May 14, 2017

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

ஹதீஸ்களை மறுத்த ஹதீஸ்கலை அறிஞர்கள்

எம். அப்பாஸ் அலீ

நபி (ஸல்) அவர்களைப் பற்றித் தெரிவிக்கும் செய்திகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் பெயரால் வரும் ஹதீஸ்களில் உண்மையில் அவர்கள் சொன்னவையும் இருக்கின்றன. அவர்கள் கூறாத செய்திகளும் அவர்களின் பெயரால் வந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகள் எவை? சொல்லாத செய்திகள் எவை? என்பதைக் கண்டறிவதற்காக அறிஞர்கள் ஹதீஸ் கலை என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தார்கள். இந்த விதிகளில்...

அறிவிப்பாளர் நம்பகமானவராக இருக்க வேண்டும்.

நினைவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டும்.

யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரை நேரடியாகச் சந்தித்திருக்க வேண்டும்.

மற்ற நம்பகமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடாது

என்ற விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலும் இவற்றை யாரும் மறுக்கமாட்டார்கள்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைய இந்த நிபந்தனைகளும் வேண்டும். இத்துடன் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றம் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருகின்றது. தங்களை ஸலபுகள், சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்பவர்களும் மத்ஹபுவாதிகளும் நாம் கூறும் இந்தக் கருத்தை மறுத்து வருகின்றனர். இந்த விதியின் அடிப்படையில் இதற்கு முன்பு யாரும் ஹதீஸ்களை மறுத்ததில்லை. தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே புதிதாக மறுக்கின்றது என்ற தவறான விமர்சனத்தைச் செய்கிறார்கள்.

உண்மையை மறுக்கும் இவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதற்காக அறிஞர்கள் சிலரது கூற்றுக்களை இங்கே குறிப்பிடுகிறோம். இந்த அறிஞர்கள், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைவதுடன் அதன் கருத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமான ஆட்கள் அறிவித்தால் அதில் தவறே வராது என்று மனித இயல்புக்கு மாற்றமாகச் சிந்திக்கும் இவர்களுக்கு இந்த அறிஞர்கள் மரண அடி தரும் வகையில் நாம் கூறும் விதியை தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

நம்பகமானவரின் அறிவிப்பு குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அதை அறிவித்தவர்கள் நம்பகமானவராக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.

நாம் இங்கே குறிப்பிடும் அறிஞர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள் அல்ல. எராளமான ஹதீஸ்களை அறிவித்தவர்களும் இஸ்லாத்திற்குப் பெரும் பெரும் தொண்டுகளைச் செய்தவர்களும் இமாம் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களும் ஆவார்கள்.

இவர்களில் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்தால்  வியக்கும் அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற்றவர்கள். இத்தகையவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் கூறும் விதியை  நமக்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

இமாம் அவ்ஸாயீ

"நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா?'' என்று முனீப் என்பவர் அவ்ஸாயீ அவர்களிடம் கேட்டார். அதற்கு அவ்ஸாயீ அவர்கள், "அந்தச் செய்திகளில் அல்லாஹ்வுடைய வேதம் எதை உண்மைப்படுத்துகின்றதோ அதை ஏற்றுக்கொள்வோம். அது நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்ததாகும். அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக வரும் செய்திகள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தவை அல்ல'' என்று கூறினார்கள். முனீப் அவர்கள், "அந்தச் செய்திகளை நம்பகமானவர்கள் அறிவித்திருக்கின்றார்களே'' என்று கேட்டார். அதற்கு அவ்ஸாயீ, "நம்பகமானவர்கள் நம்பகம் இல்லாதவர்களிடமிருந்து அதைப் பெற்றிருக்கலாமே'' என்று கூறினார்கள்.

நூல்: தாரீகு அபீ சுர்ஆ (பாகம் 1, பக்கம் 271)

இமாம் கதீபுல் பஃதாதீ

அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத ஒரு செய்தியை நேர்மை மிகுந்த நம்பகமானவர் அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்ஃபகீஹ் வல்முதஃபக்கிஹ் (பாகம் 1, பக்கம் 354)

அறிஞர் அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

ஒரு ஹதீஸ் எந்த விளக்கமும் தரமுடியாத வகையில் குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் அது நிராகரிக்கப்படும். இவ்வாறு ஈசா பின் அப்பான் கூறியுள்ளார். எந்தக் குறைகளால் ஹதீஸ் நிராகரிக்கப்படுமோ அவற்றில் இதுவும் ஒன்று என்பதே நமது அறிஞர்களின் கருத்தாகும்.

