மறக்க முடியாத மார்க்கத் தீர்ப்புகள்
1984-85 ஆண்டுகளில் துபையில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய எழுச்சி மையம்
என்ற அமைப்பு,
தமிழகத்தில் உள்ள அனைத்து அரபிக் கல்லூரிகளுக்கும் மத்ஹபு, மவ்லீது, தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, கொடியேற்றம், வஸீலா, முஹ்யித்தீன் திக்ர் போன்ற விவகாரங்கள்
குறித்து மார்க்கத் தீர்ப்பு கேட்டுக் கடிதம் எழுதியிருந்தனர்.
சங்கரன்பந்தல் ஃபைலுல் உலூம் அரபிக்கல்லூரி அந்தக் கேள்விகளுக்கு
விருப்பு வெறுப்பின்றி, பயம், பயன் ஏதுமின்றி அல்லாஹ்வைப் பயந்து மார்க்க தீர்ப்பு அளித்தது.
அவ்வாறு தீர்ப்பு அளித்தவர்கள் அரபு நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
பயின்று பட்டம் பெற்றவர்கள் அல்லர். தமிழக மதரஸாக்களில் தாயத்து, தட்டு எழுதியவர்களிடம் பட்டம் பயின்றவர்கள் தான். பி. ஜைனுல்
ஆபிதீன் உலவி,
எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி, முஹம்மது
யூசுப் மிஸ்பாஹி, அப்துல் ஜப்பார் மிஸ்பாஹி ஆகியோர்
அப்போது ஆசிரியர்களாக இருக்கும் போது கையொப்பமிட்டு அளித்த தீர்ப்பு தான் இது.
இதில் மூன்றாமவரான முஹம்மது யூசுப் மிஸ்பாஹி தடம் மாறி(ய) ஜாக்கில்
உள்ளதாகத் தெரிகின்றது. நான்காமவர் என்ன கொள்கையில் உள்ளார் என்று தெரியவில்லை. மீதி
இருவர் உங்களுக்கு தெரியும். இந்த மார்க்கத் தீர்ப்புகளை ஆவணமாக்கும் நோக்கில் இவற்றை
ஏகத்துவத்தில் வெளியிடுகின்றோம்.
சில பலவீனமான ஹதீஸ்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆரம்ப கட்டத்தில்
ஹதீஸ்களை மட்டும் தெரிந்த காலம். ஹதீஸ் துறையின் நுழைவாயிலில் இருந்த தருணம் அது. அதனால்
இந்த ஃபத்வாக்களில் சில பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இப்போது அடையாளம்
காட்டியுள்ளோம்.
அன்று சொன்ன அதே கொள்கையில் மரணிக்கும் வரையில் எங்களை அல்லாஹ்
ஆக்கி வைப்பானாக என்று மனமுருகப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
கேள்வி: இக்காலத்தில் ஹனஃபீ, ஷாபி, மாலிகி, ஹன்பலி ஆகிய நான்கு மத்ஹபுகளில்
ஒன்றைப் பின்பற்றுவது அவசியமா?
புதில்: நான்கு மத்ஹபுகளில்
ஒன்றைப் பின்பற்றுவது அவசியமா? என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னால்
மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது கூடுமா என்பதையும், கூடும் என்றால் எந்த அடிப்படையில், எந்த விதிகளுக்குட்பட்டு அது கூடும் என்ற முடிவுக்கு வந்தாக
வேண்டும். பின்பற்றப்படத்தக்கவை எவை என்பதை பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்று
நாம் பார்ப்போம்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்.
அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை
பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன் 7:3)
உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.
(அல்குர்ஆன் 29:51)
மேற்கூறிய இருவசனங்களில் திருக்குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும்
என்று அல்லாஹுத்தஆலா வலியுறுத்திக் கூறுகிறான். எனினும் மேலும் சில வசனங்களை நாம் ஆராயும்
போது அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் பின்பற்றி ஆக வேண்டும் என்பதையும் அல்லாஹ்
கூறுகிறான். அவற்றை கீழே காண்போம்.
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே
பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி
தமது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
(அல்குர்ஆன் 28:50)
அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும்
செய்தியைத் தவிரவேறில்லை.
(அல்குர்ஆன் 53:3, 4)
அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை
(முஹம்மதை) நோக்கியும் வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை
ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.
(அல்குர்ஆன் 4:61)
அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை
நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ
அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
(அல்குர்ஆன் 5:104)
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்.
எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 59:7)
அல்லாஹ்வும், அவனது தூதரும்
ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
(அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்; அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற மேற்கண்ட வசனங்களிலிருந்து, அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும்
மட்டுமே கட்டுப்பட வேண்டும். வேறு எவருக்கும் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை என்பதை
இறைவன் தெளிவாக்குகிறான். இதற்கு மாறாக வேறு எவராவது, தங்கள் சொந்த சட்டங்களைத் திணிக்க அதிகாரம் படைத்தவர்கள் என்று
கருதினால் அவர்கள் (அவ்வாறு கருதுபவர்கள்) அந்த சட்டத்தைத் திணிப்போரை ரப்பாக ஆக்கிக்
கொண்டார்கள் என்பது தான் அல்லாஹ்வின் கருத்து என்பதை கீழ்க்காணும் வசனத்திலிருந்து
புரிந்து கொள்ளலாம்.
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன்
மஸீஹையும் கடவுள்களாக்கினர்.
(அல்குர்ஆன் 9:31)
இந்த வசனம் இறங்கியவேளை அதீ இப்னு ஹாதம் என்ற நபித்தோழர் ஒருவர்
நாங்கள் அவர்களை வணங்கியதில்லையே! (எப்போது அவர்களை நாங்;கள் கடவுள்களாகக் கருதினோம்) என்று கேட்டபோது அவர்கள் (மதகுருமார்கள்)
அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராம் என்று சொன்ன போதும், அல்லாஹ்
ஹராமாக்கியதை ஹலால் என்று சொன்ன போதும் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் அல்லவா? அது நீங்கள் வணங்கியதற்கு நிகராகும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரானா "குதைஃப் இப்னு அஃயன் என்பார் பலவீனமானவர் ஆவார். )
மேலும் இதுபற்றி வந்துள்ள முஹம்மது (ஸல்) அவர்களின் அருளுரைகளைக்
காண்போம்:
அல்லாஹ்வுடைய வேதம், எனது வழிமுறை
இரண்டையும் உங்களிடம் நான் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை நீங்கள்
வழிதவற மாட்டீர்கள்.
(குறிப்பு: மேற்கண்ட வாசகத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் ஹதீஸ்கள்
அறிவிப்பாளர் தொடர் ரீதியாக பலவீனமானதாகும் என்றாலும் குர்ஆன், ஹதீஸ் மட்டும்
தான் மார்க்கம் என்பதை உறுதிப்படுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஸஹீஹான ஹதீஸ்களும் உள்ளன.)
நமது அனுமதி இல்லாத எந்தவொரு அமலையும் யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்.
(புகாரி 7349)
ஒரு புதியதொரு காரியத்தை யாரேனும் உருவாக்கினாலோஅல்லது அதற்கு
ஆதரவு அளித்தாலோ அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்கள்
அத்தனை பேர்களின் சாபமும் அவன் மீது ஏற்படும்.
(புகாரி 1867)
மேற்கூறிய சான்றுகளிலிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சட்டுமே சட்டமியற்றுவதற்கான உரிமையும், அதிகாரமும் படைத்தவர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிய முடிகிறது.
எனினும் நபி (ஸல்) அவர்கள், எனது
வழிமுறையையும்,
நேர்வழியில் சென்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப் பிடித்துக்
கொள்ளுங்கள்
நூற்கள்: இப்னுமாஜா (42), திர்மதி
(2600), அபூதாவூத் (3991)
"இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது
உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிளவுபடுவர். ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள்
நரகில் நுழைவார்கள்'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறிய போது,
"அந்த ஒரு பிரிவினர் யார்? அல்லாஹ்வின் தூதரே'' என்று சஹாபாக்கள்
கேட்க, "இன்றைய தினம் நானும், எனது தோழர்களும்
எந்தக் கொள்கையின் மீது இருக்கின்றோமோ அந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே அவர்கள்'' என முஹம்மது (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
இதிலிருந்து கலீபாக்கள் காலத்தில் சஹாபாக்களால் செய்யப்பட்ட
ஏகோபித்த முடிவையும் பின்பற்றலாம் என்று தெளிவாகிறது. இதனை இஜ்மா என்று கூறுவர். ஆனால்
இந்த சஹாபாக்களின் முடிவு குர்ஆனுக்கும், ஹதீசுக்கும்
முரணாக இருப்பது தெரிய வந்தால் அப்போது குர்ஆன் ஹதீஸின் முடிவே முதலிடம் பெறவேண்டும்.
(குறிப்பு : ஆரம்ப காலத்தில் நமது ஆய்வுக் குறைவின் காரணமாக இஜ்மா
என்பது ஒரு ஆதாரம் என்று நாம் கருதி இருந்தோம். அது தவறு என்று தெரிந்த பின் அதை மக்கள்
மத்தியில் தெளிவுபடுத்தி பகிரங்கமாக விவாதத்திலும் நிரூபித்து விட்டோம்.
