May 13, 2017

கரையும் கடவுள்! களங்கமாகும் கடல்

கரையும் கடவுள்! களங்கமாகும் கடல்

அண்மையில் விநாயகர் சதுர்த்தி என்ற பண்டிகை தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி தமிழ் மாதமான ஆவணி மாதத்தில் நடைபெறும்.

ஆனை முகத்தைக் கொண்ட பிள்ளையார் என்ற கடவுள் பிறந்ததையொட்டி நடைபெறும் விழாவுக்குத் தான் விநாயகர் சதுர்த்தி என்று கூறப்படுகின்றது.

ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கடவுள் கொள்கை உண்டு. கடவுளுக்கு மகன் உண்டு, மனைவி உண்டு என்று நம்பும் மக்கள் விநாயகர் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். அது அவர்களின் நம்பிக்கை.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் கடவுளுக்கு மனைவி மக்கள் இல்லை. எனவே கடவுளுக்குப் பிறந்த நாள் என்பது இஸ்லாத்தில் இல்லை.

"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன் 112வது அத்தியாயம்

இஸ்லாத்தில் கடவுளுக்கென்று பிறந்த நாள் அல்லது இறந்த நாள் போன்றவை இல்லை. இதனால் பிறரைப் பாதிக்கச் செய்கின்ற பிரச்சனைகளும் இல்லை.

கடவுள் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்தார் என்று நம்பும் மக்கள் அந்த நம்பிக்கையின் காரணமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் அதைக் கொண்டாடினால் அது அவர்களின் உரிமை என்று கருதலாம்.

ஆனால் கடவுளின் பிறந்த நாள் எனும் பெயரில் தங்களுக்கும் பிறருக்கும் கேடுகள் விளைவிக்கும் போது அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் மற்றவர்களுக்கு ஏற்படுகிறது.

பிள்ளையார் என்ற கடவுளை எடுத்துக் கொண்டால் அவருக்குப் பிறந்த நாள் விழா என்றதும் அடுக்கடுக்காக பிரச்சனைகள் அணிவகுத்து வரத் துவங்கி விடுகின்றன.

1. காற்றை மாசாக்குதல்

ஒரு கடவுள் தன்னுடைய படைப்புகளுக்குச் சுத்தமான, சுகமான காற்றை சுவாசிக்க விட வேண்டும். ஆனால் இந்தக் கடவுளின் பிறந்த நாள் பட்டாசு, வெடி, பறக்கும் புகை மூலம் காற்றை மாசாக்கி விடுகின்றது.

2. ஒலி மாசு

நிறுவப்பட்ட பிள்ளையார்களின் கூடாரத்தில் கொத்து கொத்தாகக் கட்டப்பட்ட கூம்புக் குழாய்களிலிருந்து புறப்படும் காதைப் பிளக்கின்ற பாட்டு சப்தங்கள்.

யாருடனும் எதையும் பேச முடியாத அளவுக்கு, எதுவும் காதுகளில் கேட்காத அளவுக்கு மனிதர்களின் சுத்தமான, சுவாச ஆதாரங்களான சுற்றுப்புறச் சூழலையே மாசாக்கி விடுகின்றனர்.

3. போக்குவரத்துப் பாதிப்பு

பிள்ளையார் ஊர்வலமாக வருகையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்களின் பணிகளும் பயணங்களும் தடுக்கப்படுகின்றன.

4. கலவரமாகும் பாதை

பள்ளிவாசல் அமைந்திருக்கும் பாதையில் தான் செல்வேன் என்று அடம்பிடிப்பதுடன், ஊர்வலத்தில் செல்பவர்கள் பள்ளிவாசல், சர்ச்சுகளில் செருப்புகளைத் தூக்கி எறிதல், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் அந்தப் பாதையே கலவரமாகி துப்பாக்கிச் சூடு வரை சென்று உயிர்களைப் பலி கொள்ளுதல்.

5. பொருள் விரயம்

பல்லாயிரக்கணக்கான பிள்ளையார்களைப் படைத்து அவற்றைக் கொலு வைக்கக் கூடாரம் அமைப்பது, வண்ண வண்ண ரசாயனக் கலவை கொண்டு பூச்சுக்களைப் பூசுதல், பூஜை செய்தல் என்று நாடு முழுவதும் கோடிக்கணக்கில் காசு பணம் கரியாகுதல்.