நூல்: அல்ஃபுசூலு ஃபில் உசூல், (பாகம் 3, பக்கம் 113)

இமாம் இப்னு ஜமாஆ

சில செய்திகள் சரியானது என்று உறுதியாக அறிந்துகொள்ளப்படும். அல்லாஹ்வின் செய்தியும் அவனுடைய தூதரின் செய்தியும் இதற்கு உதாரணமாகும். சில செய்திகள் பொய்யானது என்று உறுதியாக அறியப்படும். அல்லாஹ்வின் செய்திக்கு முரணாக இருக்கின்ற செய்தி இதற்கு உதாரணமாகும்.

நூல்: அல்மன்ஹலுர் ரவீ, (பாகம் 1 பக்கம் 31)

இமாம் அபூ இஸ்ஹாக் ஷீராஸி

ஒரு ஹதீஸ் எந்தக் காரணங்களால் நிராகரிக்கப்படும் என்பதைப் பற்றிய பாடம்.

ஒரு நம்பகமானவர் ஒரு ஹதீஸை அறிவித்தால் சில காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்படும். அதில் ஒன்று அந்தச் செய்தி குர்ஆனின் நேரடியான கருத்திற்கு முரணாக இருக்கும். அல்லது பல வழிகளில் வந்த உறுதியான ஹதீஸிற்கு முரணாக இருக்கும். அப்படி இருந்தால் அது அடிப்படையற்ற செய்தி என்றோ சட்டம் மாற்றப்பட்டது என்றோ அறியப்படும்.

நூல்: அல்லம்உ ஃபீ உசூலில் பிக்ஹ், (பாகம் 1, பக்கம் 82)

அறிஞர் ஸர்கஸீ

ஹதீஸ் அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக ஆகாது. செயல்படுத்துவதற்கும் அது ஆதாரமாக அமையாது.

நூல்: உசூலுஸ் ஸர்கஸீ, (பாகம் 1, பக்கம் 364)

மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள அறிஞர்கள் சுன்னத் வல்ஜமாத்தினராலும் அறிவிப்பாளர்களை எடைபோடும் இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ போன்றவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இஸ்லாமியப் பணியை செய்து சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள். இவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் இவர்களின் மதிப்பை உணருவார்கள்.

இவர்கள் தான், ஒரு ஹதீஸ் குர்ஆனுடன் முரண்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று நாம் கூறும் விதியை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இங்கு நாம் குறிப்பிட்ட அறிஞர்கள் அல்லாமல் இன்னும் பல அறிஞர்களும் இவ்விதியைக் கூறியுள்ளனர். இவ்விதியின் அடிப்படையில் அறிவிப்பாளர் தொடர் சரியாக அமைந்த சில ஹதீஸ்களையும் மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இஸ்மாயீலீ

புகாரியில் 3350வது எண்ணில் பதிவாகியுள்ள செய்தியை அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதால் இந்த அறிஞர் குறை கண்டுள்ளார்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8 பக்கம் 500

அபூபக்ர் இப்னுல் அரபி

புகாரி 4670வது செய்தியாகப் பதிவாகியுள்ள ஹதீஸை அதன் கருத்து தவறாக இருக்கின்றது என்ற காரணத்தால்

இமாம் அபூபக்ர் இப்னுல் அரபி

இமாம் அபூபக்ர் அல்பாகில்லானி

இமாமுல் ஹரமைன் அல்ஜவைனி

இமாம் அபூ ஜஃபர் தாவுதீ

கஸ்ஸாலி

ஆகியோர் மறுத்துள்ளனர்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 8, பக்கம் 338

ஸஹாபாக்களில் உமர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூ அய்யூப் அல்அன்சாரீ ஆகியோர் இந்த விதியின் அடிப்படையில் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

அபூபக்ர் இப்னுல் அரபி

அபூபக்ர் இஸ்மாயீலீ

அபூபக்ர் பாகிலானீ

புகாரி நூலுக்கு விரிரை எழுதிய தாவூதீ

கஸ்ஸாலி

இமாமுல் ஹரமைன்

யஹ்யா பின் மயீன்

இப்னு அப்தில் பர்

அவ்ஸாயீ

அபூ இஸ்ஹாக் ஷீராஸி

கதீபுல் பஃதாதீ

இப்னு ஜமாஆ

சர்ஹஸீ

அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்

குர்துபி

மற்றும் இன்னும் பல அறிஞர்கள் இந்த விதியின் அடிப்படையில் குர்ஆனுக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத் யாரும் செல்லாத தனி பாதையில் சென்று நபிமொழிகளை மறுக்கின்றது என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில உதாரணங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். உண்மையை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இவை போதிய சான்றுகளாகும்.

