May 4, 2017

கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள்

கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள்

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59

அன்றைய அறியாமைக் காலத்தின் அவல நிலையை இந்த வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைக்கின்ற கோர, கொடூரச் செயல் அன்றைய அரபிகளிடம் குடிகொண்டிருந்தது. இஸ்லாம் அதைத் தகர்த்தெறிந்து, பெண்களுக்கு வாழ்வுரிமை மட்டுமல்ல, வாரிசுரிமையையும் சேர்த்து வழங்கி பெண்ணினத்திற்கு மரியாதையையும் மகிமையையும் சேர்த்தது.

ஆனால் இந்தியாவில் இன்றும் இந்தக் கொடுமை தொடர்கின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களிடம் இந்த அவல நிலை தொடர்வது வேதனையும் வெட்கக்கேடும் ஆகும்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஊடகங்களில் ஒரு சோக செய்தி முதன்மை இடத்தைப் பிடித்தது. அது தலைப்புச் செய்தியுமானது.

அஃப்ரீன் என்ற மூன்று மாதப் பெண் குழந்தையை உமர் பாரூக் என்ற கொடியவன் சித்ரவதை செய்து கொன்ற செய்தி தான் அந்த சோகச் செய்தி!

உமர் பாரூக் என்பவன் வேறு யாருமல்ல. அந்தக் குழந்தையைப் பெற்ற தந்தை தான்.

குழந்தைக்கு அதிகாரப்பூர்வமாக உயிர் பிரிந்தது ஏப்ரல் 12ஆம் தேதி தான். ஆனால் அது பிறந்த நாளிலிருந்து இந்தப் பாவியின் கையால் அன்றாடம் அணு அணுவாகச் செத்தது. அவ்வப்போது உயிர் பிரிந்து, பிரிந்து திரும்ப வந்தது.

குழந்தையின் தொடை, பித்தட்டுப் பகுதிகளை இந்தக் கோர மனம் படைத்த மிருகம் கடித்துக் குதறியிருக்கின்றான். குழந்தையின் இளந்தளிர் மேனியில் பதிவான கோரப் பற்களின் காயத் தழும்புகள் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தின.

இவன் கைகளில் குழந்தை மட்டுமல்ல, தாயும் சேர்ந்து தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றாள்.

குழந்தையின் தாயும் உமர் பாரூக்கின் மனைவியுமான ரேஷ்மா பானு இதைத் தெரிவிக்கின்றார்.

குழந்தையின் தலைப்பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததை ஸ்கேன் தெளிவுபடுத்தியது. கண்களின் பார்வைப் பகுதிகளும் அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருந்தன.

வெண்டிலேட்டர் துணையுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து வைத்தியம் பார்த்தும் சிகிச்சை பலன் இல்லாமல், சிறகடித்துப் பறக்க வேண்டிய அந்தக் குழந்தையின் உயிர் சித்ரவதை தாங்காமல் சிறகடித்துப் பறந்தது.

அதுவரையில் முப்பதாயிரம் வரை செலவழித்து குழந்தை கையில் திரும்ப வராதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த தாய்க்கு இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது. குழந்தையின் இன்னுயிர் நிரந்தரமாகப் பிரிந்து போனது.

குழந்தையின் சாவுக்குக் காரணமான அந்தக் கொடியவனை, தனது கணவனைத் தூக்கிலிடுங்கள் என்று அந்தத் தாய் கதறி அழுதது அனைவரின் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்தது.

இப்படி இந்தக் காட்டுமிராண்டி, சின்னஞ்சிறிய மழலையை முளையிலேயே கொய்வதற்கும் கொல்வதற்கும் என்ன காரணம்? ஏதோ புத்தி சுவாதீனம் இல்லாமல் கொலை செய்தானா என்றால் காரணம் அதுவல்ல என்று மருத்துவர்கள் அடித்துச் சொல்கின்றனர். பின்னர் என்ன காரணம்?

பெண் குழந்தை வேண்டாம்; ஆண் குழந்தை தான் வேண்டும் என்பது தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று கொலையாளியே வாக்குமூலம் தந்திருக்கின்றான். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றான்.

இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போம். இதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. பெண் என்றால் இழவு, பெண் என்றால் செலவு என்று மக்கள் கருதுவது தான். இதை, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் பார்க்கலாம்.

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.

பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை தான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.

இவ்வாறு ஏப்ரல் 13, 2012 அன்று தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் வரதட்சணை தான். நாளை மறுமையில் விசாரிக்கப்படும் போது அந்தக் குழந்தை மட்டுமல்ல, கொல்லப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் இறைவனுக்கு முன்னால் இதை அணுவணுவாக எடுத்து வைக்கும். அப்போது வரதட்சணை திருமணத்திற்கு அல்ஃபாத்திஹா ஓதியவர்கள், வரதட்சணை திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள், அங்கு போய் விருந்து சாப்பிட்டவர்கள், பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் இந்தக் குழந்தைகளின் முறையீட்டுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெண் சிசுக் கொலைக்குக் காரணமான, பெண் வீட்டில் ஏற்றப்படும் பாரமான பெண் வீட்டு விருந்து உட்பட அனைத்தையும் புறக்கணிக்கச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தின் அக்கினிப் பிரச்சாரத்தின் மூலம் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றம், மறுமலர்ச்சி ஏற்பட்டு இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த இலட்சியத் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் ஏகத்துவம்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

அல்குர்ஆன் 14:24

இந்தத் தீமை தொடர்வதற்குக் காரணம் இணை வைப்பு தான்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.

அல்குர்ஆன் 6:137


பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்தப் பேதமை ஒழிய வேண்டுமென்றால் இணை வைப்பை விட்டு நீங்கி, ஏகத்துவத்தைப் பின்பற்றுவது ஒன்றே வழி! இதைத் தவிர வேறு வழியில்லை.

EGATHUVAM MAY 2012