6. நீர் நிலைகளை மாசுபடுத்துதல்

நாடு முழுவதும் அபாயகரமான, ஆபத்தான ரசாயனக் கலவை பூசப்பட்ட இலட்சக்கணக்கான சிலைகளை ஆறு, குளங்கள், கடல் போன்ற நீர் நிலைகளில் கொண்டு போய் கரைக்கின்றனர். இதனால் தூய்மையான அந்த நீர்நிலைகள் நாசமாகின்றன. நீர்வாழ் உயிரினங்கள், குறிப்பாக மீன்கள் பாதிப்படைகின்றன. அந்த மீன்களைப் பிடித்து உண்ணுகின்ற மனித உயிர்கள் பாதிப்படைகின்றன.

இப்படிப் பல்லுயிர்க்கும் பாதிப்பையும் பயங்கர கேட்டையும் விளைவிக்கலாமா? இது நியாயமா?

பொதுவாகப் பெரும் பெரும் நதிகளில் பிணங்களை வீசுவதாலும், எரிக்கப்பட்ட பிணங்களின் சாம்பல்களைக் கரைப்பதாலும் நதிநீர் மாசுபடுகின்றது. கரையோரங்களில் உள்ள கோயில்களில் நடக்கும் திருவிழாக்களில் மலம், ஜலம் கழிப்பது, பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கூளங்களைக் கொட்டுதல் போன்ற நடவடிக்கைகளால் நதிநீர் பெருமளவு மாசுபடுகின்றது. இது தான் குடிக்கின்ற நீராகவும் குளிக்கின்ற நீராகவும் அமைவதால் மனிதர்கள் பெரும் நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

உண்மையான கடவுள் மனிதர்களுக்கு மட்டுமல்ல! இதர உயிரினங்களுக்கும் இடையூறு அளிப்பாரா? என்று மனித சமுதாயம் சிந்திக்க மறுக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கடலில் போய் கவிழ்பவரும், கரைபவரும் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? இவர் எப்படி தனது பக்தர்களைக் காப்பாற்றுவார்?

பிள்ளையார் சிலையைக் கரைக்கப் போன 25 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தது இதற்கு நேரடியான, நிதர்சனமான எடுத்துக்காட்டு.

அன்று இப்ராஹீம் என்ற ஓர் இளைஞர் இந்தச் சிலைகளுக்கு எதிரான ஒரு புரட்சியை, ஒரு போரையே நடத்தினார்.

அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக! "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்ட போது "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றனர்.

"நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?'' என்று அவர் கேட்டார். "அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

"அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்? என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகளாகும்'' (என்று இப்ராஹீம் கூறினார்.)

அல்குர்ஆன் 26:69-77

இவ்வாறு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது சமுதாயத்திடம் சிந்திக்கின்ற வகையிலான கேள்விகளை எழுப்புகின்றார்கள். மக்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அடுத்தக்கட்டமாக, இந்தச் சிலைகளை உடைத்து அவற்றுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள்.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

"நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?'' என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, "எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

"நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.

"நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

"அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்'' என்று அவர் கூறினார்.

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

"நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்'' என்று அவர்கள் கூறினர்.

"ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்'' எனக் கூறினர்.

"அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்'' என்றனர்.

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர்.

"அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்.

அல்குர்ஆன் 21:51-67

பகுத்தறிவுப் பகலவன் இப்ராஹீம் நபி எழுப்பிய இந்தக் கேள்விகளைத் தான் இவர்களை நோக்கி நாம் கேட்கிறோம். கரைகின்ற கடவுள் எப்படிக் காப்பாற்றுவார்? ஒருபோதும் காப்பாற்ற மாட்டார். இந்தக் கடவுள்களின் பெயரால் நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்தி மனித குலத்திற்குக் கேடு விளைவிப்பது தான் மிச்சம்.


மக்கள் இதைச் சிந்திப்பார்களா? மாற்றம் காண்பார்களா? ஏக்கத்துடன் எதிர்பார்ப்போமாக!

EGATHUVAM OCT 2013