இத்தனை அறிஞர்களையும் நமது நிலைபாட்டிற்கு ஆதாரமாக நாம் குறிப்பிடவில்லை என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். அறிஞர்களின் கூற்றுக்கள் ஒருக்காலும் மார்க்க ஆதாரமாக இருக்க முடியாது. குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் மூல ஆதாரங்களாகும்.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அறிஞர்கள் மார்க்க விஷங்களில் தவறே செய்யாதவர்கள் என்பதும் நம்முடைய வாதமில்லை. இவர்கள் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான வழிகேடான கருத்துக்களைக் கூட கூறியிருக்கலாம். இதையும் நாம் மறுக்கமாட்டோம்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று நமது ஜமாஅத் மட்டும் சொல்லவில்லை. இஸ்லாமிய வரலாற்றில் பலரும் கூறியுள்ளார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த அறிஞர்களை இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

பைத்தியத்திற்கு வைத்தியமில்லை

ஹதீஸ் கலையில், இயற்கைக்கு மாற்றமாக ஒரு ஹதீஸ் அமைந்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. காரணம் நபி (ஸல்) அவர்கள் இயற்கைக்கு மாற்றமாக எதையும் பேச மாட்டார்கள். உதாரணத்திற்கு, சூரியன் மேற்கே உதிக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் இயற்கைக்கு மாற்றமாகப் பேச மாட்டார்கள். எனவே இதுபோன்ற கருத்தில் அமைந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

அதே போன்று குர்ஆனுக்கு ஒரு ஹதீஸ் முரணாக அமைந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும். (இதைப்பற்றி கூடுதல் விளக்கங்களை முந்தைய கட்டுரையில் காண்க!)

இந்த அடிப்படையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாட்டை அமைத்துள்ளது.

இப்ராஹீம் நபியின் நெருப்புக் குண்டத்தை பல்லி ஊதியது என்ற கருத்தில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முதலாவது குர்ஆனுடன் மோதுகின்றது. இரண்டாவது, இயற்கைக்கு மாறானது என்பதைப் பல்வேறு சொற் பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் நமது ஜமாஅத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் மறுக்கின்ற ஜாக் அமைப்பு பல்லியை பகுத்தறிவாளர் இடத்தில் நிறுத்தி, பல்லி ஹதீஸைச் சரியென்று வாதிக்கின்றது. அவ்வாறு நிலைநிறுத்துவதற்காக முன்னுக்குப் பின் முரணாக உளறித் தள்ளியது. அதை அடையாளம் காட்டி, அம்பலப்படுத்தும் வகையில் ஏகத்துவம் இதழில், "பல்லிக்குப் பகுத்தறிவு; பைத்தியத்தில் ஜாக்'' என்ற தலைப்பில் விளக்கியிருந்தோம்.

இதற்கு மறுப்பாக, "பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள்'' என்ற தலைப்பில் ஒரு மழுப்பலை வெளியிட்டது. இந்த மழுப்பல் ஜாக்கின் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் பறைசாற்றியது. பைத்தியப் பட்டத்தை நம்மீது திருப்பிவிடும் நோக்கத்திலும், பதிலடி என்ற பெயரிலும் "பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள்' என்று அவர்கள் அளித்திருக்கும் தலைப்பின் மூலம் தங்கள் பைத்தியத்தைப் பக்காவாக உறுதி செய்து கொண்டார்கள்.

ஒரு பெண் மீது காதல் கொண்டுவிட்டால் அவனுக்கு அதை விட்டால் வேறெதுவும் தெரியாது. அது மட்டும் தான் உலகம் என்று ஆகிவிடுவான். சதாவும் அவளை மட்டும் நினைத்துக் கொண்டு அலைவான். அதனால் அவனைக் காதல் பைத்தியம் என்பார்கள். லைலா மீது காதல் கொண்டவன் பெயர் கூட மறைந்து போய் மஜ்னூன் - பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் மட்டுமே நிலைத்து, நீடித்துவிட்டது.

பெண் மீது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட பொருள் மீது தணியாத விருப்பம் கொண்டவருக்கும் இதே பெயர்கள் சூட்டப்படுவதுண்டு. கார் பைத்தியம், பைக் பைத்தியம், கிரிக்கெட் பைத்தியம், டி.வி. பைத்தியம் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு சொல்வதற்குக் காரணம் அந்தப் பொருட்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் தீவிரமான பிரியம்.

பல்லி ஹதீஸ் குர்ஆனுக்கு எதிராக இருக்கின்றது என்ற காரணத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த ஹதீஸை ஒதுக்கி வைக்கின்றது. வேண்டாம் என்று நிறுத்தி வைக்கின்ற இந்த முடிவை யாராவது பைத்தியம் என்று சொல்வார்களா?