யூத, கிறித்தவர்கள் எழுபத்தியிரண்டு
பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிளவுபடுபடுவர்
என்ற வாசகத்தைக் கொண்டு மட்டும் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் சரியானவையாக உள்ளன.
மேலும் யூத, "கிறித்தவர்கள்
எழுபத்தியிரண்டு பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று
பிரிவுகளாக பிளவுபடுபடுவர். அதில் எழுபத்தியிரண்டு பிரிவினர் நரகம் செல்வர். ஒருபிரிவைத்
தவிர. அதுதான் "அல்ஜமாஅத்' ஆகும்''
(அபூதாவூத் 3981)
இது தவிர விளக்கமாக ஏனைய வாசகங்களில் வரும் அனைத்து அறிவிப்புகளும்
பலவீனமானவையாகவே உள்ளன)
அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.
உங்களில் அதிகாரம் வகிப்போருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில்
கருத்து வேறுபாடு கொண்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அதனை ஒப்படைத்துவிடுங்கள்.
அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நீங்கள் நம்புவோர்களாக இருந்தால் இதுவே சிறந்ததும், அழகிய முடிவுமாகும்.
(அல்குர்ஆன் 4:59)
மேலும் முஆது இப்னு ஜபல் அவர்களை யமன் நாட்டிற்குப் பொறுப்பாளராக
முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து
அவருக்கு ஆதாரம் கிடைக்காத போது சிந்தித்து முடிவெடுக்க அனுமதியளித்ததிலிருந்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமையும் உண்டு
என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
(நூல்: திர்மிதி, அபுதாவூத், தாரமி, மிஷ்காத் 324)
(குறிப்பு: இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில்
"ஹாரிஸ் பின் அம்ர்' என்பார் இடம் பெறுகிறார். இவர்
பலவீனமானவர் ஆவார். மேலும் இவருடைய ஆசிரியரும் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.)
மேற்கூறிய வினாவில் குறிப்பிடப்பட்ட மத்ஹபுகளின் இமாம்களும்
கூட குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவே
கூறியுள்ளனர்.
ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்து மத்ஹபுக்கு மாற்றமாக இருந்தாலும்
ஹதீஸ் அடிப்படையிலேயே ஒருவன் செயல்பட வேண்டும். அதுவே (அந்த ஹதீஸே) அவனது நடைமுறையாக
அமையவேண்டும். இவ்வாறு செய்துவிட்ட காரணத்தினால் அவன் ஹனஃபீ என்ற பெயரை விட்டும் நீங்கிவிடமாட்டான்.
ஏனெனில் ஹனஃபீ மத்ஹபின் இமாம் அவர்களே, ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமையும் போது அதுவே எனது மத்ஹபாகும்
என்று கூறியுள்ளார்கள். (அவர்கள் மட்டுமல்ல) ஏனைய மூன்று இமாம்களும் இதனையே கூறியுள்ளனர்
என்று இமாம் அப்துல்பர்ரு, இமாம் ஷஃரானி ஆகிய இருவரும்
எடுத்தியம்புகின்றனர்.
(ஆதாரம்: ரத்துல் முஹ்தார் பாகம்: 1, பக்கம்:4)
மத்ஹபைப் பின்பற்றுவோர் ஆதாரங்களைத் தாங்களே ஆராயமுற்பட்டு அதன்படி
செயல்படும்போது அந்த மத்ஹபோடு அவன் கண்ட ஆதாரத்தையும் சேர்க்கலாம். ஏனெனில் மத்ஹபின்
இமாமே அவ்வாறுதான் கூறியுள்ளார். மேலும் அந்த இமாமுக்கு தனது ஆதாரத்தின் பலவீனம் தெரிந்திருந்தால்
அந்த பலவீனமான ஆதாரத்திலிருந்து விலகி, பலமான ஆதாரத்தையே
பின்பற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை.
(ரத்துல் முஹ்தார்)
இதிலிருந்து மத்ஹபுக்கு மாற்றமாக ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸை நாம்
காணும் போது அந்த இமாமுக்கு இந்த ஹதீஸ் கிடைக்காமல் இருந்திருக்கும். கிடைத்திருந்தால்
அவர்களும் இந்த ஹதீஸின் படியே சட்டம் வகுத்திருப்பார்கள் என்று கருதுவது தான் உண்மையில்
இமாம்களுக்கு அளிக்கப்படும் கண்ணியமாகும். அவ்வாறு சொல்ல நாம் தயங்கினால் ஆதாரப்பூர்வமான
ஹதீசுக்கு மாற்றமாக அந்த இமாம் நடந்துவிட்டார் என்ற பழியை அவர் மீது நம்மை அறியாமலேயே
நாம் சுமத்தி விடுகிறோம்.
EGATHUVAM APR 2014