May 3, 2017

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா?

கேள்வி?  

ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமா தெரியாதவர்கள் முஸ்லிமே இல்லை என்ற அளவுக்குக் கூறுகிறார்களே! விளக்கவும்.

அப்துல் அலீம்

பதில் !

ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும்.

ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. ஒரு நபித்தோழர் கூட அதைச் சொல்லவும் இல்லை. அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.

நான்கு மற்றும் ஐந்தாவது கலிமாக்களை எவனோ ஒருவன் சுயமாகக் கற்பனை செய்து அதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று என நம்பச் செய்துள்ளான் என்றால் இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரத்துல் குஃப்ர் என்ற பெயரில் இவர்கள் கற்பனை செய்த அந்தக் கலிமா இது தான்:

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅன்வ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரஃத்து மினல்குஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.

கலிமா தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் ஆதாரமில்லாமல் கற்பனை செய்த நன்காம் கலிமா இது தான்:

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.

மேற்கண்ட கலிமாவின் வாசகங்கள் சில ஹதீஸ்களில் வந்துள்ளது என்றாலும் அந்த ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரின் வழியாக வரவில்லை. மேலும் பலவீனமான அந்த ஹதீஸ்களும் ஈமானின் கடமை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை.

மூன்றாம் கலிமா என்ற பெயரில் இவர்கள் கடமையாக்கியுள்ள சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்துள்ளனர். ஆனால் ஈமானுக்கு ஐந்து கடமைகள் உள்ளதாகவும் அதில் இது மூன்றாவது கலிமா என்றும் அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் இதுவும் ஒரு துஆ என்ற அடிப்படையில் இதைக் கற்றுத் தந்துள்ளனர்.

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கு அவர்கள் துஆக்கள் கற்றுத் தந்தனர். இந்த துஆ தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தால் ஓத வேண்டிய துஆ என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு "லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்)'' என்று கூறிவிட்டு, "அல்லாஹும்மஃக்பிர்லீ'' (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.
  

நூல்கள்: புகாரி 1154, இப்னு மாஜா 3868

முதல் கலிமா என்றும் இரண்டாம் கலிமா என்றும் இவர்கள் கூறுவது ஒரே கலிமா தான்.

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பது முதல் கலிமாவாம்.

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்பது இரண்டாம் கலிமாவாம்.

இரண்டும் ஒரே கலிமா தான். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராகவும் ஒப்புக் கொள்வதை இது குறிக்கிறது.

ஒன்றில் சில வார்த்தைகள் கூடுதலாக இடம் பெற்ற போதும் இரண்டில் எதைச் சொன்னாலும் ஒருவர் முஸ்லிமாக ஆகிவிடுவார்.

எனவே ஐந்து கலிமாக்கள் என்பது மார்க்கத்தில் உள்ள விஷயங்களும் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களும் கலந்த கலவையாக உள்ளது. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.

EGATHUVAM MAR 2012