ஒருவன் தன் மனைவியை வேண்டாம் என்று கூறி விவாகரத்துச் செய்கிறான் என்றால் இவனைப் போய் யாராவது மனைவி பைத்தியம் என்று சொல்வார்களா? பைத்தியக்காரன் கூட அப்படிச் சொல்ல மாட்டான்.

குர்ஆனுக்கு எதிராக இருந்தாலும் சரி! இயற்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! பல்லி ஹதீஸை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் ஜாக்கினர் தான். அதனால் பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள் இவர்கள் தான் என்று அடித்துச் சொல்லலாம்.

"பல்லிக்குப் பகுத்தறிவு, பைத்தியத்தில் ஜாக் என்று தலைப்பிட்டவருக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதற்கு இவர்கள் எழுதிய முதல் பாராவே காட்டிக் கொடுத்துவிடுகின்றது'

என்று அல்ஜன்னத்தின் கட்டுரையாளர் பெருமைப்பட்டுக் கொள்கின்றார். ஆனால் அல்ஜன்னத் கட்டுரையாளரோ, பல்லியால் பைத்தியம் பிடித்தவர்கள் என்ற தலைப்பிலேயே தங்களைப் பைத்தியம் என்று நிரூபித்துவிடுகின்றார்.

குர்ஆன், ஹதீஸ் நிராகரிப்பாளர்கள்

அல்ஜன்னத் கட்டுரையாளர் இந்தக் கட்டுரையைத் துவங்கும் போதே, "ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஹதீஸ் நிராகரிப்பாளர்' என்று தனது முதல் வாதத்தைத் துவக்குகின்றார். அதாவது, நம்மை ஹதீஸ் நிராகரிப்பாளர் என்று சாடுகின்றார்.

இஸ்லாத்தில் உள்ள அத்தனை பிரிவினரும் ஏதாவது ஒரு ஹதீஸை மறுத்துக் கொண்டு தான் உள்ளனர். ஹதீஸை நிராகரிக்காதவர் எவரும் இல்லை என்னும் அளவுக்கு ஹதீஸ் நிராகரிப்பு நடந்துள்ளது. நேர்வழி பெற்றவர்கள் என்ற பட்டியலிலும் படித்தரத்திலும் உள்ளவர்கள் "ஷாத்' என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் இந்த வகை ஹதீஸின் அறிவிப்பாளர், இவரை விட வலுவான அறிவிப்புக்கு மாற்றமாக அறிவிக்கின்றார். அதனால் இந்த ஹதீஸை நிராகரித்துத் தான் ஆக வேண்டும். குர்ஆன், ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்று இவர்கள் குத்துகின்ற முத்திரை மேற்கண்ட நல்லோர்களையும் சேர்த்துத் தான் எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு நாம் சொல்லும் போது, இதுவெல்லாம் ஹதீஸ் நிராகரிப்பு ஆகாது என்று இவர்கள் வாதிடுவார்கள். இரண்டு செய்திகளில் ஒன்றை விட மற்றொன்று வலுவாக இருக்கும் போது, வலுவானதை ஏற்று வலுவில் குறைந்ததை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது எப்படி நிராகரிப்பாகும்? என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள்.

குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றுடன் மோதும்போது, ஹதீஸை விட வலிமையான குர்ஆனைத் தான் எடுக்க வேண்டும்; குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோம். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தனிப்பட்ட நிலைப்பாடல்ல. நேர்வழிபெற்ற நல்லோர் அனைவரின் நிலைப்பாடாகும். இதை நாம் செய்யும் போது, பி.ஜே. என்ற தனிநபர் மீது கசப்பும் காழ்ப்பும் உள்ள இவர்கள் நிராகரிப்பு என்று வசைபாடுகின்றனர்.

ஒரு ஹதீஸைக் காப்பாற்றப் போகின்றோம் என்று கிளம்பிய இவர்கள், ஒட்டுமொத்த சமுதாயமும் நம்பியிருக்கின்ற குர்ஆனையே நிராகரிக்கின்றார்கள். பல்லியால் பைத்தியம் பிடித்த இவர்கள், பல்லியைக் கொல்கிறோம் என்ற பெயரில் குர்ஆன் வசனங்களை அடித்து, நொறுக்கி குர்ஆன் நிராகரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். பல்லி ஹதீஸை நியாயப்படுத்துவதற்காக எந்தெந்த வசனங்களுக்கு இவர்கள் எதிராகக் கிளம்பினார்கள் என்பதற்கான விரிவான விளக்கத்தை ஏகத்துவம் - ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2013 இதழ்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

