத்தைச் சார்ந்த வியாபாரி ஐக்கிய அமீரகம் வாழ் முக்கட்டு
செபாஷ்டியன் அளித்திருக்கும் 50 லட்சம்.
7) இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 30 லட்சம் ரூபாய்.
8) ஆல் இண்டியா ஃபுட் பால் ஃபெட்ரேஷன் சார்பில் 5 லட்சம்.
9) சினிமா நடிகர் சார்பில் 1.01 லட்சம்.
10) ழிகிசி ஜுவல்லர்ஸ் சார்பில் 6 லட்சம்
பெறுமான வைர நெக்லெஸ்.
11) ஹைதராபாத் பேட்மிண்டன் அசோசியேஷன் தலைவர் க்ஷி. சமுந்தேஸ்வரநாத்
சார்பில் ஙிவிகீ கார்.
இது போன்று மல்யுத்த வீராங்கனை ஷாக்ஸி மாலிக்கிற்கு ஹரியானா
அரசாங்கம் 2.5 கோடி ரூபாய் அளித்திருக்கின்றது.
மறைக்க வேண்டிய அங்க அவயங்களை அடுத்தவர்களிடம் வெளிச்சம் போட்டு விருந்து படைக்கும் இந்த வெட்கங்கெட்டவர்களுக்கு மக்களின் வரிப் பணம் எப்படி வாரியிறைக்கப்படுகின்றது
என்று பாருங்கள்!
ஆனால் பாவம், பாதிக்கப்பட்ட
பழங்குடி இனத்தவன், இறந்து போன தன் மனைவியைக் கண்ட
இடத்தில் வீசி விட்டுப் போகாமல் அவளது பிணத்தை பன்னிரெண்டு கிலோ மீட்டர் தூரம் தோளிலேயே
சுமந்து கொண்டு செல்கின்றான். மனைவியைக் காக்கின்ற வகையில் மனித நேயம் காக்கின்றான்.
மானம் காத்திருக்கின்றான்.
மனைவி இறந்த சோகம்...
அவளைத் தன் வீட்டிற்குக் கொண்டு செல்ல பொருளாதாரம் இல்லாத சோகம்...
அவளை 12 கிலோ மீட்டர் தோளில் சுமந்து
சென்றது ஒரு சோகம்...
அருகிலேயே மகள் அழுது கொண்டு உடன் நடந்து வருவது ஒரு சோகம்...
எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக்கூடாத சோக நிகழ்வு இந்தப் பழங்குடி
இனத்தவரின் வாழ்வில் அரங்கேறியுள்ளது.
ஒரு பொருளின் தாங்க முடியாத கனத்திற்கு, பிணம் போல் கனக்கின்றது என்று உவமானம் சொல்வார்கள். அப்படிப்பட்ட
கனமான பிணத்தைத் தான் இந்தப் பழங்குடி இனத்தான் சுமந்து செல்கின்றான்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? எல்லோருமே
வேடிக்கை தான் பார்க்கின்றார்கள். எவனுமே அவனுக்கு உதவி புரிய முன் வரவில்லை. அவள்
உயிருடன் இருந்தாலே அவள் தீண்டத்தகாதவள் என்று அவள் அருகில் கூட நெருங்க மாட்டார்கள்.
இப்போது தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பெண் செத்த பிணமாக ஆகி விட்டாள். அவர்களது பாஷையில்
சொல்லப் போனால் ஆவியாகி விட்டாள்; பேயாகி விட்டாள்; பிசாசாகி விட்டாள். அவளை அண்டுவார்களா? அணுகுவார்களா? ஒரு போதும்
மாட்டார்கள்.
வழிநெடுகிலும் வேடிக்கை பார்த்த மக்கள் அவனுக்கு உதவாமல் போனதற்குக்
காரணம், அவனது ஜாதி தான் என்று சொல்கின்றனர். இவனுக்கு உதவினால் நம்மைக்
கேவலமாக நினைப்பார்களே என்ற எண்ணம் தான் அவர்கள் உதவுவதை விட்டும் தடுத்து விட்டது
என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிலும் நமது நாட்டில் சுவாதியைப் போன்று யாரேனும் கொலை செய்யப்பட்டால், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்கள். அதை வீடியோ படமெடுப்பார்கள்.
அந்த அவலம் தான் இங்கும் நடந்துள்ளது.
சடலத்தைத் தூக்கிச் சொல்கின்ற அவலத்தைப் பார்த்த அரசாங்கம் மனமிறங்கவில்லை.
அது மயானமாகவே கிடக்கின்றது. இந்தப் பழங்குடி
இனத்தவனின் குடும்பப் பாடு என்னவென்று பார்க்கவில்லை. அவனுக்குத் தனியார் நிறுவனங்களும், சல்மான்கான்களும், சச்சின் தெண்டுல்கர்களும்
உதவ முன் வரவில்லை.
இது தொடர்பாக முகநூலில் வந்த வீடியோ பதிவுகளை பஹ்ரைன் பிரதமர்
கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா பார்க்கின்றார். அவரது பரந்த பார்வையில் இந்தப் பழங்குடியான்
இடம் பிடிக்கின்றான். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல் தாழ்த்தப்பட்ட அந்தச்
சகோதரருக்கு சிறந்த முறையில் ஒன்பது லட்சம் ரூபாய் வழங்கியிருக்கின்றார்.
அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது
(பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும்
செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
அல்லாஹ்வின் தூதரைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தப் பண்பைப்
பின்பற்றி பஹ்ரைன் பிரதமர் இந்த உதவியைச் செய்திருக்கிறார். பழங்குடி இனச் சகோதரனின்
பாரத்தை இறக்கி வைத்திருக்கிறார்.
இவன் முஸ்லிம் அல்லவே! இந்து மதத்தவனாயிற்றே! அதிலும் தாழ்த்தப்பட்டவனாயிற்றே
என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று அவர் ஏற்றுள்ள
இஸ்லாம் மார்க்கத்தின் போதனையே இதற்குக் காரணம்.
இந்த மானங்கெட்ட மத்திய, மாநில அரசாங்கங்களோ, தனியார் நிறுவனங்களோ ஒலிம்பிக் என்ற ஆடம்பரத்தையும் ஆரவாரத்தையும், பகட்டையும் படோடாபத்தையும் பார்த்தார்கள்.
இங்கு பாதிக்கப்பட்டுள்ள இவன் இந்து மதத்தில் ஓர் அங்கம் என்று
பார்க்கவில்லை. அவனது சாதியின் இழிவைத்தான் பார்த்துள்ளனர்.
ஆனால் பஹ்ரைன் பிரதமரோ பாதிக்கப் பட்டவனையும், பரிதாபகரமான அவனது வாழ்க்கையையும் பார்த்து உதவியிருக்கின்றார். இந்தியாவில் மரணித்துப் போன மனித நேயத்தை அவர் உயிர்ப்பித்திருக்கின்றார்.
இதன் மூலம் பழங்குடி இனத்தவனை சரியான முறையில் பார்க்கத் தவறி
விட்டதற்குப் பாடம் படித்துக் கொடுத்திருக்கின்றார். பாடம் படிக்குமா இந்த மாட்டு நேய
இந்தியா?
EGATHUVAM OCT 2016