கொள்கைக் கோட்டை

இப்போது பல்லி பற்றிய ஹதீஸ் விஷயத்தில் மூத்த பிரச்சாரகர் இறக்கிவிடப் பட்டுள்ளார். இதற்கு காரணம் என்ன? ஹதீஸ் நிராகாரிப்பாளர் இந்த நிராகாரிப்புக் கொள்கையை நீங்களும் பிரச்சாரம் செய்தாக வேண்டும் என தனது மூத்த சகாக்களுக்குக் கொடுக்கும் நிர்பந்தமா? அல்லது உண்மையிலேயே மேலாண்மைத் தலைவருக்கும் ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறதா? அல்லாஹ்வே நன்கறிந்தவன். (அல்ஜன்னத்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது கொள்கைக் கோட்டையாகும். இந்தக் கோட்டையில் குடியிருப்பவர்களும் கூடியிருப்பவர்களும் ஒரு கொள்கையில் தான் இருக்கின்றார்கள். மூத்த தாயீக்களாக இருந்தாலும் இளைய தாயீக்களாக இருந்தாலும் ஒரு கொள்கையின்படி, ஒரே குடையின் கீழ் தான் உள்ளார்கள்.

பி.ஜே. மீது எதிர்ப்புணர்வு இருந்தால் போதும்; இந்த ஒரு தகுதி உள்ளவர்கள் ஜாக்கில் அங்கம் வகிக்கலாம். அல்ஜன்னத்தில் எதையும் கிறுக்கலாம் என்று கொள்கையற்ற அமைப்பல்ல தவ்ஹீத் ஜமாஅத். அப்படிப்பட்ட இதழ் அல்ல ஏகத்துவம் இதழ்.

தவ்ஹீத் ஜமாஅத், தாயீக்களின் கொள்கையை மட்டும் பார்ப்பதில்லை. கூடவே தனிநபர் ஒழுக்கத்தையும், யோக்கியதையையும் சுண்டிப் பார்க்கின்ற இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

பிறன்மனை அபகரிப்பாளர்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும், ஒழுக்கத்தில் வீழ்ச்சி கண்ட ஓட்டாண்டிகளுக்கும், ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் ஒதுங்குமிடமாக இருக்காது. ஆனால் ஜாக்கிற்கு இத்தகையவர்களுடன் சர்வ சாதாரணமான சகவாசம் உண்டு. இதற்கு இணைப்புப் பாலமாக இருப்பது பி.ஜே. என்ற தனிநபர் வெறுப்பு.

ஒழுக்கத்தில் வீழ்ச்சி கண்ட ஓர் ஆசாமி, பி.ஜே.வை விமர்சிக்கும் நோக்கில் பல்லி ராகம் பாடினார். அந்த ராகத்தில் ஜாக் சொக்கி, சுகம் கண்டது. அந்த ஆசாமி முன்னுக்குப் பின் முரணாக உளறியதற்கும் ஜாக் முட்டுக் கொடுத்து வந்தது. இதுமாதிரியான சந்தர்ப்பவாதக் கொள்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை. இங்கு மூத்த தாயீ ஒரு கருத்திலும், இளைய தாயீ வேறொரு கருத்திலும் இல்லை. எல்லோரும் அல்லாஹ்வின் அருளால் ஒரே கருத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். அதனால் இதுபோன்று சிண்டுமுடிகின்ற வேலையெல்லாம் இங்கு ஒருபோதும் எடுபடாது.

இந்த ஜமாஅத்தில் பிறை விஷயத்திலிருந்து பிற விஷயங்கள் வரை அனைவரும் ஒத்த கருத்தில் தான் இருக்கிறார்கள். பிறை விஷயத்தில் கமாலுத்தீன் மதனிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லும் ஆட்களெல்லாம் ஜாக்கில் பொறுப்பில் இருப்பது போன்ற ஒரு நிலை இங்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தான் லட்சணம்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்றைக் கூட நிராகரிக்கக்கூடாது என்று கூறும் தவ்ஹீத் கூட்டத்தைப் பார்த்து குர்ஆனையும் மறுக்கும் கூட்டம் என்று எழுதியிருப்பது இவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு போதுமானதாகும். ஸஹர் பாங்கை மறுப்பதாகவும் ஜாக் சகோதரர்கள் மீது பொய்யை புனைந்துள்ளார். ஆனால் ஜாக் மர்கஸ்கள் பலவற்றில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகிறது. அதுபோல் வசதி வாய்ப்புள்ள இடங்களில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுது கொண்டிருக்கின்றனர். (அல்ஜன்னத்)

இது கடைந்தெடுத்த பொய். இப்படி ஒரு பொய்யை பூதாகரமாக்கிக் காட்டுவதால் பொய் உண்மையாகிவிடாது.

"கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! (அல்குர்ஆன் 5:100)

நல்லதும் கெட்டதும் ஒருபோதும் சமமாகாது. அதுபோன்று பொய் எத்தனை தோற்றமெடுத்தாலும் அது பொய் தான். மெய்யாகி விடாது.

"தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகையை திடலில் தொழுகின்றார்களாம்; கடலில் போய் தொழச் சொல்லுங்கள்'' என்று ஜாக் அமீர் கிண்டல் அடித்தது இன்னும் கேட்டவர்களின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது. இதைப் பற்றி அல்ஜன்னத்தில் வெளியான கேள்வி பதிலைப் பாருங்கள்.

கேள்வி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளங்கடை பகுதியில் த.த.ஜமாஅத்தினர் திருநபி வழியில் திடல் தொழுகை என்று ஒரு விளம்பரம் செய்திருந்தனர். பெருநாள் அன்று திடல் தொழுகை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா? இது புதுமையான பெயராக உள்ளதே? விளக்கம் தரவும்.

பாத்திமா, பர்வின், ஆயிஷா (இளங்கடை)

ஆஷாத், முஸ்தபா, தாவூது (கோட்டார்)

பதில்: இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது. பர்ளு தொழுகை, சுன்னத் தொழுகை, ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம் தொழுகின்ற பஜ்ர், லுஹர், அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள், ஜூம்ஆ தொழுகை, பெருநாள் தொழுகை, கிரகணத் தொழுகை, மழைத் தொழுகை, வித்ருத் தொழுகை, லுஹாத் தொழுகை இப்படி பெயர்களில் தொழுகை உள்ளது. ஆனால் திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லை. இந்த பெயரில் ஒரு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்ப்படுத்தவும் இல்லை. இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர். இதுபோன்ற புதுமைப் பெயர்களை கூறி மக்களிடம் பிரபலமாக நினைத்து அப்படி செய்திருக்கலாம்.

பெருநாளன்று காலை நிறைவேற்றப்படும் பெருநாள் தொழுகையை அந்தந்த பகுதியிலுள்ள ஆண் பெண் எல்லோரும் ஒன்று கூடித் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ளதால் பள்ளிவாயில்களில் எல்லோரும் ஒன்று கூடி தொழுவது சாத்தியமற்றது என்ற காரணத்தினால் விசாலமான இடத்தில் பெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள். அதைப் பின்பற்றித்தான் இன்றும் முஸ்லிம்கள் விசாலமான இடங்களில் ஒன்று கூடி பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.

மக்கள் அதிகமாகக் கூடும்போது தொழும் எந்தத் தொழுகையாக இருந்தாலும் அதைத் திறந்த வெளியில் தொழலாம். இடம் சுத்தமாக இருந்தால் போதும்.

இது இவர்களது அல்ஜன்னத்தில் வந்த செய்தி. இதேபோன்று ஸஹர் பாங்கு தொடர்பாக இவர்கள் உதிர்த்த முத்துக்கள் (?) இதோ:

"தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப் படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்''

இவர்கள் ஹதீஸை எந்த அளவு மதிக்கின்றார்கள் என்ற லட்சணம் இப்போது புரிகின்றதா? ஜாக் மர்கஸ்களில் ஸஹர் பாங்கு நடைமுறையில் உள்ளதாக இந்தக் கட்டுரையாளர் ஜம்பம் பேசுகின்றார். ஒரு சில இடங்களில் அப்படி நடைமுறையில் இருந்தாலும் அதில் இவர்களது தலைமையின் பங்கு இருக்காது. அந்தக் கிளைகள் சுயமாக இதைச் செயல்படுத்தியதாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் ஸஹர் பாங்கு பற்றியும், பெருநாள் திடல் தொழுகை பற்றியும் தான் இவர்கள் இந்த வாங்கு வாங்குகின்றார்களே! இப்படி எள்ளி நகையாடுகின்றார்கள் என்றால் இவர்கள் எப்படி நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்?

ஹதீஸை மதிக்கின்றோம் என்று மார்தட்டுகின்ற இவர்களிடம் இன்னொரு கேள்வியும் கேட்கின்றோம். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஸாலிமுடைய ஹதீஸை செயல்படுத்திக் காட்டுங்கள். வயதில் பெரியவர்களை தங்கள் மனைவிமார்களிடம் பால் குடிப்பதற்கு அனுமதியுங்கள். மானமாக இருந்தால் கறந்தாவது கொடுத்து ஹதீஸைச் செயல்படுத்துங்கள். அவ்வாறு இவர்கள் செய்வதில்லை. ஆனாலும் அந்த ஹதீஸை மறுக்கக்கூடாது என்று கூறுவார்கள். இதற்குக் காரணம் இதை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் கருத்தை என்ன விலை கொடுத்தாலும், எந்த நிலைக்குச் சென்றாலும் மறுக்க வேண்டும். இதைத் தவிர இவர்களிடம் வேறு நோக்கம் இல்லை.

ஸிஹ்ரும் ஒரு ஷிர்க் தான்

அடுத்து, ஹதீஸ் நிராகரிப்பாளர் என்று குறிப்பிடுவதின் மூலம் ஹதீஸை மறுக்கும் கூட்டம் என்று இவர்களை சாடிவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார் கட்டுரையாளர். இவர் எத்தனை பெரிய அநியாயக்காரர் பாருங்கள். குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளபடி சூனியத்தை நம்புகிறோம். ஹதீஸ்களை தொகுத்த இமாம்களும் நமது நம்பிக்கையை கொண்டவர்கள்  என்பதும் இவர்களுக்கு தெரியும். மட்டுமின்றி ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை இவர்களும் சூனியம் பற்றி குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் சொல்வது போல்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நம்மைப் பார்த்து இவர்களின் தலைவர் முஷ்ரிக்குகள் என்று தீர்ப்பு வழங்குகிறார். அதை ஏற்றுக் கொண்ட இவர்களின் கூட்டத்தினர் பலர் ஜாக் சகோதரர்களை முஷ்ரிக்குகள் என்று கூறி ஜாக் பள்ளிவாசல் இமாம்களை பின்பற்றித் தொழுவதில்லை. இது உங்களின் இமாம், தவ்ஹீதுவாதிகளின் மீது சுமத்தும் படுபயங்கரமான அவதூறு இல்லையா? (அல்ஜன்னத்)

இஸ்லாத்தில் உள்ள எந்தவொரு சாராரும் ஏதாவது ஒரு ஹதீஸை மறுக்காமல் இருக்க முடியாது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தக் கண்ணோட்டத்தில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் என்ற இவர்களது வர்ணனையைச் சாடியிருந்தோம். இதைத் தான் ஒப்பாரி வைப்பதாக ஊளையிட்டிருக்கின்றார்.

நாம் சொல்வது போல் தான் இவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று வேறு குறிப்பிடுகின்றார். கமாலுத்தீன் மதனியும் நாமும் ஸிஹ்ர் விஷயத்தில் ஒத்தக் கருத்தில் தான் ஆரம்பத்தில் இருந்தோம். ஆனால் அது தவறு என்று தெரிந்ததும் மாறிக் கொண்டோம். எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:54)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

(அல்குர்ஆன் 35:28)

இந்த வசனங்களின் அடிப்படையில் பழிப்பவர்களின் பழிச் சொல்லுக்கு அஞ்சாமல், படைப்பினங்களுக்கு அஞ்சாமல் அல்லாஹ்வை மட்டும் அஞ்சியவர்களாக, பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறிக் கொண்டோம். உங்களைப் போன்று பிடிவாதமாக, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற முரட்டு வாதம் செய்ய மாட்டோம். வறட்டுக் கவுரவம் பார்க்க மாட்டோம்.

நம்மைப் பார்த்து ஒப்பாரி வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். ஆனால், "ஸிஹ்ர் ஒரு ஷிர்க்; அதை நம்பும் ஜாக்கினரை இவர்கள் பின்பற்றித் தொழுவதில்லை' என்று நம்மிடம் ஒப்பாரி வைக்கின்றார் அல்ஜன்னத்தின் இந்தக் கட்டுரையாளர்.

எவ்வித சாதனங்களும் இன்றி, கருவிகளும் இன்றி ஒருவரிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கின்றது. வேறு யாருக்கும் கிடையாது என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நம்புகிறோம்.

அப்படி ஒரு விளைவை உண்டாக்க முடியும் என்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நிரூபியுங்கள். உங்கள் கொள்கைக்கு நாங்கள் வந்துவிடுகிறோம். இதுதான் அன்றிலிருந்து இன்று வரை நாங்கள் வைக்கின்ற அழுத்தம் திருத்தமான வாதமாகும்.

இப்போது நாம் கேட்கிறோம். சூனியம் பற்றிய அவர்களின் வழிகேட்டுக் கருத்துக்களுக்கு மறுப்பளித்து பல தொடர்களில் எழுதப்பட்டு மாதங்கள் பல ஓடிய பின் மறுப்பே எழுதவில்லை என்று கூறுகின்றீர்களே. எப்படி பதில் எழுதுவது என்று நீங்கள் ரூம் போட்டு யோசித்தும் ஒன்றும் எழுத இயலாததால் இப்படி பொய்யை எழுதியிருப்போம் என்று முடிவு செய்தீர்களா? (அல்ஜன்னத்)

ஸிஹ்ர் பற்றிப் பதில் எழுதுவதற்கு ரூம் போட்டு யோசித்தீர்களா? என்று நாம் கேட்டது போன்று இவர்களும் கேட்கிறார்களாம்.

பல்லி விஷயத்தில் இவ்வாறு நாம் கேட்பதற்குக் காரணம் சகோதரர் பி.ஜே. அவர்கள் 2004ல் ரமளான் மாதத்தில், "நபிமார்கள் வரலாறு' என்ற தலைப்பில் இப்ராஹீம் நபியவர்களின் வரலாற்றைச் சொல்லும் போது இந்த ஆய்வைத் தெரிவிக்கின்றார்கள். 2004ல் சொன்ன விஷயத்திற்காக 2013ல் பதில் எழுதியிருந்தார்கள். இதைத் தான் நாம் கேட்டிருக்கின்றோம். இதை நம்மிடமே திருப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டு இப்படி எழுதியிருக்கின்றார் கட்டுரையாளர்.

அத்துடன் சூனியம் தொடர்பாக நாம் பதில் தரவில்லை என்றும் இவர் கூறுகின்றார். ஆனால் சூனியம் தொடர்பாக இவர்களும் இவர்களது சகாக்களும் வைக்கின்ற வாதங்களுக்கெல்லாம் சேர்த்து ஆன்லைன் பிஜே இணைய தளத்தில் தெளிவான பதில் அளிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான லிங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.

http://www.onlinepj.com/aayvukal/suniyam_marupuku_maruppu/

http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salfiyin_ariveenathuku_maruppu/

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/357_nabikal_nayakathuku_soonoiyam/

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/285_soonioyam_oru_thanthiram/

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/sooniyathai_nambubavan_sorkam_sellamattan/

http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/suniyathal_enna_seyya_mudiyum/

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/182_sooniyam_karpanaiye/

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/saheehana_hadeesai_marukireerkala/

http://www.onlinepj.com/aayvukal/sihr_9/

http://www.onlinepj.com/aayvukal/sihru_1/

http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/atharapurvamana_hathiskal/

http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_maruppu1/

http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_maruppu1/

http://www.onlinepj.com/katturaikal/kolgaiya-kuttama/

ஏகத்துவம் மாத இதழில் இவர்களுக்காக மட்டுமே எல்லா பக்கங்களையும் ஒதுக்க முடியாது. பரேலவிகளுக்கும் மத்ஹபுவாதிகளுக்கும் பதில் அளிக்கும் கடமையும் பொறுப்பும் இவர்களுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நமக்கு இருக்கின்றது. அவர்களுக்குப் பதிலளிப்பதற்காகவும் நாம் பல பக்கங்களை ஒதுக்கவேண்டியுள்ளது.

பொதுவாகச் சொல்ல வேண்டிய விஷயங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்குச் சொல்ல வேண்டிய அறிவுரைகள் என பலப்பல விஷயங்கள் ஏராளமாகத் தேங்கிக் கிடக்கின்றன. எழுதுவதற்கு இடமும் வேண்டும்; எழுத்தாளர்களுக்கு நேரமும் வேண்டும். இவர்களது பைத்திய வாதத்திற்குப் பதில் அளிப்பதற்கு இதனால் தான் தாமதமானது.

"இறைத்தூதர் இறக்கவில்லை' என்று ஒரு பரேலவி எழுதிய கட்டுரைக்குக் கடந்த ஏகத்துவம் இதழில் மறுப்பு வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் வெளியிடுவதற்கு இடப்பற்றாக்குறை. காரணம், இந்தப் பைத்திய வாதங்களுக்குப் பதில் அளிப்பது தான்.

மேலும் இவர்கள், ஏகத்துவத்திற்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டோம் என்று கற்பனை வானில் மிதக்கட்டும்; அதன் பிறகு மொத்தமாக இவர்களுக்குப் பதில் கொடுப்போம் என்பதற்காகவும் தாமதம் செய்யப்பட்டது.


இவர்களின் பைத்திய வாதத்திற்கு இந்த இதழில் சிலவற்றுக்குப் பதிலளித்துள்ளோம். வரும் இதழில் இன்ஷா அல்லாஹ் எஞ்சியவற்றிற்குப் பதில் அளிக்கப்படும். வரிக்கு வரி, சரிக்கு சரியாகப் பதிலளிக்க ஏகத்துவம் காத்திருக்கின்றது. ஆனால் அவை அனைத்திற்கும் இடம் தருவதற்கு ஏகத்துவம் இதழால் இயலாது. அதனால் இதற்கு ஒரு தீர்வை வரும் இதழில் தெரிவிக்க உள்ளோம். அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

EGATHUVAM MAR 2014